நடிகர் சங்க தலைவராக நாசர்; பொதுச்செயலாளராக விஷால் பொறுப்பேற்பு!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக நடிகர் நாசரும், பொதுச் செயலாளராக நடிகர் விஷாலும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது.  ஏராளமான நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்பட முன்னணி நடிகர்களும், நாடக நடிகர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மாலையில் நடந்தது. அதன் முடிவில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1344 வாக்குகளும், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால் 1445 வாக்குகளும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி 1493 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.


இந்நிலையில், சென்னை, வடக்கு போக் சாலையில் உள்ள நடிகர் சங்க கட்டடத்தில் இன்று மாலை நடிகர் நாசர், நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து பொதுச்செயலாளராக நடிகர் விஷாலும், பொருளாளராக நடிகர் கார்த்திக்கும், துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணனும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதையடுத்து, நேற்று நடந்த நடிகர் சங்க தேர்தலின்போது, நடிகை சச்சுக்கு ஓட்டு இல்லை எனக்கூறி அவர் திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில், பாண்டவர் அணியினர் இன்று பொறுப்பேற்றவுடன், முதல் வேலையாக நடிகை சச்சுவுக்கு வாழ்நாள் உறுப்பினர் அட்டை வழங்கினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!