Published:Updated:

விகடன் மேடை : தமிழருவி மணியன்

படம் : கே.ராஜசேகரன்

விகடன் மேடை : தமிழருவி மணியன்

படம் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##
எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

''தி.மு.க-விடம் 63 தொகுதிகள் வாங்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் அபார வளர்ச்சி அடைந்திருக்கிறதா என்ன?''

''மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியிடம் கை கூப்பி நிற்கும் காங்கிரஸ், தமிழகத்தில் கலைஞரைக் காலில் விழச் சொல்கிறது. அவரவர் செயலே, அவரவர் விளைவு. 63 தொகுதிகளில் தரிசனம் தருவது காங்கிரஸின் வளர்ச்சி அன்று; தி.மு.க-வின் தளர்ச்சி. வீக்கம் வேறு... வளர்ச்சி வேறு. காங்கிரஸ் 'ஸ்பெக்ட்ரம்’ தந்த வரத்தால் வீங்கியிருக்கிறது... வளரவில்லை!''

விகடன் மேடை : தமிழருவி மணியன்

தாமரைநிலவன், திருவாரூர்.

''இலக்கியமும் அரசியலும் கற்றவர் தாங்கள். இரு துறைகளிலும் தங்களுக்குப் பிடித்தமானவர்கள் உண்டா... யார்?''

''இலக்கியம் என் இதயத்தில் இணைந்தது. அரசியல் என் அறிவில் கலந்தது. என்னைப் பண்படுத்த, இலக்கியத்தில் ஈடுபடுகிறேன். நான் வாழும் மண்ணைப் பக்குவப்படுத்த, அரசியல் அரங்கில் நடமாடுகிறேன். கவிதை உலகில் நான் கண்ணதாசனில் தொடங்கி, பாரதிதாசனில் படர்ந்து, பாரதியில் பதிந்து, கம்பனில் கலந்து, இளங்கோவில் கரைந்து, வள்ளுவனில் திளைத்து, சங்க இலக்கியங்களில் சங்கமித்தவன். உரைநடை இலக்கியத்தில் புதுமைப் பித்தன் முதல் நாஞ்சில் நாடன் வரை பலரது எழுத்துக்களால் பாதிக்கப்பட்டவன். ஆனாலும், என்னுள் எப்போதும் ஆராதனைக்கு உரியவர்கள்... பாரதி, பாவேந்தர், கண்ணதாசன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்.

அரசியலில் அன்றும், இன்றும், என்றும் என் தொழுகைக்குரிய தலைவர்கள் காந்தியும் காமராஜரும்!''

விகடன் மேடை : தமிழருவி மணியன்

எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

''கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றாக உங்கள் கண்களுக்குத் தெரிபவர் யார்?''

''இருண்டுகிடக்கும் வானத்தில் நட்சத்திரங்கள் தெரிவது இல்லை. அதற்காக, நட்சத்திரங்களே இல்லை என்று அர்த்தம் இல்லை. இயற்கையின் படைப்பில் வெற்றிடம் இல்லை. இரவு எவ்வளவு நீண்டுகிடந்தாலும், பொழுது விடிந்துதான் ஆக வேண்டும். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றாக, யாராலும் வர முடியும். அதற்கு நாம் தவம் இருக்கத் தேவை இல்லை. பெரியாரும், காமராஜரும், ஜீவாவும்போல் ஒருவர் வர வேண்டும். காலம் உரிய நேரத்தில் ஒருவரைக் காட்டும்!''

எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

''ஒருவேளை தி.மு.க - காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, தனி மெஜாரிட்டியில் தி.மு.க. ஆட்சி அமைந்தால்?''

 '' 'விதியே... விதியே! தமிழர் சாதியை என் செய்ய நினைத்தாய்?’ என்று பாரதியைப்போல் பேச்சிலும் எழுத்திலும் புலம்புவேன். 'தமிழர் என்றோர் இனம் உண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று நாமக்கல் கவிஞரை நெஞ்சில் நினைத்து, எனக்கு நானே ஆறுதல் அடைய முயல்வேன்!''

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

விகடன் மேடை : தமிழருவி மணியன்

''பெருந்தலைவர் காமராஜரின் நற்பண்புகளை, இன்றைய தலைவர்களிடம் தனித் தனியாகவாவது காண முடிகிறதா?''

''தன்னல மறுப்பு, மக்கள் நலனில் முழுமை யான அர்ப்பணிப்பு, நேர்மை தவறாத நேரிய வாழ்வு, தேர்தலில் தோற்கடித்தாலும் மக்களை வசைபாடாமல், அவர்கள் நலனை மட்டுமே நாடும் ஒரு கர்ம யோகியின் நெஞ்சம் - அனைத்தும் கலந்த கலவைதான் காமராஜர். அவரைப்«பால் ஒரு மனிதர் இன்று நம்மிடையே நரம்பும் சதையுமாக வாழ்ந்து வருகிறார்... அவர்தான் தோழர் நல்லகண்ணு!

இவரைத் தவிர்த்து, வேறு எவரிடமும் காமராஜரின் தனித்துவம் மிக்க பண்பு நலன்களில் ஒன்றைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை!''

ஆர்.முருகேசன், தேனி.

 '' 'கற்றலில் கேட்டல் நன்று’ என்று ஏன் சொல்கிறார்கள்?''

'' 'செவி இருப்போர் கேட்பாராக’ என்றார் கர்த்தர். 'வாசக ஞானத்தால் வருமோ சுகம்?’ என்று கேட்டார் தாயுமானவர். கற்றுப் பெறும் அறிவு அனைவருக்கும் வாய்க்காது. கேட்டலில் கிடைக்கும் அறிவு பாமரரையும் பாதிக்கும் ஆற்றல் பெற்றது. எல்லாவற்றையும் கற்க விரும்பினால், காலம் முடிந்துவிடும். சான்றோர் சொல்லைச் செவிமடுத்தாலே போதும். படித்துக் கொண்டே இருந்தால் பார்வை பழுதுபடும். எவ்வளவு நேரம் கேட்டாலும் காது நோகாது. அதனால்தான்!''        

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

''மகாத்மா காந்தி காங்கிரஸுக்கும், சோனியா காந்தி காங்கிரஸுக்கும் நீங்கள் காணும் வேறுபாடு என்ன?''

''தன்னலம் அற்ற ஒரு துறவியின் வேள்விச் சாலை-காந்தி காங்கிரஸ். கை தேர்ந்த ஒரு வியாபாரியின் வணிகத் தலம் - சோனியா காங்கிரஸ். திருவருட்பாவுக்கும் திரைப் பாடலுக்கும் உள்ள வேறுபாடுதான், இரண்டு காங்கிரஸுக்கும் இடையில் உள்ள வேறுபாடு!''

ஆர்.விஸ்வநாதன், சென்னை-78.

''சுதந்திர இந்தியாவில் தங்களை அதிர்ச்சிகொள்ளச் செய்த நிகழ்வாக எதைக் குறிப்பிடுவீர்கள்?''

''ஆன்மிகத் தளத்தில்... பாபர் மசூதி இடிப்பு. அரசியல் களத்தில்... 'ஸ்பெக்ட்ரம்’ பகற்கொள்ளை அடிப்பு!''

ம.பாரதி, செங்கல்பட்டு.

''பெருந்தலைவர் இறந்தபோது அவரிடம் இருந்தது 57 ரூபாய்தானாமே... நிஜமா?''

''இன்னும் ஆறு ரூபாயைக் கூட்டிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். இது பொய்யின் நிழல் படாத நிஜம்!''

செ.கணேசன், திமிரி.

''கண்ணதாசன், வாலி, வைரமுத்து ஒப்பிடுங்களேன்... அல்லது வேறுபடுத்துங்களேன்?''

''கவிஞர்களை ஒப்பீடு செய்து உயர்த்து வதும், தாழ்த்துவதும் இலக்கிய தர்மம் ஆகாது. வீணையின் இசை, நாகஸ்வரத்தில் வராது. நாகஸ்வரத்தின் நாதம், மத்தளத்தில் எழாது. மத்தள ஓசையைப் புல்லாங்குழலில் எதிர்பார்க்கக் கூடாது. நான் கண்ணதாசனின் காதலன். வாலி, வைரமுத்துவின் விமர்சகன்!''

எம்.பழனி, மதுரை.

விகடன் மேடை : தமிழருவி மணியன்

''கருணாநிதியிடம் உங்களுக்குப் பிடித்தது - பிடிக்காதது... ஜெயலலிதாவிடம் தங்களுக்குப் பிடித்தது - பிடிக்காதது?''

''கலைஞரிடம் பிடித்தது கடும் உழைப்பு. பிடிக்காதது தன்னை விமர்சிப்பவரை வேரறுக்கப் பார்க்கும் வெறுப்பு.

ஜெயலலிதாவிடம் பிடித்தது தன்னம்பிக்கை. பிடிக்காதது தலைக்கனம்!''

கி.தாமரை, விழுப்புரம்.

''திராவிடக் கட்சிகளை இவ்வளவு விமர்சிக் கிறீர்கள். ஆனால், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில்தானே தமிழகம் இத்தனை வளர்ச்சி அடைந்திருக்கிறது?''

''5 லட்சம், 10 லட்சம் ஊழல் என்பது 1.76 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறதே அந்த 'வளர்ச்சி’யைச் சொல்கிறீர்களா? ஆற்றின் அடி மடி வரை சுரண்டப்படுகிறதே... அந்த வளர்ச்சியா? மலைக் குன்றுகள், கிரானைட் கற்களாக மொட்டையடிக்கப்படும் வளர்ச்சியா? 14 ஆயிரம் கோடி ரூபாய் 'டாஸ்மாக்’ வருவாயாக வளர்ந்திருக்கிறதே... அதுவா? திருமங்கலம் பாணியில் ஜனநாயகம் வளர்த்தெடுக்கப்பட்டதைச் சொல்கிறீர்களா? 43 ஆண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகும் ஆறரைக் கோடி தமிழர்களில் மூன்று கோடித் தமிழர்களுக்கு மாற்று உடை இல்லாத நிலையில், அரசு இலவச வேட்டி, புடவை வழங்குவதாக முதல்வர் கலைஞரே அறிவித்தாரே... அந்த வளர்ச்சியைக் குறிப்பிடு கிறீர்களா?''

ச.செந்தில்வேலன், திருவாரூர்.

''எம்.ஜி.ஆர். இன்று இருந்திருந்தால்?''

''கலைஞர் கடைசி வரை மீண்டும் முதல்வராகி இருக்க முடியாது. அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தமிழக அம்பானிகளாக வலம் வரும் வாய்ப்பையும் இழந்திருப்பார்கள்!''

சு.ராகவன், மதுராந்தகம்.

''உங்கள் அரசியல் வாழ்வில் நீங்கள் பெருமிதப்படும் தருணம்... மறக்க நினைக்கும் சம்பவம்?''

''பெருந்தலைவர் காமராஜர் என் உரை யைக் கேட்டு, உள்ளம் நெகிழ்ந்து 'தமிழருவி’ என்று அடைமொழி தந்து அழைத்த தருணம். மூப்பனார் என் பேச்சை வியந்து, கூடியிருந்த அனைவரையும் எழுந்து நின்று கரவொலி எழுப்பச் செய்து 'நயாகரா நீர்வீழ்ச்சி’ என்று போற்றிப் பரவசப்பட்ட நேரம். காந்தியம் பற்றி நான் ஏவி.எம்.ராஜேஸ்வரி அரங்கில் நிகழ்த்திய சொற்பொழிவைக் கேட்டு, விழிகளில் நீர் வழிய ம.பொ.சி. 'இந்த வாழை விழும் நேரம், அதன் காலடியில் தன் கன்று எழுவதைக் கண்டுவிட்டது!’ என்று குறிப்பிட்டு நெகிழ்ந்த ஒரு மாலைப் பொழுது... ஆகியவை என் அரசியல் வாழ்வில் நான் மகுடம் தரித்த மறக்க முடியாத நிமிடங்கள்.

'நின்னைச் செற்றார் என்னைச் செற்றார். தீயரே எனினும் நினக்கு உற்றார் எனக்கும் உற்றார்!’ (உன் பகைவன் என் பகைவன். தீயவன் என்றாலும் உன் நண்பன் என் நண்பன்!) என்று ராமன் வகுத்த நட்பின் இலக்கணத்தை அறியாத சில 'நல்லவர்’களிடம் சில காலம் நெஞ்சம் கலந்து பழக நேர்ந்ததை மனம் மறக்க முயல்கிறது!''

த.ரவி, காஞ்சிபுரம்.

''தற்போதைய நிலையில், தமிழகத்தில் 'அரசியல் அநாதை’ யார்?''

 ''தமிழருவி மணியன்!''

- அடுத்த வாரம்...  

''இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?''

''கருணாநிதியை இந்தக் காய்ச்சு காய்ச்சுகிறீர்களே... அப்படி என்ன அவர் மேல் கோபம்?''

''பல காலம் கட்சி வளர்த்த வைகோ, ராமதாஸ், கம்யூனிஸ்ட்டுகளைப் பின்னுக்குத் தள்ளி, விஜயகாந்த் குறுகிய காலத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

- கலக்கல் பதில்கள் தொடர்கின்றன...

விகடன் மேடை : தமிழருவி மணியன்