Published:Updated:

மெரினாவுக்கு ஆபத்து!

திக் திகீர் மேம்பாலங்கள்ந.வினோத்குமார்

மெரினாவுக்கு ஆபத்து!

திக் திகீர் மேம்பாலங்கள்ந.வினோத்குமார்

Published:Updated:
##~##
செ
ன்னை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலைநகரத்தில் அனைவருக்கும் பிடித்த தலம்... மெரினா. உலகின் மிக நீளமான இரண்டாவது கடற்கரை!

காற்று வாங்கி, காலார நடந்து, கடலை போட்டு, காதல் செய்து, கடலோடு விளையாடி, ஜாலியாக அலையாடி, மணல் வீடு, தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் ருசித்து, உறவுகள், நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி என நீளும் சந்தோஷங்கள் இனி இருக்குமா என்பது சந்தேகம். காரணம், 'எலிவேட்டட் எக்ஸ்பிரஸ் வே’!

மெரினாவுக்கு ஆபத்து!

சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் 'எலிவேட்டட் எக்ஸ்பிரஸ் வே’, அதாவது உயர் மட்டப் பாலங்கள் அமைக்கும் திட்டம் பரபரப்பாக நடக்கின்றது. 'போக்குவரத்தைச் சீர்படுத்த’ என்பது இந்தப் பாலங்கள் கட்டப்படு வதற்கான காரணம். ஆனால், அதன் பாதகப் பின் விளைவுகள் உணர்ந்தும், அதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது அதிகார வர்க்கம். இந்த உயர் மட்டப் பாலங்கள் திட்டத்தில் அதிக அளவு பாதிப்புகளைத் தரக் கூடியவை என மூன்றினை அடையாளம் காட்டுகிறார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

அவை - மெரினா முதல் கொட்டிவாக்கம் வரை செல்லும் பாலம், துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை செல்லும் பாலம் மற்றும் அடையாறு அதிவேக வெளி வட்டப் பாலம் ஆகியவை.

மெரினாவுக்கு ஆபத்து!

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், 'சஸ்டைன்’ என்கிற சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர், தலைவருமான எம்.ஜி.தேவசகாயம், உயர் மட்டப் பாலங்கள் அமைக்கப்படுவதன் பின்னணி ரகசியங்களைப் பட்டியல் இடுகிறார். ''இந்தப் பாலம் உருவாகும்போது, கூவம் கரை ஓரங்களில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் முழுவதுமாகத் துரத்தி அடிக்கப்படுவார்கள். 1991-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிக்கையின் கீழ், கடற்கரை ஓரமாக துறைமுகம், ஜெட்டிகள் போன்றவற்றைத் தவிர, வேறு எந்த ஒரு கட்டு மானங்களையும் ஏற்படுத்தக் கூடாது. இதற்கு முன் இரண்டு முறை விண்ணப்பித்தபோதும், இந்தச் சட்டத்தைக் காரணம் காட்டியே திட்டத்தை நிராகரித் தார்கள். கடந்த ஆண்டு புதிதாக கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிக்கை கொண்டுவரப்பட்டபோது, 'இந்தத் திட்டம் மேம்பாலம் அல்ல. இணைப்புச் சாலை மட்டுமே’ என்று உண்மையை மறைத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்ச கத்தின் ஒப்புதலைப் பெற்று விட்டனர். பிறகு, இந்தத் திட்டத்துக்குத் தேவைப்படும் நிலத்தையும், உரியவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்கள். அதன் பிறகு, இதே திட்டம் 'சோமா என்டர்பிரைசஸ்’ என்கிற கட்டுமான நிறுவனத்திடம்

மெரினாவுக்கு ஆபத்து!

260 கோடிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல், 2009-ல் பிரதமர் மன்மோகன் சிங் இங்கு வந்து அடிக்கல் நாட்டிச் சென்றுவிட்டார்.  

இதேபோல, அடையாறு காரிடர், மெரினா முதல் கொட்டிவாக்கம் வரையிலான திட்டங்களையும் செயல்படுத்த இருக்கிறது மாநில நெடுஞ்சாலைத் துறை. இந்தத் திட்டங்கள் போக்குவரத்தைச் சீர்படுத்தும் என்று சொல்வது சப்பைக்கட்டு. இவை எல்லாம் கடற்கரையை ஒட்டி இருப்பதால், இவை ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்கு உகந்தவை. அதற்கான அடித்தளம் இட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை!''

இந்தத் திட்டத்தால், அதிக அளவில் பாதிக் கப்படுவது மெரினா முதல் கொட்டிவாக்கம் வரையுள்ள பாலம் அமைக்கும் திட்டம்தான். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, இப்போது வரை அதன் நடவடிக்கைகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றிருக்கிறார் சரவணன். ''இந்தத் திட்டத் துக்கான சாத்தியக் கூறு அறிக்கை கண்டறியும் பணிக்கு ஆலோசனை நிறுவனமாக வில்பர் ஸ்மித் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில், சீனிவாச புரம், ஊரூர் குப்பம், ஓடைக் குப்பம், திருவான்மியூர் குப்பம், கொட்டிவாக்கம் ஆகிய ஐந்து மீனவக் கிராம மக்கள், இந்தத் திட்டம் கொண்டுவருவதில் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. ஆனால், அப்படி நடந்ததாகக் குறிப்பிட்டு பொய்யான ஓர் அறிக்கையைத் தயாரித்ததற்காக வில்பர் ஸ்மித் நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு, இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு என்ன நடவடிக்கைகளை எடுத்தார்கள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நான் விவரம் கேட்டதற்கு, இதுவரை பதில் அளிக்கவில்லை. எந்தப் பிரிவின் கீழ் எனக்குத் தகவல் மறுக்கப்படுகிறது என்பதைத் தகுந்த சட்டப் பிரிவுகளுடன் விளக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த விளக்கமும் தரப்படவில்லை. அதுவே ஒரு குற்றம். மேலும், நான் விண்ணப்பித்துக் குறிப்பிட்ட கால அளவு தாண்டிவிட்டதால், அப்பீல் மனு செய்திருக்கிறேன். இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படப்போவது 14 மீனவக் கிராமங்களின் வாழ்வு. நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்!'' என்று கோபத்துடன் முடிக்கிறார் சரவணன்.

இந்தத் திட்டத்தினால் உருவாகும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து, கடல்சார் உயிரியலாளர் பாபு வேதனையுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார். ''கடல் என்பது ஒரு கிண்ணம் போன்று அமைந்து இருக்கும். அதன் விளிம்புகளில் நிலம் பரவி இருக்கும். மெரினாவில் சுனாமி தாக்கியபோது, அனைத்திந்திய வானொலி நிலை யம் வரை அதன் வேகம் இருந்தது. ஆனால், திருவான்மியூர் கடற்கரையில் கரையின் மணல் மேட்டைக்கூடத் தாண்டவில்லை. சுனாமியின் தாக்கம் அங்கு குறைந்தபட்சமாக இருந்ததற்குக் காரணம், அந்த மணல் மேடுகள்தான். மேலும், அரிய வகை ஆமை இனங்கள் அந்த மணல் மேட்டுக்கு அருகில்தான் முட்டையிடும். காரணம், மற்ற விலங்குகளிடம் இருந்து, தன் முட்டைகளைக் காப்பாற்றவும் அந்தப் பகுதியின் ஈரப்பதமும்தான். தூண்களை நிறுத்தி அதன் மேல் பாலம் கட்டுவது தான் இந்தத் திட்டம். அத்தகைய சுமைகளை இந்த மணல் தாங்காது. இருக்கும் மணல் மேடுகள் கரைந்து எதிர்காலத்திலும் மணல் மேடுகள் உருவாகாமல்போகும் அபாயம் நேரும்.

ஆலிவ் ரிட்லி போன்ற ஆமை இனங்களுக்கு இயற்கையான ஒளியை வைத்துதான், அவற்றின் உயிரியல் கடிகாரம் இயங்கும். இந்தப் பாலங்கள் கட்டப்பட்டால் ஒளிரும் விளக்குகளால் ஆமைகளின் உயிரியல் கடிகார இயக்கம் நிலைகுலையும். அது அவற்றின் அழிவு விகிதத்தை மேலும் அதிகரிக்கும். பாலம் கட்டும்போது, அதன் கழிவுகள் அடையாறு முகத்துவாரத்தில் கலந்து, அது மீன்களின் இனப்பெருக்கத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.

மெரினாவுக்கு ஆபத்து!
மெரினாவுக்கு ஆபத்து!

10 வருடங்களுக்கு முந்தைய ஆய்வு ஒன்று, மனிதர்களின் பிறப்பு விகிதத்தைக் காட்டிலும் தினமும் புதிதாக சாலை யைத் தொடும் வாகனங் களின் எண்ணிக்கை ஆறு சதவிகிதம் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தது. இந்த 10 வருடங்களில் அந்த நிலைமை இன்னும் ஏகத் துக்கும் அதிகரித்து இருக்கும். ஆக, பிரச்னையின் ஆணிவேர், அதிகரிக்கும் வாகனப் போக்குவரத்துதான். எலியைக் கொல்ல வீட்டை எரித்த கதையாக, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உயர் மட்டப் பாலங்களைக் கட்டிக்கொண்டு இருக்கிறோம்!'' என்கிறார் பாபு வேதனையுடன்.

சென்னையின் ஆணிவேரையே அசைக் கும் இந்தத் திட்டத்தின் விபரீதம் குறித்து இப்போதாவது அரசு உணருமா?

மெரினாவுக்கு ஆபத்து!
மெரினாவுக்கு ஆபத்து!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism