Published:Updated:

'ஸாங்'கே முழங்கு!

ம.கா.செந்தில்குமார்படங்கள் : உசேன்

'ஸாங்'கே முழங்கு!

ம.கா.செந்தில்குமார்படங்கள் : உசேன்

Published:Updated:
##~##
ளம் தலைமுறை பின்னணிப் பாடகர்களின் இனிப்புச் சந்திப்பு இது! 'ஜிங் ஜிக்கா’, 'கன்னித் தீவுப் பொண்ணா’, 'வாடா வாடா பையா’, 'காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே’ என சமீபமாக ஹிட் அடித்த பாடல்களுக்கு எனர்ஜி சேர்த்த இளமைத் திறமைசாலிகளை நுங்கம்பாக்கம் 'ஃபோர் ஃப்ரேம்ஸ்’ ப்ரிவியூ திரையரங்கில் சங்கமிக்கவைத்தோம். எம்.எல்.ஆர்.கார்த்திகேயன், செந்தில் தாஸ், பாக்யராஜ், ஷாம், சோலார் சாய் என ஐந்து பாடகர்கள். சுர்முகி, ப்ரியா ஹேமேஷ், பிரியதர்ஷினி, அனிதா, ரனீனா ரெட்டி ஆகிய ஐந்து பாடகிகள் எனக் கச்சேரி களை கட்டியது!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஸாங்'கே முழங்கு!

''ஹாய் வணக்கம்... நான் உங்கள் பின்னணிப் பாடகர் எம்.எல்.ஆர்.கார்த்திகேயன். 'கச்சேரி ஆரம்பம்’ படத்துல 'வாடா வாடா பையா... என் வாசல் வந்து போய்யா’தான் எனக்கு பிரேக் கொடுத்த பாடல். வாய்ப்பு அளித்த இமான் சாருக்கு நன்றி!'' என்று எஃப்.எம். விளம்பரம்போல படபடக்கத் தொடங்கிய கார்த்திகேயனை 'ஹோ’வென அலறி இடைமறித்தனர். ''ஏன் கார்த்தி உனக்கு இந்த செல்ஃப் பப்ளிக்குட்டி. கேஷ§வலாப் பேசு. இல்லேன்னா, குரல்வளையைக் கடிச் சுடுவேன்!'' என்று அதட்டிய அனிதா வுக்கு, '' 'ஏ ஏய்... வா புள்ள... நான் ஒன் மாப்புள்ள’ என்ற தன் 'தம்பிக் கோட்டை’ சரக்கால் கவுன்ட்டர் கொடுத்தார் கார்த்தி.

''என்னோட லேட்டஸ்ட் ஹிட் 'யுத்தம் செய்’ படத்தின் 'கன்னித் தீவுப் பொண்ணா’ பாட்டு. 'சராசரி ஆள் பாடுற மாதிரி ஃபோல்க் ஃப்ளேவர்ல ராவா வேணும்’னு என்னை டியூன் பண்ணி வாங்கி, அந்தப் பாட்டை ஹிட் ஆக்கின மிஷ்கின் சாருக்கு நன்றி!'' என்று கார்த்தி நிறுத்த, தொடர் கிறார் பிரியதர்ஷினி.

'ஸாங்'கே முழங்கு!

''13 வருஷமா லைட் மியூஸிக் பாடிட்டு இருக்கேன். சினிமாவில் 7 வருஷம் முன்னாடி ஸ்ரீகாந்த் தேவா என்னை அறிமுகப்படுத்தினார். எனக்கு மாஸ்டர் ஹிட்னா, 'வேர் இஸ் த பார்ட்டி’ பாட்டுதான். இப்போ 'சிங்கம்’ - 'காதல் வந்தாலே’, 'சிறுத்தை’-'அழகா பொறந்துபுட்ட ஆறடி சந்தனக் கட்டை’னு எல்லாப் பாட்டுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். ராஜா சார் மியூஸிக்ல பாடணும்கிற லட்சியமும் 'ஜகன்மோகினி’, 'ஃபா’ இந்திப் படம் மூலம் நிறைவேறிருச்சு. ரொம்பத் திருப்தியா இருக்கேன். கார்த்தி உங்களை ராஜா சார் பாராட்டியதைத் திரும்பவும் ஷேர் பண்ணிக்கலாம்ல!'' என்று பிரியதர்ஷினி லீட் எடுத்துக் கொடுக்க, உற்சாகமானார் கார்த்திகேயன்.

''பாடி முடிச்சதும் சின்னதா சிரிச்சுட்டு நகர்ந்துடுவார் ராஜா சார். 'நல்லா இருக்கு’ன்னு சொல்றாரா, 'பரவா இல்லை ரகமா’ன்னு கணிக்க முடியாமக் குழப்பமா இருக்கும். மறுநாள், சாரோட சிங்கர் கண்டக்டர் வாசு, 'சார், உன் பாட்டைக் கேட்டுட்டு, 'இந்தப் பையன் யாரு? ரொம்ப நல்லாப் பாடுறான். மனோவுக்குக் கொடுத்த மாதிரி, இந்தப் பையனுக்கும் நிறைய வாய்ப்புகள் கொடுப் பேன்னு அவன்கிட்ட சொல்லு’ன்னு சொன்னாராம். கேட்டதுல மனசுக்குள்ள எனக்கு நானே 'லாலல்லா’ பாடிட்டு இருக்கேன்!'' என்று கார்த்தி நெகிழ... கை தட்டிப் பாராட்டு தெரிவிக்கிறார்கள் மற்றவர்கள்.

''சின்ன வயசுலயே கர்னாடிக் கத்துக்கிட்டு நிறைய ஆர்கெஸ்ட்ராக்களில் பாடிட்டு இருந்த எனக்கு, விஜய் டி.வி. 'சூப்பர் சிங்கர் ஷோ’தான் பெரிய பிளாட்ஃபார்ம் அமைச்சது. அந்த அறிமுகத்தில் 'மருதமலை’ படத்தின் 'மருதமலை மாமணியே முருகைய்யா’ பாட்டுக்கு டிராக் பாடினேன். ஆனா, அதுவே ஃபைனல் ஆகிடுச்சு. இப்போ 'கச்சேரி ஆரம்பம்’ படத்தின் 'வாடா வாடா பையா’ பாட்டு நல்ல பிரேக். ராஜா சார் மியூஸிக்லயே 10 பாடல்களுக்கு மேல பாடிட்டேன். தெலுங்குல தேவிஸ்ரீ பிரசாத் சார் உட்பட, எல்லா இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடி இருக்கேன். இது போக, 100 ஜிங்கிள் ஸுக்கு மேல பாடியாச்சு. இப்போ ஹிந்துஸ்தானி கத்துட்டு இருக்கேன். இவ்வளவுதான் என் ஹிஸ்டரி'' என்று சுருக்க வரலாறு உரைக்கிறார் அனிதா.  

'ஸாங்'கே முழங்கு!

''இப்போ நானு... நானு!'' என்று முந்தி வருகிறார் செந்தில் தாஸ். ''புதுக்கோட்டை பக்கத்துல நெடுவாசல்னு ஒரு கிராமம் எனக்கு. ஸ்கூல் பாட்டுப் போட்டிகளில் பாடிப் பரிசுகளைத் தட்டிட்டு அப்படியே லைட் மியூஸிக் பாடிட்டு இருந்தேன். சென்னையில் 'ரிதஸ்வரம்’னு ஒரு  ட்ரூப்பில்  இருந்தப்ப, 'நீ புரொஃபஷ னலாப் பாடணும்னு ஆசைப்பட்டா, மியூஸிக் கத்துக்கணும்’னு சொன் னாங்க. சென்னை தமிழிசைக் கல்லூரியில் சேர்ந்து, பாரம்பரிய சங்கீதம் கத்துக்கிட்டேன். எம்.ஏ., மியூஸிக் முடிச்சதும் அங்கேயே லெக்சரர் வேலை கிடைச்சது. ஆனா, அங்கே வேலை பார்த்துட்டே லைட் மியூஸிக் பாடக் கூடாதுன்னு கெடுபிடி காட்டியதால், வேலையை விட்டுட்டு சினிமா வாய்ப்பு தேடினேன். ஸ்ரீகாந்த் தேவா எனக்கு ஓப்பனிங் கொடுத்தார். 'தெனாவட்டு’ படத்தில் 'உசிலம்பட்டி சந்தையில’ முதல் பிரேக். 'நாடோடிகள்’- 'யக்கா யக்கா’ ஹிட் பிரேக். துபாய் நிகழ்ச்சியில் ராஜா சார் என்னை மேடைக்கு அழைத்து, சோலோ ஸாங் பாடச் சொன்னதும், 'கோரிப்பாளையம்’ பட 'ஆப்பக்காரி’ பாட்டுக்காக ரஹ்மான் சார் கையால் விருது வாங்கியதும் என் வாழ்நாள் பெருமை!'' என்று பூரிக்கும் செந்தில் தாஸ், ''அடுத்து, என் தங்கக் கட்டி ஷாம் தன் வரலாறு சொல்வார்!'' என்று வழிவிடுகிறார்.  

'ஸாங்'கே முழங்கு!

''நான் ஷாம் பி. கீர்த்தன். லைட் மியூஸிக் ஆர்வம் காரணமா, நியூ காலேஜ்ல படிக்கும் போதே ஏகப்பட்ட பரிசுகள் ஜெயிச்சேன். 'காதல் கடிதம்’னு ஒரு படத்தில் முதல் வாய்ப்பு. 'ராஜாதி ராஜா’, 'நியூட்டனின் மூன்றாம் விதி’, 'கோரிப்பாளையம்’னு அடுத்தடுத்து நிறையப் பாடிட்டு 'சுட்ட பழம்’னு ஒரு படத்துக்கு இசை அமைச்சுஇருக்கேன். ஹாரிஸ் ஜெயராஜ் சார்கிட்ட கடந்த எட்டு வருஷமா ஹார்மனி பண்ணிட்டு இருக்கேன். இசை ஆர்வம் உள்ளவர்களுக்கு அறிமுக வெளிச்சம் கொடுக்க என்னால் முடிந்த வரை உதவி பண்ணுவேன்!'' எனும் ஷாமின் தோள் இறுக்கி, ''நண்பேன்டா!'' என்கிறார் சோலார் சாய். 'மைனா’ படத்தின் 'ஜிங் ஜிக்கா’ பாடல் புகழ் பார்ட்டி இந்த 'சோலார்’ சாய்.  

''என்னடா, பேருக்கு முன்னாடி 'சோலார்’ பல்ப் மாட்டி இருக்கான்னு உங்களுக்குத் தோணும். 'இங்கே ஏகப்பட்ட சாய் இருக்காங்க. வித்தியாசமா இருக்கட்டும்’னு சொல்லி இசையமைப்பாளர் ஆதித்யன் பேருக்கு முன்னால 'சோலார்’ சேர்த்தார். சென்னைப் பல்கலைக்கழகத்துல பி.ஏ., இந்தியன் மியூஸிக் முடிச்சு, கிளாஸிக்கல் கச்சேரி செய்துட்டு இருந்தேன். 'சாதகப் பறவைகள்’ சங்கர் மூலமா லைட் மியூஸிக் மேடை ஏறினேன். 'கோவில்பட்டி வீரலட்சுமி’ படத்துல சிம்ரன் கூட 'காக்கா முகத்தழகா’ன்னு பாடிய டூயட் சினிமா அறிமுகம். அப்புறம் ஏகப்பட்ட பாடல்களோடு சீரியல் டைட்டில் பாடல் களும் பாடிட்டு இருந்தேன். இப்போ இமான் சார் மூலமா, என் கேரியருக்கு 'ஜிங் ஜிக்கா’ லிஃப்ட் கிடைச்சிருக்கு!'' என்று சோலார் சாய் முடிக்க, ''அப்போ, ஆதித்யன் பேரு வெச்சாரு... இமான் சோறு வெச்சாருன்னு சொல்லுங்க!'' என்று கலகலாய்த்தார் கார்த்திகேயன். அவர் பக்கம் சின்னதாக முறைத்துவிட்டு, '' 'வேட்டையாடு விளையாடு’ - 'சிக்கிமுக்கி நெருப்பே’, 'வாரணம் ஆயிரம்’ - 'ஏத்தி ஏத்தி ஏத்தி’, இப்போ 'கோ’, 'எத்தன்’னு கிராஃப் ஸ்டெடியா இருக்கு. பத்தவெச்சுராதீங்க பங்காளிகளா!'' என்பவரின் தோள் மீது கை வைத்து, ''கண்ணை மூடிக் கேட்டா சீர்காழி, மதுரை சோமு, டி.ஆர்.மகாலிங்கம், கண்ட சாலான்னு எல்லார் குரலையும் தத்ரூபமா மனசுல நிறுத்துவாரு!'' என்று சோலாருக்கு சர்ட்டிஃபிகேட் அளிக்கிறார் அனிதா.

''அப்ப திடீர்னு கண்ணு திறந்து பார்த்தா அவங்கள்லாம் காணாமப் போயிருவாங்களா?'' என்று விடாமல் கலாய்த்தார் பாக்யராஜ். ''சாரைப் பார்த்தாலே அவர் என்ன பாட்டு பாடி இருப்பார்னு கண்டுபிடிச்சுடலாம். 'இராவணன்’ படத்துல 'கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு... மொடா மொடா கள்ளு ஊத்து’ பாட்டு சாரோட வாய் வண்ணம்தான்!'' என்று 'பதில் மரியாதை’ செய்தார் சோலார்.

''ஆமா, செந்திலும் நானும் ரிதஸ்வரத்துல ஒண்ணாப் பாடிட்டு இருந்தோம். 'சப்தஸ்வரங்கள்’ நிகழ்ச்சியில் பாடினேன். பிறகு, பாக்யராஜ் உலகப் பிரபலம் ஆகிட்டாரு!'' என்றவரை இடைமறித்து, ''யாருப்பா கே.பாக்யராஜா?'' என்று கண் சிமிட்டிய ரனீனாவிடம்,  ''நான் என்னைச் சொன்னேன்!'' என்று உண்மை உரைத்துவிட்டு, ''எனக்குத் தொண்டையில் கட்டி வந்து பாட முடியாமல் அவஸ்தைப்பட்டேன். பொன்னேரி அசன் முகமது வாப்பாதான் குணமாக்கினார். இதுதான் டாக்டர் என் வாழ்க்கையில் நடந்தது!'' என்று சீரியஸ் டோனில் முடிக்க... கோரஸ் சிரிப்பு அலை!

''என் நிஜப் பெயர் சுசித்ரா ராமன். ஆனா, 'மோதி விளையாடு’ படத்துக்காகப் பாடும்போது, 'சுசித்ரான்னு நிறையப் பேர் இருக்காங்க. தனி அடையாளமா இருக்கட்டும்’னு எனக்கு 'சுர்முகி’ன்னு பேர் வெச்சாரு ஹரிஹரன் சார். 'சுர்’னா ஸ்வரம். 'முகி’ன்னா முகம். ரொம்ப அழகான பேர். ஆனா, இந்த வாலுப் பசங்கள்லாம் என்னை 'சூர்ப்பனகை’ன்னு சொல்லிக் கலாய்க்கிறாங்க. என் சொந்த ஊர் புனே. அப்பா 'ஆல் இந்தியா ரேடியோ இந்தூர்’ல பி கிரேடு சிங்கர். அவர்தான் என் குரு. ராஜ் டி.வி 'ராஜகீதம்’ டைட்டில் ஜெயிச்சேன். அப்துல் ஹமீது மூலமா ரஹ்மான் சார் அறிமுகம் கிடைச்சு, அவர்கிட்ட ஹார்மனி பாடினேன். 'பள்ளிக்கூடம்’ 'ரோஸ்மேரி’,  'வம்சம்’ - 'மருதாணி பூவப்போல’, 'உசுரே’, 'சிறுத்தை’ - 'செல்லம் வாடா செல்லம்’னு பளிச் பாடல் வாய்ப்புகள் தந்த அத்தனை இசையமைப்பாளர்களுக்கும் நன்றி!'' என்று சுர்முகி நிறுத்த, ''தேங்க்ஸ் சூர்ப்...'' என்று தொடர்கிறார் ரனீனா ரெட்டி.

''பெங்களூரு பொண்ணு நான். அடிப்படையில் நான் ஒரு ஸ்டேஜ் டிராமா ஆர்ட்டிஸ்ட். ஆனா, எப்படியோ இசை என்னை வசமாக்கிருச்சு. 'சிலந்தி’ படத்துல 'இது காதல் மின்சாரமா’ பாடல்தான் அறிமுகம். ஆனா, 'சரோஜா’வில் பாடின 'கோடான கோடி’ பாடல் நல்ல அடையாளம் தந்தது. 'குட்டி’ படத்தின் 'லைஃபே ஜாலிதான்’, 'கோ’, 'எங்கேயும் காதல்’னு இப்போ கோயிங் ஸ்டெடி!'' என்று கண்களில் அபிநயம் காட்டிச் சிரிக்கிறார்.

''சினிமா போலீஸ் மாதிரி நான் க்ளைமாக்ஸ் அறிமுகமா?'' என்று ஜாலி கேள்வியுடன் தன் வரலாறு சொன்னார் ப்ரியா ஹேமேஷ். ''அப்பா மோகன் ஒரு சிங்கர். அவரோட ஊக்கத்தில்தான் பாட

'ஸாங்'கே முழங்கு!

ஆரம்பிச்சேன். 'ரகுராஜ் சக்ரவர்த்தி’, 'லக்ஷ்மண் ஸ்ருதி’ ட்ரூப்ல எல்லாம் பாடியிருக்கேன். என் கணவர் ஹேமேஷ் ஒரு கீ-போர்டு ப்ளேயர். தேவிஸ்ரீ பிரசாத் சாருக்கு நான் பாடிக் கொடுத்த டிராக்கே ஃபைனல் ஆகிருச்சு. அது 'சம்திங் சம்திங்’ படத்தின் 'கோழி வெடக்கோழி’ பாட்டு. 'கந்தசாமி’ படத்தின் 'மியாவ் மியாவ் பூனை’, 'குட்டி’ படத்தில் 'கண்ணு ரெண்டும் ரெங்க ராட்டினம்’, 'தீராத விளையாட்டுப் பிள்ளை’யில் 'ஜன்னல் வந்த காற்றே’ பாடல்கள் என் விசிட்டிங் கார்டுகள். தெலுங்கில் 'ஆர்யா 2’ படத்துக்காக ஃபிலிம் ஃபேர் விருது கிடைச்சது!'' என்று முடித்தார்.

''ஓ.கே. நாமளே நினைச்சாலும் இத்தனை பேரும் ஒண்ணு சேர்ந்துருக்க முடியாது. அதுக்காக விகடனுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு, நாம அரட்டைக் கச்சேரியைத் தொடரலாம்!'' என்று எங்களை பேக்கப் செய்துவிட்டு, சீஸன்2 அரட்டையில் மூழ்கிவிட்டார்கள்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism