Published:Updated:

சின்னக்குத்தூசி

ப.திருமாவேலன்

சின்னக்குத்தூசி

ப.திருமாவேலன்

Published:Updated:
##~##

குயில் தோப்பு பாலு, கொக்கிரக் குளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசீர்வாதம், ஆர்.ஓ. மஜாட்டோ, தெரிந்தார்க்கினியன், திட்டக்குடி அனீப், தர்மபுரி வெங்கடேஷ், வில்லேந்தி, ஆரூர் அன்புத் தம்பி, திரு ஆரூரான், கொலம்பஸ் தாத்தா, சின்னக்குத்தூசி என எத்தனையோ பெயர்களில் கட்டுரைகள் படைத்தாலும் அந்த மனிதனின் முகம் ஒன்றுதான்... நல்லவர், நாணயமானவர்!

 எல்லோரும் ஏற்றுக்கொள்பவராக எந்தப் பத்திரிகையாளரும் இருந்துவிட முடியாது. அந்தப் பத்திரிகையாளர் வடிக்கும் கட்டுரையின் தன்மை விமர்சிக்கப்படும். சின்னக்குத்தூசியின் எழுத்துகளை விமர்சிப்பவர்கள்கூட... அவரை, அவரது அப்பழுக்கு அற்ற வாழ்க்கையை, நேர்மையை விமர்சிக்க முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சின்னக்குத்தூசி

நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒருவர் வாழ்ந்தார்... வாழ முடியும் எனப் பெருமைப்படத்தக்க சின்னக்குத்தூசியைக் கடந்த ஞாயிற்றுக் கிழமை, இயற்கை நம்மிடம் இருந்து பிரித்துவிட்டது. உண்மையில், இது எல்லாப் பத்திரிகையாளன் வீட்டிலும் விழுந்த துக்கம்!

பெரியார்தான் தனது ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இவரைப் படிக்கவைத்தார். மணியம்மை, துணிமணியும் புத்தகமும் வாங்கித் தந்தார். காமராஜர், திருவாரூர் வந்தால்... 'தியாகராஜனக் கூப்பிடுன்னேன்’ என்பார். ஈ.வெ.கி.சம்பத்தும் இவரும் நகமும் சதையும்போல. அண்ணா வெளியிட்ட கண்ணீர்த் துளிகளில் இவரும் ஒருவர். கண்ணதாசனின் நெருங்கிய நண்பர். ஜெயகாந்தனும் இவரும் தமிழ் நாட்டின் பல மேடைகளில் ஒன்றாகப் பேசியவர்கள். தீபம் நா.பார்த்தசாரதி, வல்லிக் கண்ணன், கு.அழகிரிசாமி போன்ற இலக்கிய கர்த்தாக்களுடன் எப்போதும் இருப்பார். இப்படி, தமிழக அரசியல், இலக்கிய கர்த்தாக்களுடன் நெருக்கமாக இருந்தாலும், எளிமையாகவே இருந்தவர். எழுத்தை முதலீடாக வைத்துப் பிழைக்க நினைக்காதவர். அவர் அடையாளப்படுத்திக்கொண்ட தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோதுகூட, அரசு சார்பில் ஒரு வாடகை வீடுகூட கேட்டுப் பெற்றதோ... அமைச்சர்களின் வீடுகளுக்குப் போய் நின்றதோ இல்லை. திருவாரூரில் இருந்து நாலு கதர் வேட்டி சட்டையுடன் எப்படி வந்தாரோ... அப்படியே போய்விட்டார்.

மூல வியாதியால் வெம்பினார். அப்போதும்கூட உட்கார முடியாமல் நின்றுகொண்டே எழுதினார். வயிற்று வலி கொன்றது. துண்டைத் தண்ணீரில் நனைத்து வயிற்றில் கட்டிக்கொண்டு எழுதினார். தீராத ஒற்றைத் தலைவலி வந்தது. சணல் கயிற்றைத் தலையைச் சுற்றிச் கட்டிக்கொண்டு எழுதினார். நள்ளிரவில்... அதிகாலையில்... மேன்ஷனில் படுத்துக்கொண்டு... ஏன், கடைசியில் பில்ராத் மருத்துவமனையிலும்...  எழுதிக்கொண்டே இருந்து செத்துப்போனார். தங்கி இருந்த அறையில், அவர் படுக்கும் இடம் தவிர, அத்தனையும் பத்திரிகைகள், புத்தகங்கள். அந்தத் தூசியே பாதி அவரைக் கொன்றது. ஒவ்வொரு நோய்க்காகவும் மருந்து சாப்பிட ஆரம்பித்து... ஒரு கட்டத்தில், ஒரு வேளைக்கு 15 மாத்திரைகள் சாப்பிடத் தொடங்கினார். மாத்திரை, பத்திரிகை இரண்டுமே அவரது உணவாக மாறியது.

இளம் தலைமுறைப் பத்திரிகையாளர்கள் பலருக்கு அவரே தலைமை ஆசிரியர். சின்னக்குத்தூசி என்பது தமிழ்ப் பத்திரிகைப் பல்கலைக்கழகத்தின் பெயர். தனி மரம் தோப்பாகாது என்பதைப் பொய்ப்பித்தவர் குத்தூசியார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism