என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

நினைத்ததை 'சாதி'க்கும் பஞ்சாயத்துகள்!

ரீ.சிவக்குமார், வீ.ஜெ.சுரேஷ்ஓவியங்கள் : அரஸ்படங்கள் : வீ.சிவக்குமார்

##~##

'இந்தியாவிலேயே உயர்ந்தபட்ச அதிகாரம் உள்ள அமைப்பு எது?’ என்ற கேள்விக்கு, பாடப் புத்தகம், சட்டப் புத்தகங்களில் 'நீதிமன்றங்கள்’ என்று பதில் இருக்கும். ஆனால், நீதிமன்றங்களைவிட சாதி மன்றங்கள்தான் கிராமங்களில் வானளாவ அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கின்றன. தமிழகக் கிராமங்களில் நிலவும் சாதிப் பஞ்சாயத்து முறைபற்றி ஆய்வு செய்து, எவிடென்ஸ் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை, அதிரவைக்கிறது!

நினைத்ததை 'சாதி'க்கும் பஞ்சாயத்துகள்!

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில், 167 கிராமங்களை ஆய்வுக்கு எடுத்தனர். 'நாட்டாமை, பஞ்சாயத் தார், பெரிய வீட்டுக்காரர், சாதித் தலைவர், அம்பலக்காரர், ஊர் பெரியதனம், தலைவர், பண்ணையார்’ என்று இந்தப் பஞ்சாயத்துத் தலைவர்கள் பலவிதமாக அழைக்கப்படுகிறார்கள். 'தலித் பெண் ஒருவர் ஆதிக்கச் சாதி ஆணால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால்,

நினைத்ததை 'சாதி'க்கும் பஞ்சாயத்துகள்!

500 முதல்

நினைத்ததை 'சாதி'க்கும் பஞ்சாயத்துகள்!

1 லட்சம் வரை அபராதமும், ஊர்க்காரர்கள் முன்பு காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கவைத்துவிட்டு, பிரச்னையை முடித்துக்கொள்கிறார் கள். அவ்வளவுதான். ஒரு சில கிராமங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை அந்த நபருக்கே திருமணம் முடித்துவைக்கும் வழக்கமும் உள்ளது. 'மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சராசரியாக ஓர் ஆண்டுக்கு ஐந்து அல்லது ஆறு தலித் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகின்றனர். குற்றவாளிகளுக்கு சாதிப் பஞ்சாயத்து மூலம் அபராதத் தண்டனைதான் விதிக்கப் பட்டு இருக்கிறது. ஒருவர்கூட சட்டரீதியாகத் தண்டனை பெறவில்லை’ என்கிற தகவல்கள் இந்தச் சமூக அமைப்பின் மீது அவநம்பிக்கையையும் அச்சத்தையும் விதைக்கிறது.

நினைத்ததை 'சாதி'க்கும் பஞ்சாயத்துகள்!

தேம்பித் தேம்பி அழுதுகொண்டே இடை இடையே தன் பேரன் பாலச்சந்தரின் கதை சொல்கிறார் எத்திலோடு கிராமத்தைச் சேர்ந்த பாட்டி பாப்பா. ''என் பேரன் பாலச்சந்தர், வத்தலக்குண்டு - மதுரை ரோட்டுல இருக்குற ஐ.டி.ஐ-ல படிச்சுக்கிட்டு இருந்தான். எங்க ஊர்ல இருந்து சங்கீதாங்கிற பொண்ணும் காலேஜ் படிச் சுட்டு இருந்துச்சு. ரெண்டு பேருக்கும் போக்கு வரத்துல பழகிப் பிடிச்சுப்போச்சு. இது எங்களுக் குத் தெரியாது. அப்புறம், பாலச்சந்தர் பொள்ளாச்சிக்கு வேலை செய்யப் போயிட்டான். யாருக்கும் தெரியாம, ரெண்டு பேரும் வெளியூர் போயி கல்யாணம் கட்டிக்கிட்டு ஒரு வாரம் கழிச்சு ஊருக்கு வந்தாங்க. சங்கீதா வீட்ல இருந்து வலுக்கட்டாயமா அந்தப் பொண்ணைப் பிரிச்சுட்டுப்

நினைத்ததை 'சாதி'க்கும் பஞ்சாயத்துகள்!

போயிட்டாங்க. ஊர்ப் பஞ்சாயத்து கூடி ஒரு முடிவு எடுத்தாங்க. அதன்படி 'தாழ்ந்த சாதிப் பையனோட பழகித் 'தீட்டு’ பட்ருச்சுனு, அந்தப் பொண்ணை, மூணு நாளா ஒரு ரூமுக்குள்  அடைச்சுவெச்சுருக்காங்க. தேங்காய் சிரட்டையில் தண்ணியும், அலுமினியத் தட்டில் சாப்பாடும் குடுத்துருக்காங்க. அப்படியும் சங்கீதா மனசு மாறாத தால், ரகசியமாப் பஞ்சாயத்து கூட்டி அந்தப் பொண்ணைக் கொலை பண்றதுன்னு முடிவெடுத்திருக்காங்க. ஊரையே வெள்ளை அடிச்சு வீடு வாசலைக் கழுவிவிட்டு, சங்கீதாவைப் பெண்கள் விளக்குமாறாலயும், ஆண்கள் செருப்பாலயும் அடிச்சிருக்காங்க. சங்கிலியால கட்டிப்போட்டு, அந்தப் பொண்ணுக்கு விஷத்தைக் குடுத்துக் கொன்னு எரிச்சுட்டாங்க. தாழ்த்தப்பட்ட சாதி யில பொறந்த ஒரே பாவத்துக்காக எம் பேரன் ஆசைப்பட்ட பொண்ணைக் கட்டிக்கமுடியலை. அவனைக் காதலிச்ச ஒரே குற்றத்துக்காக அந்தப் பொண்ணு உயிரையே கொடுத்துடுச்சு!''

மறுநாள் சம்பவ இடத்துக்குச் சென்று நடந்தவற்றைக் கேட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருமா.செழியன், ''அந்தப் பெண்ணை கம்பிக் கட்டில்ல படுக்கவெச்சுக் கட்டி, மேல டயரை யும், விறகையும், சீனியையும், காட்டாமணக்கு விதைகளையும் வெச்சு எரிச்சிருக்காங்க. துள்ளத் துடிக்க உசுரை விட்டிருக்கு பச்ச மண்ணு. சாதிப் பஞ்சாயத்து ஒழிஞ்சாதான், இந்த மாதிரியான வன்கொடுமைகளுக்கு ஒரு முடிவுக் காலம் வரும்!'' என்கிறார் ஆதங்கமும் ஆவேசமுமாக.  

நினைத்ததை 'சாதி'க்கும் பஞ்சாயத்துகள்!

இந்த ஒரு சம்பவம் சின்ன உதாரணம்தான். எவிடென்ஸ் அறிக்கையில் இன்னும் மூர்க்கமான, கொடூரமான பல சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், தலித் இளைஞர் நாகராஜும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சுமதியும் காதலித்து, வெளியூரில் ரகசியத் திருமணம் முடித்து, ஒரு மாதம் கழித்து ஊருக்குத் திரும்பி இருக்கிறார்கள். சுமதியின் சாதியைச் சேர்ந்த கட்டப் பஞ்சாயத்துக் கும்பல், இருவரையும் தென்னந் தோப்புக்கு இழுத்துச் சென்று, கிடா வெட்டி இருவரின் தலையிலும் ரத்தத்தைத் தடவி உள்ளனர். பிறகு, பலவந்த மாக, இருவரையும் பிரித்துவிட்டனர். இப்படி திருமணத்தை முறித்தல், கொலை, தற்கொலை என்று பல விளைவுகளுக்கு சாதிப் பஞ்சாயத்துத் தீர்ப்புகள் காரணமாக உள்ளன. ஆனால், சட்ட முறைக்கு அப்பாற்பட்ட இத்தகைய பஞ்சாயத்து முறைபற்றி, கிராம மக்களிடம் எந்தக் குற்ற உணர்வையும் நெருடலையும் காண முடியவில்லை என்பது  அவலம்.

நினைத்ததை 'சாதி'க்கும் பஞ்சாயத்துகள்!

''பரம்பரை பரம்பரையாகவே நாலு கிராமத்துக் கும் நான்தான் 'பெரியதனம்’ பண்ணிட்டு இருக்கேன். பொய், களவு, சூதுல மாட்டுறவங்களைப் பஞ்சாயத்து முன்னால நிறுத்தித் தீர்த்து வைக்கி றேன்!'' என்கிறார் திண்டுக் கல் மாவட்டம் எஸ்.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமுக்காளை. ''எங்க ஊர்ல, திருமலைநாயக்கர் காலந்தொட்டே இருக்குற 'காமே சிந்தம கூழப்ப நாயக்கர் மண்டு சாமி’தான் எங்க ஊருக்கு பஞ்சாயத்துப் பண்ணுற சாமி. நீங்க பார்க்கிறது மண்டு சாமிக் கோயில். 'மண்டு கல்’ ஊர் பஞ்சாயத்து வாசல்ல கிடக்கு!'' என்ற கே.குரும்பப்பட்டியைச் சேர்ந்த கார்மேகம், நம்மை அழைத்துச் சென்று இரண்டு மண்டு கற்களையும் காட்டினார்.

'' 'அனைத்தையும் தீர்மானிப்போம்... எதையும் தீர்ப்போம்!’ என்கிற வன்முறை அதிகார அமைப்புதான் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிறது!'' என்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர். ''பெண்களை அரசியல் அதிகாரங்களில் பங்கேற்கவிடாமல் தடுக்கின்ற போக்கு, தீண்டாமையை எதிர்த்துக் கேள்வி கேட்டால் தாக்குவது, அல்லது கொலை செய்வது போன்ற சம்பவங்கள் எல்லாம் தொடர் கதை ஆகிவிட்டன. இந்தக் கொடூர வேர்களின் வளர்ச்சிதான் 'கட்டப் பஞ்சாயத்து’. குடும்பப் பிரச்னை, தீண்டாமைப் பிரச்னை, காதல் விவகாரம், குத்தகை விவகாரம் என அனைத்து விவகாரங்களிலும் சம்பந்தப்பட்டவர்களைப் புறக்கணிப்பது, ஒதுக்கிவைப்பது, அவமானப் படுத்துவது, உச்சபட்சமாக பஞ்சாயத்துக்கு வருகிறவர்களைத் தாக்குவது என்று இத்தகைய சாதிப் பஞ்சாயத்துகளின் அதிகார வரம்புகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

நினைத்ததை 'சாதி'க்கும் பஞ்சாயத்துகள்!

சட்டங்களால் மட்டுமே சமூக அவலங்களை ஒழித்துவிட முடியாது என்றாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சட்டரீதியாகத் தீர்வு என்பது பல சமயங்களில் ஆறுதலாக இருக்கின்றன. ஆனால், இத்தகைய வாய்ப்புகளையும் மறுப்பவைதான் இந்தக் கட்டப்பஞ்சாயத்துகள்.

தமிழக அரசு, சாதிப் பஞ்சாயத்துகள் பற்றி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர்கள் அடங்கிய 'கட்டப்பஞ்சாயத்து கண்காணிப்புக் குழு’வை ஒவ்வொரு தாலுகாவிலும் உருவாக்க வேண்டும்!'' என்று தீர்வுகளை முன்வைக்கிறார் கதிர்.

'சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்கிற வரி, வழக்கமான சம்பிரதாயமாகத் தொக்கி நிற்காமல், நடைமுறையாக மாறினால்தான் நல்லது நடக்கும்!