Published:Updated:

'யுத்த கால இரவொன்றில்...'

கவின் மலர்

'யுத்த கால இரவொன்றில்...'

கவின் மலர்

Published:Updated:
##~##

'உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள்கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப்போன்று,
நான் என்னைக் கண்டெடுத்துள்ளேன்!’

இந்தப் பளீர் கவிதை வரிகள் ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணிக்குச் சொந்தம்! 20 வயதுக்குள்ளாகவே ஈழத் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடம் பிடித்த தீர்க்கமான கவிஞர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இலங்கையில் இருந்த பெண்ணிய இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த சிவரமணியின் எழுத்துகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குழந்தைகளின் மனதில் போர் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அவரது அக்கறை 'யுத்த கால இரவொன்றில் நெருக்குதல்’ கவிதையில் வெளிப்படுகிறது.

'யுத்த கால இரவொன்றில்...'

'ஒரு சிறிய குருவியினுடையதைப்போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதி தோய்ந்த
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும் காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்!’

1983-ம் ஆண்டே சிவரமணி எழுதிய இந்தக் கவிதை, இன்றைக்கு குழந்தைமையைப் பறிகொடுத்து, முள் வேலி முகாம்களுக்குள் சிறைபட்டுக்கிடக்கும் குழந்தைகள் இழந்த சிரிப்பையும் விளையாட்டுத்தனத்தையும் எத்தனை எளிய வார்த்தைகளில் உரைக்கிறது!

வாழ்வின் நிதர்சனத்தையும் போரின் விளைவுகளையும் அற்புதமாகப் பிரதிபலித்தன சிவரமணியின் கவிதைகள்.

'நேற்றுபோல் மீண்டும் ஒரு நண்பன்
தொலைந்து போகக்கூடிய இந்த இருட்டு 
எனக்கு மிகவும் பெறுமதியானது’

என சிவரமணி அன்றே எழுதிவைத்தது, இன்றைய வெள்ளை வேன் கடத்தல்களைப் பிரதிபலிப்பது!

போராட்டத்தோடு தன்னை உணர்வு பூர்வமாக இணைத்துக்கொண்ட அவருக்கு நீண்ட நெடிய போரும், தனிப்பட்ட வாழ்வின் நெருக்குதல்களும் சோர்வடையச் செய்திருக்கக்கூடும்.

சட்டென்று, ''எல்லாவற்றையும் சகஜமாக்கிக்கொள்ளும் அசாதாரண முயற்சியில் தூங்கிக்கொண்டும், இறந்து கொண்டும் இருப்பவர்களிடையே,நான் எனது நம்பிக்கைகளில் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!'' என்றார். கவித் திறனாலும், அன்பாலும் அனைவரையும் கட்டிப்போட்ட சிவரமணி குறித்தான பதிவுகள் மிகவும் குறைவு. மே மாதம் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் மறக்கவியலாத கொடும் நினைவு களைத் தந்த மாதம். அதே போன்றதொரு 1991-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதியன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் 23 வயது மட்டுமே நிரம்பிய சிவரமணி தற்கொலை செய்துகொண்டார்.மரணிப் பதற்கு முன், தான் எழுதிய அத்தனை கவிதைகளையும் தீயின் நாக்குகளுக்குத் தின்னக் கொடுத்து சாம்பலாக்கிவிட்டு, 'எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்!’ என்று ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். தன் கவிதைகள் சில வற்றை வைத்திருக்கும் நண்பர்களையும் அவற்றை யாரும் பார்க்க முடியாத படிக்குத் தீயில் இட்டு அழிக்கும்படியும்  அதுவே தனக்குச் செய்யும் பேருதவியாய் இருக்கும் என்று கோரிக்கையும் வைத்துஇருந்தார்.

'யுத்த கால இரவொன்றில்...'

ஆனால், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு, எஞ்சிய 22 கவிதைகளையும் பதிப்பித்து 'சிவரமணி கவிதைகள்’ என்ற தலைப்பில் நூலாக்கினார். அதன் முன்னுரையில், 'ஆண்கள் தங்கள் கவிதைகளைத் தங்களின் வெற்றியாகப் பார்க்கிறார்கள். பெண்களோ, தங்களின் வடிகாலாகப் பார்க்கிறார்கள்!’ என்கிறார் சித்ரலேகா. எரிந்த கற்றைக் கற்றையான காகிதங்களில் இருந்த கவிதைகள் அனைத் தும், ரத்தமும் சதையுமாக, உணர்வும் உயிருமாக சிவரமணி படைத்த அக்னிப் பிழம்புகள். நெருப்பே நெருப்பைத் தின்ற விநோதம் அது!  

தற்கொலை செய்துகொள்ளாமல் இருந்துஇருந்தால் சிவரமணி இந்நேரம் தமிழ்க்கவிதை களில் மிகப் பெரிய ஆளுமையாகவிசுவரூபம் எடுத்து நின்றிருப்பாள். அவளுடைய பெரும்பாலான கவிதைகள் நம்மிடம் இல்லை. ஆனாலும், எஞ்சிய 22 கவிதைகளின் வழியே சிவரமணி நம்முடன் வாழ்ந்துகொண்டு இருக் கிறாள், அவளே சொன்னதுபோல...

'பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.
என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என் தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர்.
ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்!’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism