செக் மோசடி வழக்கில் நடிகர் அஜித் பட இயக்குனர் திடீர் கைது!

நெல்லை: செக் மோசடி வழக்கில் நடிகர் அஜீத்குமார் பட இயக்குனர் சரணை சிவகாசி காவல்துறையினர் திடீரென கைது செய்தனர்.

நடிகர் அஜீத்குமார் நடித்துள்ள காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் மற்றும் ஜெமினி, பார்த்தேன் ரசித்தேன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சரண். தற்போது ‘ஆயிரத்தில் இருவர்‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில் நடிகர் வினய் கதாநாயகனாக நடிக்கிறார்.

‘ஆயிரத்தில் இருவர்‘ சினிமா படப்பிடிப்பு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று நெல்லை அருகே ரெட்டியார்பட்டி பகுதி நாற்கர சாலையில் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அந்த படத்தில் நடித்து வரும் நடிகர்–நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அங்கு இருந்தனர். படப்பிடிப்புக்கான காட்சிகள் குறித்து நடிகர்களுக்கு இயக்குனர் சரண் விளக்கிக் கொண்டு இருந்தார்.

காலை 9.30 மணி அளவில், சிவகாசி டவுன் காவல்துறையினர் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்து இயக்குனர் சரணை கைது செய்யப் போவதாக கூறியதும், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சூட்டிங் நிறுத்தப்பட்டது. தன்னை கைது செய்வதற்கான காரணம் குறித்து காவல்துறையினரிடம், இயக்குனர் சரண் கேட்டார்.

ரூ.50 லட்சத்துக்கான செக் மோசடி வழக்கில், சிவகாசி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து இருப்பதாகவும், அதன் பேரில் கைது செய்வதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து சரணை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் சிவகாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சரணை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார். இதையடுத்து சரண் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரண், "இது பொய்யான வழக்கு. நெல்லையில் நடந்து வரும் படப்பிடிப்பிற்கு செல்கிறேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!