பிரீமியம் ஸ்டோரி
##~##
சோனியா காந்தி... மூன்று இந்தியப் பிரதமர்களைத் தந்த குடும்பத்தின்  மகாராணி. இந்தியாவின் தலைஎழுத்து, இப்போது சோனியாவின் 'கை’களில் என்றால், அது மிகை இல்லை!  

• இத்தாலியின் லூசியானாவில் 1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி பிறந்தார். எட்விஜ் அன்டொனிய அல்பினா மெய்னோ (Edvige Antonia Albina Maino) என்பது இயற்பெயர். அப்பா, ஸ்டெஃபானோ. அம்மா, பாலோ மெய்னோ!

•  கட்டட ஒப்பந்ததாரராக இருந்த தந்தை யின் மறைவுக்குப் பிறகு, தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் இளமைக் காலம் முழுவதையும் ட்யூரி நகரத்தில் கழித்தார்!

•  18-வது வயதில் கல்விச் செலவுகளைச் சமாளிக்க, உணவகம் ஒன்றில் வெயிட்டராகப் பகுதி நேரப் பணி புரிந்தார். அப்போதுதான், ட்ரினிட்டி கல்லூரியில் படித்த ராஜீவ் காந்தியோடு அறிமுகம்!

•  ஹோட்டலில் சோனியாவுக்கு  அறிமுகமான கிறிஸ்டியன்தான்  ராஜீவை அவருக்கு அறிமுகப்படுத்தினார். காதல் அத்தியாயங்களுக்குப் பிறகு, 'ராஜீவ்தான் கிறிஸ்டியனை வற்புறுத்தித் தன்னிடம் அறிமுகம் ஏற்படுத்திக்கொண்டார்’ என்ற உண்மையைக் கண்டுபிடித்தார் சோனியா!

•  ' 'நீ சந்திக்கும் முதல் பெண் உனக்குச் சரியானவளாக இருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை’ என்பீர்கள். ஆனால், நான் பார்த்த முதல் பெண்ணே, எனக்கு மிகச் சரியான வளாக அமைந்துவிட்டாள்!’- சோனியாவைச் சந்தித்தவுடன், தன் அம்மா இந்திராவுக்கு ராஜீவ் எழுதிய கடிதத்தில் இடம் பெற்றிருந்த வரிகள் இவை!

சோனியா 25

• சோனியாவைப் பார்க்க விரும்பினார் இந்திரா காந்தி. அதைக் கேட்டதும் படபடப்பில் சோனியாவுக்கு மயக்கமே வந்துவிட்டது. அதைக் கேள்விப்பட்ட இந்திரா, சோனியாவின் தாய்மொழியான ஃபிரெஞ்சிலேயே பேசி, அவரை இயல்புக்குக் கொண்டுவந்தார்!

•  திருமணம் முடிந்து இந்தியாவில் குடியேறிய பிறகும், பயம் கலந்த மரியாதையுடன் இந்திராவிடம் ஒட்டாமல் வளைய வந்தார் சோனியா. ஒரு விசேஷ வீட்டில் சோனியாவின் கவுனில் தையல் பிரிந்து இருந்ததைக் கண்டு, ஊசி நூலை வரவழைத்து இந்திரா தைத்துக்கொடுக்க, அந்தப் புள்ளியில் பலப்பட்டு இருக்கிறது மாமியார் - மருமகள் இடையேயான தோழமை!

•  புது மருமகள் சோனியாவை இந்திய உணவுகளின் காரமும் புடவைகளும் மிரட்டின. கார உணவுகளைத் தவிர்த்த சோனியா, ஆரம்ப நாட்களில் சேலை அணிந்தபோது அது எப்போதும் அவிழ்ந்து விடலாம் என்ற பயத்தி லேயே இருப்பார்!  

• வெளிநாட்டவர் என்று தன்னைக் குறிப்பிடும் விமர்சனங்களுக்கு, ''எனது தோற்றம் அப்படி இருக்கலாம். ஆனால், மன தளவில் நான் ஓர் இந்தியப் பெண்!'' என்று சுளீர் பதில் அளிப்பார் சோனியா!

•  ராஜீவ் - சோனியா ஜோடி டெல்லிக்குக் குடி வந்த புதிதில், லேம்ப்ரட்டா ஸ்கூட்டரில்தான் ஊர் சுற்றுவார்கள். இப்போதும் அந்த லேம்ப்ரட்டா ஸ்கூட்டர் சவாரிதான் தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்பார்!  

•  'சோனியா, நீ இந்தக் குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்திருக்கிறாய். உன்னில் நான் என்னைக் காண்கிறேன்!’ - சோனியாவுக்கான கடிதத்தில் இந்திரா எழுதிய வரிகள் இவை!  

•  முதல் கர்ப்பத்தில் கருவிலேயே சிதைந்து விட்டது குழந்தை. ஒன்பது மாத முழுமையான ஓய்வுக்குப் பிறகு, பெற்றெடுத்த ஆண் குழந்தைதான் ராகுல். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, பிரியங்கா பிறந்தார்!

• கிறிஸ்துவப் பின்னணிகொண்ட குடும் பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு இந்து மதத்தையும், இந்தியக் கலாசாரத்தையும் கற்றுக் கொடுத்தே வளர்த்தார் சோனியா!

• 1986-ல் தன் குடும்பத்தினருடன் காந்திஜி யின் நினைவு மண்டபத்தில் சோனியா அஞ்சலி செலுத்திக்கொண்டு இருந்தபோது, ஒரு துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. அதன் தோட்டா சோனியாவின் பாதுகாவலர் காது அருகே உரசிச் சென்றது, அப்போது பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம்!

• இந்திரா படுகொலையான சமயம், ''நீங்கள் அரசியலில் ஈடுபட்டால், நான் உங்களை விவாகரத்து செய்துவிடுவேன்'' என்று ராஜீவைப் பயமுறுத்தினார் சோனியா!  

• ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவிப் பிரமா ணம் எடுக்கவிருந்த சமயம், அவரது கைகளைப் பற்றிக்கொண்டு, 'அரசியல் வேண்டாம். அது உங்களை என்னிடம் இருந்து பிரித்துவிடும். எனக்கு ராஜீவ் வேண்டும்’ என்று கண் கலங்கி னார் சோனியா. அப்போது பிரமாண அழைப்பு வரவும், சோனியாவின் கைகளை மென்மையாக விடுவித்த ராஜீவ், 'நீ சம்மதம் அளித்ததாக நினைத்துக்கொண்டு செல்கிறேன்!’ என்று கிளம்பிச் சென்றார்!

• 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையான பிறகு, 'இத்தாலிக்கு வந்துவிடு!’ என்று அவரது குடும்பத்தினர் வற்புறுத்தியபோது மறுத்துவிட்டார் சோனியா. அதன் பிறகு, கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து, 'நேருவின் குடும்பம்தான் காலங்காலமாக காங்கிரஸ் கட்சியை நிர்வகித்து வருகிறது’ என்று வற்புறுத்தி, காங்கிரஸ் தலைவர்கள்தான் அவரை அரசியல் பாதையில் பயணிக் கச் செய்தார்கள்!

•  2004 பொதுத் தேர்தலில், சோனியா தலைமையில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் வென்றது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்க முயற்சித்தபோது, 'சோனியா இந்தியர் இல்லை’ என்று சொல்லி, அவர் பிரதமர் பதவியில் அமர்வதை எதிர்த்தது பி.ஜே.பி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள். உடனடியாக மன்மோகன் சிங்கைப் பிரதமர் ஆக்கினார் சோனியா!

• பாட்டி, தந்தை ஆகியோரின் கொடூர மரணங்கள் காரணமாக, சோனியா நிச்சயம் பிரதமர் நாற்காலியில் அமரக் கூடாது என்பதில் அப்போது தீர்க்கமாக இருந்தார்கள் ராகுல் மற்றும் பிரியங்கா!

• அந்தச் சமயம் forbes பத்திரிகை வெளியிட்ட 'உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள்’ பட்டியலில் சோனியாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது!

• காஞ்சிபுரம் கைத்தறிப் புடவைகள்தான் விசேஷத் தருணங்களின்போது சோனியா விரும்பி அணிபவை!  

• தனக்குப் பிடிக்காதவர்கள், என்ன பேசினா லும் சலனம் இல்லாமல் அதைக் கேட்பார். அதே சமயம் பிடித்தவர்கள் தவறு செய்தால், உரிமை யுடன் திட்டி அவர்களை நெறிப்படுத்துவார்!  

• ராகுலின் வளர்ச்சிபற்றி யார் பெருமையாகப் பேசினாலும், பெருமிதத்துடன் கேட்பார். அதனாலேயே காங்கிரஸ் உறுப்பினர்கள் சோனியாவைத் தாஜா செய்ய ராகுலின் இளைஞர் அணிச் செயல்பாடுகளைப் புகழ்வது வழக்கம்!

•  ஆஃப்கன் ஹவுண்ட், கோல்டன் ரெட்லிவர், கிரே ஹவுண்ட் போன்ற ஜாதி நாய்களும், கிளிகளும் ரொம்பவும் பிரியம்!  

•  முழு ஓய்வு எடுத்துக்கொள்ளும் ஞாயிற்றுக் கிழமை முழுக்க, கர்னாடக இசை மத்தியிலேயே இவரது நாள் கழியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு