Published:Updated:

ஆசை

நா.கதிர்வேலன், ம.கா.செந்தில்குமார்படங்கள்: என்.விவேக்

ஆசை
##~##
''செ

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ங்கல்பட்டில் இருந்து ஸ்டெல்லா. நாங்கள் 1957-60களில் சென்னை புதுப்பேட்டையில் குடியிருந்தோம். எங்கள் வீட்டுக்கு முன் இருந்த அறை ஒன்றில் குடியிருந்த மூன்று பேச்சுலர்களில் ஒருவர் பழனிச்சாமி. அப்போது ஓவியக் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார். எங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகப் பழகினார். பிறகு, நாங்கள் இங்கு குடிபெயர்ந்து விட்டோம். அந்த பழனிச்சாமிதான் பின்னாளில் 'சிவகுமார்’ என்ற பெயரில் பிரபல நடிகரானார். இப்போது நான் திருமணம் முடித்து பேரன், பேத்திகள் எடுத்துவிட்டேன். என் அண்ணன் பழனிச்சாமியை 50 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்க ஆசை. நிறைவேற்றி வைப்பீர்களா?'' எதிர்பார்ப்புகளை தேக்கி நின்றன கடித வரிகள்!  
ஆசை

 சிவகுமாரிடம் விவரம் சொன்னதுமே, ''ஓ... ஸ்டெல்லா அம்மா ராஜாத்தியம்மா, அவங்க தம்பி ஜோசப் ஜெமினி, தங்கை பிலோமினா... எல்லாரும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. உடனே வரச் சொல்லுங்க!'' என்று ஆர்வ மானார். ஸ்டெல்லா, அவரின் இரண்டு மகன்கள், மருமகள்கள், மகள், பேரன், பேத்தி கள், ஸ்டெல்லாவின் தங்கை பிலோமினா அனைவரும் குடும்ப சகிதமாக தி.நகரில் இருக்கும் சிவகுமார் வீட்டுக்கு வந்திறங்கினார்கள்.  

வரவேற்பு வைபவம், காபி உபசரிப்பின் போதே பைண்டிங் செய்யப்பட்ட மூன்று பழைய நோட்டுப் புத்தகங்களை எடுத்து வந்தார் சிவகுமார்.

''இதுதான் பழைய பிலோமினா!'' என்று தான் வரைந்த ஓவியத்தை பிலோமினாவிடமே காட்ட, அவர் முகத்தில் ஆச்சர்ய வெட்கம்!

''அப்போ அண்ணன் அவ்வளவு அமைதியா இருப்பார். அதே சமயம் ஜாலியாவும் இருப்பார். வீட்ல இருந்தாருன்னா எங்களை உட்கார வெச்சுப் படம் வரைவார். சமயங் களில் மணிக்கணக்கா நாம ஆடாம அசையாம உட்கார்ந்திருந்தா, நம்மளைப் பாத்துக்கிட்டே வேற எதையாவது வரைஞ்சு வெச்சிருப்பாரு. செம கலாட்டா பண்ணுவாரு'' என்று நினைவலைகளை மீட்டிய பிலோமினா, ''பக்கத்து வீட்ல இருந்த மோகன், சந்துருலாம் இப்பவும் உங்ககூட தொடர்பில் இருக்காங்களா?'' என்று சிவகுமாரிடம் கேட்டார். ''மோகன் ஹாங்காங்ல செட்டில் ஆகிட்டான். சந்துரு இங்கதான் இருக்கான். அவனுக்கு விக்டோரியானு ஒரு பொண்ணு இருக்கு. 1958-ல் இருந்து இப்போ வரை அவங்களுக்கு நான் தவறாமல் கிறிஸ்துமஸ் கார்டு அனுப்பிட்டு இருக்கேன்!'' என்றார் சிவகுமார். ''அருமைநாயகம்னு ஒருத்தர் இருந்தாரே ஞாபகம் இருக்கா? அவரைச் சமீபத்தில் சந்திச்சேன்'' என்றார்.  

''பண்டிகை நாட்களில் எங்களோட சர்ச்சுக்கு வருவீங்களே... ஞாபகம் இருக்கா?'' என்று பிலோமினா நினைவுபடுத்த,

ஆசை

''அதை மறக்க முடியுமா? எல்லா கிறிஸ்துவப் பண்டிகைக்கும் இவங்ககூட சர்ச்சுக்குப் போய் மண்டி போட்டு பிரார்த்தனை பண்ணியிருக்கேன். அந்த சர்ச்சுல பாடுவீங்களே... அந்தப் பாட்டு ஞாபகம் இருக்கா?'' என்று கேட்ட சிவகுமார், 'லாலல்ல... லாலல்ல... லாலலல்லா...’ என்று அந்த மெட்டினை முணுமுணுக்க, மற்றவர்கள் பாடத் துவங்க, அந்த அறையே மகிழ்ச்சி புரளும் ஜெபக் கூடம் ஆனது.

''சினிமா பக்கம் உங்க கவனம் திரும்ப யார் காரணம்?'' ஸ்டெல்லாவின் மகன் ஒருவர் கேட்க, ''பாலான்னு என் நண்பர் என்கிட்ட ஒருநாள் 'உனக்கு டான்ஸர் உதய்சங்கரைத் தெரியுமா’ன்னு கேட்டாரு. தெரியலைன்னு சொன்னேன். ' 'கல்பனா’ன்னு ஒரு படம் டைரக்ட் பண்ணியிருக்காரு. உன்னைவிட பெரிய பெயின்டர். ஃபிரான்ஸ் நாட்டுக்குப் போய் ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி டான்ஸர் ஆகிட்டாரு. 'நீ இப்ப வரைஞ்சுக்கிட்டு இருக்கே, நீயும் சினிமாப் பக்கம் போயிடுவியோ’ன்னு

ஆசை

சொன்னார் ஆச்சர்யமா. அப்புறம்தான் சினிமா பக்கம் வந்தேன்!'' என்று சின்ன இடைவெளி விட்டவர், ''அந்த உதய்சங்கர் யார் தெரியுமா? பண்டிட் ரவிஷங்கர், கோரியோகிராஃபர் ஆனந்த் ஷங்கர் இருவரின் அப்பா!'' என்று புதிய தகவல் பரிமாறினார்.  

''புதுப்பேட்டைதான் என்னை வளர்த்த போதிமரம். செக்ஸ் என்பது ஒரு பெரிய விஷயம் கிடையாது. நோயோ, முதுமையோ வந்தா எவ்வளவு அழகானவங்களா இருந் தாலும் அழகு குலைஞ்சிடும். கலையைத் தவிர, மற்ற எல்லாம் அழியக்கூடியதுன்னு எனக்கு ஞானத்தைத் தந்தது புதுப்பேட்டை வாழ்க்கைதான்!'' என்று சிவகுமார் உரையாடலுக்கு முத்தாய்ப்பு வைக்க, ஸ்டெல்லா வின் குடும்பத்தினரிடையே கரகோஷ ஆரவாரம்.

பிரியாவிடை சமயம், தான் எழுதிய 'ராஜபாட்டை’ நூலை ஸ்டெல்லா குடும்பத்தினருக்குப் பரிசளித்தார் சிவகுமார். மகிழ்ச்சியோடு கூடி நெகிழ்ச்சியோடு விடை பெற்றார்கள்  ஸ்டெல்லா குடும்பத்தினர்!

ஆசை