Published:Updated:

நந்தனா...

இர.ப்ரீத்தி

நந்தனா...

இர.ப்ரீத்தி

Published:Updated:
##~##

சாக்லேட் கலர் கவுன் அணிந்து ஒரு பொம்மைபோல கண்ணாடிப் பெட்டிக்குள் உறக்கத்தில் இருந்தாள் நந்தனா. இறுதிச் சடங்குக்கு நேரம்  நெருங்க, பெட்டி யில் இருந்து நந்தனாவை வெளியே எடுக்கி றார்கள். ''அய்யோ.. நந்தனா!'' என்று மிச்சம் இருக்கும் சக்தி திரட்டிக் கதறுகிறார் பின்னணிப் பாடகி சித்ரா. இத்தனை வருடங்களாகத் தாலாட்டுபோல மனதைக் கட்டிப்போட்ட அந்தக் குரலை அப்போது கேட்க முடியவில்லை!

 திருமணம் முடிந்து 12 வருடங் களுக்குப் பிறகு சித்ரா-விஜயசங்கர் தம்பதிக்குப் பிறந்தவள் நந்தனா. தமிழ்ப் புத்தாண்டு இசை நிகழ்ச்சிக் காக எட்டு வயது நந்தனாவோடு துபாய் சென்று இருந்தார் சித்ரா.  அங்கே ஒரு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து நந்தனா இறந்துவிட்டதை இன்னமும் நம்ப முடியாமல் வார்த் தைகளற்ற துயரக் கடலில் தவிக் கிறார் சித்ரா!  

நந்தனா...

அந்த நிகழ்ச்சிக்காக சித்ராவுடன் சென்ற ஏ.ஆர்.ரெஹைனாவுக்குப் பேசும்போதே குரல் கம்முகிறது. ''சித்ராவுக்கு நந்தனாதான் உலகமே. எங்கே போனாலும் குழந்தையையும்  கூட்டிட்டுத்தான் போவாங்க. தன் கையால் சமைச்ச சாப்பாட்டை மட்டும்தான் நந்தனா சாப்பிட ணும்னு சின்ன அடுப்பு, சமையல் பொருட்களையும் கையோட எடுத் துட்டு வருவாங்க. எங்களைவிட சித்ராதான் நிகழ்ச்சிக்குக் கடுமை யாப் பயிற்சி பண்ணி இருந்தாங்க. ஆனா, அந்தத் துயரத்தை யாரும் எதிர்பார்க்கலை. விஷயம் கேள்விப் பட்டு நிகழ்ச்சியை ரத்து செய்யத் திட்டமிட்டோம். ஆனா, அப்படிப் பண்ணி இருந்தா நிகழ்ச்சியின்தயா ரிப்பாளர் பெரிய நிதி நெருக்கடி யில் சிக்கி இருப்பார். அந்த நிகழ்ச்சி அவருடைய முதல் நிகழ்ச்சியும் கூட. அவர் கை பிசைஞ்சு நின்ன தைப் பார்க்க முடியாம, மனசைக் கல்லாக்கிட்டு நிகழ்ச்சியை முடிச்சுக் கொடுத்தோம்!''

பின்னணிப் பாடகி ஹரிணி பேசும்போது, ''நந்தனா பிறந்த பின்னாடி சித்ராக்காவை நான் எப்போதும் தனியாவே பார்த்ததில்லை. அஞ்சு நிமிஷம் பேசினாலும், 'பாப்பா எங்களுக்கு டான்ஸ் ஆடிக் காமிச்சா..’,  'சரியாவே சாப்பிட மாட்டேங்குறா. ரொம்ப கவலையா இருக்கு’ன்னு நந்தனா வைப் பத்தியே பேசிட்டு இருப்பாங்க. நந்தனா... அவ்வளவு சமத்துக் குழந்தை. சித்ராக்காவுக்கு இது பெரிய இழப்பு. அவருக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னுகூட எங்களால யோசிக்க முடியலை!'' என்கிறார் வேதனையுடன்.

நந்தனா...

சோகமாக ஆரம்பித்த இசையமைப்பாளர் தேவாவின் குரல் கோபத்தில் நிலைகொள்கிறது.  ''யார் மனசையும் நோகடிக்காம அன்பு மொழி மட்டுமே பேசுறவங்க சித்ரா. தன்னுடைய எந்தப் பிரச்னையையும் அவங்க வெளியில் சொன்னதே கிடையாது. 'கல்கி’ படத்தில் 'மலடியின் மகளே’ங்கிற பாட்டு பாட சித்ராவை வரச் சொன்னேன். பாடும்போது ரொம்பவே உடைஞ்சு அழுதாங்க. என்னமோ ஏதோன்னு விசாரிச்சப்பதான், அவங் களுக்குக் கல்யாணமாகி ரொம்ப வருஷமா குழந்தை இல்லைங்கிற விஷயம் தெரிஞ்சது. நந்தனா பிறந்த பிறகு ரெக்கார்டிங் தியேட்டருக் குப் போற சமயம் அவளைத் தனியா விட்டுட்டுப் போகணுமேன்னு வீட்டுக்குப் பக்கத்துலேயே ஒரு ரெக்கார்டிங் தியேட்டர் கட்டினாங்க. அங்கே அவங்க பாடுவதை நாங்க வாங்கி, மியூஸிக்கோடு கம்போஸ் பண்ணிப்போம். குழந்தைக்காக ஏங்கிட்டு இருந்தவங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து, அதையே உலகம்னு கொண்டாடிட்டு இருந்த சமயம், அந்தக் குழந்தையை அவங்ககிட்ட இருந்து பறிச்ச கடவுளை என்ன சொல்றது?''

வீட்டுக்கு வந்து துக்கம் விசாரிப்பவர்களிடம்  சோகத்தில் அரற்றிக்கொண்டே இருக்கிறார் சித்ராவின் கணவர் விஜயசங்கர், ''எப்பவுமே சித்ரா பாடின பாட்டை ஓடவிட்டா, அந்த இடத்தை விட்டு நந்தனா நகர மாட்டா. எப்பவும் குளிக்கப் போனா, 'பாப்பாவைப் பார்த்துக்கோங்க’ன்னு மறக்காம சொல்லிட் டுப் போவாங்க சித்ரா. துபாய்ல பாட்டை பிளே பண்ணிட்டு சித்ரா குளிக்கப் போய்ட்டாங்க. நானும் நந்தனா அந்த இடத்தை விட்டு நகர மாட்டான்னு நினைச்சுட்டு போன் பேசிட்டு இருந்துட்டேன். மூடி இருந்தக் கதவைத் திறந்து வெளியில் போய் நீச்சல் குளத்தில் தவறி விழுந்துட்டா நந்தனா. அவ விழுந்ததுமே நாங்க அவளைத் தூக் கிட்டோம். ஆனா,  பயத்தில் ஏகப்பட்ட தண்ணி குடிச்சிட்டா. அந்த அதிர்ச்சியில் இருந்து அவ மீள்றதுக்குள்ளேயே..!'' - என்று உதடு கடித்து வார்த்தைகளை நிறுத்திப் பின் தொடர்கிறார்...''எங்க வீட்டு தேவதை நந்தனா. இருட்டா இருந்த வீட்டுல வெளிச் சத்தைக் கொண்டுவந்தவ, இப்போ எல்லா சந்தோஷத்தையும்எடுத்துட்டுப்போயிட்டா!''