Published:Updated:

செத்தவரைப் பிழைக்க வைக்கும் தேர்தல் வைத்தியர்கள்!

குள.சண்முகசுந்திரம்ஓவியம் : ஹரன்

 ##~##
1989
-ம் ஆண்டு... மதுரை மருத்துவக் கல்லூரி வளாகம். ஓட்டு எண்ணிக்கை பரபரப்பாக நடந்துகொண்டு இருக்கிறது. 'நான் நாலு கள்ள ஓட்டு போட்டேன் - காளிமுத்து.’ இப்படி ஒரு துண்டுச் சீட்டு ஓட்டுப் பெட்டிக்குள் கிடந்தால் எப்படி இருக்கும்? ரணகளமாகிவிட்டது கல்லூரி வளாகம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 'தி.மு.க-காரன் கள்ள ஓட்டாக் குத்தித் தள்ளிட்டான்’ என்று ரகளை செய்தார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ''அடியேய்... லீடிங் ரெண்டாயிரத்துக்கு மேல போய்ட்டு இருக்கு. நாலு ஓட்டைப்பத்திப் பேசிட்டு இருக்குற. நாலு என்ன... நாப்பது ஓட்டைக் கழிச்சிக்கோ’ என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி வெறுப்பேற்றினார்கள் உடன்பிறப்புகள்.

செத்தவரைப் பிழைக்க வைக்கும் தேர்தல் வைத்தியர்கள்!

பணம் கொடுத்தால்தான் சொந்தக் கட்சிக்கே ஓட்டு - இது இந்தக் காலம். கள்ள ஓட்டு போட்டாவது தலைவனை அரியணை ஏற்றத் துடிக்கும் கொள்கைக் கோமான்கள் வாழ்ந்தது அந்தக் காலம். வாக்குப் பதிவு இயந்திரம் வருவதற்கு முன்பு எப்படி கள்ள ஓட்டுப் போடுவார்கள் தெரியுமா? ஓட்டுக்காக, செத்தவர்களைப் பிழைக்கவைக்கும் தேர்தல் வைத்தியர்கள் ஊருக்கு 10 பேராவது இருப்பார்கள். அப்படி ஒரு வைத்தியர் சந்திரன் இதோ பேசுகிறார்...

''எலெக்ஷனுக்கு முதல் நாள் சாயங்காலமே வாக்குச் சாவடி அதிகாரிகள் பூத்துகளுக்கு வந்துரு வாங்க. அந்த நேரத்துல, அவங்களுக்குக் கூடமாட இருந்து ஒத்தாசை

பண்றாப்ல, பேச்சுக் குடுத்து நாடித் துடிப்பைத் தெரிஞ்சுப்போம். 'நாளைக்குக் காலைல டிபனும் மத்தியானம் பிரியாணியும் நாங்க பாத்துக்கிறோம். உங்களுக்கு மட்டனா, சிக்கனா?’னு பிட்டைப் போடுவோம். வீட்டுக்கு வீடு பூத் ஸ்லிப் குடுக்குறப்பவே, யாரு வெளியூர்ல இருக்கா? யார் சுடுகாட்டுக் குப் போயிட்டாங்கன்னு ரவுண்ட் பண்ணி வெச்சுக்குவோம். வாக்குப் பதிவு அன்னிக்கு செத்தவங்க ஓட்டைத்தான் முதலில் போடுவோம்.

மதியம் 3 மணிக்கு மேல எல்லாரும் லேசா அசந்துருவாங்க. அதுதான் கள்ள ஓட்டுப் போட சரியான நேரம். அந்த நேரத்துல கந்தசாமி பொண்டாட்டி காதர் பொண்டாட்டி ஆகிருவா. அப்துல்காதர் பொண்டாட்டி அன்னலட்சுமி ஆகிருவா. தெரிஞ்ச பொம்பளைகளைக் கள்ள ஓட்டுக்காக செட்-அப் பண்ணி அனுப்பிவைப்போம். சில நேரங்கள்ல நாங்க சைஸ் பண்ணி அனுப்புற ஆளை, எங்க ஏஜென்ட்களே அடையாளம் தெரியாம 'வேற கட்சி ஆளு’ன்னு தப்பா நினைச்சு அப்ஜெக்ஷன் பண்ணிருவாங்க. அதனால, ஆம்பளைன்னா கழுத்துல துண்டு, பொம்பளைன்னா ஒத்தக் கையில மட்டும் வளையல்னு ஏதாவது அடையாளத்தோடு அனுப்பிவைப்போம்'' என்கிறார்.

கள்ள ஓட்டுப் போடுவதை த்ரில்லிங்கான அனுபவமாக ரசிக்கும் ஆட்கள் ஊருக்குள் நிறையவே உண்டு. தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாகவே, விரல் மையை அழிக்க ஆயுதம் தேடிப் புறப்பட்டுவிடுவார்கள். மை வைப்பதற்கு முன் தலையில் தடவியிருக்கும் விளக்கெண்ணெயை விரலில் தேய்த்துக்கொள் வார்கள். இதனால் மை விரலில் ஒட்டாமல் துடைத்தாலே ஓடிவிடும். 'நான் இத்தனை ஓட்டுப் போட்டேன்... இன்னார் ஓட்டை எல்லாம் நான்தான் போட்டேன்’ என்று பெருமை அடித்துக்கொள்வதற்கே ஊருக்கு ஊர் ஒரு கோஷ்டி இருக்கும். இப்படித்தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகத்தின் ஓட்டுக்கே வேட்டுவைத்தார்கள்.

''எங்க ஊர்ல ஜகன்நாதன் என்பவர் அந்தக் காலத்து ஜனதா கட்சிப் பிரபலம். போடியில ஜெயலலிதா போட்டியிட்ட தேர்தலில் அவருக்காக முழு மூச்சாய் தேர்தல் வேலை பார்த்தார். எலெக்ஷன் அன்னிக்கு காலையில வேஷ்டியை மடிச்சிக் கட்டிக்கிட்டு, முதல் ஆளா ஓட்டுப் போட வந்தாரு. ஆனா, அதுக்கு முந்தியே அவரோட ஓட்டைப் போட்டுட்டாங்க. வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சாரு. எதுவும் நடக்கலைன்னதும் மண்ணை வாரித் தூத்தாத குறையாத் திட்டிட்டுப் போனாரு. இதை எல்லாம் கூட்டத்தோட கூட்டமா நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்த எங்க கட்சியைச் சேர்ந்த லட்சுமணன், ''மாப்ள... நம்ம ஓட்டைப் போடுறமோ இல்லையோ... இந்தாளோட ஓட்டைப் போட்டே தீரணும்னு ஒரு வருஷமா பிளான் பண்ணேன்ல’னு மெதுவா சொன்னாரு'' - போடியைச் சேர்ந்த கதர் புள்ளி முருகானந்தம் இப்படிச் சொல்லிச் சிரிக்கிறார்.  

மாலை 4 மணிக்கு மேல் ஆகிவிட்டால் வாக்குச் சாவடிகளில் இருக்கும் பூத் ஏஜென்ட்டுகள், 'இருக்குறதுல ஆளுக்குப் பாதி’ என்ற பாலிசிக்கு வந்துவிடுவார்கள். அது என்ன ஆளுக்குப் பாதி? திருச்சியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். விசுவாசி பிரமன் சொல்கிறார், ''இதுக்கு மேல ஓட்டுப் போட ஆள் வராதுன்னு தெரிஞ்சதும், ஆளுக்கு இத்தனை ஓட்டை மடக்கிக்குவோம்னு தி.மு.க-காரங்களும்

செத்தவரைப் பிழைக்க வைக்கும் தேர்தல் வைத்தியர்கள்!

நாங்களும் ஒரு அக்ரிமென்ட் போட்டுக்குவோம். இதுக்கு அங்க இருக்கிற அதிகாரிகளும் உடந்தை. ஆனா, அதுலயும் தி.மு.க-காரங்க கள்ளம் பாஞ்சிருவாங்க. ஆளுக்கு பத்து ஓட்டுன்னு பேசிக்கிட்டு, முதலில் அவங்க பத்து ஓட்டைப் புகுத்திருவாங்க. அடுத்ததா, எங்காளுங்க போடுறப்ப எட்டாவது ஓட்டுலயே, 'கள்ள ஓட்டு’ன்னு சொல்லி ஆட்டையக் கலைச் சிருவானுங்க. எமகாதகப் பயலுக'' என்கிறார்.

அடையாள அட்டை வந்துவிட்டதால் கள்ள ஓட்டு கலாசாரம் நிறையக் குறைந்துவிட்டது. இப்போது சில இடங்களில் எதிர்க் கட்சி ஆட்களையும், தேர்தல் அலுவலர்களையும் விலைக்கு வாங்கி, எலெக்ஷன் பூத்தையே அலேக் பண்ணுகிறார்கள். எல்லோரையும் பணம் கொடுத்து சரிக்கட்டி, மாலை 4 மணிக்கு மேல் வராத வாக்காளர்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக ஒரே கட்சிக்குப் போட்டுவிடுவார்கள். இதற்கு 'பூத் கேப்ச்சரிங்’(தீஷீஷீtலீ நீணீஜீtuக்ஷீவீஸீரீ) என்று பெயர். அத்தனை கட்சிக்காரர்களையும் சரிக்கட்ட முடிந்தால் மட்டுமே இது சாத்தியம். அதற்குப் பதிலாகத்தான் 'திருமங்கலம் ஃபார்முலா’ திகில் பரப்புகிறதே!