Published:Updated:

''எல்லோரும் ஏன் எழுத்தாளர் ஆக வேண்டும்?''

ரீ.சிவக்குமார், படம்: கே.ராஜசேகரன்

##~##
சோகமித்ரன் தமிழின் மூத்த எழுத்தாளர், முக்கிய எழுத் தாளர். தண்ணீர், மானசரோவர், 18-வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள், அப்பாவின் சிநேகிதர் என்று பல முத்திரைகள் மூலம், இலக்கியத் தடத்தில் இடைவிடாது பயணித்துக்கொண்டு இருப் பவருடன் ஒரு சந்திப்பு...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அவ்வப்போது சென்னை குறித்து நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பார்வையில் எப்படி இருக்கிறது சென்னை?''

''எல்லோரும் ஏன் எழுத்தாளர் ஆக வேண்டும்?''

''நிறைய மாறி இருக்கிறது. சென்னை என்றாலே, ஒரு வறண்ட பிரதேசம், தண்ணீர் இல்லாத நகரம் என்கிற கருத்து மாறி இருக்கிறது. இப்போது ஓரளவுக்கு எல்லோருக்கும் குடிநீர் வசதி கிடைக்கிறது. அடுத்தபடியாக, போக்குவரத்து நிறைய வளர்ந்து இருக்கிறது. சென்னையின் எந்த மூலையிலும் போவதற் குப் பேருந்துகள் ஒருபுறம், பெருக்கம் எடுத்துவிட்ட வாகனங்கள் மறுபுறம் என்று போக்குவரத்து வளர்ந்து இருக்கிறது. அப்புறம் வங்கிகள். முன்பு எல்லாம் வங்கியில் பணம் போட வேண்டும் அல்லது எடுக்க வேண்டும் என்றால், ஒன்றரை கிலோ மீட்டர் செல்ல வேண்டும். வங்கிகளில் கணக்கு ஆரம்பிப்பதும் அவ்வளவு எளிதானது அல்ல.ஆனால், இப்போது ஒரு தெருவில் மூன்று ஏ.டி.எம் சென்டர்கள் வந்துவிட்டன. ஆண்களோடு பெண்களும் வேலைக்குச் செல்கிறார்கள். ஓரளவுக்கு எல்லோர் கையிலும் பணம் புழங்குகிறது. வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு சென்னையில் ஒரு வேலை நிச்சயம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவை எல்லாம் நல்ல மாற்றங்கள். அதே சமயம், நல்லவையோடு கெட்டவையும் வந்து சேர்வது இயற்கைதானே!

நகரம் வளர வளர... ஏழ்மை, திருட்டு, விபசாரம் இவையும் சேர்ந்து வளர்கிறது. குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். எனக்குப் பெண் குழந்தைகள் இல்லை. ஆனால், ஒரு பெண்ணைக் கொலை செய்ய முடியும் என்று நினைத்துப்பார்க்கவே எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. குழந்தைகளைக் கடத்துவதையும் பெண்கள் கொலை செய்யப்படுவதையும் எப்படி வளர்ச்சி என்று சொல்ல முடியும்? சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்ப்பவர்கள் தொடங்கி, பலருக்கும் குறிப்பிட்ட வேலை நேரம் என்று எதுவும் இல்லை. இவை எல்லாம் பாதகமான மாற்றங்கள். ஆனால், இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 'ஐயையோ, எங்க காலத்துல எல்லாம் இப்படி இல்லே’ என்று சொல்வது... சொல்பவனுக்கும் நல்லது இல்லை, கேட்ப வனுக்கும் நல்லது இல்லை!''

''இவை எல்லாம் வெளியிலே ஏற்பட்ட மாற்றங்கள். நமது கலாசார மதிப்பீடுகள் எப்படி மாறி இருக்கின்றன?''

''இந்திய நாட்டில் உள்ளதுபோல ஒரு கலாசாரம் உலகத்திலேயே கிடையாது. உத்தரப்பிரதேசம், பீகார் மாதிரியான இடங்களுக்குப் போய் இருக்கிறேன். தரித்திரம் இருந்தால்கூட அங்கு எல்லாம் கலாசாரமும் இருக்கும். மரியாதை, விருந்தோம்பல் இவை எல்லாம் தரித்திரத்திலும் அவர்களுக்கு இருக்கும். ஒரு காலத்தில், பாட்டு கற்றுக்கொள்வது, நடனம் கற்றுக்கொள்வது எல்லோராலும் முடியாது. ஆனால், இப்போது எல்லோரும் விரும்பிக் கற்றுக்கொள்கிறார்கள். 500 ரூபாய் டிக்கெட் வாங்கி இசைக் கச்சேரிகளுக்குப் போகிறார்கள். எங்க காலத்துல சினிமா வுக்குப் போறதை லைட் பிடிக்கப் போறது னுதான் சொல்வோம். எங்கேயுமே படிக்க லாயக்கு இல்லாதவன்தான், ஓவியக் கல்லூரியில சேருவான்னு நினைப்பு இருந்தது. ஆனா, இப்போ அது எல்லாம் மாறி இருக்கு. சினிமாவுக்குப் போறதுக்கும் ஓவியக் கல்லூரியில் படிக்கிறதுக்கும் ஒரு மரியாதை உருவாகி இருக்கு. இதெல்லாம் சேர்ந்ததுதான் நம் கலாசாரம்னு நான் நினைக்கிறேன். சென்னையில் வழி கேட்டா சொல்ல மாட்டாங்கனு ஒரு குற்றச்சாட்டு சொல்வாங்க. ஆனால், இப்போ யாருக்குமே அடுத்தவங்க கேள்விக்குப் பதில் சொல்ற அளவுக்கு அவகாசம் இல்லாத அவசர வாழ்க்கையா மாறிடுச்சு. ஆனால், இதெல்லாம் தாண்டி நம் கலாசாரம் உயிர்ப்போடு இருக்குன்னு நான் நம்பறேன். பொதுவாக, கர்நாடகாவுக்கும் நமக்கும் ஏராளமான பிரச்னைகள் இருந்தாலும், சாதாரண மக்களிடம் மொழி வெறி கிடையாது என்பது கலாசாரச் சிறப்புதானே!''

''இப்போது உள்ள இலக்கியச் சூழல், இணையத்தில் எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''அப்போது எல்லாம் ஒரு வருடத்துக்கு 100 புத்தகங்கள் வெளியானால் அதிசயம். அதுவும் குறைந்தது 1,200 பிரதிகள் அச்சிட வேண்டும். அந்தக் காலத் தொழில்நுட்பம் அப்படி. ஆனா, இப்போ நிறையப் புத்தகங்கள் வெளிவருகின்றன. தேவையான அளவுக்கு அச்சடித்துக்கொள்ளலாம். 10 வருஷங்களுக்கு முன்பு முக்கியமான எழுத்தாளர்கள் யார் என்று கேட்டால், ஒரு பட்டியல் சொல்வார்கள். ஆனால், இப்போது அப்படிச் சொல்ல முடிய வில்லையே! அதே சமயம், புத்தகங்கள் அதிகமாக வருவதனால், புத்தகங்களின் தரம் கூடியிருக்கிறது என்றும் சொல்ல முடியாது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போடும் புத்தகத்திலேயே பக்கத்துக்கு 15 பிழைகள். அப்புறம் நிறையப் பேர் புராணத்தை வேறு மாதிரியாக எழுதுகிறேன் என்று எழுதுகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. இதிகாசங்கள், புராணங்கள் முடிந்துபோன விஷயம். அதை ஏன் வேறு வடிவத்தில் எழுத வேண்டும்? இணையத்தில் எழுதுவதை நான் அதிகம் வாசிப்பது இல்லை. ஆனால், எல்லோருக்குமே எழுத்தாளராக வேண்டும் என்று ஆசை இருப்பது மட்டும் தெரிகிறது. ஆனால், ஏன் எல்லோரும் எழுத்தாளராக வேண்டும்? வேறு ஏதாவது ஆகலாமே!''

''சாகித்ய அகாடமி விருதுகள், ஞானபீட விருதுகள் அறிவிக்கும்போது எல்லாம் சர்ச்சைகள் வருகின்றனவே, உங்களுக்கு 'உங்களை அங்கீகரிக்கப்படவில்லை’ என்ற வருத்தம் இருக்கிறதா?''

''எனக்கு 70 வயதில் 'அப்பாவின் சிநேகிதர்’ சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது

''எல்லோரும் ஏன் எழுத்தாளர் ஆக வேண்டும்?''

கொடுத்தார்கள். ஞானபீட விருது கொடுப்பதில் எல்லாம் ஏகப்பட்ட லாபி இருக்கிறது. குறிப்பாக, கன்னட எழுத்தாளர்களுக்கும் மலையாள எழுத்தாளர்களுக்கும் அதிகம் விருதுகள் கொடுப்பதில் லாபி இருக்கிறது என்று நினைக்கிறேன். சிலர் 'எனக்குத் தாமதமாகக் கிடைத்த விருது’ என்று அங்கலாய்த்துக்கொள்கிறார்கள். அது தேவை இல்லை என்று நினைக்கிறேன்!''

''நாஞ்சில்நாடன், நீல.பத்மனாபன், இந்திரா பார்த்தசாரதி யின் படைப்புகள் சினிமாவாக வந்திருக்கின்றனவே, உங்கள் படைப்புகள் ஏன் இன்னும் சினிமாவாகவில்லை?''

''இயக்குநர் வசந்த் கூட அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார். ஆனால், நான் எழுதும் கதையைப் படிக்கும்போது வாசகனுக்குப் பலவித பிம்பங்கள் உருவாகும். சினிமா அதைக் கெடுத்து, ஒரு சட்டகத்துக்குள் அடைத்துவிடும். எனவே, என் கதைகளை சினிமாவாக்க எனக்கு விருப்பம் இல்லை!''