Published:Updated:

"வயல் காயுதே... வயிறு எரியுதே!"

கரு.முத்துபடங்கள் : கே.குணசீலன்

"வயல் காயுதே... வயிறு எரியுதே!"

கரு.முத்துபடங்கள் : கே.குணசீலன்

Published:Updated:
##~##

மினி பஸ் கூடப் போகாத அந்தக் கிராமத்துக்கு மீடியா கவனம் ஈர்த்துவிட்டார் ஏழை விவசாயி ராஜாங்கம்.

காவிரி நீர் தராத கர்நாடகத்தின் விடாப்பிடிப் பிடிவாதத்துக்கு இந்தப் பருவத்தில் உயிரைவிட்ட முதல் தமிழக விவசாயி ராஜாங்கம். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்காவில் இருக்கிறது கூரத்தாங்குடி. மொத்தமே 70 வீடு களைக்கூடத் தாண்டாத இந்தக் கிராமத்தில் அனைவரின் தொழிலும் விவசாயம்தான். தண்ணீர் இல்லாமல் தனது ஆறு ஏக்கர் நிலமும் காய்ந்து கருகுவதைக் காணச் சகிக்காமல் மனம் வெதும்பி, கடந்த வாரம் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டுவிட்டார் 35 வயது ராஜாங்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீட்டில் ஆறுதலுக்கு யாரும் இல்லாமல் தனியே இருக்கிறார் ராஜாங்கத்தின் மனைவி தேவி. ஓர் ஏழை விவசாயின் வீடு எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அவருடைய வீடு. உள்ளே மின் பொருட்கள் எதையும் பார்க்க முடியவில்லை. கூடை, முறம், யூரியா, சாக்கு என்று எல்லாமும் விவசாயம் சார்ந்த பொருட்கள் மட்டுமே.  

"வயல் காயுதே... வயிறு எரியுதே!"

உணர்ச்சி இல்லாத குரலில் பேசத் துவங்கினார் தேவி, ''விதைகால் (நேரடி நெல் விதைப்பு) போட்டாரு. அது புயலடிச்சப்ப மூழ்கி அழுகிப்போச்சு. பெறவு ஏழு சிப்பம் விதை வாங்கி நாத்துவிட்டாரு. விட்ட நாத்தைப் பறிச்சு நடறதுக்குக்கூடத் தண்ணி வரலை. டீசல் எஞ்ஜின் வெச்சு இறைச்சு பாதி வயலை நட்டாரு. பத்துப் பதினஞ்சு நாள் கழிச்சு திரும்பவும் கொஞ்சம் தண்ணி வந்தவுடனே கட்டு முன்னூறு ரூபாய்னு பத்துக் கட்டு நாத்து வாங்கி, மீதம் இருந்த வயலையும் நட்டாரு. அதுவரை கையில இருந்த நகையெல்லாம் அடகுவெச்சாச்சு. அஞ்சு பைசா வட்டிக்கு நாப்பதாயிரம் ரூபாய்க்கு மேல கடனும் வாங்கியாச்சு.

வாய்க்கால்ல தண்ணி குறைஞ்சுபோச்சு. திரும்பவும் எஞ்ஜினுக்கு டீசல் வாங்கி ஊத்தி தண்ணி இறைச்சாரு. அதுக்கு ஊரைச் சுத்தி வட்டிக்குக் கடன் வாங்கியாச்சு. ஒரு கட்டத்துல வாய்க்கால்ல சுத்தமாத் தண்ணி வரலை. நட்ட நடவு காயுதேனு புலம்புனவரு, அப்பவும் அசராம குளத்துல எஞ்ஜினைப் போட்டுத் தண்ணி இறைச்சார். அதுக்கும் டீசல் வாங்கக் காசு இல்லை. என்கிட்ட வந்து 'என்னா இருக்கு?’னு கேட்டாரு 'குண்டுமணித் தங்கம்கூட மிச்சம் இல்லை’னு சொன்னேன். சோர்ந்து சுருண்டு படுத்துட்டாரு.

'இப்படி வயல் காயுதே... என் வயிறு பத்தி எரியுதே... இதப் பாக்கவா நான் கடனவுடன வாங்கி நட்டேன்’னு புலம்பிட்டே இருந்தாரு. திடீர்னு ஆளைக் காணோமேனு தேடிப் பார்த்தா, வயலுக்கு வாங்கிவெச்சிருந்த பூச்சி மருந்தக் குடிச்சு வயலுக்குள்ளேயே விழுந்துட்டாரு!'' அதற்கு மேல் அடக்கமாட்டாமல், தேம்பித் தேம்பி அழத் துவங்கிவிட்டார் தேவி.

ராஜாங்கத்துக்கும் தேவிக்கும் பிறந்தது இரண்டு ஆண் குழந்தைகள். ஆனால், இவர்கள் நான்கு குழந்தைகளுக்குப் பெற்றோர். ராஜாங்கத்தின் அண்ணன் சுகுமாறன் இறந்த பிறகு, அவரின் மூன்றரை வயதுப் பெண், ஒன்றரை வயது ஆண் குழந்தைகளையும் இவர்கள்தான் பராமரிக் கின்றனர்.  

'ஊரெல்லாம் டெங்கு பரவிட்டு இருக்கே... நம்ம குழந்தைகளுக்கு அப்படி ஏதாவது ஆகிட்டா, மருந்து மாத்திரை செலவுக்குக்கூடக் காசு இல் லையே!’ என்பதுதான் ராஜாங்கம் இறப்பதற்கு முதல் நாள் இரவு கணவன் - மனைவி இருவரின் விவாதமாக இருந்திருக்கிறது. தண்ணீர் இறைக்க 1,000 ரூபாய் திரட்டவே வழியற்று நிற்கும் சூழ்நிலையில், தன் குழந்தைகளின் எதிர்காலப் பாதுகாப்பும் நிகழ்காலக் கடன் நெருக்கடியுமே ராஜாங்கத்தின் கழுத்தை இறுக்கியிருக்கிறது.

இந்த நிலையில், 'நீர் பாய்ச்ச முடியாமல்தானே இறந்துபோனான் ராஜாங்கம்’ என்ற பரிதவிப்பு மேலிட இப்போது ஊர் மக்களே அவரது வயலுக்குத் தண்ணீர் இறைக்கிறார்கள். தொடர்ந்து உரமிட்டு அந்த வயலில் விளைச்சல் எடுப்பது தங்கள் பொறுப்பு என்று உறுதியாகக் கூறுகிறார்கள். தன்னுயிர் தந்து அந்தப் பயிரைக் காப்பாற்றி இருக்கிறார் ராஜாங்கம்.

குறுவை சாகுபடி முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு, சம்பாவும் கால தாமதமாகிய நிலையில்தான், விவசாயிகள் நேரடி நெல் விதைப்பிலும் சமுதாய நாற்றங்காலிலுமாக விவசாயம் செய்ய ஆரம்பித் தார்கள். ஆனால், மேட்டூரிலும் தண்ணீர் இல்லை. வழக்கமாகப் பெய்யும் வட கிழக்குப் பருவ மழையும் பெய்யவில்லை. இயற்கையும் அரசும் ஒருசேரக் கைவிரிக்க, தவிர்க்கவே முடியாமல் டெல்டாவில் முதல் பலி விழுந்துவிட்டது. இனி, வயல் கருகக் கருக... பல உயிர்களும் கருகத்தான் செய்யும். இது... உரியவர்கள் கவனத்துக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism