Published:Updated:

கசாப்களின் கதை!

எஸ்.சந்திரன்

கசாப்களின் கதை!

எஸ்.சந்திரன்

Published:Updated:
##~##

ரு கசாப் தெரியும். ஓராயிரம் கசாப்கள் உருவாகிக் காத்துக்கொண்டு இருப்பது தான் இன்றைய தேதியில் சர்வதேச நாடுகளுக்கு கிலியூட்டும் செய்தி. ஒசாமா உயிரைவிட்ட பின், அல் கொய்தா சற்றே தடுமாறிக்கிடக்க, அடுத்த இடத்தில் வாகாக வந்து அமர்ந்திருக்கிறது லஷ்கர்-இ-தொய்பா.

 ஆப்கானிஸ்தானை சோவியத் ரஷ்யா ஆக்கிரமித்தபோது, அதை எதிர்க்க அமெரிக்காவால் ஊட்டி வளர்க் கப்பட்டவர் ஒசாமா பின் லேடன். அதே காலகட்டத்தில் ஆப்கனைச் சேர்ந்த தாலிபன்களுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையில் நிறைய இயக்கங் கள் முளைத்தன. அவற்றில் ஒன்று மார்கஷ்-உத் தாவா-வல்-இர்ஷத். அதன் ராணுவப் பிரிவுதான் லஷ்கர்-இ-தொய்பா. ஆப்கனில் இருந்து ரஷ்யா பின்வாங்க, ஒசாமா அமெரிக்காவை எதிர்க்க ஆரம்பித்தார். லஷ்கர்-இ-தொய்பா போன்ற இயக்கங்களின் கவனம் ரஷ்யாவின் நட்பு நாடாக இருந்த இந்தியா பக்கம் திரும்பியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவுக்குள் 1990-களிலேயே லஷ்கர் தீவிரவாதி கள் வந்துவிட்டாலும், அவர்களின் வருகைபற்றி 1993-ல் தான் அதிகாரபூர்வமாக அறிந்துகொண்டது இந்திய உளவுத் துறை. முன்பெல்லாம் இந்திய இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து எல்லை தாண்டவைத்துப் பயிற்சிகள் கொடுத்துத் திருப்பி அனுப்புவதுதான் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் வேலையாக இருந்தது. பிறகு, மிகத் துணிச்சலாக பாஸ்போர்ட், விசா இல்லாமல்

கசாப்களின் கதை!

துப்பாக்கித் தூக்கி பாகிஸ்தானியர்களையே எல்லை தாண்டவைத்ததற்குக் காரணமாக இருந்தவர் பாகிஸ்தா னின் பர்வேஸ் முஷ்ரப்.

முஷ்ரபின் ஆசீர்வாதத்தால் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தன் முழு ஆதரவையும் கொடுத்து லஷ்கரை வளர்த்து எடுத்தது. முதலில் சுதந்திர காஷ்மீர் என அங்கே மட்டும் சண்டை போட்டுக்கொண்டு இருந்த லஷ்கர் ஆட்களை உசுப்பேத்திவிட்டது பாபர் மசூதி இடிப்பு. தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, இந்தியாவில் காஷ்மீரைத் தாண்டி காலடியை எடுத்துவைத்தார்கள். கார்கில் ஊடுருவலிலும் லஷ்கரின் ஆட்கள் பங்கு பெற்றார்கள். பிரபலமான இடங்களைத் தாக்குவதை வழக்கமாக்கினார்கள். டெல்லி செங்கோட்டை, நாடாளு மன்றம், மும்பை தாஜ் ஹோட்டல், ட்ரைடென்ட் ஹோட்டல் இவை எல்லாம் இந்தக் கணக்கில் சேரும்.

இந்தியாவுக்குத்தான் இவர்கள் டெரர் முகம். பாகிஸ்தானில் லஷ்கருக்கு செம சாந்த முகம். அவர்களின் இன்னோர் அமைப்பு ஜமாத்- உத்-தாவா. சுருக்கமாக ஜே.யூ.டி. இந்த இயக்கத்தில் இருந்து நாளிதழ், இரண்டு மாத இதழ்கள், குழந்தை பத்திரிகை வெளிவந்தன. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் கிராம விவசாயிகளுக்குக் கிணறுகள் தோண்டிக் கொடுப்பது, ஏழைகளுக்கு மானிய விலையில் சாப்பாடு கொடுப்பது, 160 பள்ளிகளில் இலவசக் கல்வி, ஆம்புலன்ஸ் சேவை, நடமாடும் மருத்துவமனை, ரத்த வங்கி என நிஜமாகவே நல்லது செய்தார்கள். ஆனால், காஷ்மீருக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று ஜே.யூ.டி. அறிக்கை கொடுக்கும்போதே, ஆயுதங்களை லோடு பண்ணிக்கொண்டு இருக்கும் லஷ்கர்.

'ஜே.யூ.டி. மூலமாகத்தான் லஷ்கர் அமைப்பு வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறது’ என்று அமெரிக்கா கண்கள் சிவக்க, வேறு வழி இல்லாமல் அதைத் தடை செய்தது பாகிஸ்தான்.

பணம் வரவில்லை என்றால், வரவைப்பது என்று முடிவெடுத்தது லஷ்கர். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தார்கள். மால்களில் ஷோக்கள் நடத்தினார்கள். வெப்சைட் மூலமாக ஆன்லைன் டிரேடிங் செய்தார்கள். பணக்கார பாகிஸ்தானியர்களிடம் துப்பாக்கி முனையில் பேசினார்கள்.

பணம் வந்துவிட்டது. இப்போது பாகிஸ்தானில் லஷ்கருக்கு 300 ஏக்கரில் பயிற்சி மையம் இருக்கிறது. எல்லாமே அங்கே பக்கா திட்டத்தோடு அரங்கேறுகிறது. ஆள் எடுப்பதற்கு ஆங்காங்கே அலுவலகங்கள் உண்டு. படிப்பறிவு இல்லாத, வறுமையான இளைஞர்கள்தான் அவர்களின் இலக்கு. ஆள் எடுத்ததுமே லஷ்கரின்உளவுப் பிரிவு அவர்களது குடும்பம், குட்டி எல்லாம் உண்மையா என்று விசாரிப்பார்கள். பிறகு, அவர்கள் பயிற்சி முகாமுக்கு அழைத்து வரப்படுவார்கள்.

கசாப்களின் கதை!

முதல் 21 நாட்கள் 'காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல்கள்’ என்று அவர் கள் பார்வையில் வீடியோ படங்கள் காட்டப் படும். பாதிக்கப்பட்ட மக்கள்பற்றி வகுப்பு எடுப்பார்கள். அடுத்த 21 நாட்கள் காட்டுப் பகுதியில் துப்பாக்கியைக் கழற்றி மாட்டு வது, சுடுவது, வெடிகுண்டு வீசுவது, ஜி.பி.எஸ். பயன்படுத்துவது, வரைபடங்களைப் பயன்படுத்துவது, தகவல் தொடர்பு சமிக்ஞைகள், உடல் வளம், மன வளம் என ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளை வைத்து நேர்த்தியான ராணுவப் பயிற்சி அளிப்பார்கள். இப்போது சமீபமாக பாரா கிளைடிங் பயிற்சியும் வழங்குகிறார்களாம்.

மூன்றாவது மாத முடிவில் பயிற்சி முடிவுக்கு வரும். 200 பேர் பயிற்சி எடுத்தால், அந்த டீமில் அவுட்ஸ்டாண்டிங் தகுதி படைத்த ஒருவர் மட்டுமே தற்கொலைப் படைக்கு எனத் தேர்வு செய்யப்படுவார். பாகிஸ்தான், ஆப்கன் பகுதியில் இருக்கும் லஷ்கரின் பல்வேறு பயிற்சி மையங்களில் இருந்து மாதம்தோறும் இப்படிக் குறைந்தபட்சம் 500 பேர் பக்கா பயிற்சியோடு வெளிவருகிறார்கள். அவர்களுக்குத் தீவிரமான அசைன்மென்ட் கொடுக்கும் வரை, வேறு சாதாரண வேலைகளைப் பார்த்துக்கொண்டு திரிவார்கள்.

மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா, அமெரிக்காவின் வற்புறுத்தலால் லஷ்கரின் பயிற்சி மையங்களில் சோதனை நடத்தி 20 பேரைக் கைது செய்ததோடு தன் சட்ட நடவடிக் கையை நிறுத்திவிட்டது பாகிஸ்தான். இது இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை என்று ஆரம் பத்தில் லஷ்கரைக் கண்டுகொள்ளாத அமெரிக்கா, இப்போது ஓவராக அலற ஆரம்பித்திருக்கிறது. ஒரு வியாபாரம் வெற்றி அடைந்ததும் பரபரவெனக் கிளை கள் ஆரம்பிப்பதைப் போல, மும்பை வெற்றிக்குப் பின் உலகம் எங்கும் தாக்குதல் நடத்த 320 ஸ்பாட்களை லஷ்கர் குறித்து வைத்திருக்கிறது. அதில் 20 இடங்கள் மட்டுமே இந்தியா. மீதி 300 இடங்களில் அமெரிக்காவும் அடங்கும். இந்தத் தகவல் கிடைத்ததும் லஷ்கரின் மூத்த தலைகளுக்கு இரண்டு மில்லி யன் டாலர் விலை நிர்ணயித்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து இருக்கிறது அமெரிக்கா.

தங்களின் துப்பாக்கியில் இருந்து வரும் ஒவ்வொரு தோட்டாவுக்கும் எத்தனை அப்பாவிகளின் உயிரும் அவர்கள் குடும்பத்தின் சந்தோஷமும் பறிபோகிறது என்பதுபற்றி லஷ்கர் யோசிப்பது இல்லை. அதன் தொடர்ச்சியாக வீடு கிடைக்காமல், சந்தேகத்தோடு பார்க்கப்படும் முஸ்லிம் மக்களின் அவலமும் அவர்களுக்குத் தெரியாது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில், காஷ்மீரில் சோற்றுக்கே வழி இல்லாத 12 வயது முஸ்லிம் சிறுவர்கள் இரண்டு பேரைப் பிடித்து, ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்து, இரண்டு கிரானைட் குண்டுகளைக் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் மீது வீசச் செய்தார்கள் லஷ்கர் ஆட்கள். அது வெடி குண்டு என்றுகூடத் தெரியாத அந்தச் சிறுவர்கள் அதை வீசி, போலீஸிடம் மாட்டிக்கொண்டு இப்போது சிறையில் கிடக்கிறார்கள். இந்திய நீதிமன்ற வழக்கப் படி வாய்தா வாங்கி... வாங்கி... வழக்கு முடிந்து அவர்கள் வெளியே வரும்போது 30 வயதாவது முடிந்திருக்கும்.

பணக்கார, பயங்கர மூளைகள் பத்திரமாக எங்கேயோ இருக்க, நமக்குக் கிடைப்பது எல்லாம் பணத்துக்கும் சாகசத்துக்கும் ஆசைப்பட்டு கொலைகாரர்களாக மாறும் அஜ்மல் கசாப்களின் உடல்கள்தான்!