ஸ்பெஷல் -1
Published:Updated:

மகேந்திரன் 25

மகேந்திரன் 25

##~##
மனிதம்வழியும் மகேந்திரனின் படைப்பு கள், சினிமா பிரியர்களின் ஆதர்ஷம். பேரன்பும் பிடிவாதமுமாக யதார்த்த சினிமாவை செல்லுலாய்டில் செதுக்கிய வரின் பெர்சனல் பக்கங்களில் இருந்து...

• மகேந்திரனின் இயற்பெயர் தேவ.அலெக்சாண்டர். ஏழாவது மாதத்திலேயே பிறந்து, டாக்டர் சாராவின் வயிற்று வெப்பத்தில் இரண்டு மாதங்கள் இருந்து உயிர் பெற்றவர். அப்பா, ஜோசப் செல்லையா. அம்மா, மனோன்மணி!

• மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர் மீடியட். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.ஏ., பொருளியல் படித்தவர். அழகப்பா கல்லூரி விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆர். முன் மகேந்திரன் பேசிய பேச்சு மிகப் பிரபலம். மேடையிலேயே எம்.ஜி.ஆர் எழுதிக் கொடுத்த பாராட்டு வரிகள், மகேந்திரன் வீட்டின்முகப்பை இன்னும் அலங்கரிக்கின்றன!

• மகேந்திரனின் மனைவி ஜாஸ்மின். ஜான் ரோஷன், டிம்பிள் ப்ரிதம், அனுரிட்டா ப்ரிதம் என மூன்று குழந்தைகள். ஜான், விஜய்யின் 'சச்சின்’ படத்தை இயக்கியவர். மகள் அனுவின் கணவர் பாசு, விஜய் மல்லையாவின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் களின் பயிற்சியாளர்!

• பள்ளி, கல்லூரி காலங்களில் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஸ்டேட் ரேங்க்கில் வந்தவர். கல்லூரியில் சீனியர் விளையாட்டு வீரராக ஜொலித்த எல்.ஜி.மகேந்திரனால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே சூடிக்கொண்டார்!

• எம்.ஜி.ஆர் தந்த உற்சாகத்தினால்,'காஞ்சித் தலைவன்’ படத்தில் உதவி இயக்கு நராகப் பணிபுரிந்தார். எம்.ஜி.ஆருக்காக மகேந்திரன் எழுதிய 'அனாதைகள்’ என்ற நாடகம், பிற்பாடு 'வாழ்வே வா’ என எம்.ஜி.ஆர் - சாவித்திரி நடிக்க ஆரம்பிக்கப்பட்டு, பொருளா தார நெருக்கடியில் கைவிடப்பட்டது!

• ஏறத்தாழ 25 படங்களுக்குக் கதை- வசனம் எழுதியிருக்கிறார். அவரின் நாடகம் 'தங்கப் பதக்கம்’ நிறையத் தடவைகள் மேடை ஏற்றப்பட்டு, வெற்றிகரமாகத் திரை வடிவத்திலும் வந்தது!

• முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, மெட்டி, கை கொடுக்கும் கை, நண்டு, அழகிய கண்ணே, ஊர்ப் பஞ்சாயத்து, கண்ணுக்கு மை எழுது, சாசனம் என்பவை மகேந்திரன் இதுவரை இயக்கிய 12 படங்கள்!

•  'துக்ளக்’ பத்திரிகையில் நான்கு வருடங்கள் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த நாட்களை 'வாழ்வின் மிகச் சிறந்த வருடங்கள்’ எனக் குறிப்பிடுவார்!

• எம்.ஜி.ஆருக்காக கல்கியின் 'பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆரின் வீட்டிலேயே தங்கி திரைக்கதையாக எழுதினார். ஆனால், அந்த நாவல் படமாக்கப்படவில்லை என்பது அதன் பிறகான சோகம்!

மகேந்திரன் 25

•  'முள்ளும் மலரும்’ படத்தின் 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ பாடலின் ஆரம்பக் காட்சியை எடுக்கத் தயாரிப்பாளர் மறுத்துவிட்ட நிலையில், கமல்ஹாசன் அதைப் படமாக்கப் பணம் கொடுத்து உதவினார்!

•  அஸ்வினி, சுஹாசினி, சாருலதா, மோகன், சாருஹாசன் ஆகியோர் இவருடைய பெருமை மிகு அறிமுகங்கள்!

• விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரனின் அழைப்பை ஏற்று, கிளிநொச்சியில் தமிழ் இளைஞர்களுக்கு மூன்று மாதங்கள்திரைப் படப் பயிற்சி அளித்தார். விடைபெறுகையில் பிரபாகரன் அளித்த விருந்தை, 'சில்லிடும் தருணம்’ எனக் குறிப்பிடுகிறார்!

•  ரஜினிக்கு அன்றும் என்றும் பிடித்த படம், 'முள்ளும் மலரும்’. பிடித்த டைரக்டரும் மகேந்திரன் தான். இதை எல்லா மேடைகளிலும் ஆசையாகச் சொல்வார் ரஜினி!

• மகேந்திரனின் எல்லாப் படங்களுமே அதிக பட்சம் 40 நாட்களில் எடுக்கப்பட்டவைதான். 'உதிரிப்பூக்கள்’ 35 ரோல் ஃபிலிம் சுருள்களில், 30 நாட்களில் படமாக்கப்பட்டது!

•  'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூன்று தேசிய விருதுகள் வென்றன. விருது வாங்கப் போன மகேந்திரன், அங்கே வந்திருந்த எம்.ஜி.ஆரிடம் விருதுகளைச் சமர்ப்பித்து, 'எல்லாம் உங்களால் வந்தது’ என்றார்!

•  கதை, கவிதைகள், சிறுகதைகள் என நிறைய எழுதுவார். படிப்பதிலும் தீவிரமானவர். பிடித்த எழுத்தாளர்கள்... புதுமைப்பித்தன்,தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன்!

• நீங்கள் மகேந்திரனை கை தொலை பேசியில் அழைத்தால், 'ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்’ பாடலுக்குப் பிறகு, 'நான் மகேந்திரன்’ என்ற மென்மையான குரலைக் கேட்கலாம்!

•  சிவாஜி எப்போதும் 'மகேன்’ என்றுதான் செல்லமாகக் கூப்பிடுவார். எம்.ஜி.ஆர் 'என் னங்க, என்னங்க’ என்றுதான் சொல்வார். சினிமா வேண்டாம் என காரைக்குடிக்குத் திரும்பிய மூன்று தடவையும், மகேந்திரனை மீண்டும் அழைத்து வந்தது எம்.ஜி.ஆர்!

• சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஏழு மாதங்கள் பயின்றவர், பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து விலகினார்!

•  மகேந்திரன் இயக்கிய 12 படங்களில், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை என நான்கு படங்கள் மட்டுமே டி.வி.டி-யில் கிடைக்கின்றன. மற்றவை கிடைப்பது இல்லை. யாராவது அவற்றை அளித்தால், அவர்களை நண்பர்கள் ஆக்கிக்கொள்ளச் சம்மதிக்கிறார் மகேந்திரன்!

• சென்னை மாநகரத்தின் மையத்தில் புதுமைப்பித்தன் வாழ்ந்த தெருவில் இருந்த மகேந்திரன், இப்போது மேலும் அமைதியை விரும்பி, புறநகரான பள்ளிக்கரணையில் குடியேறி விட்டார்!

• கடிகாரம் மற்றும் தங்க நகைகள் அணியும் வழக்கம் இல்லை. மிக எளிமை விரும்பி!

• கதை-வசனம் எழுதி, இயக்கும் படங்களின் முக்கியமான கேரக்டருக்கு 'லட்சுமி’ என்று பெயர் சூட்டுவார். 'தங்கப்பதக்கம்’ சௌத்ரியின் மனைவி, 'உதிரிப்பூக்க’ளில் அஸ்வினி பெயர் லட்சுமிதான். கஷ்ட காலங்களில் மகேந்திரனுக்குச் சாப்பாடு போட்ட நடிகர் செந்தாமரையின் மனைவி பெயர் தான் லட்சுமி!

• தனது வாழ்க்கையின் நன்றிக்கு உரியவர் களாக எம்.ஜி.ஆர், சிவாஜி, சின்னப்பா தேவர், சோ ஆகியவர்களைக் குறிப்பிடுவார். 'என்னை இது வரையில் நடத்தி வந்தது என் மனைவி ஜாஸ்மின்’ என நெகிழ்ச்சியோடு குறிப்பிடுவார்!

• அவர் இயக்கிய 12 படங்களில் அவருக்கே பிடித்தது 'உதிரிப்பூக்கள்’. 'பிழைகள் குறைந்த படம்’ என்பார் சிரித்துக்கொண்டே!