ஸ்பெஷல் -1
Published:Updated:

ஆசை : உலகின் லிட்டில் டெஸ்ட் டிரைவர்!

ஆசை : உலகின் லிட்டில் டெஸ்ட் டிரைவர்!

##~##
ன் மகன் ஸ்ரீஹன். எல்.கே.ஜி. படிக்கிறான். அவனுக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டியதே இல்லை. விதவிதமான கார்களைக் காட்டித்தான் சோறு ஊட்டுவோம். கார் காதலன் என்றே சொல்லலாம். சாலையில் செல்லும் எந்த காராக இருந்தாலும் அதன் பெயர், மாடல், சிறப்புகள் அத்தனையும் சொல்லிவிடுவான். பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ஆடி, போர்ஷே என 500-க்கும் மேற்பட்ட கார்களின் மினியேச்சர் கார்களை வாங்கிக் குவித்திருக்கிறான். நாங்கள் பெங்களூருவாசிகள். ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும், ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலையை ஏக்கமாகப் பார்த்து, 'உள்ளே கூட்டிட்டுப் போப்பா’ என்று ஆசையாகக் கேட்பான். எங்களால் அவனது ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. விகடன் நிறைவேற்றுமா?’ - அலுவலக மேஜையில் ஹாரன் அடித்தது அந்தக் கடிதம்.
ஆசை : உலகின் லிட்டில் டெஸ்ட் டிரைவர்!

ஹூண்டாய் நிறுவனத்திடம் அனுமதி கேட்ட போது, ''15 வயசுக்கு மேற்பட்டவங்களைத்தான் தொழிற்சாலைக்குள் அனுமதிப்போம். குழந்தைகளை அனுமதிப்பது இல்லையே!'' என்று கொஞ்சம் யோசித்தவர்கள், ''விகடனுக்காக ஓ.கே!'' என்று வெல்கம் மெசேஜ் அனுப்பினர்.

ஆசை : உலகின் லிட்டில் டெஸ்ட் டிரைவர்!

பெங்களூரில் இருந்து ஸ்ரீஹனை அழைத்து வந்தார்கள் அவனது பெற்றோர் நாகராஜன் -ஜெயசித்ரா. ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் கால் பதித்ததும், உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கத் துவங்கிவிட்டான் ஸ்ரீஹன். தொழிற்சாலைக்குள் அவர்களை அழைத்துச் செல்ல, இந்தியாவில் விற்பனையில் இல்லாத ஹூண்டாயின் மெகா சைஸ் H 1 மல்ட்டி யுட்டிலிட்டி கார் வந்து நின்றது. ''இந்தக் கார்... இதுவரை நான் பார்த்தது இல்லையே. என்ன பேரு... எவ்வளவு பி.ஹெச்.பி?'' என்றெல்லாம் தகவல் சேகரித்து, உடனே தனது டேட்டா பேஸை அப்டேட் செய்துகொண்டான் ஸ்ரீஹன்.

535 ஏக்கரில் பிரமாண்டமான  தொழிற்சாலை. வாசலில் வந்து ஸ்ரீஹனை வரவேற்றார் நிறுவனத்தின் மனித வள மேம்பாடு மற்றும் பொது விவகாரங்கள் பிரிவுத் தலைவர் கே.ஹெச்.கிம்.

''ஹாய், வெல்கம் டு ஹூண்டாய் ஸ்ரீஹன்!'' என்று கஷ்டப்பட்டு பெயரை உச்சரித்தார் கிம்.

ஆசை : உலகின் லிட்டில் டெஸ்ட் டிரைவர்!

''ஹாய் அங்கிள். ஆர் யூ ஃப்ரம் கொரியா?'' என்று அவர் மேல் துள்ளிக் குதித்து ஏறிக்கொண்ட ஸ்ரீஹன், ''இது ஹூண்டாய் ஐ 10 நியூ, அது சாண்ட்ரோ ஜிங், ஹை... இது புது வெர்னா டிரான்ஸ்ஃபார்ம்!'' என்று ஷோகேஸில் இருந்த கார்களின் பெயர்களை 'பஞ்சு மிட்டாய் பாப்பா’ உற்சாகத்துடன் ஸ்ரீஹன் அடுக்க, அசந்துபோனார்கள் ஹூண்டாய் அதிகாரிகள்.

'வெல்கம் ஸ்ரீஹன் அண்ட் ஃபேமிலி’ என்று வரவேற்றது பெரிய திரை. முதலில் நீளமான இரும்புத் தகடுகள் காரின் உடலாக உருமாறும் பாடி ஷாப்புக்கு அழைத்துச் சென்றார் கிம். அங்கு முழுக்க முழுக்க ரோபோக்கள் இரும்புத் தகடுகளை அறுத்து, வெல்டிங் செய்துகொண்டு இருந்தன. ''இதுதான் காராக மாறுகிறதா?'' என்று ஆச்சர்யப்பட்ட ஸ்ரீஹனை, தொழிற்சாலையின் அனைத்துப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றனர்.

இன்ஜின்கள் உருவாகும் இடம், இரும்புத் தகடுகளுக்குப் பளபள, மினுமினு நிறம் கொடுக்கும் பெயின்ட் ஷாப், இரும்புத் தகடுகளை ஒன்றோடு ஒன்று இணைத்து, பாகங்கள் பொருத்தி, முழு காராக வெளிவரும் அசெம்பிளி ஷாப் என்று ஒவ்வொரு பகுதியிலும் நிதானமாக ஆறஅமர ஆராய்ந்தான் ஸ்ரீஹன்.

இன்ஜின், சக்கரம், கதவுகள், எலெக்ட்ரானிக் பாகங்கள் ஒவ்வொன்றும் காருக்குள் இணைந்து முழு காராக உருவாகும் இடத்தில், ஆர்வ மிகுதியில் நகரும் பிளாட்ஃபார்ம் மீது ஏறிவிட்டான் ஸ்ரீஹன். பதறிப்போன ஹூண்டாய் அதிகாரிகளிடம், ''அங்கிள் ப்ளீஸ்... ப்ளீஸ்... நானும் கொஞ்ச தூரம் இந்த பிளாட்ஃபார்மிலேயே போறேன்!'' என்று கொஞ்சிக் கொஞ்சி அனுமதி வாங்கி, 'கார் பயணத்தில்’ இணைந்துகொண்டான் ஸ்ரீஹன்.

அசெம்பிளி லைனில் காரின் கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்து ஹாரன் அடித்தும், பவர் விண்டோ பட்டன்களை ஆன் செய்தும் ஸ்ரீஹன் சோதிக்க, ''ஹூண்டாய் அசெம்பிளி லைனில் காரைப் பரிசோதிக்கும் முதல் அதிகாரி நீதான் ஸ்ரீஹன்!'' என்று சிரித்தார் தயாரிப்புப் பிரிவு செயல் இயக்குநர் பி.எஸ்.சியோ. 54 விநாடிகளுக்கு ஒரு புத்தம் புது கார் அசெம்பிளி லைனில் இருந்து வெளியே வந்துகொண்டே இருந்தது. ''அங்கிள், சில கார்களில் ஏன் இடது கை பக்கம் ஸ்டீயரிங் இருக்கு?'' என்று ஸ்ரீஹன் கேட்க, ''அந்தக் கார்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம். அங்கே லெஃப்ட்

ஆசை : உலகின் லிட்டில் டெஸ்ட் டிரைவர்!

ஹாண்ட் டிரைவ்தானே!'' என்று விளக்கினார்  பி.எஸ்.சியோ.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தொழிற்சாலை முழுக்க சுற்றிச் சுழன்று, கேள்விகள் கேட்டுத் திணற அடித்த ஸ்ரீஹனுக்கு விடை கொடுக்க, அங்கு இருந்தவர்களுக்கு மனம் இல்லை. ஹூண்டாய் கார்களின் மினியேச்சர், சாக்லேட், பிஸ்கட் என்று ஏகப்பட்ட பரிசுப் பொருட்களைக் கொடுத்து வழி அனுப்பினார் பி.எஸ்.சியோ.  

''நான் பெரிய பையன் ஆனதும் இங்கே வந்துதான் என் ஃபர்ஸ்ட் கார் வாங்குவேன்!'' என்று வாக்குறுதி கொடுத்து 'டாட்டா’ காட்டினார் 'கார் மாஸ்டர்’ ஸ்ரீஹன்!

ஆசை : உலகின் லிட்டில் டெஸ்ட் டிரைவர்!