என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

கிடைக்குமா நியாயத் தீர்ப்பு?

கவின் மலர்

##~##

பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்கு உரிய நிலம் யாருக்குச் சொந்தம்? - இது தொடர்பான வழக்கில் 2010 செப்டம்பரில், தொல்பொருள் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியின் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு, சர்ச்சைக்கு உரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து தீர்ப்பு வழங்கியது அலகாபாத் உயர் நீதிமன்றம். சூரஜ்பன் போன்ற வரலாற்று அறிஞர்கள் இந்த அகழ்வாராய்ச்சியில் அடிப்படை நியதிகள் மீறப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினர். ஆனால், அகழ்வாராய்ச்சிக் குழுவில் இருக்கும் பேராசிரியர் ஏ.கே.மிஸ்ரா ''நீதிமன்ற உத்தரவுப் படி நாங்கள் செய்யும்போது, நியதிகள்பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை'' என்றார். ஆக, அயோத்தியில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியே சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கையில், சர்ச்சைக்கு உரிய நிலம் குறித்த முடிவுகளுக்கு அந்த ஆராய்ச்சியின் முடிவுகளைச் சாட்சி ஆக்கியது விநோதம்தான். '' 'நம்பிக்கை’யின் அடிப்படையிலான இந்தத் தீர்ப்பு... உண்மைகளுக்கும், வரலாற்றுச் சான்றுகளுக்கும், வரலாறு எழுதும் பாரம்பரியத்துக்கும் நேர்ந்த அவமானம்!'' என்றார் வரலாற்றாய்வாளர் டி.என்.ஜா.

கிடைக்குமா நியாயத் தீர்ப்பு?

 17-ம், 18-ம் நூற்றாண்டுகளுக்கு முன்பு அயோத்தி இந்துக்களின் புனிதத் தலமாக இருந்தது இல்லை. 17-ம் நூற்றாண்டுக்கு முன்னால், உத்தரப்பிரதேசம் முழுவதிலுமேகூட ஒரு ராமர் கோயில்கூடக் கட்டப்படவில்லை என்பதே வரலாற்றாய்வாளர்கள் சொல்வது. பாபர் மசூதியோ, 1528-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால், இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காமல், கோயிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

1949-ல் அப்போது ஃபைசாபாத்தின் இணை ஆணையராக இருந்த கே.கே.கே. நாயர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பின ராக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர். பாபர் மசூதியின் நடுப் பகுதியில் ராமர் சிலையைவைத்து வழிபட அவர் அனுமதி அளித்தார். அப்போது தொடங்கிய பிரச்னை, அதன் பின் அரசியல் ஆதாயங்களுக்காக பா.ஜ.க-வினரால் பெரிதாக்கப்பட்டு, இன்று  வரையிலும் சிக்கல் நீடிக்கிறது!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்டாப் ஆலம் மற்றும் லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ''சர்ச்சைக்கு உரிய நிலத்தைப் பிரிக்கும்படி அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியது விந்தையாக இருக்கிறது!'' என்று கூறி தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

''உச்ச நீதிமன்றத்துக்கு வேறு எந்தத் தேர்வுமே கிடையாது. எங்களுக்குத்தான் கொடுத்தாக வேண்டும். ஒருவேளை, தீர்ப்பு எதிராகப் போனால், இந்த நாடு வகுப்பு வன்முறையால் அழிவதை யாராலும் தடுக்க முடியாது' என்று மிரட்டுகிறார் ராம்விலாஸ் வேதாந்தி. இதற்கிடையேயும் உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தைக் குட்டி இருப்பதால், இறுதித் தீர்ப்புக்கான எதிர் பார்ப்பு அதிகரித்து இருக்கிறது!