Published:Updated:

எட்டெட்டு!

விகடன் டீம்

பாதித்த சம்பவம்
வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்., வனத் துறை செயலர்.

எட்டெட்டு!

''பெர்னாட்ஷா என்கிற நண்பரின் மகன் அஜய். தேச சேவைக்காகப் பாதுகாப்புப் பணியில் சேர வேண்டும் என்பது அஜய்யின் விருப்பம். வருடக் கணக்கில் அயராது உழைத்து ஆர்மியில் பொறியியல் பிரிவில் தேர்ச்சி பெற்றபோது, கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் உலகின் கூரையை எட்டிப் பிடித்த உணர்வு. களப் பயிற்சியின்போது கால் எலும்பில் மயிரிழை அளவு ஏற்பட்ட கீறல் அஜய்க்குத் தெரியாமல் போனது. மறுநாள் ஓட்டப் பந்தயத்தில் ஓடும்போது, கீறல் விரிசலாகி, எலும்பு முறிந்து கால் உடைந்து அப்படியே தொய்ந்து விழுந்து விட்டான் அஜய். பயிற்சியும் பணியும் தடைபட்டு நின்றன. நான்கு ஆண்டு முனைப்பும் உழைப் பும் வீணாகிப்போன அந்த நாட்டுப்பற்றுள்ள இளைஞனை மறுபடியும் தரைப் படை ஏற்றுக் கொள்ளுமா என்பது விடை தெரியாத கேள்வி! சமீபத்தில் மதுரையில் அந்தப் பேராசிரியர் நண்பரின் குடும்பத்தைச் சந்தித்தபோது, மனம் எங்கும் முறிந்து தொங்கும் வலி!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

படித்த புத்தகம்
குஷ்பு, நடிகை.

எட்டெட்டு!

''தமிழ் நாளிதழ்கள், வார இதழ்களைத் தவறாமல் படித்துவிடுவேன். ஆனால், ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் அளவுக்கு தமிழ் நாவல், கட்டுரைத் தொகுப்பு களைப் படித்தது இல்லை. சமீபத்தில் 'மூத்த பத்திரிகையாளர் பார்வையில் ஸ்டாலின்’ என்ற துணை முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்தேன். தி.மு.க-வின் வரலாற்றையும் தளபதி அவர்களின் கட்சி, ஆட்சிப் பணிகளையும் தெளிவாக அறிந்துகொள்ள அந்தப் புத்தகம் உதவியது. மிசா காலத்தில் ஸ்டாலின் அவர்கள் சிறையில் பட்ட துன்பங்களைப் படிக்கும்போது மனம் கனத்தது. வரும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேச இந்த நூலில் இருந்து நிறைய குறிப்புகள் எடுத்து வைத்துள்ளேன்!''

கலந்துகொண்ட நிகழ்ச்சி
செந்தில்வேலன், எஸ்.பி., தூத்துக்குடி.

எட்டெட்டு!

''தினமும் சிறிதும் பெரிதுமாக நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருந்தாலும், எனக்கு மனநிறைவை அளித்த நிகழ்ச்சி, தஞ்சையில் நான் பணியாற்றியபோது அரங்கேறிய பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழா. ஏற்கெனவே அங்கு கும்பாபிஷேகம் நடந்த சமயம் தீ விபத்தில் சிக்கி ஏராளமானோர் பலியாகி இருந்தார்கள். அதனால், அங்கு ஆயிரமாவது ஆண்டு விழா நடக்க முடியாமல் சகுனத் தடை ஏற்படலாம் என சிலர் புரளி கிளப்பி இருந்தார்கள். மூட நம்பிக்கையைப் புறந்தள்ளினாலும், ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்பதால், அதை மனசில் வைத்துக்கொண்டு பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தோம். பல்வேறு பிரஷர்களுக்கு மத்தியில், அந்த விழா நல்லவிதமாக நடந்து முடிந்தது எனக்கு பெர்சனலாக பரம திருப்தி!''

சென்ற இடம்
ரூபா மஞ்சரி, நடிகை.

எட்டெட்டு!

''இந்த வருடப் புத்தாண்டை பாங்காக்கில் கொண்டாடினேன். நண்பர்களுடன் சென்ற முதல் வெளிநாட்டுப் பயணம் இது. அங்கு தங்கியிருந்த நான்கு நாட்களில் ஒருநாள் பட்டாயாவில் ஏகப்பட்ட நீர் விளையாட்டுக்கள் விளையாடினோம். அதில் பாரா செய்லிங், செம த்ரில்லிங்கான அனுபவம். கடலில் இருந்து கிட்டத்தட்ட 100 அடி உயரத்தில் ஆகாயத்துக்கு பாராசூட்டில் அழைத்துச் செல்கிறார்கள். பிறகு, உடலில் வாட்டர் ஜாக்கெட், பாராசூட் கட்டிவிட்டு, அங்கிருந்து கீழே தள்ளிவிடுகிறார்கள். கடல் அருகில் வந்ததும் பாராசூட் விரிகிறது. நடுக்கடலில் தொபுக்கடீர் என்று விழுவோம். நடுக்கடலில் மிதக்கும் நம்மை வாட்டர் ஸ்கூட்டரில் வந்து கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். மறக்க முடியாத டிரிப் பட்டயா!''

பார்த்த படம்
வினயன், இயக்குநர்

எட்டெட்டு!

''சமீபத்தில் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் 'டிராஃபிக்’. ராஜேஷ் பில்லானு அறிமுக இயக்குநரின் படம். தமிழகத்துக்குப் பரிச்சியமான கதைதான். சென்னையில் மூளைச் சாவு எய்திய ஹிதேந்திரன் என்ற சிறுவனின் இதயம் வேறொரு சிறுமிக்குப் பொருத்தப்பட்டதே... அதுதான் கதை. அதை அவ்வளவு த்ரில்லாகப் படமாக்கி இருந்தாங்க. பாலக்காடு மருத்துவமனையில் உள்ள குழந்தைக்கு இதயம் பொருத்த வேண்டும். ஆனா, 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொச்சினில் இருந்து இதயத்தைப் பத்திரமாகக் கொண்டுவர வேண்டும். மூன்றரை மணி நேரத்துக்குள் வந்து சேர வேண்டும். புதுமுகங்களை வைத்துக்கொண்டு பிரமாதமான திரைக்கதை மூலம் கச்சிதமான சினிமா எடுத்திருந்தார் ராஜேஷ். இதில் உச்சகட்ட காமெடி என்னன்னா, மலையாளத்தில் இந்தப் படம் ஹிட் ஆகவும்தான் அந்தக் கதைக்கான தமிழ் உரிமையை அவசர அவசரமாக வாங்கியிருக்காங்க!''

சந்தித்த நபர்
ஷங்கர் ராமசுப்பிரமணியன், கவிஞர்

எட்டெட்டு!

ஸ்.வைத்தீஸ்வரன் தமிழின் மிக முக்கியமான ஆனால், கவனிக்கப்படாத கவிஞர். தற்சமயம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வைத்தீஸ்வரனை சென்னை வந்தபோது சந்தித்தேன். 70-களில் வெளிவந்த அவருடைய கவிதைத் தொகுப்பு 'உதயநிழல்’ கொடுத்தார். அப்போது அதைக் கொண்டுவர அவருக்கு 350 ரூபாய் ஆனதாம். அவரைக் கவிஞராகத்தான் பலருக்கும் தெரியும். அவருடைய கட்டுரைத் தொகுப்பு ஒன்று 'திசைகாட்டி’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. அவர் நல்ல ஓவியர் என்பது பலரும் அறியாத விஷயம். 'உதயநிழல்’ கவிதைத் தொகுப்பில் வைத்தீஸ்வரனின் ஓவியங்களும் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு கவிஞரோடு இலக்கியம் குறித்துப் பேசுவது என்பது மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் விஷயம். அந்தத் திருப்தி சந்திப்பு முடிந்தவுடன் எனக்கு இருந்தது!

கேட்ட இசை
மதுபாலகிருஷ்ணன், பின்னணிப் பாடகர்.

எட்டெட்டு!

''இப்போ சமீபத்தில் 'வெண்ணிலா கபடிக்குழு’ படப் பாடல்களைக் கேட்டேன். அதுல சின்மயி பாடும் 'லேசா பறக்குது மனசு... மனசு... ஏதோ நடக்குது வயசுல...’ பாட்டை திரும்பத் திரும்பக் கேட்டுட்டே இருந்தேன். சின்மயி வாய்ஸ் அவ்வளவு ஷார்ப். டியூன், பாடல் வரிகள், குரல்னு எல்லாமே பிரமாதமா மேட்ச் ஆகி அருமையான மெலடி. ரெண்டு நாளா என்னையும் அறியாமல் அந்தப் பாட்டை அடிக்கடி ஹம் பண்ணிட்டே இருக்கேன். நீங்க கேட்ட பிறகுதான் 'அந்தப் பாட்ட நல்லா பாடியிருக்கீங்க’ன்னு சின்மயிக்கு விஷ் பண்ணணும்னு தோணுது. தேங்க்ஸ்!''

வாங்கிய பொருள்
அம்மு, நிகழ்ச்சித் தொகுப்பாளர்

எட்டெட்டு!

''நான் கார் பைத்தியம். இப்போதான் நானே சம்பாதிச்ச காசிலிருந்து மாருதி ஸ்விஃப்ட் கார் வாங்கினேன். எனக்கே எனக்காக சொந்த கார்னு நினைக்கும்போது அவ்வளவு பெருமையா இருக்கு. இனி, அடுத்தடுத்து வேற புது கார் வாங்கினாலும் இந்த காரை நான் எப்பவும் விற்க மாட்டேன். எனக்கு இதுதான் எப்பவும் செல்லம்!''