Published:Updated:

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

சமஸ்ஓவியம் : எஸ். இளையராஜா

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

சமஸ்ஓவியம் : எஸ். இளையராஜா

Published:Updated:
##~##

இப்போது காந்தி இருந்தால் எப்படி இருக்கும்?

 - பல ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு விவாதம் வந்தபோது நண்பர் ஒருவர் சொன்னார்: ''எல்லாக் காலங்களிலும் காந்தியைப் போன்ற தலைவர்கள் இருப்பார்கள். இப்போதும் இருக்கவே செய்வார்கள். ஆனால், அவர்களைக் கண்டடையும் ஆற்றல்தான் இன்றைய இந்தியச் சமூகத்துக்கு இல்லை.''

நவீன இந்தியாவின் சிந்தனையாளர்கள் என்று தங்களைச் சொல் லிக்கொள்பவர்கள் அண்ணா ஹஜாரே - லோக் பால் விஷயத்தை எதிர்கொள்ளும் விதமும் அவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களும் இந்தக் கூற்றைதான் நினைவூட்டுகின்றன!

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

வாழ்வின் கடைசித் தருணம் வரை தன்னைப் பரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொண்டே இருந்தவர் காந்தி. தன் வாழ்வின் பெரும்பகுதியை காந்தி பிரம்மச்சரியத்தில் கழித்தது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஒருகட்டத்தில்,பாலியல் விஷயங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவராகவே தன்னை அவர் கருதினார். கஸ்தூரிபாவின் மரணத்துக்குப் பின் - அதாவது காந்தி இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் - ஒருநாள் காந்தி தூங்கி எழுந்தபோது அவரிடத்தில் இருந்து விந்து வெளிப்பட்டு இருந்தது. காந்தியை இது கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. தான் பாலியல் வட்டத்தில் இருந்து இன்னமும் விடுபடவில்லையோ என்கிற சந்தேகத்தை அவரிடம் இது தோற்றுவித்தது. தனக்கு மிக நெருக்கமான நண்பர்களிடம் காந்தி இதைத் தெரிவித்தார். சிற்றின்பத்தை, தான் கடந்தவன் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளாமல் தனக்கு நிம்மதி இல்லை என்று அவர்களி டம் குறிப்பிட்ட அவர், இன்னொரு பரிசோதனைக்குத் தயாரானார். தன்னுடைய 74-வது வயதில், பேத்தி வயதையத்த  மூன்று இளம் பெண்கள் அருகே இருக்க, தானும் நிர்வாணமாக இரவு படுத்து எழுந்தார். அபா, மனு, சுசிலா நய்யார் என்கிற அந்த மூவரில் முதல் இருவர் காந்தியின் பேத்திகள்; மூன்றாமவர்... காந்தியின்  மருத்துவர்.

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

ஒரு மனிதன் பரிசுத்தமானவனாக தனக்குத்தானே நிரூபித்துக்கொள்ள இதுதான் வழியா, காந்தியின் இத்தகைய பரிசோதனைகள் எல்லாம் சரியானவைதானா?

காந்தியோ, அவருடைய இத்தகைய பரிசோதனைகளோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல;  ஆனால், அன்றைய இந்தியச் சமூகம் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், காந்தியிடம் விமர்சிக்க வேண்டிய விஷயமாக இதை அன்றைய சமூகம் கருதவில்லை. அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை விவாதித்துக்கொண்டு இருந்தது.

இதே, இன்றைய சூழலில் காந்தி இருந்து, இப்படி ஒரு பரிசோதனையை அவர் மேற்கொண்டு இருந்தால் நாம் என்ன செய்து இருப்போம்? நம்முடைய ஊடகத்தினர் போட்டி போட்டுக்கொண்டு 'காந்தியின் இரவு’ எனப் படம் பிடித்துக் காட்டி இருக்க மாட்டார்கள்? நித்தியானந்தாவைப் போல காந்தியைக் காட்டி இருக்க மாட்டோம்?

இந்திய அரசியல் வர்க்கமும் அறிவுஜீவி வர்க்கமும் ஹஜாரேவை இப்போது அப்படித்தான் மாற்றிவிட முனைந்துகொண்டு இருக்கின்றன.

ஒரு வாரத்துக்குள் அடுக்கடுக்காக அவர் மீது குற்றச் சாட்டுகள்.

'ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்படுகிறார் ஹஜாரே’, 'போராட்ட மேடையில் ஹஜாரே வைத்திருந்த பாரத மாதா, காந்தி, பகத்சிங் படங்கள் சித்தாந்தரீதியாக அவரை ஒரு குழப்பவாதியாகக் காட்டுகின்றன’, 'ஹஜாரேவைப் பின்னிருந்து வெளிநாட்டு சக்திகள் இயக்குகின்றன’, 'லோக் பால் வந் தால் இந்தியா ஊழலற்ற நாடாகிவிடுமா?’, 'இது இப்போதைக்கு நடக்கிற கதை இல்லை’, 'மெழுகுவத்திப் போராளிகளால் என்ன செய்துவிட முடியும்?’

- இன்னும் இன்னும் கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் தொடர்கின்றன.

இவை அத்தனைக்குமான எளிய பதில் ஒன்றே ஒன்றுதான்... அவநம்பிக் கையாலும் வெறுப்பாலும் ஒரு சின்ன கல்லைக்கூட நகர்த்திவிட முடியாது!

கூர்ந்து கவனியுங்கள், இவ்வளவு கேள்விகளையும் எழுப்புபவர்கள் இந்தச் சமூகத்துக்கு என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? பிரச்னைகளுக்கு என்னவெல்லாம் மாற்றுகளைச் சொல்கிறார்கள்?

ஒரு துரதிருஷ்டவசமான உண்மை, ஹஜாரேவை அலட்சியப்படுத்துபவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் அவரைப் பற்றியோ, அவருடையச் செயல்பாடுகளைப் பற்றியோ முழுமையாக அறியாதவர்கள்!

இந்தியாவை ஒரு ஜனநாயக நாடாக வடி மைத்த நேரு அப்போது சொன்னார்: ''இது மிகச் சிறந்த தேர்வு என்று நாங்கள் நினைக்க வில்லை. ஆனால், இருப்பதிலேயே இதுதான் பலவீனங்கள் குறைந்த தேர்வு. இந்த நாட்டை உலகின் வலுவான ஜனநாயக நாடாக மாற்று வது, இனி இந்நாட்டின் மக்களிடம்தான் இருக்கிறது.''

இந்தியாவை எப்படி மேலும் ஜனநாயகப்படுத்துவது?

நாம் வாழும் காலத்தின் மிகச் சிறந்த உதாரணம் இரோம் ஷர்மிளா!

கடந்த 10 ஆண்டுகளாக, துளி நீரைக்கூட பருகாமல் உண்ணாவிரதத்தில் இருக்கும் இரோம் ஷர்மிளா, ஆயுதப் படைகளுக்கு வானளாவிய அதிகாரங்களைத் தரும் சிறப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்திப் போராடுகிறார். 1942-ல் விடுதலைப் போராட்ட வீரர்களை எதிர்கொள்ள ஆங்கிலேய அரசால் கொண்டுவரப்பட்ட கறுப்புச் சட்டத்தின் நீட்சியே ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம். நாட்டின் எந்த ஒரு பகுதி யில் இந்தச் சட்டம் அமலாக்கப்படுகிறதோ, அந்தப் பகுதியின் எந்த ஓர் இடத்திலும் அனுமதியின்றி நுழைய, சோதனையிட, எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த, எவரை வேண்டுமானாலும் பிடியாணை இல்லாமல் கைது செய்ய, தேவைப்பட்டால் சுட்டுக் கொல்ல... ஆயுதப் படைகளுக்கு இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது. இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு கறுப்புச் சட்டம் இருப்பது நம்முடைய அரசுக்கும் மக்களுக்கும் மிகப் பெரிய இழுக்கு. ஆனால், நம்முடைய அரசு ஷர்மிளாவின் போராட்டத்துக்கு இன்னும் நேர்மையாகப் பதில் அளிக்கவில்லை.

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

நீங்கள் கேட்கலாம்... 10 ஆண்டுகளாக ஷர்மிளா போராடுகிறார். இன்றோ, நாளையோ அவர் இறந்தும் போகலாம். ஆனால், இம்மி அளவுகூட அரசு அசைந்து கொடுக்கவில்லை. எப்படி இது ஒரு வெற்றிகரமான போராட்டம் ஆகும்?

ஷர்மிளா சொல்கிறார்: ''ஒரு பெரிய போராட்டத்துக்கான தேவை... தீவிரம், உறுதி, நேர்மறையான தொலைநோக்கு, முக்கியமாக சுயநலமற்ற நீடித்த தன்மை. எப்போதுமே நிலைத்த வெற்றி என்பது உடனடியாகக் கிடைத்துவிடுவது இல்லை.''

ஹஜாரேவும் இதைத்தான் சொல்கிறார்: ''மகத்தான மாற்றங்கள் ஒரே நாளில் வருவது இல்லை.''

ஹஜாரேவோ, அவருடைய செயல்பாடுகளோ விமர்சனங்களுக்கு அப்பாற்பாட்டவை அல்ல; ஆனால், விமர்சனங்களின் பெயரால் நிராகரித்துவிடக் கூடியவர் அல்லர் ஹஜாரே!

நாம் எப்படி காந்தியை எல்லா விஷயங்களுக்கும் தீர்வாளராகப் பார்க்க முடியாதோ, அதேபோல நாட்டில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரு அண்ணா ஹஜாரேவை மட்டுமே தீர்வாகப் பார்க்க முடியாது. ஆனால், நாடு இன்றைக்கு எதிர்கொண்டுவரும் மிக முக்கியமான ஐந்து பிரச்னைகளுக்கான தீர்வு ஹஜாரேவிடம் இருக்கிறது!

- தொடர்வோம்...