Published:Updated:

கடவுள் தேசத்தில் கால்பந்துக் கடவுள்!

இரா.வினோத்படங்கள் : ந.வசந்த குமார்

பிரீமியம் ஸ்டோரி
##~##

கிறிஸ்துமஸ், ரம்ஜான், ஈஸ்டர், ஓணம் அத்தனையும் ஒரே நாளில் அரங்கேறியதைப் போல அந்தக் குறிப்பிட்ட நாளை ஒட்டுமொத்தக் கேரளமும் கொண்டாடித் தீர்த்தது. அந்த நாள்... கால்பந்தாட்டக் கடவுள் மாரடோனா, கடவுளின் தேசத்தில் கால் பதித்த நாள்!

 இப்போதைய கால்பந்து வீரர்கள் மீதான விமர்சனங்கள், திடீர் காதல், விவாகரத்து, போதைப் பழக்கம் என எப்போதுமே மாரடோனாவின் அடையாளம்... சர்ச்சை. இப்போது அரசியலிலும் கால் பதிக்க ஆரம்பித்து இருக்கிறார் மாரடோனா.  'மாரடோனா கால்பந்தை உதைப்பதில்லை. ஃபிடல் காஸ்ட்ரோ, ஹ்யூகோ சாவேஸ் உடன் இணைந்து ஏகாதிபத்தியத்தை உதைத்துத் தள்ளுகிறார்’ என பி.பி.சி. சிறப்புச் செய்தி சொல்லும் அளவுக்கு அரசியல் அரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறார் மாரடோனா.  

கடவுள் தேசத்தில் கால்பந்துக் கடவுள்!

சினேகா முதல் சச்சின் வரை லட்சங்களையும் கோடிகளையும் கொட்டிக் கொடுத்து, தங்கள் 'தகத்தகாய’ நகைக் கடைத் திறப்பு விழாக்களுக்கு அழைத்து வரும் 'செம்மனூர் ஜுவல்லர்ஸ்’ கண்‌ணூர் கிளையைத் திறக்கக் கண்டம் விட்டுக் கண்டம் வந்திருந்தார் மாரடோனா. விளம்பரத்தில் நடிப்பது முதல் மைதானத்தில் கால்பந்து உதைப்பது வரை கேரளத்தில் அவர் இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் ஏற்கெனவே துபாயில் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. மாரடோனா கேரளம் வந்த பின் நடந்த கதைகளின் 'க்ளோஸப்’ வாட்ச் இங்கே...

கொச்சின் பன்னாட்டு விமான நிலையத்தில் மாரடோனா வந்திறங்கியபோது காலை 5.35 மணி. நேரே ஹெலிகாப்டர் மூலம் கண்ணூர் போலீஸ் மைதானத்துக்கு அழைத்துவந்தார்கள். கண்ணூர் புளூ நைல் ஹோட்டல் அறை எண் 309  தலைவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஹோட்டலுக்கு வந்ததும் செம்மனூர் கடை நிர்வாகிகளை மரியாதைக்குக்கூடச் சந்திக்காமல், தனது கேர்ள் ஃப்ரெண்ட் வெரோனிக்காவுடன் அறைக்குள் சென்றுவிட்டார் மாரடோனா. காலை 9.15 மணிக்கு மேல்தான் வெளியே வந்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார். வரவேற்பு பானமாக வழங்கப்பட்ட கண்ணூர் செவ்விளநீரைக் குடித்த பிறகு, தனக்கு விருப்பமான ஒயினை மூன்று பெக் அடித்துவிட்டு, மீண்டும் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். பிறகு, மதியம் இரண்டு மணிக்கு மறு தரிசனம். நிகழ்ச்சி நிரல்படி அப்போது விளம்பரப் படப்பிடிப்பு நடக்க வேண்டும். ஆனால், 'மூட் இல்லை’ என்று மறுத்தவர் இரவு 7 மணிக்கு மேல் தான் விளம்பரத்தில் நடிப்பதற்காக வந்தார்.

மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய நகைக் கடை மற்றும் ஏர்லைன்ஸ் விளம்பரத்தைப் படம்பிடிக்க மும்பையில் இருந்து மூன்று ரெட் ஒன் கேமராக்களை வரவழைத்து இருந்தார்கள். 'ஒரு வரிகூட வசனம் பேச மாட்டேன்!’ என்பது மாரடோனாவின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று. 'ஹேப்பி நியூ இயர் என்று மட்டும் சொல்லுங்கள்’ என்ற கோரிக்கை யையும்கூட நிராகரித்தார்.

இடையிலேயே இரவு உணவாக மசால் தோசை, புட்டு, கடலைக் கறி, இட்லி, இடியாப்பம், பொங்கல் என 16 வகையான இந்திய உணவுகளைப் பரிமாறி னார்கள். சிலவற்றைக் கொஞ்சம் கொஞ்சம் சுவைத்தவர், இறுதியில் சாண்ட் விச் மட்டுமே சாப்பிட்டார். இரவு 3 மணி வரை நீண்ட படப் பிடிப்பை முடித்து, ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தவருக்கு ஆச்சர்யம்! வெளியே 'டீகோ... டீகோ...’ எனக் கூச்சல் போட்டபடி அந்த நேரத்திலும் நூற்றுக்கணக்கானவர்கள் கூடி நின்றிருந்தார்கள். உடனே, உற்சாகமாகிக் கீழே இறங்கி வந்தார்.

கடவுள் தேசத்தில் கால்பந்துக் கடவுள்!

வாசலில் தூக்கக் கலக்கத்துடன் நின்றுகொண்டு இருந்த காவலருக்குக் கை கொடுத்தவர், 'உன் பெயரென்ன?’ என பிரெஞ்சு மொழி யில் கேட்டார். காவலர் புரியாமல் முழிக்க, பின்னர் மாரடோனாவே காவலரின் பெயர்ப் பட்டையைப் பார்த்தார். உடனே புருவம் உயர்த்தியவர், தனது வலது தோள் பட்டையில் பச்சை குத்தி இருந்த சே குவேராவின் படத்தைக் காட்டி, புஜத்தை முறுக்கிவிட்டு அந்தக் காவலரை அப்படியே அணைத்துக்கொண்டார். அந்த போலீஸ் கான்ஸ் டபிளின் பெயர்... பிரபாகரன்.

மீண்டும் ஹோட்டல் அறைக்குள் நுழைந்து தூங்கிய மாரடோனா பெட் காபிக்கு எழுந்தபோது மணி காலை 10.35. கிட்டத்தட்ட பித்துப் பிடித்த நிலையில் இருந்தார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். காரணம், கடை திறப்பு விழாவுக்கு எனக் குறிக்கப்பட்டு இருந்த நேரம் 10.30.  

ஒருவழியாக வெரோனிக்கா மூலம் மாரடோனாவைத் துரிதப்படுத்தி, ஹெலிகாப்டரில் ஏற்றி ரசிகர்கள் குவிந்திருந்த கண்ணூர் ஜவஹர் மைதானத்தை மூன்று முறை வட்டம் அடித்து பூக்கள் தூவவைத்தனர். பின்னர், கண்ணூரின் குறுகலான சாலைகளில் 'ஆடி’ காரில் பயணித்து, நகைக் கடையின் கிளையைத் திறந்துவைத்துவிட்டு, ஜவஹர் ஸ்டேடியத்துக்கு வந்தார் மாரடோனா. ஆயிரங்களில் குவிந்திருந்த ரசிகர்களைப் பார்த்ததும் குழந்தைபோலக் குதூகலித்தவர், மேடையின் நாலா மூலைக்கும் ஓடிச் சென்று கைகளைத் தூக்கி, விரல்களை மேலும் கீழுமாகக் காற்றில் அசைத்து உற்சாகமாக ஆடினார். ஷகிராவின் 'வக்கா... வக்கா...’ இசை மைதானத்தை அதிரச் செய்ய, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரஞ்சனி ஹரிதாஸை இடுப்போடு சேர்த்துக்கொண்டு கெட்ட டூயட் போட்டார் டீகோ. (விளைவு 'ராத்திரி எல்லாம் தூக்கம் தொலைஞ்சி போயி’ என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் தட்டி னார் ரஞ்சனி!)

கடவுள் தேசத்தில் கால்பந்துக் கடவுள்!

30-ம் தேதி வரும் மாரடோனாவின் 52-வது பிறந்த நாளை 30 கிலோ எடைகொண்ட பிரமாண்ட கேக்கை வெட்டவைத்து அட்வான்ஸாகக் கொண்டாடினார்கள். மைக்கில் 'போன்ஜோர்’ என பிரெஞ்ச் வணக்கம் வைத்துவிட்டு, 'மெஸ்ஸமி... மெஸ்ஸமீமீ... மெஸ்ஸமீமீமீமீ...’ என ராக் ஸ்டார் உடல்மொழியுடன் பாடியபடி செமத்தியான ஆட்டம் போட்டார். பிறகு, கேரளக் கால்பந்தாட்டக்காரர் விஜயனுடன் 'ஹெட் பால்’ ஆடிய மாரடோனா, அவரைக் கட்டித் தழுவிக்கொண்டார். தொடர்ந்து, தனது டிரேட் மார்க் ஸ்டைலில் அங்கிருந்த  கால்பந்துகளை உதைத்தார். இடது காலில் தாங்கிப் பிடித்து ஸ்கொயர் கட் ஷாட்டில் உதைத்தார். அவர் உதைத்த பந்துகளை எடுக்க ரசிகர்களுக்குள் ஒரு பெரும் போரே அரங்கேறியது. இதையெல்லாம் பார்த்து உற்சாகத்தின் உச்சிக்கே போன மாரடோனா, 'போன்ஜோர் இந்தியா... வீவா இந்தியா...’ எனக் கூறியபடியே மேடையை வலம் வந்தார். அப்போது சிலர் ஓடி வந்து அவர் காதில் ஏதோ கிசுகிசுக்க, உடனே 'ஐ லவ் கேரளா’ எனச் சொல்லிவிட்டு, மேடையில் இருந்து இறங்கியவர் வெரோனிக்காவை அள்ளி அணைத்துக்கொண்டு காருக்குள் அமர்ந்து... எஸ்ஸ்ஸ்கேப்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு