Published:Updated:

இந்தியாவுக்கு விசில் போடு!

சார்லஸ், படங்கள் : சு.குமரேசன்

##~##
ட்டு வருடங்களுக்கு முன்பு கோரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக இருந்த மஹேந்திர சிங் டோனியின் கையில் இப்போது உலகக் கோப்பை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 100 கோடிக்கும் மேலான இந்திய கிரிக்கெட் ரசிகர் களின் கனவை நனவாக்கிய தருணத்தில், டோனியின் முகத்தில் அத்தனை தெளிவு, பிரகாசம். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்குக் காரணமாக இருந்த விஷயங்கள் என்ன? இதோ ஆறு அசத்தல் காரணங்கள்...

டோனியின் தலைமை!

இந்தியாவுக்கு விசில் போடு!

''டோனி ஒரு அசட்டுத் துணிச்சல்காரர். வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் சர்ச்சைக்கு உரிய முடிவுகளை எடுத்துவிட்டு, அதை வெற்றிகரமாக மாற்றக் கடும் முயற்சி எடுப்பவர்''-பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி யில் அஷ்வினுக்குப் பதிலாக நெஹ்ரா சேர்க்கப்பட்டது குறித்து கபில்தேவ் சொன்னது இது. கபில் சொன்ன மாதிரியே இறுதிப் போட்டியில் அஷ்வினுக்குப் பதில் ஸ்ரீசாந்த்தைச் சேர்த்தது, ஃபார்மில் இருக்கும் யுவராஜை முந்திக்கொண்டு களம் இறங்கியது என ஃபைனலிலும் சர்ச்சைக்குரிய முடிவுகள் எடுத்தார். ஆனால், எடுத்த முடிவுகள் தவறாக முடிந்துவிடக் கூடாது என்று அவர் காட்டிய துணிச்சலும் திறமையான ஆட்டமும் டோனி சிறந்த கேப்டன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தது. வெற்றி பெறப்போகிறோம் என்கிற தருணத்தில்கூட, எந்த ரியாக்ஷனையும் காட்டாமல் அமைதியாக இருந்தது அவரது பக்குவத்தைக் காட்டியது. வெற்றி பெற்றதும் சச்சினை முன்னால் செல்லவிட்டு, அமைதியாகப் பின்னால் சென்றது அவரது முதிர்ச்சியைக் காட்டியது!

சச்சின் டெண்டுல்கரின் அனுபவம்!

ச்சின் கலந்துகொண்டு விளையாடிய ஆறாவது உலகக் கோப்பைப் போட்டி இது. ''100-வது சதம், மூன்றா வது முறையாக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு'' என்று பல சாதனைகள் ஒவ்வொரு போட்டியின்போதும் சச்சினைத் துரத்திக்கொண்டு இருந்தன. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும், தனக்காக விளையா டாமல் அணிக்காக விளையாடினார் சச்சின். ''தனிப்பட்ட சாதனைகளைவிட, இந்தியா வெற்றிபெறுவதுதான் எனக்குச் சந்தோஷம். வெற்றி அணியில் இருக்கத்தான் நான் விரும்புகிறேன்'' என்றார் சச்சின். 18 ஆயிரம் ரன்களைத் திரட்டிய ரன் மெஷினுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது உலகக் கோப்பை. அதை சச்சினுக்காகவே விளையாடி வாங்கித் தந்திருக்கிறார்கள் இளம் வீரர்கள்!

டீம் ஸ்பிரிட்!

ந்தியா வெற்றி பெற முக்கியக் காரணம்... டீம் ஸ்பிரிட். முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத் எனத் திறமையான வீரர்கள், கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்தனர். ஆனால், டீம் ஸ்பிரிட் என்பது இவர்களது காலங்களில் எப்படி இருந்தது என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் அறிவார்கள். டோனி கேப்டனாகப் பொறுப்பு ஏற்கும்போது, யுவராஜ் சிங் அவருக்கு சீனியர். சச்சின்  அணியில் இருக்கிறார். ஆனால், எந்தவிதமான பாரபட்சமும் காட்டாமல், சீனியர் வீரர் களுக்கு மதிப்பு அளித்து, ஜூனியர் வீரர் களையும் அரவணைத்து, அணிக்குள் ஒற்று மையை வளர்த்தார் டோனி. போட்டிகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும்போது டீம் டூர் போவது, அவ்வப்போது பார்ட்டி வைப்பது என டீம் மெம்பர்களை ஒருங்கிணைத்தார் டோனி. போட்டியின்போது ஒவ்வொரு பந்துக்கும் முனாஃப் பட்டேலுக்கு ஓடோடி வந்து அறிவுரைகள் சொல்லிக்கொண்டே இருந்தார் ஜாகீர்கான். விராட் கோலிக்கு எப்படி ஆட வேண்டும் என்று களத்தில் நின்றே வழிகாட்டிக்கொண்டே இருந்தார் சச்சின். இந்த டீம் ஸ்பிரிட்தான் உலகக் கோப்பையை வென்று கொடுத்தது!

இந்தியாவுக்கு விசில் போடு!

இளம் வீரர்களின் ஆதிக்கம்!

லகக் கோப்பை தொடங்குவதற்குமுன்பு வரை யுவராஜ் சிங் ஃபார்மிலேயே இல்லை. யுவராஜுக்குப் பதில் யூசுப் பதானையும், சுரேஷ் ரெய்னாவையும் விளையாடவைக்கலாம் என்பதுதான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், உலகக் கோப்பை ஆரம்பித்ததும் யுவராஜ் சிங்கின் ஆட்டம் உச்சத்தைத் தொட்டது. நான்கு அரை சதம், ஒரு சதம், ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தது இரண்டு முக்கிய விக்கெட்டுகள் என இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார் யுவராஜ் சிங். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் சுரேஷ் ரெய்னா வெளிப்படுத்திய பொறுப்பான ஆட்டம்தான், இரண்டு கண்டங்களில் இருந்தும் இந்தியா தப்பிக்க உதவியது. தனக்கு விளையாடக் கிடைத்த இரண்டு ஆட்டங்களிலும் திறமையான பௌலிங்கை வெளிப்படுத்தினார் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின். சச்சின், 1989-ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த வருடத்தில்தான் இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோலி பிறந்தார். ''21 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டைத் தூக்கிச் சுமந்துகொண்டு இருக்கிறார் சச்சின். அவரை நாங்கள் இன்று தூக்கிச் சுமப்பது என்பது பெரிய விஷயமா என்ன?''- உலகக் கோப்பையை வென்றவுடன் யோசிக்காமல் பேசிய விராட் கோலி யின் வார்த்தைகளில் தெரிந்தது அவரது கிரிக்கெட் காதல்!

கடுமையான பயிற்சி!

கேரி கிரிஸ்டனின் பலமே, இந்திய வீரர்களை முழுவதுமாகப் புரிந்துகொண்டதுதான். உடல் பயிற்சியைவிட, பேட்டிங் பயிற்சியில்தான் இந்திய வீரர்கள் அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார் கிரிஸ்டன். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங் பயிற்சியோடு ஃபிட்னெஸ் பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் சேவாக், கம்பீர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் 'ஃபிட்னெஸ் டிரெயினிங் நேரத்தில் ஒரு பகுதியை நாங்கள் பேட்டிங் பயிற்சிக்குச் செலவிடுகிறோம். அப்போது தான் எங்களால் சிறப்பாக விளையாட முடியும்!’ என்று சொன்னதை ஏற்றுகொண்டார் கிரிஸ்டன். ஒன்று, இரண்டு ரன்களை ஓடி ஓடி எடுப்பதைவிட 4, 6 அடிப்பது சூப்பர்தானே? அதே சமயம், ஃபீல்டிங்கில் சொதப்பிய வீரர்களுக்கு மத்தியில், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, விராட் கோலிக்குச் சிறப்பான ஃபீல்டிங் பயிற்சி கொடுத்து அவர்களை இன்னும் மெருகேற்றினார் கிரிஸ்டன்!

ஜாகீர் கானின் எழுச்சி!

இந்தியாவுக்கு விசில் போடு!

பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜாகீர்கான் தான் சூப்பர் ஸ்டார். இந்தியாவின் பௌலிங் அட்டாக்கை ஒன் மேன் ஆர்மியாக நின்று தோளில் சுமந்தவர் ஜாகீர்கான். 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்து, உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். முதல் ஐந்து ஓவர்களில் மூன்று ஓவர்கள் ரன் ஏதும் கொடுக்காமல் பந்து வீசியதோடு, உபுல் தரங்காவின் விக்கெட்டையும் வீழ்த்தி இலங்கையைக் கட்டுப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தார் ஜாகீர்கான்!

1999 உலகக் கோப்பைக்குப் பிறகு, கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் அசைக்க முடியாத அணியாக உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்தது ஆஸ்திரேலியா. இப்போது ஆஸ்திரேலியாவுக்குப் பதில் இந்தியா அந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. 'இனி எப்போதுமே இந்தியாதான் நம்பர் ஒன் அணியாக இருக்க வேண்டும்!’ என்பதுதான் இந்திய கிரிக்கெட் ரசிகனின் ஆசை. டோனி தலைமையிலான அசத்தல் அணிக்கு அதைச் சாதிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது!