Published:Updated:

"என்னது... இப்பெல்லாம் யாரு சாதி பார்க்குறாவா?"

பாரதி தம்பி, எஸ்.ராஜாசெல்லம்படங்கள் : வி.ராஜேஷ்

"என்னது... இப்பெல்லாம் யாரு சாதி பார்க்குறாவா?"

பாரதி தம்பி, எஸ்.ராஜாசெல்லம்படங்கள் : வி.ராஜேஷ்

Published:Updated:
##~##

'ஊர் உறங்கும் சாமத்துல, நான்
ஒருத்தி மட்டும் விழிச்சிருந்தேன்

ஊர் கோடி ஓரத்துல உன்
நினைப்புல படுத்திருந்தேன்...’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- என்று பிரளயன் ஒரு பாடல் எழுதிஇருப்பார். அதில் சில வரிகள் வரும்...

'சும்மா கிடக்கும்போதே
துள்ளுற சாதிக்காரன்

சங்கமா சேர்ந்திருக்கான்
வம்புபண்ணக் காத்திருக்கான்

என்ன செய்யப்போறானோ
ஏது செய்யப்போறானோ...’

- அந்த வரிகள் இன்றைய தருமபுரிக்கு அப்படியே பொருந்தும். இன்னும் கூடுதலாக, உயிருக்குப் பயந்து எங்கோ ஒளிந்து வாழும் இளவரசன் - திவ்யா தம்பதிக்குப் பொருந்தும். ஒரு காதல், அதைத் தொடர்ந்த கூட்டு வன்முறை, மூன்று கிராமங்கள் எரித்து நாசமாக்கப்பட்டது என்ற இன்றைய தருமபுரி கலவரம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிரவைத்திருக்கிறது. என்னதான் நடக்கிறது தருமபுரியில்?  

"என்னது... இப்பெல்லாம் யாரு சாதி பார்க்குறாவா?"

தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் நாய்க்கன்கொட்டாய் பகுதியில் இருக்கிறது நத்தம் காலனி. இந்த ஊரைச் சேர்ந்த இளவரசனுக்கும் அருகில் உள்ள செல்லங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கும் காதல். இளவரசன் ஆதிதிராவிடர் சமூகம், திவ்யா வன்னியர் சமூகம் என்பதால், திவ்யாவின் பெற்றோர் காதலைக் கடுமையாக எதிர்த்துள்ளனர். அதையும் மீறி, அக்டோபர் 14-ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதனால், திவ்யாவின் உறவினர்கள் கடும் கோபம்கொண்டு, 'காதலர்களைத் தேடிப் பிடித்து, பிரித்துவைப்பது’ என்று முடிவு எடுத்து இருக்கின்றனர். இதனிடையே, இரு கிராமத்து ஆட்களும் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி... திவ்யாவைப் பெற்றோரிடம் ஒப்படைப்பதாக சிலர் வாக்குறுதி கொடுத்து இருக்கிறார் கள். ஆனால், திவ்யா வரவில்லை. திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்துகொண்டார். இது அந்தத் தரப்பினரைக் கொதிப்புக்கு உள்ளாக்கியது. நாகராஜின் சடலத்தோடு மறியலில் இறங்கினார்கள். அதில் உறவினர்கள் மட்டும் இல்லை, சாதிக்காரர்களும் இணைந்து கொண்டனர். குடும்பப் பிரச்னை ஊர் பிரச்னையாக உருமாறி, இறுதியில் சாதிப் பகையானது. கூடியிருந்த கூட்டம் பகையை, வெறியாக்கியது. விளைவு... 7-ம் தேதி இரவு நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று தலித் பகுதிகளில் வீடுகள் பெட்ரோல் குண்டுகள் வீசி தீவைத்துக் கொளுத்தப்பட்டன. எரிக்க முடியாதவற்றை அடித்து நொறுக்கினார்கள். வாகனங் களில் பாறாங்கற்களைப் போட்டு நசுக்கி, கொளுத்தி விட்டார்கள். அரசுச் சொத்தான குழந்தைகள் மையத்தைக் கூடச் சூறையாடினார்கள். தலித் மக்கள் எல்லோரும் ஊரைவிட்டு ஓடிவிட்டதால், உயிர்ச் சேதம் எதுவும் இல்லை. ஆனால், அவர்களின் மொத்த வாழ்வாதாரமும் நிர்மூலமாக்கப்பட்டது. சமையல் பாத்திரங்கள் முதல் குழந்தையின் பால் டப்பா வரை ஒன்றுவிடாமல் சிதைத் துப்போட்டது வெறியேறிய கும்பல்.

இப்போது 100-க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சியினர், மனித உரிமை அமைப்புகள், உண்மை அறியும் குழுக்கள் எனப் பலரும் குவிந்துகிடக் கின்றனர். ஆனால், அந்த மக்களோ அடுத்த வேளை சமைப்பதற்கு அரிசி, பாத்திரம்கூட இல்லாமல் மரத்தடி களில் உயிர் வாழ்கின்றனர்.  

இப்போது நம் முன் நிற்கும் கேள்வி ஒன்றுதான். இது உண்மையில் ஒரு காதல் பிரச்னையின் விளைவு மட்டும்தானா?

சில ஆண்டுகளுக்கு முன்பு சாதிப் பிரச்னையில் விருத்தாசலத்தில் கண்ணகி - முருகேசன் கொல்லப்பட்டார்கள். அவர்களைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து விஷம் ஊற்றி, எரித்துக் கொன்றார்கள் பாவிகள். அப்போது என்ன நடந்ததோ, அதுதான் இப்போதும் நடந்திருக்கிறது. ஒரே வித்தியாசம்... அப்போது காதலர்களை எரித்தார்கள். இப்போது அவர்களைத் தேடிப் பிடிக்க முடியாததால், அவர்களின் ஊரையே எரித்து இருக்கிறார்கள்.

"என்னது... இப்பெல்லாம் யாரு சாதி பார்க்குறாவா?"

தீ தின்ற மிச்சங்கள் இடையே உயிர் வாழும் மக்களிடம் பேசினேன். ''எல்லாமே திட்டமிட்டு செஞ்சிட்டாங்க. போலீஸும் பிரஸ்ஸும் ஊருக்குள்ள வரக் கூடாதுனு மெயின் ரோட்டுல மரத்தை வெட்டிப்போட்டு தடுப்பு ஏற்படுத்திட்டாங்க. லிட்டர் கணக்குல பெட்ரோலை வாங்கிட்டு வந்து, பொறுமையா காலி வாட்டர் பாட்டில்ல ஊத்தி ஏராளமான பெட்ரோல் குண்டுகளை ரெடி பண்ணி இருக்காங்க. அதை வெச்சுதான் கான்கிரீட் வீடுகளைக்கூடக் கொளுத்தி இருக்காங்க. இது ஒண்ணும் நாகராஜுங்கிறவரோட மரணத்துக்கு நடந்த பழிவாங்கலா தெரியலை. காதலுக்கும் சாவுக்கும் சம்பந்தமே இல்லாத பக்கத்துக் கிராமங்களையும்கூட அழிச்சிட்டாங்க. ரொம்ப வருஷமா அவங்க மனசுக்குள்ள அழுக்குத் தண்ணி மாதிரி தேங்கிக்கிடந்த சாதிய வன்மத்தோட வெளிப்பாடுதான் இது'' என்கிறார்கள் வேதனைப் பொருமலுடன்!

இவ்வளவுக்கும் தற்கொலை செய்து இறந்துபோன திவ்யாவின் தந்தை நாகராஜ்பற்றி ஊருக்குள் நல்லவிதமாகவே சொல்கின்றனர். ''அவர் சாதி வெறி பிடித்தவர் இல்லை. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் கிளார்க் வேலையில் இருந்தார். நந்தம் காலனி மக்கள் அந்த வங்கியில் அடமானம்வைக்கும் நகையின் தவணை தேதியைக் குறித்துவைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் தகவல் சொல்வார். அவரே தவணைப் பணத்தை வாங்கிச் சென்று கட்டுவார். அந்த நல்ல மனிதருக்கு சாதிரீதியில் உளவியல் தொந்தரவு கொடுத்து தற்கொலைக்குத் தூண்டியதே அவரது சொந்த சாதியைச் சேர்ந்தவர்கள்தான்'' என்கின்றனர்.

இளவரசனின் வீடு இருப்பது நத்தம் காலனியில். ஆனால், அருகில் உள்ள அண்ணா நகர், கொண்டம்பட்டி ஊர்களின் தலித் வீடுகளும் எரிக்கப்பட்டது எதனால்? ஏனெனில், இந்தப் பகுதியில் உள்ள தலித் மக்களில் பெரும்பான்மையானோர் குடும்பத்துடன் பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் சென்று கட்டட வேலை செய்கின்றனர். அதில் அவர்களுக்கு நல்ல வருமானம். அப்படி உழைத்துச் சம்பாதித்த பணத்தில் நல்ல வீடு கட்டி, கார், டூ-வீலர், ஃப்ரிஜ், வாஷிங்மெஷின் என்று பொருட்கள் சேர்த்து நல்ல வாழ்க்கை வாழ்கின்றனர். 'கீழ்சாதிக்காரர்கள் நமக்கு அடிமை யாக இருக்காமல், நம் கண் முன்னாலேயே நன்றாக வாழ்கிறார்களே’ என்ற வயிற்றெரிச்சல் இவர்களுக்கு. இது நீண்ட நாள் மனதுக்குள்ளேயே புதைந்து இருக்கிறது. இப்போது பிரச்னை வந்ததும் இதை ஒரு சாக்காக்கி தலித்களின் பொருளாதாரத்தை அழித்துள்ளார்கள்'' என்கின்றனர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். ''பிரச்னைக்கு நாங்கள் காரணம் இல்லை'' என்கிறது பா.ம.க. ''எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை'' என்கிறார் தமிழக வாழ்வுரி மைக் கட்சியின் வேல்முருகன். இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட நாகராஜனின் மனைவி தேன்மொழி கொடுத்த புகாரை வாங்க மறுத்த போலீஸ் எஸ்.ஐ. உள்பட ஏழு பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது.

இப்போது இளவரசன் - திவ்யா இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்பாவின் மரணத்துக்குக்கூட வர முடியாத நிலையில் உயிருக்குப் பயந்துகிடக்கும் திவ்யா... தன் ஒருவனின் காதலால் மூன்று ஊர்களே எரித்து நாசமாக்கப்பட்ட மன வேதனையில் இளவரசன்... என அந்த புதுமணத் தம்பதி மிகுந்த மன வேதனையுடன் எங்கோ ஒளிந்து உயிர் வாழ்கிறது. ஆனால், சாதி வெறி அத்தனை லேசுப்பட்டது இல்லை. அந்த நேரத்து ஆவேசத்துடன் ஆயுதம் தூக்குவது மட்டும் அல்ல... அது காத் திருந்தும் கழுத்தறுக்கும். இப்போது, ''இந்தக் கருமம் புடிச்ச காதல் எல்லாம் தேவையா?'' என்று இரு தரப்புமே பேசுகிறது. இந்த வன்முறையில் ஈடு பட்டவர்களின் உண்மையான வெற்றி இதுதான். இன்னும் ஒரு தலைமுறைக்கு அந்தப் பகுதியில் சாதியை மீறிக் காதலிக்கும் துணிவு யாருக்கும் வராது. நிவாரணம் வழங்கி, ஒதுங்கி நின்று இந்தப் பிரச்னையை ஏதோ நலத் திட்ட உதவிகள்போல அரசாங்கம் டீல் செய்வதைத் தவிர்த்து விட்டு, சாதி துவேஷத்தைக் களைவதற் கான உண்மையான செயல் திட்டத் துடன் இப்போதாவது களத்தில் இறங்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism