Published:Updated:

''மாற்றம் வந்தாத்தானே மக்களுக்கு பெனிஃபிட்டு!''

ஒரு கலைஞனின் ஆதங்கம்தங்கர்பச்சான்

##~##
சி
னிமாவுல நடிக்க வந்தவங்க எல்லாம் நாட்ட ஆண்டுக்கிட்டு இருக்காங்க. எதிர்காலத்துல ஆளுறதுக்கு நிறைய சினிமா நடிகர்கள் தயாராயிட்டும் இருக்காங்க. ஆனா, நம்மளோட தாய்க் கலையை, நம்ம மக்களோட கலைகளை, இந்தத் தமிழ் நாட்டு அரசாங்கமும் ஆதரிக்காம, மக்களும் ஆதரிக்காம மொத்தமா அழிஞ்சுபோச்சு. காலங்காலமா தமிழுக்கு உயிர் கொடுத்துட்டு வந்த அந்தக் கலைகளும், கலைஞர்களும் தேய்ந்து போய்ட்ட இந்த நிலையில... அத்திப் பூ மாதிரி எங்கேயோ ஒரு கிராமத்துல, ஏதோ ஓர் இடத்துல, தங்களோட உயிரைக் காப்பாத்திக்கிறதுக்காக... இன்னமும் அதே கலையில கிடந்து, எஞ்சியுள்ள கலைஞர் கள் போராடிட்டு இருக்காங்க. யாராலயும் கண்டுக்கப்படாம, கால் வயித்துக்கே கஞ்சி இல்லாம, உண்மையான கலைத் தொழில் செஞ்சு போராடிட்டு வர்ற ஒரு தமிழ்நாட்டு தெருக் கூத்துக் கலைஞனைச் சில நாளைக்கு முன், நான் என் கிராமத்துக்குப் போனப்ப சந்திச்சேன். தெருவுல நடந்து போயிட்டு இருந்தப்ப, என்ன அடையாளங் கண்டு எதிரில் வந்து பேச்சு கொடுத்தாரு. அவரு பேரு சங்கர். எல்லாருகிட்டயும் பேசற மாதிரிதான் அவருகிட்டயும் பேசுனேன். ஆனா, அந்தப் பேச்சு கடைசியா எங்கேயோ போய் முடிஞ்சிருக்கு. இந்த ஒரு தமிழன் என்கிட்ட பகிர்ந்துகிட்டதுதான் இப்ப தமிழ்நாட்டுல இருக்குற எல்லாத் தமிழனோட மனநிலையா இருக்கும்னு புரிஞ்சிக்கிட்டேன். அந்தத் தெருக் கூத்துக் கலைஞன், என்னோடு பகிர்ந்துகிட்டத உங்களோடயும் பகிர்ந்துக்கிடலாம்னு தோணுச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''மாற்றம் வந்தாத்தானே மக்களுக்கு பெனிஃபிட்டு!''

''உங்களுக்குச் சாப்பாடு எல்லாம் எப்பிடி?''

''சாயங்காலம் அஞ்சு மணிக்கு எல்லாம் கூத்து கட்டுற ஊர்ல வந்து சேர்ந்திடுவோம். நைட் எங்களுக்கு நாட்டுக் கோழி அடிச்சு ரசம் வெச்சுக் கொடுப்பாங்க. தொண்டைக்கு நல்லது. சில ஊர்ல என்ன இவனுங்க கூத்தாடிதானேன்னு வெறும் சாம்பார் ஊத்திடுவாங்க. அன்னிக்கு தொண்டை கட்டிக்கும். கூத்தாட சிரமமா இருக்கும். வாயைத் தொறந்து கேட்கவும் முடியாது. விவரம் தெரியாதவங்க 'கோழிக் கறிக்கு அலையறானுங்க பாரு’ன்னு எகத்தாளம் பேசுவாங்கன்னு விட்ருவோம். நைட்டு ஆடி முடிச்சதுக்கப்புறம் மக்கியா நாளு காலையில டிபன் சாப்பாடு, முந்திரிச் செடி, தென்னமரம், மாமரம்னு பார்த்துத் தூங்கி எழுந்துக்குவோம். சம்சாரிங்க வீடுகள்ல தூங்க இடங் கொடுக்க மாட்டாங்க. கூத்தாடிங்க இங்க தூங்கக் கூடாதுன்னு சொல்லிடுவாங்க. நாங்க ஆடி முடிச்ச பின்னதான் எங்களுக்குப் பணம் அம்போகம் பண்ணுவாங்க. அதுவும் நாங்க நல்லா ஆடுனாத்தான் கொடுப்பாங்க. இல்லன்னா, என்ன நீங்க ஆடிக் கிழிச்சீங்கன்னு எகத்தாளமும் பேசுவாங்க!''

''வேசமாடுறப்ப தப்பு செஞ்சிட்டா சனங்களுக்குத் தெரியாம இருக்கணுங்கறதுக்காக உங்களுக்குள்ள நீங்க சூசகமா சொல்லிக் கூப்பிட்டுக்கிற பேருங்கள சொல்லுங்க?''

''மாற்றம் வந்தாத்தானே மக்களுக்கு பெனிஃபிட்டு!''

''அதா சார்! தாளக்காரருக்கு நெண்டிக் காலு, மத்தளக்காரருக்கு தமிக்காலு, தலை வேஷக்காரருக்கு ராஜபார்ட் இல்ல, தன தம்பம்னு சொல்வோம். பெண் வேஷக்கார ருக்கு ராலு பந்தம். அரவேசக்காரருக்குகெஜக் கால், நாரதர் வேஷக்காரருக்கு முந்திரிக் கால், காலுன்னா ஆளுன்னு அர்த்தம். ஈஸ்வரன் வேஷக்காரருக்கு கஞ்சாப் பணிக்கர், கிருஷ்ணன் வேஷக்காரருக்கு மேசக்காலு, பாட்டுக்காரருக்கு வாகறை, வசனக்காரருக்கு நச்சு, பெட்டி தூக்குறவருக்கு நெமிலிக் காலு, மூட்டை தூக்குறவருக்கு மந்தால்காரருன்னு பேரு. 'ஏய் மூட்ட தூக்குறவரே’ன்னு கூப்பிட்டா அவருக்கு அசிங்கமாப் பூடும் இல்லையா அதனால. இந்த மாதிரி எங்க பாஷையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பேரு இருக்குதுங்க சார்!''

''வேஷங் கட்டுற பொருளுங்க என்னெல்லாம்? அதுங்களோட பேரச் சொல்லுங்க?''

''கவக்குச்சி, நெஞ்சுக்கு மார்பதக்கம்,  இதெ 'கேப்பு’ன்னும் சொல்லுவோம். துணிக்கு கெந்தன்னு சொல்லுவோம். அரிதாரம்னு சொல்ற பொருளுங்க இருக்கு. அதுல நீலம், சிவப்பு, வெள்ளை, கறுப்புன்னு கலரு பொடிங்க இருக்கும். ஜிகினாவையும் தடவிக்குவோம்.''

''தெருக் கூத்தை நகரத்துக்காரங்க எப்புடிப் பாக்குறாங்க?''

''கிராமத்தைவிட டவுன்லதான் மரியாதை அதிகம். பாண்டிச்சேரிக்குப் போயிட்டோம்னா, எங்கள சினிமா ஸ்டாராட்டம் பாக்குறாங்க. பாண்டியிலதான் எங்களுக்கு உண்மையாலுமே மரியாதை கிடைக்குது. கலையை மதிக்கிறசனங்க அங்க அதிகம். மெட்ராஸ்ல ஒரு முறை ஆடினோம். லேடீஸ் எல்லாரும் ஆர்வமாப் பாத்தாங்க. கர்ண மோட்சத்துல பொன்னுருவி வேஷத்துல நான் ஆடுறேன். எல்லாரும் காசு குத்திக் கை தட்டி ஆர்வப்படுத்துறாங்க. கிராமத் துக்காரங்க இதே ஆர்வத்தக் காட்டுனா கூத்து எங்கேயோ போயிடும்! கிராமத்துக்காரங்க சினிமா மேல மோகமா இருக்குற மாதிரி நகரத்துக்காரங்க கூத்து மேல ஆர்வமா இருக்காங்க!''

''அரசாங்கம் உங்களுக்கு இன்னும் என்ன சலுகைகள் செய்யணும்னு நினைக்கிறீங்க?''

''பஸ்ல போவும்போது இலவசமா டிக்கெட் கொடுத்து, கூத்துக்காரங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்குற மாதிரி செஞ்சிட்டாங்கன்னா, அதுவே பெரிய விஷயம் சார். இலவச அரிசி, புடவைன்னு குடுக்குற மாதிரி கூத்தாடுறவங்களுக்கு, அதுவும் பெண் வேஷம் கட்டுறவங்களுக்கு டோப்பா, கவரிங் நகைங்கன்னு இலவசமாக் கொடுத்தாங்கன்னா, நல்லா இருக்கும். ஒரு டோப்பா வாங்கணும்னா, ரெண்டாயிரம் ஆகுது. அதுபோல கவரிங் நகைங்களும் வேணும். இது ரெண்டையும் தமிழ்நாடு முழுக்க இருக்குற கூத்துக்காரங்களுக்கு இலவசமாக் கொடுத்தாங்கன்னா, ரொம்ப சந்தோசப்படுவோம்!''

''மாற்றம் வந்தாத்தானே மக்களுக்கு பெனிஃபிட்டு!''

''கூத்தாடுறவங்களுக்குப் பொண்ணு கிடைக்குறது ரொம்ப சிரமமாமே, அது நிஜமா?''

''என் சேக்காளி ஒருத்தன் நல்லா வேஷமாடுவான். இப்ப அவன் வேஷமாடுறது இல்ல. கூப்பிட்டா, கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் நான் வரலடான்னு சொல்லிட்டான். அவங்க அப்பா- அம்மாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்கியாவது போடான்னு சொல்லிட்டாங்க. சனங்களும் பெண் வேஷம் கட்டுறவங்களுக்கு கூத்தாடின்னும், ரெண்டுங்கெட்டான்னும் சொல்லி... பொண்ணு தர்றதில்ல. நாங்க உண்மையில அப்படி ஒண்ணும் கிடையாது. நான் சூரன் வேஷம் கட்டுனா சூரனாவே மாறிடுவேன். பொடவையக் கட்டுனேன்னா சுபத்ரையா மாறிடுவேன். பொடவைய இடுப்புல சொருவுனவுடனே, பொண்ணுக்கான அத்தன அம்சமும் ஒடம்புல வந்து பூந்துக்கும். இந்தக் கலையை எப்படி எங்களால மறக்க முடியும்?''

''கூத்து ரொம்ப நீளமா இருக்குது. புதுசாப் பாக்குறவங்க பாதியிலயே எழுந்து போயிடறாங்கன்னு சிலரு குறை சொல்றாங்களே. கூத்த சுருக்க முடியாதா?''

''அப்பிடி ஒரு கதையைப் பொசுக்குனு முடிக்க முடியாது சார். அதெ அப்பிடி லேட்டஸ்ட்டாப் பண்ணோம்னா, பழைய காலத்து ஆளுங்க எங்கள கன்னாபின்னான்னு திட்ட ஆரம்பிச்சுடுவாங்க. ஆனா, கூத்துக் கலையை வளர்க்கிறதுக்கு ஏதாவது யோசிக்கணும்!''

''மாற்றம் வந்தாத்தானே மக்களுக்கு பெனிஃபிட்டு!''

''உங்களுக்குப் பிடிச்ச சினிமா நடிகர் யார்?''

''எனக்கு பழைய நடிகர்கள்ல எம்.ஜி.ஆர் பிடிக்கும்! நானும் ஒரு ஆக்டர்ங்கற முறையில அவரோட ஸ்டைலு, ஆக்டிங், சிரிப்பு, அவருடைய வசனங்கள் எல்லாம் மக்களைத் திருத்துற மாதிரி இருக்கும். அவரு மக்களுக்கு செஞ்ச மாதிரி இப்ப இருக்குறவங்க, எல்லாரும் செஞ்சா நாடு முன்னேற்றப் பாதையில போகும். அதே மாதிரி சிவாஜியோட நடிப்புத் திறமை எனக்குப் புடிக்கும். இந்தக் காலத்துல, கமல்ஹாசன் புடிக்கும். சூர்யாவை எனக்கு ரொம்பப் புடிக்குது. அதே மாதிரி ரஜினியை ரொம்பப் புடிக்கும். அவரோட எளிமை புடிக்கும்!''

''ஒரு தெருக் கூத்துக் கலைஞர் என்பதெல்லாம் தாண்டி, ஒரு குடிமகனா இந்த நாட்டுல உங்களுக்கு என்ன குறை இருக்குதுன்னு நினைக்கிறீங்க. அரசாங்கம் அறிவிச்சிருக்கிற திட்டத்துல எது உங்களுக்குப் பிடிச்சிருக்கு?''

''ஸ்டவ் அடுப்பு, டி.வி இதெல்லாம் ஆடம்பர வாழ்க்கை. டி.வி இருக்க வேண்டியதுதான். ஆனா, அரசாங்கம் கொடுத்து பார்க்கக் கூடாது. டி.வி எல்லாருக்கும் கொடுக்குறாங்க. என் வீட்லயும் வெச்சிருக்கேன். புள்ளைங்க எல்லாம் டி.வி-லயே ஐக்கியமாயிடுதுங்க. என் சின்னப் புள்ளைக்கு ஆறு வயசுதான் ஆவுது. அது சொல்லுது, 'அப்பா... இந்தப் படத்த ஏற்கெனவே போட்டுட்டாங்கன்னு. இந்த இடத்துல இது வருதுன்னு சொல்லுது. அறிவு வளர்ச்சி இருக்குது. ஆனா, அந்த அறிவு அன்னாடங்காய்ச்சி பொழப்பு நடத்துறதுக்கான அறிவு கிடையாதுங்க. பொழப்பக் கெடுக்குற அறிவாத்தான் இருக்குது!

டி.வி-யை இலவசமா ஏன் கொடுக்கக் கூடாதுன்னு சொல்றேன்னா... ஒரு திட்டம் கிறது மக்களுக்கு பெனிஃபிட்டா இருக்கணும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் கொண்டுவந்தாரு. அது மறக்கமுடியாத திட்டம். இப்ப கலைஞர், இலவச டி.வி திட்டம் கொண்டுவந்திருக்காரு. அடுத்து, அம்மா வந்தாங்கன்னா, அந்தத் திட்டம் போயிடும். ஆனா, யாரு வந்தாலும் சத்துணவுத் திட்டத்தை நிறுத்த முடியாது. எந்த ஆட்சியில திட்டம் போட்டாலும் அந்தத் திட்டம் மக்களுக்கு எல்லாக் காலத்துக்கும் பயன்படற மாதிரியான திட்டமா இருக்கணும். அதுதான் நல்ல திட்டம்.

முதலமைச்சரா இருக்குறவங்க வறுமைக் கோட்டுக்குக் கீழ இருக்குறவங்க என்னென்ன கஷ்டத்துல இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கணும் சார். கவர்மென்ட்ல இருக்குறவங்க 20, 30 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்க. ஆனா,வறுமைக் கோட்டுக்குக் கீழ இருக்குறவங்க? லோன் கொடுக்கறது, வங்கியில கடன் தள்ளுபடிசெய்யு றது எல்லாம் இருக்குறவங்களுக்குத்தான் சார் பயன்படுது. எங்கள மாதிரி ஆளுங்க பேங்க்ல கடன் கேட்டா, கா காணி, அரைக் காணி நிலத்த வெச்சிக்கிட்டு கடன் கேக்க வராதீங்கன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லி அனுப்பிடு றாங்க. 10, 20 ஏக்கர் நிலத்துக்காரங்களுக்கு லோனும் தந்து கடனும் தள்ளுபடி பண்றாங்க. இதனால கவர்மென்ட்டுக்குத்தான்  நஷ்டம்!''

''பொதுவா அரசியல்வாதிங்களை மக்கள் எப்புடிப் பாக்குறாங்க?''

''இப்ப இருக்குற அரசியல்வாதிங்க மக்களுக்குச் செய்றாங்க சார். எதுவுமே செய்யலன்னு சொல்லிடக் கூடாது. ஆனா, அவுங்க செய்யிற எல்லாமே வசதி படைச்சவங் களுக்குத்தான் சார்.

ஏழைங்களுக்கு எதுவுமே வந்து சேரல. கலைஞர் வந்தாரு அஞ்சு வருசம் இருந்தாரு. அம்மா வந்தா அவரவிட அதிகமா செய்வாங் கன்னு மாத்திப் போடலாம்னு நினைக்கு றோம். மாற்றம் வந்தாதானே மக்களுக்கு பெனிஃபிட்டு!''

''மதுக் கடையை அரசாங்கம் வெச்சிருக்கணுமா தூக்கிடணுமா?''

''மதுக் கடைய யாரு நினைச்சாலும் தூக்கிட முடியாது சார். நிறுத்தவும் முடியாது. முன்னெல்லாம் பிரசவ வலி வராம இருக்குற துக்குப் பயன்படுத்துன விஷயங்களைப் போட்டு சாராயம் காய்ச்சுனாங்க பெரியவங்க. அதனால, அவங்க வாழ்க்கை பாதிப்பு இல்லாம இருந்தது. இப்ப கடையில விக்கிறது எல்லாம் கெமிக்கல் பவுடர்தான் சார். உடம்புக்குக் கெடுதிதான். இப்ப ஒயின்ஸ் ஷாப்புலயே மூடியக் கழட்டிட்டு கலப்படம் பண்ணி விக்கிறாங்க. ஒரு கோட்டர் குடிச்சாப் போதும். இப்ப ரெண்டு கோட்டர் போட்டாலும் பத்தலை. இப்பிடி எல்லாம் நடக்குது. இதெல்லாம் கெட்டதுதான் சார்.

சாராயக் கடையை மூடினா... வன்முறை, கற்பழிப்பு, எதுவும் இருக்காது. மனுசன் நல்ல மாதிரியா இருப்பான். 'ஆட்சிக்கு நாங்க வந்தா, சாராயக் கடைய எடுத்துடறோம்’னு சொல்ற கட்சிய கண்டிப்பா தாய்மார்கள் ஆதரிப்பாங்க. நம்ம பக்கம் கள்ளச் சாராயத்தை ஒழிச்ச மாதிரி, டாஸ்மாக்கை ஒழிச்சிட்டாங்கன்னா... நாட்டுக்கு நல்லது.

ஒரு வருஷத்துக்கு கண்ணுல காட்டுலன்னா, குடிகாரன் தானே திருந்திடுவான் சார். நான் ஒரு ஆறு மாசம் குடிக்காம இருந்ததனால, ரெண்டு பவுன் நகை எடுத்துச்சு சார் என் வீட்டுல. கூத்துக்குப் போன பிறகு குடிக்க ஆரம்பிச்சி, இப்ப 25 ஆயிரத்துக்கு கடனாளியா இருக்கேன் சார். அதை எப்ப அடைக்கப் போறேனோ தெரியல. நான் உங்கள சந்திச்சேங்கிற முறையில, தங்களோட ரசிகன்ங்கற மரியாதையில நான் என் குடிப் பழக்கத்த இன்னிக்கோட விட்டுர்றேன் சார்!''