என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ்.

கவின் மலர்படம் : ச.இரா.ஸ்ரீதர்

##~##

23 வயது திவ்யதர்ஷினி இப்போது இந்தியப் பிரபலம்! இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ள தமிழகப் பெண்!

 ''ரொம்பப் பெருமையா, சந்தோஷமா இருக்கு. ஆனா, போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொடுத்துக் கால் எல்லாம் வலிக்குது. பத்திரிகை, பேட்டின்னு எல்லாமே புதுசா இருக்கு!''

திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ்.

''இத்தனை நாள் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?''

''சென்னைதான் சொந்த ஊர். ஆஸான் மெமோரியல் பள்ளி, அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படிச்சேன். வக்கீலாக பிராக்டீஸ் பண்ண ஆசை இல்லை. ஆறு மாசமா ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை பார்க்குறேன். இப்படியரு வெற்றி நான் எதிர்பார்க்கவே இல்லை. கூட வேலை பார்த்தவங்க பாராட்டு விழா எடுக்குறாங்க, மும்பையில் இருந்து சேர்மன் வாழ்த்து சொல்றார். என் வெற்றியைத் தங்களுடைய வெற்றியா பார்க்குறதை நினைக் கிறப்போ சந்தோஷமா இருக்கு!''

''திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ். என்னலாம் சாதிப்பாங்க?''

''கிராமப்புற-நகர்ப்புற வித்தியாசத்தைக் குறைப்பதில் என் கவனம் இருக்கும். நகரம் வளர்ந்துகிட்டே இருக்கு. கிராமம் தேய்ஞ்சு கிட்டே இருக்கு. ஒரு தனி மனுஷியா என்னால என்ன செய்ய முடியும்னு தோணினப்பதான், ஐ.ஏ.எஸ். எண்ணம் மனதில் உதித்தது. கல்லூரிப் பருவத்தில்தான் ஐ.ஏ.எஸ்ஸை இலக்காக அமைத்துக்கொண்டேன்!''  

''சரி... சக்சஸ் டிப்ஸ் சொல்லுங்க?''

''டிப்ஸ் கொடுக்குற அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆள் இல்லை. ஒண்ணே ஒண்ணு சொல்றேன்... மத்த எக்ஸாம் மாதிரியே இதையும் நெனைச்சுப் படிச்சாலே போதும். ஐ.ஏ.எஸ். தேர்வுக்குன்னு நான் எப்பவும் என் வாழ்க்கை முறையை மாத்திக்கிட்டதே இல்லை. ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரம் வரை படிப்பேன். சேனல் நிகழ்ச்சிகள், கிரிக்கெட்லாம் பார்ப்பேன். படிக்காம மேட்ச் பார்க்குறேன்னு அம்மா - அப்பா அடிக்கடி திட்டுவாங்க. அதுக்காகவே அவங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ். நான் படிச்ச பிரபாஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் பிரபாகர் சாருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்! என்னுடன் சேர்ந்து 16 பேர் எங்க இன்ஸ்டிட்யூட்டில் ஆல் இந்தியா ரேங்க் வாங்கியிருக்கோம்'' - கனிவாகச் சிரிக்கிறார் திவ்யதர்ஷினி!