Published:Updated:

விகடன் மேடை - சூர்யா

விகடன் மேடை - சூர்யா

##~##
அ.குணசேகரன், புவனகிரி.

''ஜோதிகாவைச் சந்திக்காமல் இருந்திருந்தால்?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 '' 'வாழ்க்கை இவ்ளோ அழகா’ன்னு தெரியாமலேயே போயிருக்கும்!''

பா.மஹதி, பட்டுக்கோட்டை.

விகடன் மேடை - சூர்யா

''இந்த இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்கிற ஆசையைத் தூண்டும் இயக்குநர் யார்?''

 ''சீனியர்ஸ் எல்லோருமேதான்!

இப்போ வெற்றிமாறன். இயக்குநரா கதையும் அழகா சொல்றார். சொல்லும்போதே நல்லா நடிச்சுக் காட்டி, கதையில் அவரே பாத்திரமாவும் மாறிடுறார். அது பிடிச்சிருக்கு!''

நீரை.சுதாகர், சென்னை-56.  

''அழுத ஞாபகம்..?''

 ''கார்மென்ட்ஸ் தொழிலதிபர் கனவில் உழைச்சிட்டு இருந்தவனைக் கொண்டுவந்து, 'நேருக்கு நேர்’ படத்தில் நடிக்க நிறுத்திட்டாங்க. கொல்கத்தாவில் ஷூட்டிங். நடிப்பு எனக்குச் சுத்தமா வரவே இல்லைன்னு யூனிட்டே கடுப்புல இருக்கும்போது, லஞ்ச் பிரேக். இயக்குநர் வசந்த் சார்கிட்ட, 'சார்... கல்கத்தா பிரியாணி சூப்பர்’னு சொன்னதும், 'அப்டியா... நல்லா சாப்பிடு ராசா’ என்று ஆற்றாமையோடு அவர் சொன்ன கணம், அப்படியே கூனிக் குறுகிப்போனேன். தலையணை நனைய நனைய நான் அழுத நாள் அதுதான். இப்போ நினைச்சா... நிம்மதி தர்ற அழுகை!''

விகடன் மேடை - சூர்யா

வீ.கார்த்தி, மானாமதுரை.

''கடந்த காதலர் தினத்தன்று ஜோதிகா வுக்கு என்ன வாங்கிக் கொடுத்தீர்கள்?''

 ''பொதுவா, பிப்ரவரி 14-ம் தேதி வந்தா, ஜோவுக்குப் பிடிச்ச மாதிரி ஏதாவது பண்ணுவேன். இந்த காதலர் தினத்தன்று, எங்க வீட்ல ஒரு கல்யாணம். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் திருமணத்துக்குக் குடும்பத்தோடு கோயம்புத்தூர் போயிருந்தோம். அதனால், நத்திங் ஸ்பெஷல்!''

பொன்விழி, அன்னூர்.

''சினிமாவில் இன்றும் உங்களால் கற்றுக்கொள்ள முடியாதது?''

 ''நிறைய இருக்கு. குறிப்பா, ரெண்டு விஷயம் சொல்லலாம்.

முதல் விஷயம், 'இதுதான் சக்சஸ் ஃபார்முலா’னு எதையும் கணிக்கவே முடியாது.  

இரண்டாவது விஷயம், மனிதர்கள். எப்ப, யார், எதுக்கு, எப்படி மாறுவாங்கன்னு தெரியாது.

'அயன்’ பெரிய ஹிட். அடுத்து, 'ஆதவன்’, 'சிங்கம்’, 'ஏழாம் அறிவு’னு வரிசையாப் படங்கள். 'சூர்யாவுக்கு சூப்பர் கிராஃப் பாருங்க. எல்லாம் கமர்ஷியல் ஹிட் ஆவும்’னு நிறையப் பேர் சொன்னாங்க. ஆனா, 'ஆதவன்’ எதிர்பார்த்ததைவிடக் கொஞ்சம் குறைவாப் போச்சு.

அதே ஆளுங்க இப்படிச் சொன்னாங்க...

'அடுத்தடுத்து கமர்ஷியல் படமாவே இருக்கே. சூர்யாவுக்கு என்ன ஆச்சு?’ ''

எல்.தர்ஷன், கோயம்புத்தூர்.

விகடன் மேடை - சூர்யா

''உங்களுடன் ஜோடியாக நடித்தவர்களில் உங்களுக்குப் பொருத்தமான ஜோடியாக யாரைச் சொல்வீர்கள்?''

 ''பளிச்சுனு தோணும் பேர் அனுஷ்கா. ஒரு படம்தான் பண்ணியிருக்கேன். ஒரு நடிகைகிட்ட பேசுறோம்னு கான்ஷியஸ் இல்லாமப் பேச முடியுது. அழகா காமிச்சிக்கணும்னு அவங்க மெனக் கெடுற மாதிரி தெரியலை. அதனாலயே ஸ்க்ரீன்ல ரொம்ப அழகா இருக்காங்க!''

சின்னராஜன், முக்கூடல்.

''கருணாநிதி குடும்பத்தாருடன் நெருக்கமாக இருக்கிறீர்கள். தங்கையின் திருமணத்தை நடத்தித் தர ஜெயலலிதாவை அழைக்கிறீர்கள். இருவரில் உங்கள் மனதுக்கு நெருக்கமானவர் யார்?''

''இரண்டு பேரும் நேரில் வந்து வாழ்த்திய திருமணம் என்னோட கல்யாணமாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். தமிழகத்தின் இரண்டு தலைவர் களுக்கும் பிடிச்ச ஆளா இருக்கிறதுல உண்மையாவே சந்தோஷப்படுறேன். என் வாழ்வின் வரலாறா, ரொம்பப் பெருமையாக் குறிச்சிவெச்சிருக்கிற நாள் அது!  

'கலைஞர்கள், எல்லோருக்கும் பொது வானவர்கள்’னு சொல்வாங்களே, நான் அந்தக் கட்சி!''

சித்திரவேலு, நெய்விளக்கு.

''அது என்ன... உங்க குழந்தைகளுக்குத் தியா, தேவ் என்று பேர் வைத்திருக்கிறீர்கள். எனிதிங் ஸ்பெஷல்?''

''யோசிச்ச முதல் பேர் தியா. குழந்தைகளோட பேர், நாலு எழுத்துக்குள்ள 'ஸ்வீட்டா’ இருந்தா நல்லதுனு யோசிச்சோம். தியாவோட தம்பி என்பதால் தேவ். ரெண்டு குழந்தைகள் பேரும் ஒரே எழுத்தில் ஆரம்பிக்கணும்!''

என்.சீதாலட்சுமி, சென்னை-95.

''திறமையான நடிகை ஜோதிகாவை, மீண்டும் நடிக்க அனுமதிப்பீங்களா?''

 ''ஒரு ரசிகனா என்னோட ஆசையும் அதுதான். அதுக்காக அவங்களைத் தூண்டிக்கிட்டே இருக்கேன். மேடம்தான் பெர்மிஷன் கொடுக்க மாட்றாங்க. ஒரு விளம்பரப் படத்தில் எனக்கு ஜோடியா நடிக்கக் கஷ்டப்பட்டு கால்ஷீட் வாங்கி இருக்கேன். படிப்படியா வெள்ளித் திரையில் பார்த்துடுவோம்!''

கமல்குமார், ராமநாதபுரம்.

'' 'அடடா, இப்படி ஒரு நடிப்பை நம்மால் செய்ய முடியுமா’ன்னு வியந்த நடிகர்கள் உண்டா?''

''கமல் சார் தொடங்கி கார்த்தி வரைக்கும் அது ஒரு பெரிய லிஸ்ட். 'சந்தானம் சூப்பராப் பண்றாரே... அந்த டைமிங் நாமளும் டிரை பண்ணணும்’னு சமீபத்தில்கூடத் தோணுச்சு!''

விகடன் மேடை - சூர்யா

கே.எஸ்.சாந்தி சுரேஷ்,   சென்னை-24.

''இந்தி நடிகர்கள் மாதிரி இங்கே தமிழ் நடிகர்களிடம் பெரிய ஒற்றுமை இல்லையே, ஏன்?''

 ''அடிக்கடி சந்திக்கிற, 'பதில் தெரியாத கேள்வி’ இது. எங்கேயாவது திடீர்னு சந்திக்கும்போது 'ஹாய்’ சொல்லிக்கிறோமே தவிர, திட்டமிட்டு சந்திக்கிறது ரொம்பக் குறைவு. இந்தக் கேள்விக்கான பதிலா, என் அளவில் ஏதாவது சின்ஸியரா பண்ணணும்னு தோணுது!''

ஜி.கோபாலன், நாகர்கோவில்.

''உங்கள் குழந்தைகள் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?''

''ஒழுக்கம் கெடாத சுதந்திரத்தோடு வளர்க்கணும்னு ஆசை. மத்தபடி, அவங்க கனவு நிஜமாக, தேவையான சப்போர்ட் தரணும். அவ்ளோதான்!''

வசந்தாகாந்த், கருப்பம்புலம்.

''அப்பா சிவகுமார்... ஓர் ஓவியரும்கூட. சூர்யா..?''

 ''என் பிரச்னை எல்லாம் வீட்லதாங்க. அப்பா ஒரு நடிகர், ஓவியர், எழுத்தாளர்... இப்போ பரபரப்பான பேச்சாளர். காலையில் அஞ்சு மணிக்கு எழுந்து பேச்சுக்கு 'ரிகர்சல்’ பண்றார். அவர்கூட போட்டி போட முடியாதுன்னு நைஸா நழுவி, இந்தப் பக்கம் திரும் பினா, கார்த்தி. 'சிங்கம்’னு சிரிச்சு நின்னா, அவன் 'சிறுத்தை’ன்னு சீறிக்கிட்டு நிக்கிறான். போட்டி வீட்டுக்குள்ளேயே இருந்தா என்னங்க பண்றது? நான் பாவம்தானே!''

எம்.நான்ஸி சகாயம், கன்னியாகுமரி.

''கார்த்திக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களாம்ல? தம்பி லவ்ல எதுவும் இருக்காரா?''

'' 'இவ்ளோ நாள் லவ் பண்ணாம விட்டுட்டோமே’னு சிரிச்சுக்கிட்டே சொல்வார். ஸோ, டைம் முடிஞ்சு போச்சு!''

-அடுத்த வாரம்...

''ரஜினி, கமலிடம் உங்களுக்குப் பிடித்தது என்னென்ன?''

'' 'சிங்கம்’... சூர்யா, 'சிறுத்தை’... கார்த்தி ஒப்பிடுங்கள்?''

''மக்களுக்கு உதவுகிறீர்கள். மக்களின் திரைப்படக் கணிப்பில் முதல் இடத்தில் இருக்கிறீர்கள். தானாகவே இது உங்களை அரசியலுக்கும் கொண்டுபோய்விடாதா?''

-சூர்யா பதில்கள் தொடர்கின்றன...

விகடன் மேடை - சூர்யா