Published:Updated:

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா
##~##
''ஏ
ய்யா பன்னீர்! நீ ஆரம்பிச்சிருக்கிற காலேஜை கட்சிக்கு எழுதிவெச்சிடுறியா?'' என்று கேபினெட்டில் வைத்துக் கேட்டார் முதல்வர் கருணாநிதி. யாரைப் பார்த்தாலும் 'வாடா போடா’ போட்டுப் பேசும் பழைய நிலச் சுவான்தார்போல கடலூர் மாவட்டத் தில்கட்சியை நடத்தி வரும் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வெலவெலத்துப் போனார்!

இன்று, காட்டுமன்னார் கோயிலில் இருந்து கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையில் போனால், எழுந்து நிற்கும் கல்வி வளாகங்கள் எல்லாம் பன்னீர்செல்வத்தின் வளர்ச்சியைச் சொல்கின்றன. அநேகமாக, அங்கு ஒரு மருத்துவக் கல்லூரி மட்டும் வந்துவிட்டால், வேந்தர் ஆகிவிடக் கூடிய தகுதியுடன் வலம் வருகிறார். ஆனால், இவரின் கடந்த காலம்?

எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தியை ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்து பழைய கட்சிக் காரர்களுக்கு நன்கு தெரியும். திராவிடர் கழ கத்தில் இருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த நாள் முதல்... விசுவாசமான கட்சிக்காரர். அவரது மகன்தான் இந்த பன்னீர்செல்வம்.

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

வன்னியர் - தலித் மோதல் அதிகமாக இருந்த பகுதி அது. தலித் இன மக்களுக்காக எல்.இளையபெருமாள் இருக்க... வன்னியர்களுக்காக அதிகமாக வாதாடி வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. ஆனாலும், சாதி மற்றும் கட்சி அரசியல் தன் மகனை அண்டிவிடக் கூடாது என்பதற்காக, அருகில் உள்ள கல்லூரிகளில் சேர்க்காமல் தஞ்சையில் உள்ள பூண்டி புஷ்பம் கல்லூரியில் சேர்த்தார். பட்டப்படிப்பு படித்து வந்த பன்னீர்செல்வத்தை அதன் பிறகும் ஊரில் இருக்கவிடாமல் சென்னைக்கு அனுப்பி சட்டம் படிக்கவைத்தார். அதையும் முடித்து வீட்டுக்கு வந்தார் பன்னீர்.

வன்னியர் சங்கத்தை உருவாக்கி டாக்டர் ராமதாஸ், வட தமிழ்நாட்டை முழுமையாகத் தனதாக்கிக்கொள்ள முயன்ற காலகட்டம் தொடங்குகிறது. 'தேர்தல் பாதை... திருடர் பாதை’ என்ற மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியின் கொள்கையை ராமதாஸ் சொல்லி வந்த காலம் அது. 'ஓட்டு கேட்க வருபவர்கள் உள்ளே வர வேண்டாம்’ என்று எல்லாக் கிராமத்து நுழைவாயிலிலும் ராமதாஸ் எழுதிவைக்கச் சொல்ல... அதை அனைத்துக் கிராமங்களும் ஊர்க் கட்டுப்பாட்டைப்போலக் கேட்டன. தி.மு.க-வில் அங்கம் வகித்த கிருஷ்ணமூர்த்திக்கு இது கோபத்தைக் கிளப்ப, 'ஓட்டு போடாதவர் கள் யாரும் உள்ளே வர வேண்டாம்’ என்று தன்னுடைய வீட்டு வாசலில் எழுதிவைத்தார். இது மற்ற வன்னியர்களுக்கு வருத்தம் ஏற்படுத் தியதோ இல்லையோ, மகன் பன்னீருக்குக் கோபத்தைக் கிளப்பியது. வன்னியர் சங்கத்துக்கு ஆதரவாக, 'யாரும் எந்தக் கட்சிக்கும் வாக்குஅளிக்கக் கூடாது’ என்ற பிரசாரத்தில் இறங்கினார். இதனால் அப்பா - மகன் மோதல்கூட ஏற்பட்டு, பன்னீர்செல்வம் வீட்டைவிட்டு வெளியே வந்து சிதம்பரத்தில் வக்கீல்

தொழிலைப் பார்க்க ஆரம்பித்தார். அதன் பிறகு இவருக்கே கட்சி ஆசை ஏற்பட, தி.மு.க -வுக்குள் வந்து சேர்ந்தார்.

காட்டுமன்னார்கோயில் இளைஞர் அணி அமைப்பாளர் ஆனார். அப்பாவின் திடீர் மறைவை ஒட்டிக் கூடிய கூட்டத்தைப் பார்த்த பன்னீர், அப்பா வழியில் தீவிர அரசிய லில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

மாவட்டச் செயலாளர் தேர்தலில் வைகோ ஆதரவுடன் வென்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் வைகோ கட்சியைவிட்டுப் பிரிய நேர்ந்தபோது, பன்னீர்செல்வமும் சேர்ந்து போய்விடுவார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், பன்னீர் போகவில்லை. ஸ்டாலின் ஆதரவு மனோபாவம் லேசாகத் துளிர்த்தது. 96 தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் வென்ற தால், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக ஆனார். 2001-ல் வென்றாலும் எதிர்க் கட்சியின் எம்.எல்.ஏ-வாக உட்கார வேண்டிய நிலை. 2006-ல் மீண்டும் குறிஞ்சிப் பாடியில் ஜெயித்தார். இப்போதும் அதே பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைதான் கிடைத்தது. 'இதைவெச்சு என்ன பண்றது?’ என்ற வருத்தத் தில் இருந்தார். பெரும்பாலும் கொள்கை விவா தங்கள் நடத்தலாம்... அல்லது சைக்கிள், கல்வி உதவித்தொகை தரலாம்... என்பதைத் தாண்டி எதுவும் இல்லை என்பதை உணர்ந்து அமைதி யாகவே இருந்தார்.

மதுரையில் நடந்த இடைத் தேர்தல் பிரசா ரத்துக்காக அங்கேயே சில நாட்கள் தங்கியாக வேண்டிய சூழல். அப்போது அழகிரிக்கு நெருக் கமான வட்டாரத்தில் ஒருவராக மாறினார். 'நீங்க எவ்வளவுதான் விசுவாசமாக இருந்தாலும், பொன்முடியைத் தாண்டி ஸ்டாலினிடம் நெருக் கமாகப் போக முடியாது’ என்று தூபம் போடப்பட்டது. வன்னியர் பெரும்பான்மை உள்ள மாவட்டங்களில் பொன்முடியும் எ.வ.வேலுவும் செயலாளர்களாக மாறினது இவருக்குக் கோபத்தை அதிகப்படுத்தியது. அழகிரியின் கிச்சன் கேபினெட் மனிதர்கள், இவரது அறைக்கு அடிக்கடி வர ஆரம்பித்தார்கள்.

இந்தச் சமயத்தில்தான், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் பதவியைப் பறிக்கக் குழி வெட்டப்பட்டு இருந்தது. 'ரயில் கூபே சந்திப்பு’ பொறியில் அவர் சிக்கினார். சாத்தூராரைக் காப்பாற்ற ஸ்டாலின் எடுத்த முயற்சிகள் வீணாகின. அப் படியானால், சுரேஷ்ராஜனுக்கு சுகாதாரத்தைக் கொடுங்கள் என்று ஸ்டாலின் சொல்லிப் பார்த்தார். அழகிரி படை வேலை செய்து, பன்னீர்செல்வத்துக்கு தரச் சொன்னது. எம்.பி. ஆகவோ, மத்திய மந்திரியாகவோ ஆகாத அழகிரியைத் திருப்திப்படுத்த, பன்னீர்செல்வம் சுகாதாரத் துறை அமைச்சர் ஆக்கப்பட்டார். இந்த ஃபேக்ஸ், கவர்னர் மாளிகையில் வந்த அடுத்த நிமிஷமே, மதுரை விமானத்தில் ஏறிய பன்னீர், அழகிரி முன்னால் விழுந்தார். அதற்குப் பிறகுதான், இவர் தம்பி அணியில் இருந்து அண்ணன் பக்கம் தாவியதே பலருக்குத் தெரிய வந்தது.

சும்மா இருப்பாரா ஸ்டாலின்? அடுத்து நடந்த மாவட்டச் செயலாளர் தேர்தலில் பன்னீரைத் தோற்கடிக்க சிதம்பரம் சரவணனைக் கொம்பு சீவிவிட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மா.செ-க்கள் பஞ்சாயத்து பண்ணி அன்னபோஸ்ட்டாக ஜெயிக்க, கடலூரில் மட்டும் தேர்தல் நடந்தது. சரவணனுக்கு ஓட்டுகள் இல்லாததால், தோற்றார். பன்னீர் வென்றார்.

தான் என்பதும் தன்னைச் சுற்றியே கட்சி இருக்க வேண்டும் என்று நினைப்பதும் இவ ரது தனிக் குணமாக இருப்பதாக கட்சிக் காரர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தன்னு டைய உறவினர் வட்டாரத்துக்கு மட்டுமே உரிமைகளைக் கொடுத்துவைத்து இருப்ப தால், மற்றவர்கள் மனம் கோணுகிறார்கள். சிதம்பரம் நகர் மன்றத் துணைத் தலைவராக இருக்கும் மங்கையர்க்கரசி, பன்னீர்செல்வத் தின் அக்கா. மங்கையர்க்கரசியின் மகன் செந்தில், சிதம்பரம் நகரத் தி.மு.க. செய லாளர். அவரே கீரப்பாளையம் ஒன்றியப் பெருந்தலைவராகவும் இருக்கிறார். சிதம் பரம், புவனகிரி தொகுதி இரண்டும் இவரது கட்டுப்பாட்டில் கொடுத்துவிட்டார். விருத் தாசலம், மங்களூரைத் தனது உறவினரான ஸ்ரீமுஷ்ணம் தங்க ஆனந்தனுக்குத் தாரை வார்த்தார். கடலூரைக் கவனித்துக்கொள் வது நெருங்கிய உறவினரான சிவக்குமார். இவர்தான் குறிஞ்சிப்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர். பன்னீரின் தங்கை கணவர் லிங்குராஜன், மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர். இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் ஃபேமிலி ட்ரீ.

கட்சிக்காக உழைத்த நெய்வேலி ராமகிருஷ் ணன், மருதூர் ராமலிங்கம், குழந்தை தமிழரசன் ஆகியோர் ஒதுக்கப்பட்டுவிட்டார்கள். நல்லூர் பொன்.ஜெயகணபதி கட்சியைவிட்டே போய் விட்டார். மூச்சைப் பிடித்துக்கொண்டு தவிக் கிறார்கள் நெல்லிக்குப்பம் சபா ராஜேந்திரன், கடலூர் ஐயப்பன், சிதம்பரம் சரவணன் ஆகிய மூவரும். சொந்தக் கட்சிக்காரர்களுக்கு எதிரா கவே போராடித் தீரவேண்டி இருப்பதால், அ.தி.மு.க-வை எதிர்க்க பன்னீருக்கு நேரம் ஒதுக்க முடியவில்லையாம்!

தந்தை கிருஷ்ணமூர்த்தி முதலில் வாங்கிய 1333 எண் கொண்ட அம்பாசிடர் கார்தான் முதல் சொத்து. இன்று ரகத்துக்கு ஒரு கார் இருந்தாலும், அதன் எண்களும் இதுவாக இருக்குமாறு பார்த்துக்கொண்டார். காட்டுமன்னார் கோயிலில் கேபிள் போட்டது முதல் பிசினஸ். அதை மாவட்டம் முழுமைக்குமாகப் பரப்பி, ஆக்கிரமிப்பு. தாயார் சந்திரவதனம் பெயரில் ஜவுளிக் கடை ஆரம்பித்தார். அடுத்து, வடலூரில் டிஜிட்டல் அச்சகம் ஆரம்பமானது. அது தற்போது இல்லை. கலை ஆர்வம் உண்டு என்பதால் சினிமாவுக்குள் இறங்கினார். புது முகங்களை வைத்து வள்ளுவன் - வாசுகி என்ற படத்தை எடுத்தார். இதில் நட்புக்காக தேவ யானி கெஸ்ட் ரோல் பண்ணிக் கொடுத்தார். படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. அதன் பிறகு, சினிமா தயாரிப்பை நிறுத்தினார். எம்.ஆர்.கே. இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னா லஜியை மகன் கதிரவன் பார்த்துக்கொள்கிறார். பன்னீர் கலந்துகொள்ள முடியாத விழாக்களுக்கு கதிரவன் தலைகாட்டுகிறார். கதிரவனின் பிறந்த நாளை கடலூர் கட்சிக்காரர்கள் சிறப் பாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இத்தனைக்கும் பிறகுதான், அவரது சுகாதாரத் துறையைப்பற்றிச் சொல்லியாக வேண்டும். விழாக்களில் பங்கேற்பதும், மருந்து கம்பெனிகளுக்கு டெண்டர் விடுவதும், புதிய கட்டடங்கள் கட்டித் திறப்பதும், டிரான்ஸ்ஃபர் போடுவதும், பதவி உயர்வுகள் கொடுப்பதும் மட்டுமே அமைச்சர் இப்போது பார்க்கும் வேலைகளாக இருக்கின்றன. ஆனால், ஓர் ஆரோக்கியமான நாட்டை உருவாக்குவதற்கான சுகாதாரக் கொள்கையை உருவாக்கி, சின்ன மாறுதல் களைக்கூட அமைச்சர் இதுவரை தொடங்கவில்லை. இன்னமும் அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவமனைகள், டாக்டர்கள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறைய உண்டு. ஒரு மத்திய தர வர்க்கத்து மனிதன், தனது 20 ஆண்டு சேமிப்புப் பணத்தை ஒரு ஆபரேஷனுக்குத் தந்தாக வேண்டிய அளவுக்கு தனியார் மருத்துவ மனைகள் பகல் கொள்ளை அடிப்பது அதிகமாகி இருக்கிறது.

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

போலி மருந்துகள் தயாரிப்பதற்கே தனிக் கம்பெனிகள் இருந்ததும், பல மருந்துக் கடை களில் போலி மருந்துகளும் காலாவதி மருந்து களும் தைரியமாக விற்பனை ஆனதும் கடந்த ஆண்டுகளில்தான் அதிகமானது. இவை அனைத்தும் ஒருநாள் ரெய்டுகளாக மட்டுமே முடிந்தன. இந்த வாரம் ரெய்டு அடித்தாலும், அதே அளவை அள்ள முடியும். ஆனால், ரெய்டு போவதற்கான அதிகாரிகளே இல்லை என்பதுதான் முதல் கோணல்.

எந்தத் தகுதியின் அடிப்படையில் பன்னீருக்கு இந்தத் துறை தரப்பட்டது என்றே முதலில் தெரியவில்லை. ஒரு வேளை, மகள்கள் இருவரும் மருத்துவம் படிக்கிறார்கள் என்பதாலா? சுகாதாரம், மருத்துவம் தொடர்பான தனி ஆர்வமும், அதன் ஆழ அகல மும் தெரிந்தவர்களே இந்தத் துறை யைக் கவனித்துக்கொள்ளத் திணறு வார்கள். பன்னீர்செல்வம் அதிகமா கவே திணறுகிறார். பிரச்னைகளை டெக்னிக்கலாக விளக்குவதற்குள் அதிகாரிகள் தண்ணீர் குடித்தாக வேண்டி இருக்கிறது என்பது பன்னீ ரின் தவறு அல்ல; அதை அவருக்குக் கொடுத்த தலைவரின் தவறு!

ஒவியம் : ஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு