Published:Updated:

ஆசை

ஆசையில் ஓர் ஓவியம்!ம.கா.செந்தில்குமார்படங்கள் : கே.ராஜசேகரன்

ஆசை

ஆசையில் ஓர் ஓவியம்!ம.கா.செந்தில்குமார்படங்கள் : கே.ராஜசேகரன்

Published:Updated:
 ##~##
''எ
ப்பவும் விகடனைக் கையில் எடுத்ததும் நான் பார்த்து ரசிக்கும் முதல் விஷயம் சிறுகதை, கவிதைகளுக்கான ஓவியங்கள்தான். எல்லாருடைய ஓவியங்களும் எனக்குப் பிடிக்கும். கண்ணுல அப்படியே ஒத்திக்கும்படி இருக்கும் ம.செ-வின் ஓவியங்கள் ரொம்பவே ஸ்பெஷல். நான் அவரோட தீவிரமான ரசிகன். 'அவர் என்னை ஓவியமா வரையணும்’னு விகடன் 'ஆசை’ பகுதிக்குக் கடிதம் எழுதப்போறேன்’னு என் மனைவிகிட்ட சொன்னேன். 'விகடனை வாசிச்சோமா, ரசிச்சோமான்னு இல்லாம, இந்த வயசுல இந்த ஆசை உங்களுக்குத் தேவையா’ன்னு சிரிச்சா. 64 வயசுல ஸ்ட்ரோக் வந்து வலது கை, கால் செயல் இழந்தாலும் இன்னும் அதே தைரியத்துடன் நடமாடும் பிடிவாதக்காரன் நான். விட்டுக்கொடுப்பேனா? உங்களுக்கு எழுதின கடிதம்கூட இடது கையால் எழுதினதுதான்!''-மகிழ்ச்சியும் நெகிழ்ச்சி யுமாக வரவேற்றார் நாகராஜன். சென்னை நொளம்பூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
ஆசை

''நான் அப்பவே சொன்னேன் பாத்தியா... விகடன்ல இருந்து வந்துட்டாங்க!'' என்று மனைவி பக்கம் திரும்பி, மகிழ்ச்சி அலையைப் பரப்பினார். ஓவியர் ம.செ-விடம் விவரம் சொல்லி, நிகழ்வுக்கு நாள் குறித்தோம்.

ஆசை

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை தனது மனைவி, மகன், மகள், மருமகன், பேத்திகளுடன் ம.செ. வீட்டில் ஆஜர் ஆனார் நாகராஜன். தேநீர் உபசரிப்பின் போது, விகடனில் வெளிவந்த ம.செ-வின் ஓவியங்கள்பற்றிய அப்டேட்களை நாகராஜன் அடுக்க, மலைத்துத்தான் போனார் ம.செ. மாடியில் ம.செ-வின் ஓவிய அறைக்கு வந்தவர், அறை முழுவதும் இருந்த ம.செ. மற்றும் அவரின் தந்தையார் மணியம் அவர்களின் ஓவியங்களைப் பார்த்ததும் சிலிர்த்துச் சிலாகித்தார்.

''படம் வரையும்போது, எனக்கு எந்த கவனச் சிதறல்களும் இருக்கக் கூடாது. ஆனால், உங்களை போர்ட்ரெய்ட் பண்ணும்போது அப்படி இருக்க முடியாது. ஒன்றரை மணி நேரம்கூட ஆகலாம். அதனால், உங்களை ரிலாக்ஸ் ஆக்க இடையிடையே நாம கொஞ்சம் பேசிக்கலாம்!'' என்று டிராயிங் போர்டில் தாளைச் செருகி, க்ரேயான்களைத் தயாராக வைத்துக்கொண்டார். அறையின் ஜன்னல் அருகே இயல்பான வெளிச்சம் பரவும் இடத்தில் நாகராஜனை வாகாக அமரவைத்துவிட்டு, விறுவிறுவென வரையத் தொடங்கினார் ம.செ.

அடுத்த சில நிமிடங்களிலேயே நாகராஜனின் அவுட் லைன், கோட்டோவியமாக அந்தக் காகிதத்தில் படர்ந்தது. ''சூப்பர் சார், அவுட் லைனே அசத்தலா இருக்கு!'' என்று பூரித்தார் நாகராஜனின் மனைவி. ஆர்வ மிகுதியால், ''நானும் என்னைப் பார்க்கலாமா?'' என்று நாகராஜன் கேட்க, ''ஃபைனலாப் பாருங்க. அப்பதான் திருப்தியா இருக்கும்!'' என்றார் ம.செ.

''சார், எங்க அப்பாவும் நல்லாப் படம் வரைவார். தன் பள்ளி நாட்களில் இருந்து இப்போ வரை வரைந்த ஓவியங்களை உங்ககிட்ட காமிக்க எடுத்துட்டு வந்திருக்கார்!'' என்றார் நாகராஜனின் மகன். அந்த ஓவியங் களை வாங்கிப் பார்த்த ம.செ., ''உங்களுக்கு போர்ட்ரெய்ட், கார்ட்டூன் ரெண்டுமே நல்லா வருதே!'' என்று பாராட்ட, நாகராஜன் முகத்தில் பரவசம்!

''ஸ்ட்ரோக் பாதித்த பிறகும் விடாம வரையறீங்களே... எப்படி?'' என்று ம.செ கேட்க, ''உங்க ஸ்ட்ரோக்ஸ்தான் காரணம்!'' என்ற நாகராஜனின் பாசிட்டிவ் பளீர் பதில் இம்முறை ம.செ முகத்தில் பிரகாசத்தைப் பூக்கச் செய்தது. ''இப்ப நான் உங்க கண்களை வரையுறேன். சில நிமிஷம் கண்களை இமைக்காமல் இருங்க!'' என்றார்.

ஆசை

''சரி... இப்போ ரிலாக்ஸ் ஆகிக்கோங்க!'' என்று ம.செ சொல்ல, ''எல்லாப் பத்திரிகைகளிலும் படங்கள் வரையுறீங்க. ஆனா, விகடன்ல மட்டும் அது ரொம்ப ஸ்பெஷலா இருக்கே... ஏன்?'' என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் நாகராஜன்.

''எல்லோரும் இப்படித்தான் சொல்றாங்க. 1976-ல இருந்து இப்போ வரை கிட்டத்தட்ட விகடன் ஸ்டாஃப் கணக்கா வேலை பார்த்துட்டு இருக்கேன். வாராவாரம் விகடனுக்குன்னு ஒரு ஓவியமாவது வரையாம இருக்க மாட்டேன். இது எல்லாத்துக்கும் உச்சமா, வாலியின் 'கிருஷ்ண விஜயம்’, தமிழருவி மணியனின் 'ஊருக்கு நல்லது சொல்வேன்’, வைரமுத்துவின் 'கருவாச்சி காவியம்’னு ஒரே சமயத்தில் மூன்று தொடர்களுக்கு விகடனில் ஓவியம் வரைஞ்சிருக்கேன். அது எனக்கு ரொம்ப மன நிறைவு தந்த தருணம்!'' என்று நெகிழ்ந்தார் ம.செ.

''ஓவியர் மணியம் அவர்களின் மகன் என்பதால், உங்களுக்கு 'மணியம் செல்வன்’னு பேர் வந்ததுன்னு தெரியும். உங்க நிஜப் பேர் என்ன சார்?''- இந்த முறை கேள்வி கேட்டது நாகராஜனின் மருமகன்.

''லோகநாதன்'' எனப் புன்னகைத்த ம.செ. கடிகாரத்தைப் பார்க்க, ஓவியம் வரையத் தொடங்கி முக்கால் மணி நேரம் கடந்து இருந்தது. நாகராஜனின் ஓவியம் கிட்டத்தட்ட இறுதி வடிவம் எடுத்திருந்தது. ஃபைனல் டச்சில் தீவிரமானார் ம.செ.

ஆசை

''ஓவியக் கல்லூரியில் படித்தால்தான் ஓவியராக முடியுமா? யாருடைய பாதிப்பும் இல்லாமல் உங்களால் ஓவியம் வரைய முடியுமா?'' என்று நாகராஜன் கேட்க, ''அப்படிச் சொல்லிவிட முடியாது. அங்கு உள்ள ஜாம்பவான்களின் வழிகாட்டுதல் இருந்தால், எளிமையாக வரையக் கற்றுக்கொள்ளலாம். சென்னை ஓவியக் கல்லூரியில் நடிகர் சிவகுமார் எனக்கு ஒன்பது வருட சீனியர். ஆனால், என் தலைமுடி நிறத்தைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது! யாருடைய பாதிப்பும் இன்றி படம் வரைவது

ஆசை

கடினம். வீரபாண்டிய கட்டபொம்மனை வரையும்போது, நம்மை அறியாமல் சிவாஜி சார் பிரஷ் வழியாக கேன்வாஸில் இறங்கிவிடுவார். ஒரு பெண்ணை வரையும்போது எனக்குப் பிடித்த ரேகா, ஜெயபாதுரி போன்றோரின் சாயல் இருப்பதை சமயங் களில் உணர்ந்து இருக்கிறேன்!'' என்றவர், நாகராஜனை வரைந்து முடித்து, கீழே 'ம.செ’ எனக் கையெழுத்திட்டு தேதி குறிப்பிட்டார்.

பரபரப்பாக எழுந்து வந்து 'தன்னை’ப் பார்த்த நாகராஜன், ''பிரமாதம் சார். என்னை நானே கண்ணாடியில் பார்க்கிற மாதிரி இருக்கு சார். ஆனா, இது என்னைவிட இன்னும் அழகா இருக்கு!'' என்று மகிழ்ச்சியில் திளைக்க, அவரை  அணைத்துக்கொண்டார் ம.செ.

நாகராஜன் குடும்பத்தினர் ம.செ-வுக்கு அன்புப் பரிசு ஒன்றை வழங்கினர். நாகராஜனின் ஓவியத்துடன் அந்தக் குடும்பத்தினர் விடை பெறும் சமயம், இரு தரப்பினரிடமும் நெகிழ்ச்சி மின்னல்கள்!  

ஆசை