Published:Updated:

''பெண்களின் முன்னேற்றத்தில் இவர்களுக்கு அக்கறையே இல்லை!''

கவின் மலர்படம் : கே.ராஜசேகரன்

''பெண்களின் முன்னேற்றத்தில் இவர்களுக்கு அக்கறையே இல்லை!''

கவின் மலர்படம் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##
''எ
ந்தத் தொகுதியில் யார் வெல்வார்கள் என்று கருத்துக்கணிப்புகளும் ஆரூடங்களும் வரத்தொடங்கி உள்ள நிலையில், வாக்காளர்கள் எவற்றை மனதில்வைத்து இந்தத் தேர்தலை அணுக வேண்டும் என ஆலோசனை கூறுகிறார், பெண்ணியவாதியும் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவருமான பேராசிரியை சரஸ்வதி!
''பெண்களின் முன்னேற்றத்தில் இவர்களுக்கு அக்கறையே இல்லை!''

''பெண்களுடைய அரசியல் பங்கேற்பை உறுதிசெய்யும், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளதை ஒரு வாக்காளர் என்ற முறையிலும், அரசியல் உணர்வுள்ள ஒரு பெண் என்ற முறையிலும் நான் எதிர்க்கிறேன். மத்திய அமைச்சரவையில் பங்கேற்கும் மாநிலக் கட்சிகளும்கூட இதற்கான அரசியல் நகர்வுகள் எதையேனும் செய்திருக்கின்றனவா என்று பார்த்தால், ஒன்றுமே இல்லை. கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு எல்லாத் தரப்புப் பெண்களும் கடந்த 30 ஆண்டுகளாக முன்வைக்கும் கோரிக்கை இது. தேர்தல் பிரசாரத்துக்கு வரும் அரசியல்வாதிகள், 'தாய்மார்களே... உங்கள் வாக்குகளை எங்களுக்கே அளியுங்கள்!’ என்று கேட்கும் உரிமை எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் கிடையாது. கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், ஒரு வார்த்தையாவது இது குறித்து சொல்லப் பட்டு இருக்கிறதா என்று பாருங்கள்! இலவு காத்த கிளிபோல, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவார்கள் என்று காத்துக்கொண்டு இருந்ததுதான் மிச்சம்.

''பெண்களின் முன்னேற்றத்தில் இவர்களுக்கு அக்கறையே இல்லை!''

மாநில அரசு என்ன முயற்சி செய்தது இந்த விஷயத்தில்? எல்லாக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலையும் ஊன்றிக் கவனியுங்கள்! வேட்பாளர்களில் எத்தனை பேர் பெண்கள் என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெண்களின் முன்னேற்றத்தில் உண்மையில் இங்கு உள்ள அரசியல் கட்சிகளுக்கு அக்கறை இல்லை என்பதையே இந்தப் பட்டியல் காட்டுகிறது.

பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தாததற்கு, 'அவர்களுக்குப் போதுமான அரசியல் பயிற்சி இல்லை. தகுதியான பெண்கள் இல்லை’ என்று கட்சிகள் காரணங்களை அடுக்கலாம். ஆனால், 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பெண்களாக இருக்கும்போது, எத்தனை பெண்களைக் கட்சியின் தலைமைப் பதவிகளுக்கு அனுமதித்து இருக்கின்றன கட்சிகள்? மிஞ்சி மிஞ்சிப் போனால், 'மகளிர் அணித் தலைவி’ என்கிற பட்டம் மட்டும் ஒதுக்கப்படும். மகளிர் அணிக்கு ஒரு பெண்தான் தலைமை தாங்க வேண்டும் என்பதால்தான் அந்தப் பதவியும்கூட. மாவட்டச் செயலாளர் உட்பட எல்லாப் பதவிகளும் ஆண்களுக்கே உரித்தானது என்பதுதான் அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள நிலைமை. இப்படி இருக்கும்போது, எப்படி ஒரு பெண் அரசியல் பயிற்சி பெற்று முன்னேறுவது? வாக்குக்காக மட்டும் நாடி வரும் அரசியல் கட்சிகளைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேசியக் கட்சிகளானாலும், மாநிலக் கட்சிகளானாலும், கட்சி எல்லைகளைத் தாண்டி இந்தப் பிரச்னையைச் சீர்தூக்கிப் பார்த்து, பெண்கள் அத்தகைய கட்சி களைப் புறக்கணிக்க வேண்டும்.

அடுத்து, பெண்களுக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருப்பது, ஆண்களின் மதுப் பழக்கம். பூரண மதுவிலக்கு குறித்து எந்தக் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் மூச்சுவிடவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இது குறித்துப் பேசினாலும்கூட, அவர்கள் கூட்டணியின் சார்பில் முடிவு எடுக்கும் அதிகாரம்கொண்ட தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் இது குறித்து ஒன்றும் சொல்லப்படவில்லை. ஏன், எந்த அரசியல் கட்சி யும் பூரண மதுவிலக்கைக் கொண்டுவருவதாகத் தனது அறிக்கையில் சொல்லவில்லை என்பதைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள். கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை அரசு கையில் எடுத்து சீரிய முறையில் நிர்வகித்து, ஏழை எளியோருக்கும் அந்த வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும். ஆனால், அரசு டாஸ்மாக்கைக் கையில் எடுக்கிறது. தனியாருக்கு அளிக்க வேண்டிய வணிக வியா பாரங்களை அரசு வைத்துக்கொண்டு, சேவைத் துறைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து, அதில் வணிகத்தை நுழைக்கிறது!  

சமூகத்தில் பெண்களுக்குக் கொஞ்சமும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பெண் சிசுக்கொலை, கருக் கொலை குறித்து நாம் நிறையப் பேசியிருந்தாலும்கூட, இன்னமும் அவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண் குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பகடிக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகும் கொடூரத்துக்குத் தீர்வு என்ன என, எந்த அரசியல் கட்சியேனும் எதையேனும் முன்வைக்கிறதா? நர்சரி முதல் பல்கலைக்கழகம் வரை படிக்கும் இடத்திலும், பணி செய்யும் இடத்திலும், பெண்களுக்கு இருக்கும் வசதிக் குறைவுகள், பிரச்னைகள் குறித்து எந்தத் தேர்தல் அறிக்கையிலும் நான் பார்க்கவில்லை. வேலூர் நகரில் கந்துவட்டிக் கொடுமையால் 16 பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் வீட்டுப் பெண்களுக்கு உயர்மட்டப் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு, பாதுகாப்பற்ற சாதாரணப் பெண்களின் நிலை குறித்து எந்தக் கவலையும் இல்லை.

''பெண்களின் முன்னேற்றத்தில் இவர்களுக்கு அக்கறையே இல்லை!''

இதோ... நம் அருகில் ஈழத்தில் நடந்த இனப் படு கொலையில் ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் வன்முறைக்கு ஆளாகி, இன்றைக்கும் முள் வேலி முகாம்களில் அடைபட்டு உயிர் வதையை அனுபவிக்கின்றனர். உயிர் வாழ்வதற்குரிய சூழல் கூட அங்கே இல்லை. தமிழினத்தின் மேல் உண்மையான அக்கறைகொண்ட தமிழ் மக்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் நேரடியாக எதுவும் செய்ய முடியாது. அவர்களின் பிரதிநிதியான தமிழக அரசு மூலமாகவே செய்ய முடியும். ஆனால், நடந்தது என்ன? ஈழத் தமிழர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு தமிழீழமே என்கிற கருத்தோடு தமிழக அரசு செயல்பட்டதா... செயல்படுகின்றதா? இதய சுத்தியோடு அரசு பதில் சொல்லட்டும். தமது சொந்தக் குடும்பத்தின் நலனுக்காக, அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் பெறுவதற்காக டெல்லியில் முகாமிட முடிந்தவர் களுக்கு, தனது குடும்பத்தினர் மீது சி.பி.ஐ பிடி இறுகாமல் இருக்க ஆறு மணி நேரம் காத்திருந்து, சோனியா காந்தியைச் சந்திக்கத் தெரிந்தவர்களுக்கு, இரண்டு கோடி மக்கள் தொடர்பான விஷயத்தில் அப்படி அழுத்தம் கொடுக்கத் தெரியவில்லையே!

ஓர் அரசின் கடமை என்ன? மக்களுக்கு உயர் கல்வி, சுகாதாரம் போன்றவற்றை இலவசமாக அளிக்க வேண்டும். காப்பீடு, தொழில் வளர்ச்சி போன்றவற்றுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஆனால், இங்கே என்ன நடக்கிறது? போட்டி போட்டுக்கொண்டு இரண்டு பெரிய கட்சிகளும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குகின்றன. பெண்களுக்கு இலவசமாக மிக்ஸி, கிரைண்டர் அளிக்கப்படுமாம். அதென்ன பெண்களுக்கு? குடும்பத்துக்கு என்றுகூடச் சொல்ல முடியவில்லை இவர்களால். பெண்கள் என்றாலே மிக்ஸியோடும், கிரைண்டரோடும், சமையல் அறையோடும் அவர்களுடைய வாழ்க்கை முடிந்துபோனால் போதும் என்கிற ஆணாதிக்க உணர்வுதானே இரண்டு கட்சி களின் தேர்தல் அறிக்கையிலும் வெளிப்படு கிறது? இந்தப் பணத்தில், பெண்கள் பணிபுரியக் கூடிய ஒரு தொழிற்சாலையை உருவாக்கி, அதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் உருப்படியான ஒரு திட்டத்தைக் கொண்டுவரலாமே? இவர்கள் கொடுக்கும் இலவச மிக்ஸி, கிரைண்டரைப் பெற்றுக்கொண்டு, காலம் பூராவும் பெண்கள் மாவாட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா?

தமிழ்நாட்டில் சாதிக் கொடுமை தாண்டவமாடுகிறது. தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. இரட்டைக் குவளை முறை இன்னமும் பல ஊர்களில் நடைமுறையில் இருக்கிறது. பொது சுடுகாடு, தனி சுடுகாடு என்று சாதிக்கு ஏற்றபடி வகை பிரித்து, சாவிலும் சாதி பார்க்கும் கொடூரம் நிகழ்கிறது. சமீபத்தில் பரளிப்புதூரில் வாழும் 100 தலித் குடும்பங்களின் குடிசைகளை அங்குள்ள ஆதிக்க சாதியினர் எரித்து உள்ளனர். எப்படி இந்து முன்னணியினர், இஸ்லாமியர்களை எதிரிகளாகச் சித்திரித்து இயக்கம் வளர்க்கிறார்களோ... அதுபோலவே, ஆதிக்க சாதியினரும் தலித்களைத் தங்கள் எதிரிகளாகச் சித்திரிக்கிறார்கள். இதை ஒழிப்பதற்கு, எந்த அரசியல் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் திட்டங்களைச் சொன்னது? சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள், இந்த சாதிய ஏற்றத் தாழ்வுகளை எப்படிப் போக்கு வார்கள்? மத சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்

''பெண்களின் முன்னேற்றத்தில் இவர்களுக்கு அக்கறையே இல்லை!''

கொடுக் கவும், சாதியக் கொடுமைகளுக்கு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தித் தீர்வு காண விழையும் அரசியல் கட்சிகளைப் பார்க்க முடியவில்லை. பெரியாரின் அடியற்றி, அவரது சுண்டு விரலையும் கட்டை விரலை யும் பிடித்து நடை பழகியதாகவும், பெரியாரின் பள்ளியில் பயின்றதாக வும் கூறுபவர்கள், ஒருவேளை ஆரம்பப் பள்ளி மட்டும் பெரியாரிடம் பயின்றுவிட்டு, உயர்நிலை, மேல் நிலை வகுப்புகளை வேறு பள்ளிகளில் பயின்றார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

அரசியல் கட்சிகளின் கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், நம்பிக்கை தருவதாக இல்லை. எதிர்காலத்தில் இவை திருந்தி, மக்களுக்காக எதையும் செய்யும் என்கிற நம்பிக்கையும் எனக்கு இல்லை. ஆகவே, உங்கள் ஊரில் நிற்கும் வேட்பாளர்களில் யார் நல்லவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவரைத் தேர்வு செய்து அவருக்கு வாக்களியுங்கள். மாற்றத்தின் ஆரம்பமாக நாம் இருப்போம்!''