Published:Updated:

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 14 - நட்சத்திரக் கலையிரவில்

சினிமா வெறியின் 40 ஆண்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா வெறியின் 40 ஆண்டுகள்

ஷாஜி - ஓவியங்கள்: ரவி

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 14 - நட்சத்திரக் கலையிரவில்

ஷாஜி - ஓவியங்கள்: ரவி

Published:Updated:
சினிமா வெறியின் 40 ஆண்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா வெறியின் 40 ஆண்டுகள்

‘பரிந்தா’ எனும் பெயர்பெற்ற ஹிந்தித் திரைப்படத்தின் வழியாகக் கலை இயக்குநரானவர் நித்தின் தேசாய். அதன்பின் மூன்றாண்டுக்காலம் அவருக்குப் படமெதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் ‘பரிந்தா’வின் இயக்குநரே தனது ‘1942 எ லவ் ஸ்டோரி’ எனும் படத்தை அவருக்கு வழங்கினார். அப்படத்தின் சில துணுக்குக் காட்சிகளை ஐதராபாத்தில் படமாக்கும்போது, அரங்கத் துணைப்பொருளாகப் பயன்படுத்த பழையகால சோஃபா ஒன்றைத் தேடி எங்கள் கடைக்கு வந்தார் நித்தின் தேசாய். ஹிந்தி சினிமா, இந்தியா முழுவதுமுள்ள லட்சக்கணக்கானோரின் கனவு உலகம். அங்கே முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இதோ என் பக்கத்தில் நிற்கிறார். ஹிந்தி சினிமா உலகம் இப்போது எனக்கு கையெட்டும் தூரத்தில்! சோஃபாக்களைப் பற்றி அவருக்கு விளக்கிக்கொண்டிருந்த நான், பக்கத்தில் யாருமில்லாத நேரம் பார்த்து அவரது உதவியாளனாக என்னையும் சேர்க்க முடியுமா என்று கேட்டுவிட்டேன்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 14 - நட்சத்திரக் கலையிரவில்

“ஒரு சினிமா உதவியாளனின் வாழ்க்கையைப்போல் சிரமமானது எதுவுமில்லை. குறிப்பாகக் கலை இயக்க உதவியாளர்களின் வாழ்க்கை. உங்களுக்கு இங்கே நல்ல வேலையிருக்கிறதே! எதற்காக சினிமாவில் வந்து கஷ்டப்படணும்? தேவையில்லையே...” கணநேரத்தில் அவர் என்னை ஊக்கமிழக்கச் செய்தார். ஓவியக் கலை, கைவினைக் கலை, சித்திரவேலைகள் போன்றவற்றில் எந்தவொரு திறமையுமே இல்லாத நான், ஒரு கலை இயக்குநர் ஆகும் வழி தேடினேனா? இல்லை. கலை இயக்க உதவியாளனின் வேடத்தில் ஹிந்தி சினிமாவிற்குள்ளே தலையை நுழைக்கலாம் என்று பேராசைப்பட்டதுதான். அந்த ஆசையை முளையிலேயே களையெடுத்த நித்தின் தேசாய், ‘1942 எ லவ் ஸ்டோரி’ வழியாக மிகப்பெரிய வெற்றியைக் கண்டார். பல மாபெரும் ஹிந்திப் படங்களில் பணியாற்றி, இந்தியாவின் மிக முக்கியமான கலை இயக்குநர்களில் ஒருவராக மாறினார். நான் அப்போதும் மரச்சாமான்களுடன் முட்டி மோதிக்கொண்டிருந்தேன்.

‘YKE’ எனும் வைதரிணி

ரெஜியும் நானும் அக்காலத்தில் போவின் பள்ளிப் பகுதியிலுள்ள ஒரு சிறு அறையில் தங்கிவந்தோம். எங்கள் இசைக்குழுவான ‘கர்ஃப்யூ’விற்குக் கச்சேரிகள் எதுவுமில்லை. ஐதராபாத்தில் அப்போது அமல்படுத்தப்பட்டிருந்த மதுவிலக்குதான் அதன் முக்கியக் காரணம். குடிக்க மதுவே கிடைக்காதபோது, மேற்கத்திய இசை யாருக்குத் தேவை? ஆனால் இசை இல்லாமல் ஒருநாள் கூட வாழமுடியாதவர் ரெஜி. இசையுடனே வாழ்வதற்கும் அதன்வழியே வருமானத்திற்கும் உடனடியாக எதாவதொன்று செய்தே ஆகவேண்டும். எனது மண்டையில் ஓர் எண்ணம் உதித்தது. YKE! யங் கேரளா என்டெர்டெய்னர்ஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிரிப்பதா அழுவதா என்ற மனநிலையில் ஆடிப்போனேன். தனது முடியில்லாத் தலையைத் தடவிக்கொண்டு நாள்குறிப்புப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தார் சித்திக்.

ஒவ்வொரு மாதமும் ஒரு மலையாளக் கலைநிகழ்ச்சியை நடத்தும் அமைப்பு. அத்துடன் ஒரு திரையிசைக் குழு. ஐதராபாத்தில் மட்டும் ஆறு லட்சம் மலையாளிகள் இருக்கிறார்கள். ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 20 லட்சம் பேர். அதில் ஒரு சதவிகிதம் ஆள்களிடம் சென்றடைந்தால்கூட ‘YKE’ மாபெரும் வெற்றி. தொடக்க விழாவிற்குக் கேரளத்திலிருந்து சினிமா நடிகர்களை வரவழைத்து, ஒரு திரை நட்சத்திரக் கலையிரவு நடத்துவோம். அதிலிருந்து வரும் லாபத்தை வைத்துக்கொண்டு தேவையான இசைக் கருவிகளை வாங்குவோம். நவீனமான ஓர் ஒத்திகை அறையையும் அலுவலகத்தையும் அமைப்போம். பின்னர் ஆந்திரா முழுவதும் இடையறாத இசைக் கச்சேரிப் பயணங்கள். வீண் கனவு என்று தோன்றினாலும் அதைச் சாத்தியப்படுத்தவே நாங்கள் முடிவெடுத்தோம். மலையாளப் பாட்டையெல்லாம் இசையாகவே எண்ணாத ரெஜியை மிகவும் சிரமப்பட்டுதான் சம்மதிக்கவைத்தேன்.

YKE நட்சத்திரக் கலையிரவில் பங்கேற்க திரை நடிகர்களை ஏற்பாடு செய்யும் பொருட்டு நான் கேரளத்திற்குப் பயணமானேன்.

மலையாள சினிமாவுடன் துளியளவாவது தொடர்பிருக்கும் யாரையும் எனக்குத் தெரியாது. நடிகர்களின் முகவரிகளைப் பிரசுரிக்கும் சினிமா இதழ்கள், படப்பிடிப்புச் செய்திகளை வெளியிடும் இதழ்கள் போன்றவற்றை வரிக்கு வரி அலசிக் குறிப்பெடுத்தேன். மம்மூட்டியும் மோகன்லாலும் சென்னையில் வசிப்பவர்கள். அங்கு சென்று அழைத்தாலுமே அவர்கள் வருவார்களா என்று தெரியாது. பெரிய ஆள்கள் அல்லவா! இரண்டாம் வரிசை நடிகர்களைப் பிடிக்க முயல்வோம். ‘செப்பு கிலுக்கண சங்காதி’ எனும் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் முகேஷ் (தமிழ் நடிகை சரிதாவின் கணவர்), கோட்டயம் எனும் இடத்தில் இருக்கிறார் என்ற செய்தியை அறிந்தேன்.

அங்கு ‘சக்தி’ எனும் தங்கும் விடுதியில்தான் சினிமாக்காரர்கள் வழக்கமாகத் தங்குவார்களாம். கலாதரன் எனும் இயக்குநரின் படம். ஓர் இயக்குநருக்கு என் நிலைமை கட்டாயம் புரியும். முதலில் அவரைச் சந்திப்போம். அறைக்கதவைத் தட்டியதும் ஒரு துண்டு மட்டுமே கட்டிய நிலையில் நூல்போல் மெலிந்த ஒருவர் கதவைத் திறந்தார். மெலிந்து ஒடுங்கிப்போன உடலையும் அதிகமாக நீண்ட கழுத்தையும் வைத்துக்கொண்டு ஒரு நகைச்சுவை நடிகராக வலம்வந்துகொண்டிருந்த இந்திரன்ஸ் அவர். எனக்கு அறை தவறியதுதான்! அதை மறைத்துக்கொண்டு அவரிடம் வந்த விஷயத்தைச் சொன்னேன். மகத்தான ஒரு லட்சியத்திற்காக ஐதராபாத் நகரிலிருந்து இவ்வளவு தூரம் பயணம் செய்துவந்த பையன் என்று என்னைப் பற்றி நினைத்தாரோ என்னவோ, முகேஷ் தங்கியிருக்கும் விடுதியின் பெயரும் இடமும் சொல்லி என்னை அனுப்பிவைத்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மம்மூட்டியும் முகேஷும்

அந்த விடுதிக்குப் பலமுறை சென்று பார்த்தேன். நான் சென்ற நேரத்தில் ஒருபோதும் முகேஷ் அங்கே இருக்கவில்லை. இரண்டு மூன்று நாள் கோட்டயம் நகரிலேயே திரிந்தேன். இறுதியில் ஒருநாள் அதிகாலையில், முழு இரவு படப்பிடிப்பை முடித்த களைப்பில் தூங்க முயன்று கொண்டிருந்த முகேஷ் என் கையில் சிக்கினார். நான் கொடுத்த தொல்லை அவரை அலுப்புற வைத்ததை மறைக்காமல் படுக்கையில் படுத்துக்கொண்டே என்னிடம் பேசினார். எல்லாம் கேட்ட பின்னர், “அதுக்கு நான் வந்தா எவன் பாக்க வருவான்டே? நீ போய் மம்மூட்டியக் கூப்பிடுடே. எதுக்குக் கொறைக்கணும்?” என்று என் முகத்தில் அறைவதுபோல் கேட்டார், வெளிறிப் போனேன். சகஜமான இயல்புகளுடைய இளைஞர்களின் வேடத்தில் பல படங்களில் என் மனதைக் கவர்ந்த முகேஷா இப்படி நடக்கிறார்?! ‘இது ஞங்ஙளுடெ கத’ (தமிழில் பாலைவனச் சோலை) படத்தில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலையும் ஓர் இளைஞன் இவர். ஒரு பிரபல இயக்குநரைச் சந்திக்க பலநாள் அலைந்து இறுதியில் ஒருவழியாகச் சந்தித்தபோது பயங்கரமாக அவமானப் படுத்தப்பட்டார். அதையெல்லாம் முகேஷ் இவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டாரா?

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 14 - நட்சத்திரக் கலையிரவில்

“நான் சும்மா சொல்லலடே. மம்மூட்டிக்கு தெலுங்கில இன்ட்ரஸ்ட் உண்டு. இப்பவே அங்கே ஏதேதோ பண்ணிட்டுதான் இருக்காரு. நீ போய் கூப்பிட்டுப் பாரு. கட்டாயம் வருவாரு. இப்போ கோழிக்கோடு ‘மஹாராணி’ ஹோட்டலில தங்கியிருக்காரு. நேரா கோழிக்கோடு போயிடு. ஆங்… அப்றம் வெளியே போகும்போது அந்த கதவக் கொஞ்சம் சாத்திட்டுப் போ. மனுசனக் கொஞ்சமாவது தூங்க விடுடே” என்று முகேஷ் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு திரும்பிப் படுத்தார். உண்மையில் அவர் என்னை அவமானப் படுத்தவில்லை! எனக்குப் பயனுள்ள விஷயத்தை அவரது சொந்த ஊரான கொல்லத்தின் வட்டார வழக்கில் நயமேதுமில்லாமல் சொன்னதுதான். ‘சங்கராபரணம்’ படத்தை எடுத்த கே.விசுவநாத்தின் ‘சுவாதி கிரணம்’ தெலுங்கு படத்தில் ஏற்கெனவே நடித்திருந்த மம்மூட்டி, அப்போது தெலுங்கிலும் கால்பதிக்க முயன்றுகொண்டிருந்தார். ஐதராபாத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கும் சாத்தியம் அதிகம். முகேஷுக்கு நன்றிகள் பல.

சித்திக்கின் விமானம் மழைமேகங்களுக்கிடையே மறைந்தபோது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

‘மஹாராணி’ நட்சத்திர விடுதியின் விசாலமான வரவேற்பறையில் மம்மூட்டி வருவதை எதிர்நோக்கி அமர்ந்திருந்தேன். பிஸ்கட் வண்ணச் சொக்காவும் வெள்ளை வேட்டியும் அணிந்து, வாய் முழுவதும் பாக்கு வெற்றிலை போட்டு மென்றுகொண்டு மலையாள சினிமாவின் பேரழகர் என்னை நோக்கி நடந்துவந்தார். உள்ளே மிதந்துகொண்டிருந்த பதற்றத்தை அடக்கி நான் அவரிடம் வந்த விஷயத்தைச் சொன்னேன். பாக்கு வெற்றிலை எச்சில் துப்புவதற்கு அடிக்கடி எழுந்துபோய்த் திரும்பி வந்தபடி அவர் என்னிடம் பேசினார். “உங்கள் YKE அமைப்பில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?” நான் சற்றுமே எதிர்பாராத கேள்வி. கூப்பிட்டால் நம்முடன் வந்து இணைய வாய்ப்பிருக்கும் ஆறேழு நபர்களின் முகங்கள் மனதில் தோன்றின. “இப்போ ஆறேழு பேரு இருக்கு சார். இதுதான் முதல் நிகழ்ச்சி! இனிமேதான் ஆள்களைச் சேர்க்கணும்” நான் விளக்க முயன்றேன்.

எல்லாம் கேட்ட பின்னர், “இதுக்காக மட்டும் இவ்வளவு தூரம் என்னால் வர முடியாது. ஒருநாள் நான் இங்கேர்ந்து போனா ரெண்டு மூணு லட்சம் நஷ்டம் வரும். எனக்கில்ல, புரொடியூசருக்கு. அதால அங்கே ஏதோ ஷூட்டிங் இல்ல வேறெதாவது வேலையா நான் வரும்போது நீங்க நிகழ்ச்சிய பிளான் பண்ணுங்க. கலந்துக்குறேன்” பேசி முடிப்பதுபோல் மம்மூட்டி சொன்னர். “என்னோட மெட்ராஸ் போன் நம்பர் எழுதிக்கோ. இடையில அடுத்து நான் எப்ப ஐதராபாத் வருவேன்னு கேட்டுக்கோ. அடிக்கடி போன் பண்ணி தொல்ல பண்ணக் கூடாது. என்ன?!” என்று சொல்லி எண்ணைத் தந்ததோடு குடிக்கத் தேநீரும் வாங்கித் தந்தார். எனது கையைக் குலுக்கிவிட்டு மம்மூட்டி நடந்து சென்றபோது சோர்ந்துபோனேன். இருந்தும் மனதைத் தேற்றிக்கொண்டேன். இவ்வளவு நேரம் மம்மூட்டி என்னிடம் பேசினாரே! அவர் வாங்கித் தந்த தேநீர் குடிக்கும் பாக்கியமும் கிடைத்தது. தனது தொலைபேசி எண்ணையும் தந்தார்! அந்த அளவுக்கு மம்மூட்டி நம்மளைக் கண்டுகொண்டாரே... போதும்!

வருகிறார் சித்திக்

பெரிய நாயக நடிகர்கள் யாருமே வர மாட்டார்கள் என்பது உறுதியானது. ஓரளவுக்குப் புகழிருக்கும் யாராவது வந்தால் போதும் என்ற மனநிலைக்கு இறங்கினேன். சைனுத்தீன் எனும் நடிகரின் வீடு தேடி எறணாகுளத்திற்குச் சென்றேன். மிமிக்ரி வழியாக சினிமாவில் புகுந்த சைனுத்தீன் அப்போது பிரபல நகைச்சுவை நடிகர். வந்தால் அவரது மிமிக்ரியையும் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கலாம். நிறைய வீடுகள்கொண்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் முன்றிலில் நான் சென்றேறும் நேரத்தில், மிகவும் பதற்றமான முகபாவனையுடன் சைனுத்தீன் வெளியே வருவதைக் கண்டேன். அவசர அவசரமாக எங்கோ கிளம்புகிறார்! நான் அருகே ஓடிச்சென்று விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னேன். “அய்யய்யோ! இப்போ எங்கிட்ட எதுவுமே சொல்லாதீங்க. ஒண்ணுமே மண்டயில ஏறாது. நாம அப்றமா சந்திக்கலாம். சரி... வர்றே...” என்று அவர் காரில் ஏறி வேகமாக வெளியே சென்றார். எதுவுமே வேலைக்காகாது போலிருக்கே!

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 14 - நட்சத்திரக் கலையிரவில்

ஒட்டுமொத்தமாகத் துவண்டுபோய் அங்கிருந்து வெளியேறும்போது, அந்தக் கட்டடத்தின் காவலாளி ஒருவர் என்னிடம் “யாரு நீங்க? என்ன விசயமா வந்தீங்க?” என்று கேட்டார். நான் என் சோகக் கதையை அவரிடம் சொன்னேன். உடனே அவர், “நம்ம நடிகர் சித்திக் சாரு இருக்காருல்ல? அவருக்கும் இங்கேதான் வீடு. இப்ப வீட்டிலத்தான் இருக்காரு. நீங்க வேண்னா போயிப் பாருங்க...” என்றார்! சித்திக் எனக்கு ரொம்பப் பிடித்த நடிகர். மிகச் சிறந்த நடிப்பு அவருடையது. இசையிலும் நாட்டமுடையவர், பாடக்கூடியவர் என்பதெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அவரது முகவரி கிடைக்கவில்லை. இதுவா அவரது வீடு! நான் சித்திக்கின் கதவைத் தட்டினேன்.

“நம்மை சினிமா பார்க்கவைப்பது சாத்தானின் தீய கவர்ச்சி. நீயும் அதிலிருந்து விலகியே ஆகவேண்டும்…”

பெரிதாக எதுவுமே யோசிக்காமல் அவர் “நான் வர்றேன். முடிஞ்சா ரெண்டு பாட்டும் பாடறேன்” என்று சொன்னார்! அதை நம்பலாமா என்று தெரியாமல், சிரிப்பதா அழுவதா என்ற மனநிலையில் ஆடிப்போனேன். தனது முடியில்லாத் தலையைத் தடவிக்கொண்டு நாள்குறிப்புப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தார் சித்திக். “பயணத்துக்கும் சேர்த்து மூணு நாள் ஒண்ணா வேணுமே. அதுதான் சிக்கல்” சற்றுநேரம் கழித்து அவருக்கு ஓய்விருக்கும் இரண்டு தேதிகளைச் சொன்னார். ‘முடிவெடுத்துச் சொல்லுங்கள்’ என்று சொல்லி வெளிச்சமுள்ள புன்னகையுடன் என்னை வழியனுப்பினார். உலகின் உச்சிக்குத் தனியாக நடந்தேறிய ஒருவனின் பெருமிதத்துடன்தான் நான் ஐதராபாத் திரும்பினேன். தொடர்ந்து எல்லாமே சரவேகத்தில் நகர்ந்தன. ‘யங் கேரளா என்டெர்டெய்னர்ஸ் துவக்க விழாவும் இசை நிகழ்ச்சியும். பிரபல மலையாளத் திரைநடிகர் சித்திக் பங்கேற்றுப் பாடுகிறார்…’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

YKE யின் உறுப்பினர்களாக மாற மேலும் சில இளைஞர்கள் முன்வந்தார்கள். சித்திக்கின் விமானச் சீட்டை அனுப்பி வைத்தோம். செகந்தராபாத்திலுள்ள ‘ரயில் கலாரங்க்’ அரங்கில்தான் நிகழ்ச்சி. துண்டுப் பிரசுரங்களும் நுழைவுச் சீட்டுகளும் தயாராயின. ஆனால் சீட்டுகளை வாங்க யாருமே முன்வரவில்லை! பணம் கொடுத்து சீட்டுகளை வாங்குவதில் மலையாளிகளுக்குத் துளியளவுகூட ஆர்வமில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். மலையாளிகள் அதிகமாக வசிக்கும் ராணுவப் பாளையங்களிலும் துணைராணுவக் குடியிருப்புகளிலும் நடந்தலைந்து சீட்டுகளை விற்றோம். சித்திக்கை விமான நிலையத்திலிருந்து வரவேற்பதிலிருந்து அவருக்கான தங்கும் வசதி, உணவு, வாகனம் என எல்லாவற்றையும் ஏற்றெடுக்க துணைராணுவத்தில் உயர் அதிகாரியான முகம்மத் முன்வந்தது பெரும் ஆசுவாசமாகியது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரும் ஐதராபாத் அரசுத் தொலைக்காட்சியில் பொறியாளருமான கருவியிசைக் கலைஞர் அஜயன், மின்னணு கீபோர்டு இசைக்க வந்தார். இரண்டாம் கீபோர்டில் பன்னிசையும் (கோர்டுகள்) தாளக்கட்டும் (ரிதம்) ரெஜி வாசிப்பார். பேஸ் கிட்டார் வாசிக்க சாம்ராஜ் எனும் மலையாளி வந்தார். டிரம்ஸ் வாசிக்க சன்னி எனும் ஐதராபாத் தமிழர். தும்பா, கோங்கா, தபேலா, டோலக் போன்றவற்றை வாசித்த வர்களும் தமிழர்கள். சிஜி, ராஜன், பிஜு என்று மூன்று இளைஞர்கள் மலையாளப் பாடல்களைப் பாட வந்தார்கள். மெர்சி எனும் தெலுங்கு இளம்பெண்தான் ஒரே பாடகி. மிகவும் சிரமப்பட்டு மூன்று மலையாளப் பாடல்களை அப்பெண்ணுக்குச் சொல்லிக் கொடுத்தேன். தமிழ் மற்றும் ஹிந்திப் பாடல்களை நானே பாடுகிறேன்.

நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் ஒத்திகை நடந்து கொண்டிருந்த ‘வை.எம்.சி.ஏ’ கூடத்திற்கு சித்திக் வந்து சேர்ந்தபோது, மலையாளத் திரைப்படங்களைப் பார்க்கும் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி. ‘சித்திக் சாரே…’ என்று அழைத்துக் கொண்டு அனைவரும் அவரை முற்றுகையிட்டனர். “முதலில் இந்த ‘சாரே’ விளி நிறுத்துங்க. சேட்டான்னு கூப்பிடலாமே! இல்ல இக்கான்னு கூப்பிடுங்க. சித்திக்குன்னு கூப்பிட்டா அதவிடச் சந்தோஷம். நமக்கிடையில எதுக்குத் தேவையில்லாத இடைவெளி?!” என்று சொல்லிக்கொண்டு கணநேரத்தில் எங்களில் ஒருவராக ஆனார் சித்திக். பின்னிரவு தாண்டி பாட்டு ஒத்திகைகள் நீண்டபோதிலும் ‘நேரமாகிவிட்டது, அறைக்குத் திரும்ப வேண்டும்’ என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இருக்கும் வசதிகளில் எங்களுடன் ஒத்துழைத்தார்.

நீர்மேல் வரைந்த கோடு

நிகழ்ச்சி நாள். சீட்டுகள் எதுவும் சொல்லும்படியாக விற்பனையாகவில்லை. கடனுக்குமேல் கடன் வாங்கித்தான் இதுவரைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் பண்ணி முடித்திருக்கிறோம். முடிந்த அளவுக்கு விளம்பரமும் பண்ணியிருக்கிறோம். நிகழ்ச்சி நாளில் ஆள்கள் கூட்டம் கூட்டமாக அரங்கிற்குவந்து சீட்டுகளை வாங்குவார்கள் என்று நம்பினோம். ஆனால் அன்று காலையிலிருந்து ஆகாயம் இருண்டு மூடி மழை பெய்யத் தொடங்கியது. ஏற்கெனவே சீட்டு வாங்கியவர்கள்கூட நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழல். மழை தூறிக்கொண்டேயிருந்தது. நனைந்தும் குடை பிடித்தும் வேண்டாவெறுப்போடு அமர்ந்துகொண்டிருந்த குறைவான கூட்டத்தின் முன்னால் நாங்கள் நிகழ்ச்சியை ஆரம்பித்தோம். நானேதான் அறிவிப்பாளனுமே. நடிகர் சித்திக்கை மேடைக்கு அழைத்துக்கொண்டு “மலையாள சினிமாவின் வருங்கால சூப்பர் ஸ்டார் திரு சித்திக் அவர்களை அரங்கம் அதிரும் கரவொலிகளுடன் மேடைக்கு அழைப்போம்” என்று அறிவித்தவுடன் கூட்டம் பேரோசை எழுப்பி ஆர்ப்பரித்தது. சித்திக் வந்திருக்க மாட்டார் என்றுதான் பெரும்பாலானோர் நினைத்தார்களாம்.

“ஷாஜி சொன்னதுபோல் வருங்கால சூப்பர் ஸ்டாரோ மெகா ஸ்டாரோ முதலமைச்சரோ யார் வேண்டுமானாலும் ஆக நான் தயார். ஆனால் ஆவேனா? முடியே இல்லாத இந்தத் தலையை வைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் தாண்டியதே எப்படியென்று எனக்கு மட்டும்தானே தெரியும்!” என்று நகைச்சுவையாகப் பேசியபடி தனது உரையை ஆரம்பித்தார். அது கூட்டத்திற்குப் பிடித்துப்போனது. சித்திக் பாடிய பாடல்களுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் அப்போதெல்லாம், தோற்று வீழ்ந்துகொண்டிருந்த ஒரு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளன் என்கின்ற முறையில் நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே! அதைச் சொற்களால் விளக்க முடியாது.

அந்த அரங்கில் எதையுமே சரிவரச் செய்ய என்னால் முடியவில்லை. நான் பாடிய பாடல்களும் படுதோல்வியடைந்தன. மற்றவர்களின் பாடல்களும் விளங்கவில்லை. ஒலித்தகராறு... ஒளித் தகராறு... நில்லாத தூறல்மழை... சித்திக் எனும் திரைநடிகனின் வருகை ஒன்றைத் தவிர்த்தால், அந்நிகழ்ச்சி ஒரு மாபெரும் தோல்வியானது. கருமேகம் மூடிய மனதுடன் அடுத்த நாள் சித்திக்கை வழியனுப்ப விமான நிலையம் சென்றேன். முன்தினம் மேடையில் வைத்து வழங்கிய ஒரு நினைவுக் கேடயத்தைத் தவிர வேறு எதுவுமே அவருக்குக் கொடுக்க என்னால் முடியவில்லை. வீட்டிலிருந்து விமான நிலையம் வந்து திரும்புவதற்கான வாகனக் கட்டணம்கூட. எதுவுமே அவர் கேட்கவுமில்லை. சித்திக்கின் விமானம் மழைமேகங்களுக்கிடையே மறைந்தபோது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த நிகழ்ச்சி வரவழைத்த பணப் பிரச்னைகள் ரெஜியையும் என்னையும் எதிரிகளாக்கின. ரெஜியின் ஜாமீனில்தான் பல இடங்களிலிருந்து பணம் கடன் வாங்கினோம். கடன்தொல்லை நிலைகுலைய வைத்ததில் நாங்கள் இருவரும் சண்டை

போட்டு வழிபிரியும் நிலை உருவானது. நிகழ்ச்சியில் கீபோர்ட் வாசிக்க வந்த அஜயனின் அறைக்கு நான் குடித்தனம் மாறினேன். எதாவது வேலைசெய்து எல்லாக் கடனையும் திருப்பி அடைத்தே ஆகவேண்டும். விரைவில் சற்று அதிகமாகச் சம்பளம் வரக்கூடிய ஒரு வேலை எனக்குக் கிடைத்தது. கர்நாடகாவிலுள்ள ஹூப்ளி நகரில்.

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 14 - நட்சத்திரக் கலையிரவில்

கிடைக்கும் பணத்தையெல்லாம் கடனைத் திருப்பி அடைப்பதற்காக ஒதுக்கிவிட்டு, வறியநிலையில் வாழ்ந்த அந்த ஹூப்ளிக் காலத்திலும் சினிமா பார்ப்பதில் எந்தவொரு குறையுமே வைக்கவில்லை. ஹிந்தி, தெலுங்குப் படங்களுடன் கன்னடப் படங்களும் சேர்ந்தன. கன்னட சினிமாவின் எக்காலத்திற்கும் உரிய உச்ச நட்சத்திரம் ராஜ் குமார் நடித்த ‘ஜீவன சைத்ரா’ படத்தின் ‘ஹுட்டிதரே கன்னட நாடல்லி ஹுட்ட பேக்கு…’ பாடல் காட்சியை ஹுப்ளி நகரில் படமாக்குவதைக் கண்டேன். நகரின் முக்கிய முச்சந்தியில் ஒருநாள் முழுவதும் நடந்த அப்படப்பிடிப்பையும் தமது ஆதர்ச நாயகனையும் வேடிக்கை பார்க்கப் பல்லாயிரக்கணக்கானோர் அங்கே குழுமினர். பெருங்கூட்டம் உருவாக்கிய நெரிசலில் நகரமே சலனமற்று உறைந்து போனது.

சாத்தானின் தீய கவர்ச்சி

ஹுப்ளியிலிருந்து ஓர் இரவுப்பயணம் மட்டுமே தொலைவிருக்கும் மும்பாய் மாநகரத்திற்கு அடிக்கடி வேலை விஷயமாகச் சென்றுவர வேண்டியிருந்தது எனக்கு. வேலை முடிந்ததும் அங்குள்ள எதாவது ஒரு திரையரங்கிற்கு விரைந்து செல்வேன். மராத்தா மந்திர், ராயல், ரீகல், இம்பீரியல், காபிடோள், குல்ஷன், ஈரோஸ், நெப்ட்யூன் எனப் பல மும்பாய் திரையரங்குகளிலிருந்து படங்களைப் பார்த்தேன். புதிதும் பழையதுமான எத்தனையோ திரைப்படங்கள். இந்தியச் சினிமாவின் ஆரம்பக்காலம் முதல் வெளிவந்த முக்கியமான பல படங்களை மதியக் காட்சிகளாகக் காட்டும் வழக்கம் அக்காலத்து மும்பாயில் இருந்தது. மராத்தி சினிமாவின் எக்காலத்திற்கும் உரிய மரபுத் திரைப்படம் ‘சந்த் துக்காராம்’, ஹிந்தியின் கிளாசிக்குகளான ‘அந்தாஸ்’, ‘பாபுல்’, ‘ஆவாரா’, ‘தோ பீகா ஜமீன்’, ‘ஸ்ரீ 420’, ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’, ‘தேவதாஸ்’, ‘சோரீ சோரீ’, ‘மதர் இந்தியா’, ‘பியாசா’, ‘நயா தௌர்’, ‘சல்தி கா நாம் காடி’, ‘மதுமதி’, ‘காகஸ் கே ஃபூல்’, ‘அனாரி’, ‘முகல் ஏ அசம்’, ‘சாஹிப் பீபி ஔர் குலாம்’, ‘பந்தினி’, ‘வக்த்’, ‘கைட்’ என மகத்தான பல திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பினை அந்த மும்பாய்ப் பயணங்கள் எனக்கு வழங்கின.

ஒருநாள் மாட்டுங்கா எனும் ஊரில் நிற்கும்போது ‘அரோரா’ எனும் திரையரங்கில் ‘ஆயீ மிலன் கீ ராத்’ எனும் புது திரைப்படம் ஓடுகிறது. அனைவருமே அறிமுக நடிகர்கள். எந்தவொரு சிறப்புமில்லாத அத்தகைய ஒரு படத்தைப் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை. ஆனால் இரண்டு மணிநேரம் கிடைத்தால் எதாவதொரு திரைப்படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற அளவிற்கு சினிமா வெறி தலைக்கேறிப்போன ஒருவனுக்கு வேறு என்ன வழி? சீட்டெடுக்க வரிசையில் நின்றேன். சற்றுநேரம் கழிந்தபோது, எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தவர் எனது முதுகில் தொட்டு “ஏ பிச்சர் அச்சா கே? ஆக்டர் கோன் கோனே?” என்று பச்சை மலையாள வாடையடிக்கும் ஹிந்தியில் கேட்டார். திரும்பிப் பார்த்தேன். அவர் ஓர் அச்சு அசல் மலையாளி என்பதை முகம் பார்த்தவுடனே தெரிந்தது.

“நீங்க மலையாளிதானே... எந்தாப் பேரு?”

“அய்யோடா! நீங்களும் மலையாளியா? இது நல்லாருக்கே! உங்க மொகத்த எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே!”

“தூரத்து ஊரில வெச்சு பாக்கும்போது எல்லா மலையாளிக்கும் ஒரே மூஞ்சிதான்னு சொல்லுவாங்களே! அதுவா இருக்கலாம்”

“இல்ல... இல்ல... நான் உங்களப் பாத்திருக்கே… ஓ…. ஆங்…. இப்பொ புரிஞ்சிரிச்சு... நீங்க கிறிஸ்தவப் பாடகர் தானே…? வடசேரிக்கரையில வந்து பாடியிருக்கீங்கதானே…?”

பலகாலம் முன்பு ‘றாந்நி’ எனும் ஊரில் உள்ள கிறிஸ்தவ இசைக்குழுவுடன் நான் பாடகனாகச் சென்றபோது, ஏதோ மேடையில் பாடுவதை இவர் பார்த்திருக்கிறார்! அவரது பெயர் ராஜு டேனியல். கர்நாடகத்திலுள்ள பிஜாப்பூர் எனும் ஊரில் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர். “பிஜாப்பூரில் புதுப் படங்களே வராது. அதோடு காலேஜ் ஹாஸ்டல் சாப்பாடும் சகிக்க முடியாது. அதால அடிக்கடி நான் இங்கே வந்திடுவே. சித்தி வீடு இங்கே இருக்கு. வந்தா நாலஞ்சு நாளு தங்கி நல்ல சாப்பாடும் வெட்டி அஞ்சாறு படமும் பாத்திட்டுதா திரும்பிப் போவேன்”

“அப்படியா? நீங்கல்லாம் சினிமா பாப்பீங்களா? ஒங்க ஊர்ல நான் பாட வந்தது பெந்தக்கோஸ்தேகாரங்களோட கச்சேரிக்குத்தானே! அவங்க சினிமா பாக்க மாட்டாங்களே!”

“பாரம்பர்யமா நாங்க மார்த்தோம்மா சபைக்காரங்க. கொஞ்ச காலம் முன்னாடிதான் பெந்தக்கோஸ்தேயில சேர்ந்தோம். சினிமா பாக்குற வெவகாரம் வீட்டிலத் தெரிஞ்சா கொல விழும். ஆனா என்னால சினிமா பாக்காம இருக்க முடியாது. இங்கே இருக்கிற சித்தியுமே பயங்கர பெந்தகோஸ்தேதான். ஆனா சண்டே காலையிலே எட்வர்ட் ஹாளில ஜெபத்துக்குப் போறேன், ஆல்ஃபிரெட் சர்ச்சில பிரார்த்தனைக்குப் போறேன்னு எதாவதொண்ணு சொல்லிட்டு நேரா ‘எட்வர்ட்’ தேட்டரிலும் ‘ஆல்ஃபிரெட்’ தேட்டரிலும் போய் சினிமா பாப்பேன். இன்னிக்கு ‘சௌதாகர்’ பாக்கறதுக்குக் கெளம்புனே... பயங்கரக் கூட்டம். டிக்கட் கெடைக்கல... அதாலத்தா இங்கே வந்தே... சினிமா பாக்கறத விட்டா வேற எந்தக் கெட்டப் பழக்கமும் நமக்கில்ல கேட்டியா? எப்பவாவது ஒண்ணு ரெண்டு ஒயின் அடிப்பே… அவ்ளொ தா”

நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த படத்தில், பழைய காலத்துப் படங்களை மாதிரி அடிக்கடி பாடல்கள் வந்துகொண்டிருந்தன. கேட்க நல்லாவும் இல்லை. படம் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. அமிதாப் பச்சனைவிட உயரமான, ஆஜானுபாகுவான கதாநாயகன். ஆனால் கதாநாயகிக்கோ உயரமும் இல்லை எடையும் இல்லை. மெலிந்து ஒடுங்கிப்போன ஒரு சிறுபெண். “இதையெல்லாம் எங்கேர்ந்து புடிச்சிட்டு வர்றாங்களோ? ஒடம்புல தசையே இல்லியே! குண்டியுமில்ல, முலையுமில்ல… வாங்க போலாம்…” ராஜு குமுறினான். இடைவேளையாகும் முன்னே நாங்கள் வெளியே வந்தோம். அதற்குள்ளேயே ராஜுவும் நானும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டிருந்தோம்.

அவன் என்னை செம்பூர் எனும் இடத்திலுள்ள அவனது சித்தியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அங்கே ராஜுவின் பேச்சு மூச்சு நடத்தை அனைத்தும் ஒரு தீவிர பெந்தகோஸ்தே பக்தனைப்போலவே இருந்தன. அன்றிரவு அந்த வீட்டில்தான் நானும் தங்கினேன். அவ்வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் ஆங்கிலத்திலேயே பேசினர். இரவு ஜெபம் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில். ஜெபத்திற்கிடையே நான் ஒரு கிறிஸ்தவப் பாடலைப் பாட வேண்டும் என்று ராஜு வற்புறுத்தினான். சலிக்காமல் ஓர் ஆங்கிலப் பாடலை எடுத்து விட்டேன். ‘ஹி டச்ச்ட் மி அண்ட் சம்திங் ஹாப்பென்ட் இன்சைட்… (அவர் என்னைத் தொட்டார்... உள்ளுக்குள்ளே என்னென்னமோ ஆச்சு…)’ அது ஒன்றும் பக்திப்பாடல் அல்ல. எல்விஸ் ப்ரிஸ்லியின் காமச் சுவைகொண்ட காதல் பாடல். ஆனால் அதில் வரும் அந்த ‘அவர்’ கர்த்தராகிய இயேசு என்று பக்திமான்கள் எளிதில் எடுத்துக் கொள்வார்கள். இரவு உணவு நேரத்தில் ராஜு என்னிடம் ரகசியமாகக் கேட்டான். “சாப்பாடு எப்டியிருக்கு? தூள் டக்கர் இல்ல? அப்பவே சொல்லல…!”

சில மாதங்களுக்குப் பின்னர் ஒருநாள் எதிர்பாராமல் ஹுப்ளியில் எனது அலுவலகத்திற்கு ராஜுவின் தொலைபேசி அழைப்பு. ‘பொறியியல் கல்வியில் பெரும் தோல்வியைத் தழுவினேன். தோற்றுத் தொப்பி போட்டு ஊருக்குச் சென்றால் பழைய ராணுவக் காரனான அப்பா கொன்றுவிடுவார். எப்படியாவது ஒரு வேலை வாங்கித் தரணும். இல்லையென்றால் தற்கொலையைத் தவிர வேறு வழியில்லை’. இதுதான் அழைப்பின் சாரம். ஹுப்ளியின் பெயர் பெற்ற வியாபாரியும் எங்கள் நிறுவனத்தின் முகவருமாகயிருந்த ‘கர்நாடகா எலக்ட்ரிக்கல்ஸ்’ ஷான்பாக் என்பவரிடம் மன்றாடி உதவி கேட்டேன். அவர் புண்ணியத்தில் ராஜுவுக்கு உடனடி வேலை கிடைத்தது. ‘குரோம்ப்டன் க்ரீவ்ஸ்’ இயந்திரப் பொருள்களின் மாவட்ட விற்பனைப் பொறியாளர் வேலையில் சேரவந்த ராஜு அடிமுடி மாறியிருந்தான். சினிமா பார்ப்பது, ஒயின் குடிப்பது போன்ற எல்லாக் ‘கெட்ட’ பழக்கங்களிலிருந்தும் அவன் விடுபட்டுவிட்டான். எந்நேரமும் பைபிள் வாசிப்பும் ஜெபமும். “நம்மை சினிமா பார்க்கவைப்பது சாத்தானின் தீய கவர்ச்சி. நீயும் அதிலிருந்து விலகியே ஆகவேண்டும்…” நான் விரைவில் ஹுப்ளியை விட்டு விலகி ஐதராபாத்திற்கே திரும்பினேன். பின்னர் ஒருபோதும் ராஜு என்னை அழைக்கவோ பேசவோ இல்லை. பிற்காலத்தில் ராஜுவுக்கு நடந்தவற்றை ஹுப்ளி நண்பர்கள் சொல்லி அறிந்துகொண்டேன்.

குறைந்த காலத்திலேயே ‘குரோம்ப்டன் ராஜு’ என்று அழைக்கப்பட்டு ஹுப்ளி மலையாளிகளுக்கிடையே பிரபலமானான். நியூ லைஃப் எனும் பெந்தகோஸ்தே சபையில் போதகனாக மாறி, கர்த்தரின் ஊழியத்தில் ‘பெலன்’ அடைந்தான். வேலையை விட்டுவிட்டு இயந்திரப் பகுதிகளை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையைச் சொந்தமாகத் தொடங்கினான். பணம் செலவழிப்பதில் எப்போதுமே கஞ்சனாயிருந்த ராஜு, குறுகிய காலத்திலேயே ஒரு பணக்காரனாக மாறினான். கர்நாடகாவின் தென் கானரா மாவட்டத்தில் நிலங்களை வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினான். சில ஆண்டுகள் கடந்து ஒருநாள், தார்வாட் எனும் ஊரிலுள்ள ஒரு திரையரங்கின் முன்னால் ராஜுவின் கார், கொடும் சாலை விபத்தில் சிக்கியது. அங்கேயே உயிரிழந்தான்.

ஹுப்ளியிலிருந்து ஐதராபாத்திற்குத் திரும்பிய எனக்கு, எனது அறை நண்பர் கீபோர்ட் அஜயனின் தம்பி அனிலுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அனிலும் அஜயனும் சேர்ந்து இசையமைத்துத் தயாரித்த ஹிந்தி, சம்ஸ்கிருத ஹிந்து பக்திப்பாடல் தொகுப்பு ஒன்று, கேரளத்திலுள்ள அவர்களது வீட்டு அலமாரியில் பலகாலமாகத் தூசு பிடித்துக் கிடந்தது. அதை வெளியே எடுத்து ஐதராபாத்தின் பெரும் இசை நிறுவனமான ‘ஆதித்யா மியூசிக்’கிற்கு விற்க என்னால் முடிந்தது. அது அளித்த தன்னம்பிக்கையில் அஜய் - அனில் சகோதரர்களே உருவாக்கிய, ஏ.எம்.ராஜாவும் பி.பி.ஸ்ரீநிவாஸும் பாடிய பழைய தமிழ்ப் பாடல்களின் கருவியிசை மற்றும் ஒரு மலையாள கிறிஸ்தவப் பக்திப் பாடல் தொகுப்பை அக்காலத்தில் இந்தியாவிலேயே மிகப் பிரபலமாயிருந்த ‘மேக்னா சவுண்ட்’ இசை நிறுவனத்திற்கு விற்கப் புறப்பட்டேன்.

உலகப் புகழ்பெற்ற சினிமாத் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸின் இசைத்துறைப் பிரிவு ‘வார்னர் மியூசிக்’. அதன் இந்திய உரிமையாளர்கள்தாம் ‘மேக்னா சவுண்ட்’. அங்கே உயர் அதிகாரிகளுடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களிலும் பாடல்களிலும் எனக்கிருந்த புரிதலையும் அக்கறையையும் கண்டு கொண்டதனால் என்று நினைக்கிறேன், ‘மேக்னா சவுண்டி’ல் ஒரு மேலாளராக வேலை ஏற்றெடுக்க எனக்குச் சம்மதமா என்று அவர்கள் கேட்டார்கள்! நான்கு தென்னிந்திய மொழிகளிலும் வெளிவர வேண்டிய இசைத் தொகுப்புகளின் திட்டமிடுதல், கரு உருவாக்கம், தயாரிப்பு, இசைப் பதிவு, விநியோகம் போன்றவற்றின் பெரும் பொறுப்பு அது. அலுவலகம் சென்னையில்தான் இருக்கப்போகிறது. அந்த வேலையை ஏற்றுக்கொண்டால், சென்னையின் இசைத்துறையிலும் திரைப்படத் துறையிலும் எதாவது செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைக்குமா?

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism