Published:Updated:

எது தமிழீழம்?

ரீ.சிவக்குமார்

எது தமிழீழம்?

ரீ.சிவக்குமார்

Published:Updated:
##~##

ழத்தின் மனிதம் மரணித்து ஆயிற்று இரண்டு வருடங்கள். இன்னமும் விலகாத சோகத்துக்கு இடையில், பாவம் படராத புன்னகையுடன் வளைய வருகிறது அதிகார வர்க்கம். உலகில் கொலைத் தொழிலை அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளும் ஒரு தீவுத் தலைவனுக்கு, அண்டை நாட்டு அரசாங்கத்தின் ஆரவார ஆதரவு இருக்கும் வரை, விதியை நோவதைத் தவிர என்ன செய்ய முடியும்?  

 வேதனை வார்த்தைகளில் ஈழப் போராட்டம் குறித்த தனது நினைவுகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்கிறார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''1948-ல் எனக்கு 10 வயது இருக்கும். அப்பா என்னைக் கை பிடித்து தந்தை செல்வாவின் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். தமிழர்களுக்கான உரிமை களை வலியுறுத்தி தந்தை செல்வா எழுப்பிய உணர்ச்சி முழக்கங்கள் இப்போதும் என் நினைவு அடுக்குகளில். பிறகு, தந்தை செல்வா, மலையகத் தலைவர் தொண்டைமான், ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து உருவாக்கிய 'தமிழர் விடுதலைக் கூட்டணி’ யின் அமைப்புச் செயலாளராகவும், தலைமைச் செயற்குழு

எது தமிழீழம்?

உறுப்பினராகவும் இருந்தேன். 1972 முதல் 1976 வரை ஐந்து ஆண்டுகள் சின்ன இடைவெளியுடன் இலங்கைப் பேரினவாத அரசால் சிறைபடுத் தப்பட்டேன். 1976-ல் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டத்தின் அத்தியாயம் காத்திரமாகத் தொடங்கியது. 1972-ல் ஈழ மாணவர்கள் அமைப்பு தொடங்கிச் செயல்பட்ட காலத்தில், நானும் 42 இளைஞர்களும் சிறைப்படுத்தப்பட்டோம். தேடப்பட்ட 43-வது இளைஞர் பிரபாகரன். 'புதிய தமிழ்ப் புலிகள்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இயக்கத்தின் பெயர், பிற்பாடு 'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்’ என்று மாற்றப்பட்டது. பெயர் மாற்றப்பட்டாலும் ஆங்கிலத்தில் டி.ஈ.எல்.டி என்றுதான் இருந்தது. இலங்கையில் நெருக்கடி அதிகரித்தபோது, நானும் பிரபாகரனும் ஒரே படகில் தமிழகத்துக்கு வந்தோம். அப்போது நான்தான் 'இயக்கத்தின் ஆங்கிலப் பெயர் 'எல்.டி.டி.ஈ’ என்று இருந்தால் நன்றாக இருக்குமே’ என்றேன். தலைவரும் அப்படியே மாற்றினார்.

1948-ல் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அப்போது ஒரு தமிழ் நாளிதழ், காந்தியின் இறந்த உடலை அட்டைப் படத்தில் தாங்கி வந்தது. மட்டக்களப்பில் அந்த இதழைப் பார்த்த நான், 'காந்தித் தாத்தா, கருணையுள்ள தாத்தா’ என்று பாடல் எழுதினேன். அதுதான் நான் முதன் முதலில் எழுதிய பாடல். ஆயுதங்களுக்கு அப்பால் தன் அரசியலை அமைத்துக்கொண்ட காந்தி யைப்பற்றி பாடல் எழுதிய நான், ஆயுதங்களோடு தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஈழப் போராளிகளுக்காகப் பாடல்கள் எழுதியது காலத்தின் விநோதம்தான்.

நான் எழுதிய பாடல்களிலேயே பிரபாகரனுக்குப் பிடித்த பாடல், 'பத்து தடவை பாடை வராது, பதுங்கிக்கிடக்கும் புலியே தமிழா! செத்து மடிதல் ஒருமுறைதானடா, சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!'' என்ற பாடல். இப்போது என் பாடல்களைப் பலரும் பாடுகிறார்கள். ஆனால், ஒலிநாடா பிரபலம் ஆகாத காலத்தில் நானே பாடல் எழுதி, நானே இசையமைத்துப் பாடிய பாடலை, தலைவர் பிரபாகரன் ஒலிநாடாவில் பதிவு செய்தார். அந்தப் பாடல், ''வாருங்கள் புலிகளே, தமிழீழம் காப்போம்! வாழ்வா சாவா ஒரு கை பார்ப்போம்!'' கழுத்தில் நஞ்சுக் குப்பியோடு கைகளில் துவக்குகளோடு காட்டில் போராளிகள் என் பாடல்களைப் பாடித் திரிந்தது, என் வாழ்வுக்குக் கிடைத்த அர்த்தம். தலைவருக்கு இலக்கியத்தின் மீது அதீத ஆர்வம் உண்டு. உலகில் பல போராளிகள் வரலாறு படித்து போராளிகள் ஆனார்கள். ஆனால், தலைவரோ, இலக்கியம் படித்து, போராளி ஆனவர். கல்கியின் 'பொன்னியின் செல்வன்’, சாண்டில்யனின் 'கடல்புறா’ போன்ற வரலாற்றுப் புதினங்கள்பால் அவர் ஈர்க்கப்பட்டார். அவர் விரும்பிப் படித்த இலக்கியங்களும்கூட வீரம் விதைத்த போர்க் காப்பியங்கள்தான். அதேபோல் உலகத் தலைவர்களுக்கும் பிரபாகரனுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம், நேதாஜி, லெனின், மாவோ, காஸ்ட்ரோ போன்ற பலரும் தங்கள் வாழ்நாளில் பல்லாயிரம் சொற்பொழிவுகளை ஆற்றியவர்கள். ஆனால், பிரபாகரனோ, ஆண்டுக்கு ஒருமுறை மாவீரர் நாளில் மட்டுமே உரையாற்றினார். ஆனால், அந்த உரைகளே தமிழர்களின் போற்றுதலுக்குரிய புனித உரைகளாகத் திகழ்ந்தன.

பிரபாகரன் உலகப் போராளிகள் குறித்த புத்தகங்களையும் திரைப்படங்களையும் தேடித் தேடிப் படித்தார்; பார்த்தார். வன்னிக் காட்டில் மரங்களுக்கு இடையே வலைப் படுக்கையில் சாய்ந்தபடி ஆயுதங்கள் பற்றிய புத்தகங்களைப் படிப்பார். எங்களில் ஆங்கிலம் தெரிந்த சிலர், ஆயுதங்கள்பற்றிய ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டோம். பிரபாகரன் உருவாக்கிய 50,000 புலி வீரர்கள்கொண்ட படையில், முள்ளிவாய்க்கால் வரை 33 ஆண்டு காலப் போர்க்கள வாழ்வில், போரில் காயம்பட்ட போராளிகளுக்கு மருத்துவம் செய்த எந்த மருத்துவரும் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் அல்ல. பட்டறிவோடு பணி ஆற்றிய போராளிகளாகவே அவர்கள் இருந்தார்கள். புதிய வகைக் கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்தவர்கள், போர்ப் படகுகளைச் செய்தவர்கள் பொறியாளர் பட்டம் பெற்றவர்கள் அல்ல: புலிப் போராளிகளே அவர்கள். இயக்கத்தையே பல்கலைக்கழகமாக மாற்றியவர் பிரபாகரன்.

அதேபோல், காந்தி, நேரு, லெனின், கருணாநிதி என்று தொண்டர்கள்தான் தங்கள் தலைவர்களின் பெயர்களைப் பிள்ளைகளுக் குச் சூட்டி மகிழ்வர். ஆனால், பிரபாகரன் ஒருவர்தான், தனக்குக் கீழ் இயக்கத்தில் இருந்த போராளிகளின் பெயர்களைத் தன் பிள்ளைகளுக்குச் சூட்டியவர். தன்னல மறுப்பு, அர்ப்பணிப்பு, தனி மனித வாழ்வில் தூய்மை, போர்க் குணம் இவைதான் 'பிரபா கரன்’ என்னும் ஆளுமையை உருவாக்கி யவை.

ஒரு நேர்காணலில் 'எங்களுக்கு ஒரு தாயகம் உண்டு என்று அடிக்கடி கேட்கிறீர்களே. உங்கள் தாயகம் எது?’ என்று கிட்டுவிடம் கேட்கப்பட்டது. 'இலங்கைத் தீவில் எங்கு எல்லாம் குண்டு வீசப்படுகிறதோ, அதுதான் தமிழீழம்’ என்று பதில் அளித்தார் கிட்டு. மீண்டும், தமிழீழம் சிதைவுகளில் இருந்து எழும் நாள் வரும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism