ஸ்பெஷல் -1
Published:Updated:

ஆங்கிலம் படித்தவர்கள் மேன்மக்களா?

ஆங்கிலம் படித்தவர்கள் மேன்மக்களா?

##~##
ண்டனில் விவாத அரங்கம், தென் ஆப்பிரிக்காவில் கவிதை வாசிப்பு, ஐ.ஐ.டி-யில் கருத்தரங்கம், புனேயில் வொர்க் ஷாப் என அறிவுலகம் எங்கும் தடம் பதிக்கிறார் மீனா கந்தசாமி. ஒடுக்கப்பட்ட தமிழர்களின் வலியை, வாழ்க்கையை ஆங்கிலத்தில் பதிவுசெய்யும் ஒரு சிலரில் குறிப்பிடத் தகுந்தவர். மொழியியலில் முனைவர் பட்டம் பெற்ற மீனாவின் கவிதைகள், ஆங்கில இலக்கிய உலகில் கவனம் ஈர்ப்பவை.

'' 'இங்கிலீஷ் படிச்சா வேலை கிடைக்கும்’ என்று கார்ப்பரேட்மன நிலையுடன்தான் இங்கு ஆங்கிலம் அணுகப்படுகிறது. ஆனால், நாம் ஆங்கிலம் படிக்க வேண்டியது இந்தக் காரணங்களுக்காக அல்ல. இந்தியாவின் அனைத்துப் பிராந்திய மொழிகளிலும் சாதியக் கறைபடிந்து இருக்கிறது. ஒருவர் 10 நிமிடங்கள் தமிழில் பேசினாலே அவரது சாதியை யூகித்துவிட முடியும். ஆங்கிலத்தில் இந்த மாதிரியான சாதியக் குறியீடுகள் எதுவும் இல்லை. அதனால்தான் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் ஆங்கிலத்தை ஆதரித்தனர். 'தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி’ என பெரியார் சொன்னதை நான் இந்தக் கோணத்தில் இருந்துதான் புரிந்துகொள்கிறேன்.

ஆங்கிலம் படித்தவர்கள் மேன்மக்களா?

சாதியக் குறியீடுகள் இல்லாத ஆங்கிலம், தமிழுக்கு வந்தபோது, அதன் மீதும் சாதியக் கறை பூசப்பட்டது. 1909 மே 12-ம் தேதி வைஸ்ராய் வளர்த்த நாயை, தெரு நாய் ஒன்று கடித்துவிட்டது. அதைப் பற்றி எழுதிய 'தமிழ் விஜயா’,'சுதேச மித்திரன்’ ஆகிய பத்திரிகைகள், 'வைஸ்ராய் வளர்த்த நாயைப் பறை நாய் கடித்துவிட்டது’ என்று மொழிபெயர்த்தன. அயோத்திதாச பண்டிதர் இதை உடனடியாகக் கண்டித்து, 'நாய்களுக்கும் சாதி உண்டு எனில், உங்கள் நாயை எப்படி அழைப்பது?’ என்று கேட்டார்.

நேரு அவர்கள், 'இந்திய சமூகத்தில் ஆங்கிலம் படித்தவர்கள் என தனி சாதி உருவாகிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது’ என்று சொன்னார். அது கொஞ்சம் கொஞ்சமாக நடந்துகொண்டு இருக்கிறது. ஆங்கிலம் படித்தவர்கள் தங்களை மேன்மக்களாக நினைத்துக்கொள்கின்றனர். அறிவும் திறமையும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறார்கள். இப்படி மொழியை புனிதமாக்கி, அறிவை ஒளித்துவைப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது. எல்லா அறிவும் எல்லோருக்கும் சொந்தம். அதனால்தான், நான் ஆங்கிலம் படிக்க வேண்டியதன் அவசியம்பற்றி தொடர்ந்து பேசி வருகிறேன். ஆனால், ஆங்கிலம் படித்த மாணவர்களின் மனநிலை என்ன?

சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி-யில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. அதில் கலந்து கொண்ட மாணவர்கள் 'சாதி தேவை இல்லை’ என்றார்கள். அவர்கள் அதற்கு சொல்லும் காரணம், 'இட ஒதுக்கீடு எங்கள் வளர்ச்சியைத் தடுக்கிறது’ என்பது. இதைவிடக் கொடுமை, உயர்சாதி மாணவர்கள் தங்களையே ஒரு 'விக்டிம்’ ஆகப் பார்க்கின்றனர்.

நான் இரண்டு ஆண்டுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தேன். வகுப்பறைக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் புழங்கும் சாதியை ஓர் ஆசிரியையாக இருந்து நான் நேரில் கண்டுள்ளேன். தமிழ் வழியில் படித்து, கல்லூரியில் சேரும் பெரும்பகுதி மாணவர்கள் தலித்களாகவே உள்ளனர். வகுப்பறையில் வெளிப்படையான ஒரு வாய்ப்பு வழங்கப்படும்போது, அதை முதலில் பயன்படுத்திக்கொள்வது உயர் சாதி மாணவர்களே. 'அதற்கு என்ன செய்ய முடியும்? வாய்ப்பு எல்லோருக்கும் வழங்கப்பட்டுவிட்டது. பயன்படுத்திக்கொள்ளாதது யார் தவறு?’ என்று இதை மேலோட்டமாக அணுக முடியாது. சம வாய்ப்பு வழங்கியது சரி, சமமான பயிற்சி வழங்கப்பட்டதா?'' எனும் மீனாவின் முதல் கவிதைத் தொகுப்பு, 'Touch’. இப்போது 'Ms.Militancy’ என்ற தொகுப்பு வெளி வந்து இருக்கிறது. காந்தியை மறுபரிசீலனை செய்யும் மீனாவின் ஆங்கிலக் கவிதை ஒன்று, அண்மையில் பெரும் விவாதங்களைக் கிளப்பியது.

''தென் ஆப்பிரிக்கத் தலைநகர் டர்பனில் உள்ள இரண்டு தெருக்களுக்கு காந்தியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் காந்தியின் மீது கொண்ட மரியாதையால் இப்படிப் பெயர் வைத்துள்ளனர். ஆனால், ஆப்பிரிக்காவின் கறுப்பின மக்கள் மீது காந்தி என்ன மதிப்பு வைத்திருந்தார்? நான் காந்தியின் வாழ்கையில் நடந்த சம்பவம் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன். 1895-ல் காந்தி டர்பனில் தங்கியிருந்தபோது, தென் ஆப்பிரிக்க அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். 'இங்குள்ள தபால் நிலையத்தில் வெள்ளையர்களுக்குத் தனி நுழைவு வாயிலும், உள்ளூர் கறுப்பினத்தவர்களுக்குத் தனி நுழைவு வாயிலும் இருக்கிறது. இவற்றில் ஆசியர்களான நாங்கள் நுழைய முடியாது. எங்களுக்குத் தனி நுழைவு வாயில் வேண்டும்’ என்று எழுதுகிறார். அடுத்த வருடம்,  அவ்வாறே அமைக்கப்படுகிறது. இதை டர்பன் மாணவர்களிடமும், அங்கு வசிக்கும் இந்தியர்களிடமும் சொன்னேன். அதிர்ச்சியுற்றார்கள்.

ஆங்கிலம் படித்தவர்கள் மேன்மக்களா?

ஆனால், இது ஆதாரபூர்வமான, யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்த உண்மைகளை உரக்கப் பேசுவதற்குப் பல காலமாக சாதாரணப் பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு பிளாட்ஃபார்ம் இல்லாமல் இருந்தது. இணையதளங்கள் அதைத் திறந்துவிட்டுள்ளன. ஃபேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க்கிங் வெப்சைட்டுகளை என்னைப்போன்ற இளைய தலைமுறையினர் அதிகம் பயன்படுத்துகிறோம். இதை ஒரு குற்றச்சாட்டாகச் சிலர் சொல்கின்றனர். பல காலங்களாக வாய்ப்பைக் கைப்பற்றி வைத்திருக்கும் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு ஏற்கெனவே வலுவான சோஷியல் நெட்வொர்க் இருக்கிறது. அவர்களுக்கு என்ன பிரச்னை? டெல்லிக்குப் போனால், சித்தப்பா இருப்பார். நியூயார்க் போனால், அத்தை இருப்பார். ஆனால், சாதாரணப் பின்னணியில் இருந்து வருபவர்கள் இன்னமும் புதிய ஊர்களில் தடுமாறித்தான் நிற்க வேண்டிஇருக்கிறது. அவர்கள் இப்படி எல்லாம்தான் தங்களுக்கான சோஷியல் நெட்வொர்க்கை உருவாக்கிக்கொள்ள முடியும்!''