Published:Updated:

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் 'தானே' துயர் துடைப்பு அணி

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் 'தானே' துயர் துடைப்பு அணி

Published:Updated:
##~##

தானே புயல் பாதித்த கடலூர் பகுதி மக்களின் துயர் துடைக்கும் திட்டத் தின் கீழ் இந்த முறை நாம் உதவித் தொகை அளித்தது, ஏழை மாணவ - மாணவியரின் கல்விச் செலவுக்காக.

 இலங்கையில் இருந்து வந்து கடலூர் மாவட்டத்தில் முகாம் அமைத்துத் தங்கி இருக்கும் தமிழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில்தான் விகடன் தானே துயர் துடைக்கும் திட்டமே தொடங்கியது. அப்போதே அந்த முகாமில் இருந்து கல்லூரிகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள், ''அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லை. இதுல இனிமே நாங்க எப்படிண்ணா கல்லூரிப் படிப்பைத் தொடர முடியும்? எல்லாரும் படிப்பை நிறுத்திட்டு ஏதாவது வேலைக்குப் போக வேண்டியதுதான்!'' என்று நம்மிடம் சொன்னார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கவலைப்படாதீர்கள்... குவியும் நிதி நிச்சயம் உங்கள் கவலையைப் போக்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மாத வாக்கில் உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படும்'' என்று அப்போது வாக்குறுதி அளித்தோம்.

'தானே' துயர் துடைத்தோம்!

அதன்படி அம்பலவாணன்பேட்டை, குறிஞ்சிப்பாடி முகாம்களில் இருந்து, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர் கல்வி பயிலும் மாணவ - மாணவியரின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று, இந்த ஆண்டு அவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணங்களைக் கணக்கெடுத்தோம். இப்படிப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 24 மாணவ - மாணவியரின் உயர் கல்விக் கட்டணத்தை விகடன் வாசகர்கள் அளித்த நிதியில் இருந்து செலுத்தினோம். ஆண்டுக் கட்டணம், தேர்வுக் கட்டணம், புத்தகக் கட்டணம் ஆகிய அனைத்தையும் கணக்கில்கொண்டு, அந்தந்தக் கல்லூரி முதல்வர்களின் பெயருக்குக் காசோலையாக வழங்கினோம். அதிகபட்சக் கட்டணமாக ஒரு மாணவருக்கு

'தானே' துயர் துடைத்தோம்!

25,000 வரை செலுத்தப்பட்டது. பலரின் கல்விக் கட்டணங்களுக்கானக் காசோலைகளை கல்லூரிகளில் ஒப்படைத்துவிட்டு, பிறகே சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விவரம் சொன்னோம்.

தகவல் சொன்னதும் புதுக்கோட்டை மாவட்டக் கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டு இருக்கும் குறிஞ்சிப்பாடி முகாமைச் சேர்ந்த ஜெயந்தன் கலங்கிவிட்டார். ''தானே புயலுக்கு அப்புறம் நிறையப் பேர் எங்க முகாமுக்கு வந்தாங்க. சின்னச் சின்ன உதவிகளும் செஞ்சாங்க. ஆனா, யாரும் எங்க கல்வியில் அக்கறை காட்டலை. அடுத்த தவணை கல்லூரிக் கட்டணத்தை எப்படிக் கட்டுறதுனு வீட்டுல திண்டாடிட்டு இருந்தப்ப, விகடன் செஞ்சிருக்கிற இந்த உதவியை நிச்சயம் என் ஆயுசுக்கும் மறக்க மாட்டேன்'' என்று கைகள் குவித்தார்.  

வானூர் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சசிகலா, ''என் குடும்பத்தின் முதல் தலைமுறைக் கல்லூரி மாணவி நான். கலை, அறிவியல் படிப்புகளைவிட இன்ஜினீயரிங் படிப்புக்குச் செலவு ஜாஸ்தி. ஒவ்வொரு தடவை ஃபீஸ் கட்டுறதுக்கும் வீட்டுல ரொம்பவே சிரமப்படுவாங்க. நல்ல நிலைமையில இருந்தப்பவே அது எனக்குக் குற்ற உணர்வை உண்டாக்குச்சு. புயல் பாதிப்புக்குப் பிறகு வீட்ல ஃபீஸ் கேக்க வேண்டாம். முடிஞ்சவரை படிச்சுட்டு, படிப்புக்கு அப்புறம் வீட்லயே இருந்துக்குவோம்னுதான் நினைச்சுட்டு இருந்தேன். அதுக்கு ஏத்த மாதிரி திடீர்னு ஒருநாள் காலேஜ் ஆபீஸ்ல இருந்து என்னைக் கூப்பிட்டு அனுப்பினாங்க. ஃபீஸ் கட்டாம இருக்கிறதுக்கு திட்டப்போறாங்கனு பயந்துட்டே போய் நின்னேன். 'உங்களுக்கு ஃபீஸ் கட்டியாச்சு... இந்தாங்க ரசீது’னு  கொடுத்தாங்க. எதிர்பார்க்காத திசையில் இருந்து விகடன் உதவி செஞ்சிருக்கு. என் கனவுகளை... நம்பிக்கைகளை விகடன் மீட்டெடுத்துக் கொடுத்திருக்கு'' என்று கண்களில் கனவுகள் மின்னப் பூரித்தார் சசிகலா.  

குறிஞ்சிப்பாடி அகதிகள் முகாமைச் சேர்ந்த பாலசரோஜினி, பரிமளா இருவரும் சகோதரிகள். இருவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்கள். ''புயல் காத்துல வீட்டோட கூரை பறந்துபோச்சு. கையில் இருந்த சேமிப்பு எல்லாம், வீட்டைச் சரிசெய்யவே பத்தலை. அந்தச் சமயம்தான் காலேஜ் ஃபீஸ் கட்ட வேண்டிய நெருக்கடி. வேற வழி இல்லாம அப்பா வட்டிக்குக் கடன் வாங்கி காலேஜ் ஃபீஸ் கட்டலாம்னு அலைஞ்சு திரிஞ்சுட்டு இருந்தாரு. அப்போதான் விகடன்ல இருந்து வந்தவங்க எங்க ரெண்டு பேரோட கல்லூரிக் கட்டணங்களையும் கட்டுறதா சொன்னாங்க. இனிமே, கல்லூரிக்குப் போயிட்டு வர்ற பஸ் செலவு மட்டும்தான். விகடனுக்கு ரொம்ப நன்றி''  என்று ஒருமித்த குரலில் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  

அம்பலவாணன்பேட்டை மற்றும் குறிஞ்சிப் பாடி அகதிகள் முகாம்களின் தலைவர்களான தர்மலிங்கமும் குணாவும் நம்மிடம் உணர்ச்சிப் பெருக்கோடு பேசினார்கள். ''தானே புயல் எங்க நிகழ்காலத்தை மட்டும் அல்ல; எதிர்காலத்தையும் ஒட்டுமொத்தமா அழிச்சது. அப்போ உடனடி அத்தியாவசியத் தேவைகளான மளிகைப் பொருட்கள், குழந்தைகளுக்குப் பால் பவுடர் கொடுத்து உதவிய விகடன், இப்போ எங்க எதிர் காலத்துக்கும் விளக்கேத்தி வெச்சிருக்கு. விகடன் மூலமா உதவி கிடைச்ச எல்லாரும் முன்னைக் காட்டிலும் தங்கள் பொறுப்பை உணர்ந்து படிப் பாங்க. நிச்சயம் நல்ல நிலைமைக்கு வருவாங்க'' என்று ஆத்மார்த்தமாக நன்றிகளைத் தெரிவித்துக்கொண் டனர்.

வார்த்தைகள் மூலம் நம்பிக்கை கொடுக்கலாம். கல்வியின் மூலம் வாழ்க்கையே கொடுக்கலாம். இந்த மாணவர்களின் நன்றிகள் அனைத்தும் விகடன் வாசகர்களுக்கு உரித்தாகுக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism