Published:Updated:

''விடுதலை கிடைத்ததற்காக பெருமைகொள்ள இயலுமா?''

'கவிதாயினி' மேதா பட்கர்கவின் மலர், படங்கள் : து. மாரியப்பன்

''விடுதலை கிடைத்ததற்காக பெருமைகொள்ள இயலுமா?''

'கவிதாயினி' மேதா பட்கர்கவின் மலர், படங்கள் : து. மாரியப்பன்

Published:Updated:
 ##~##
''நே
ற்று முன் தினம் நர்மதா பள்ளத்தாக்கு... நேற்று மேற்கு வங்கம்... இன்று சென்னை! பயணங்கள் அப்படி ஒன்றும் எனக்குச் சுவாரஸ்யமான விஷயம் இல்லை. ஆனால், பயணித்தாக வேண்டிய கட்டாயம்!'' - கிராமத்துச் சாலையின் குலுக்கல்களுக்கு ஈடு கொடுத்து, காரின் இருக்கையில் சாய்ந்து அமர்கிறார் மேதா பட்கர். கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை கிராமத்தைத் சேர்ந்த தலித் மக்களின் காடு மீட்புப் போராட்டத்தில் பங்கேற்க வந்து இருந்தார் மேதா பட்கர். பிற்பகலில் மெமோரியல் ஹால் அருகே குடிசைப் பகுதி மக்கள் நகரைவிட்டு வெளியேற்றப்படுவதை எதிர்த்து ஆர்பாட்டம், மாலையில் ஆளுநருடன் சந்திப்பு, அதன் பின் திருவான்மியூரில் மீனவர் கிராமத்தில் பொதுக் கூட்டம். மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் மேதா பட்கரிடம் பேசியதில் இருந்து...
''விடுதலை கிடைத்ததற்காக பெருமைகொள்ள இயலுமா?''

''ஜப்பானில் சுனாமிக்குப் பின் அணு உலைக் கதிர்வீச்சு அபாயத்துக்கு நடுவில் 'இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவையே!’ என்கிறாரே பிரதமர் மன்மோகன் சிங்?''

''எந்த அடிப்படையில் பிரதமர் அப்படிச் சொல்கிறார்? சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் நிகழும்போதுதான் நிலைமை என்னவென்று தெரிய வரும். ஜப்பானியர்கள் நம்மைவிடத் தொழில்நுட்பரீதியாக எதையும் சரியாக செய்யப் பழகியவர்கள். அவர்களுக்கே இந்த நிலைமை என்றால், நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம் அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்று மெத்தனமாக இருந்துவிட முடியாது!''

''நீங்கள் நேரடியாக சாதியம் குறித்துப் பேசுவது இல்லை. அது தொடர்பான போராட்டங்களில் பங்குகொள்வது இல்லை என்று உங்கள் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு குறித்து?''

''நான் சாதியத்துக்கு எதிரானவள். எங்காவது நான் சாதியத்தை ஆதரித்தேன் என்று சொல்ல முடியுமா? எப்போதும் நான் சாதிய ஏற்றத் தாழ்வுகளை எதிர்ப்பவள்.  சமூகத்தில் எல்லா விஷயங்களுக்காகவும் எல்லோரும்  போராட முடியாது. அவரவர் போராடுவதற்கென்று முன்னுரிமை வைத்திருக்கிறார்கள். சாதியத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் பலர், நான் ஈடுபடுவது போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த, நிலவுரிமை சார்ந்த விஷயங்களுக்குப் போராட வருவது இல்லை என்பதற்காக அவர்கள் இவற்றை எதிர்க்கிறார்கள் என்று சொல்ல முடியாதே? அதுபோலவே நான் சாதியத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்குபெறுவது இல்லை என்பதாலேயே, என்னை சாதியத்துக்கு எதிரான நிலையில் பார்த்துவிட முடியாது. பொதுவாக, மக்கள் நலப் போராட்டங்களில் ஈடுபடுகிறேன். அவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களாகவும், ஆதிவாசிகளாகவும்தான் இருக்கிறார்கள். எங்கள் போராட்டங்களுக்கு வருபவர்கள், ஆரம்பத்தில் பெரும்பாலும் சாதிய மனநிலையில் இருந்து விடுபடாமல் வந்தாலும்கூட, நாளடைவில் அவர்களுக்குள் மாற்றம் கண்டு சாதியைக் கடைபிடிக்காதவர்களாக மாறுகிறார்கள். ஆனால், இந்த மாற்றம் ஒரே நாளில் வந்துவிடாது. மெள்ள மெள்ளப் பல விஷயங்களைப் புரிந்துகொண்டு போராட்டக் களத்தில்தான் இவர்கள் மாறுகிறார்கள்!''

''விடுதலை கிடைத்ததற்காக பெருமைகொள்ள இயலுமா?''

''மணிப்பூரில் ஆயுத சிறப்புப் படைக் காவல் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி 10 ஆண்டுகளாக சத்யாகிரக வழியைப் பின்பற்றி உண்ணாவிரதம் இருந்து வரும் இரோம் ஷர்மிளாவின் போராட்டம், அதற்கு உண்டான விளைவைப் பெற்று இருப்பதாக நினைக்கிறீர்களா? இன்றைய சூழலில் அப்படியான ஒரு போராட்ட வடிவத்தின் மூலம் அரசைத் திரும்பிப் பார்க்கவைக்க முடியுமா?''

''இரோம் ஷர்மிளாவின் இடைவிடாத போராட்டம் உணர்வுரீதியாகவும் கருத்துரீதியாகவும் மிகவும் உறுதியாக இருப்பதாலேயே அவரால் தொடர முடிகிறது. இதில் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று, அரசியல்ரீதியாகப் பார்த்தால், ஷர்மிளாவின் போராட்டம் அரசைச் செவி சாய்க்க வைக்கவில்லை. குறைவான விளைவையே அது உருவாக்கி இருக்கிறது. ஆனால், தனிப்பட்ட வகையில் பார்த்தால், அவரை இந்தப் போராட்ட வடிவத்தைக் கைவிடச் சொல்வதற்கு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. தன் போராட்ட வடிவம் சரியானதென்று அவர் தீவிரமாக நம்புகிறார். மற்றவர்களால் முடியாத ஏதோ ஒன்று அவரால் முடிகிறது. அந்த வகையில் நான் ஷர்மிளாவை மிகவும் மதிக்கிறேன்!''

''நீங்கள் அடிக்கடி வட கிழக்கு மாநிலங்களுக்குச் சென்று வருகிறீர்கள். அருந்ததி ராய், அரசுக்கு எதிராகப் போராடும் மாவோயிஸ்ட்டுகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கிறார். அந்த விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?''

''அருந்ததி ராய்கூட நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்கவில்லை. 'மாவோயிஸ்ட்டுகள் வன்முறையில் இறங்கக் கூடாது’ என்றுதான் சொல்கிறார். மாவோயிஸ்ட்டுகள் ஏதோ வானில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. அவர்களும் மக்கள் சமூகத்தில் இருந்துதான் உருவாகிறார்கள். போராடுவதற்கு உண்டான நியாயங்கள் அங்கே இருக்கின்றன. அரசு வன்முறையைத்தான் கையாள்கிறது. ஆனால், அதற்கு எதிர்வினையாக வன்முறைதான் பதில் என்பது தீர்வாகாது. பதிலுக்குப் பதில் வன் முறையே தொடர்ந்துகொண்டு இருந்தால், அது சங்கிலித் தொடராக நீண்டுகொண்டே இருக்கும். அந்தச் சங்கிலியை அறுத்தெறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்!''

''விடுதலை கிடைத்ததற்காக பெருமைகொள்ள இயலுமா?''

''நர்மதா அணைப் பிரச்னையின் தற்போதைய நிலை என்ன?''

''உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீட்டு விசாரணையில் இருக்கிறது. திட்டம் கைவிடப்படவில்லை. ஆனால், அரசாங்கம் அந்தத் திட்டத்தை நிறுத்திவைத்து இருக்கிறது. இரண்டு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 11 ஆயிரம் குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு வகையில் நல்ல விஷயம். ஆனால், நிலம் பெற்றவர்களுக்கும் சில பிரச்னைகள் இருக்கின்றன. நிலம் பெறாதவர்களுக்குப் பெற்றுத் தரும் எங்கள் முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. போராட்டமும் இடைவிடாமல் தொடர்கிறது. நர்மதா பள்ளத்தாக்கில் எங்கள் இயக்கம் சார்பாக 'ஜீவன்சாலாக்கள்’ என்ற பெயரில் ஆதிவாசிக் குழந்தைகளுக்கான 13 ஆரம்பப் பள்ளிகளை நடத்து கிறோம்!''

''தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழ் நாட்டுக்கு வந்து இருக்கிறீர்கள். முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தி என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?''

''இந்தத் தேர்தலில் ஊழல் ஒரு முக்கியமான விஷயமாக இருக்கும். ஆனால், கல்வியறிவு பெற்ற நகரத்தின் மனிதர்கள் மத்தியில்தான் ஊழல் பெரிதாகப் பேசப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டுகள் தேர்தலில் பிரதிபலிப்பது ஒரு மாநிலத்தின் கல்வி அறிவு எத்தனை சதவிகிதம் என்பதைப் பொறுத்தே அமையும்!''

''தனிப்பட்ட முறையில் உங்களுக்கு வேறு எவற்றில்  ஆர்வம் உண்டு?''

''வாசிப்பது, எழுதுவதில் ஆர்வம் உண்டு. அவ்வப்போது  திரைப்படங்கள் பார்ப்பேன். அமீர் கானைப் பிடிக்கும். அதனால் 'பீப்ளி லைவ்’ படத்தை தியேட்டரில் சென்று பார்த்தேன். மராட்டிய மொழி யில் கவிதை எழுதுவேன். பெரும்பாலும் சமூகம் சார்ந்ததாகவே என் கவிதைகள் இருக்கும். தனிப்பட்ட உணர்வுகள், மனித உறவுகள் குறித்தும் என் கவிதை களில் அவ்வபோது வெளிப்படும். ஒரு கவிதை சொல்லவா...

'தேச நலனென்ற பெயரில்
லட்சக்கணக்கில் மக்கள் அகற்றப்படுகிறார்கள்
வீடுகளுக்குள் அடைபட்டுக்
கிடந்தவர்களாயிருந்தாலும்
இவ்வெளியேற்றத்தை விடுதலை கிடைத்ததாய்
பெருமைகொள்ளவும் இயலுமோ?’

நல்லா இருக்கா?''- குழந்தைச் சிரிப்புடன் மேதா காரில் இருந்து இறங்க, எதிர்பார்ப்பு நிரம்பிய மக்கள் வெள்ளம் அவரை வாரி அணைத்துக்கொள்கிறது!