Published:Updated:

பாதல் வாழ்கிறார்!

கவின் மலர்

பாதல் வாழ்கிறார்!

கவின் மலர்

Published:Updated:
##~##

மே 13 - பல மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, ஆட்சி மாற்றக் காட்சிகள் அரங்கேறிக்கொண்டு இருந்த தருணத்தில்... ஓர் அற்புதமான நாடக ஆளுமை நம்மைவிட்டுப் பிரிந்தார். பாதல் சர்க்கார் - வீதி நாடகம் என்ற பெயரை இந்தியாவெங்கும் பிரபலப்படுத்திய இவர், தனது 86-வது வயதில் கொல்கத்தாவில் காலமானார். தேர்தல் பரபரப்பில் பாதலின் மரணம் கவனிக்கப்படாமலேயே போயிற்று. ஒரு வரலாற்று ஆசிரியரின் மகனாகப் பிறந்து, சிவில் இன்ஜினீயரிங் படித்து, இங்கிலாந்து, நைஜீரியா போன்ற நாடு களில் நகர் நிர்மாண நிபுணராகப் பணியாற்றியவர் பாதல்.

நாடகங்களை வேடிக்கை பார்ப்பவர்களும் நாடகத்தில் ஓர் அங்கமாகும் தன்மை வீதி நாடகங்களில் உண்டு. இத்தகைய திறந்தவெளி நாடகங்களை இந்தியாவில் பிரபலமாக்கியவர் பாதல் சர்க்கார். முக்கியமாக, நாடகம் நிகழ்த்தப்படும் இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை உடைத்தவர் பாதல். பெரிதாக ஒப்பனைகள் ஏதும் இன்றி, கதை மாந்தர்களே நடிப்பிடத்தை உருவாக்குவது, உருவங்களை உருவாக்குவதுபோன்ற தன்மைகளே இதன் சிறப்பு. ஒளியமைப்பு, அரங்கம் என்று மெனக் கெடும் தேவை இல்லாததால், ஒரு நாடகம் உருவா வதற்கான பொருட்செலவு குறைந்தது. எல்லாவற்றையும் விட, இவை மக்கள் பிரச்னைகளைப் பேசின. சமூக சீர்திருத்தங்களை மையமாகக்கொண்டு உருவாக்கப் பட்டன. மேற்கு வங்கம் உட்பட, நாட்டின் பல பகுதிகளிலும் இவரது தாக்கத்தால் வீதி நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. பல வீதி நாடகக் குழுக்கள் உருவாகின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாதல் வாழ்கிறார்!

இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்ஸியை எதிர்த்து நாடெங்கிலும் நாடகங்கள் நிகழ்த்தப்பட முக்கியக் காரணமாக இருந்தவர் பாதல். இவரது 'பிறிதொரு இந்திரஜித்’ நாடகம் மிக அதிகமாக மொழி மாற்றம் செய்யப்பட்ட நாடகம். ஏறத்தாழ 20 நாடகங் களை இயக்கியிருக்கும் இவரது நாடக ஆக்கங்கள் நூலாகவும் வெளிவந்து இருக்கின்றன.

''கர்நாடகாவின் 'சமுதாயா’ குழுவினருடன் இணைந்து பாதல் உருவாக்கிய 'ஓ சாசானா’ என்ற நாடகத்தைப் பார்த்தது முதல், அவரது நாடகங்களால் உந்தப்பட்டு, வீதி நாடகத்தில் இணைந்தவன் நான். பாதல் இந்திய நாடக எல்லையை விஸ்தீரணப்படுத்தியவர். இந்திய நாடகத்தின் முகத்தையே எழுபதுகளில் மாற்றியமைத்து, யாரும் எவரும் நாடகம் பண்ணலாம் என்கிற நிலையை உருவாக்கியவர்!'' என்கிறார் தமிழகத்தில் 28 ஆண்டு களாக வீதி நாடகங்களை நிகழ்த்திவரும் சென்னை கலைக் குழுவின் இயக்குநர் பிரளயன்.

பாதலுக்கு 1972-ல் பத்மஸ்ரீ விருது கொடுத்துக் கௌரவித்தது மத்திய அரசு. 'சதாப்தி’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கி நடத்தி வந்தார் பாதல். 1997-ல் அரசு அவருக்கு பத்மபூஷண் விருது அளித்தபோது, ஏற்கெனவே தான் பெற்ற சாகித்ய அகாடமி விருதே ஓர் எழுத்தாளனுக்குக் கிடைக்கும் உயரிய அங்கீகாரம் என்று கூறி, பத்மபூஷணைப் பெற மறுத்தார் பாதல். தமிழகத்திலும் பல பயிற்சிப் பட்டறைகளை நடத்தி இருக்கிறார் பாதல். அவரது 'ஸ்பார்டகஸ்’, 'பிறிதொரு இந்திரஜித்’, 'ஊர்வலம்’ போன்ற நாடகங்கள் தமிழில் வரவேற்பு பெற்றவை.

'மிகப் பெரிய நாடக ஆளுமை மறைந்துவிட்டார்’ என்பதைவிட, எங்கோ தெருவோரத்தில் நடக்கும் வீதி நாடகத்தின் ஆன்மாவில் பாதல் சர்க்கார் வாழ்கிறார் என்று சொல்வதே பொருத்தம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism