Published:Updated:

தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

கவின் மலர்ஓவியம் : ஸ்யாம்

தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

கவின் மலர்ஓவியம் : ஸ்யாம்

Published:Updated:
##~##

ந்தியாவின் எந்த மூலையில் மனித உரிமைகள் மீறப்பட்டாலும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து, நம் மனித உரிமை மீறல்களைத் தட்டிக்கேட்பார்கள் என்று பொதுமக்கள் நம்பிக்கொண்டு இருக்கையில், ஐ.நா-வின் சமீபத்திய செய்தி ஒன்று அதிர்ச்சி கிளப்புகிறது.

 18 ஆண்டுகளாக 'ஏ’ கிரேடு தகுதியில் இருக்கும் இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் 'பி’ கிரேடுக்குத் தகுதி இறக்கம் செய்யப்படலாம் என்பதே அந்தச் செய்தி. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போது, இந்தியா தரம் இறக்கப்பட்டு இருக்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

ஆணையத்தின் செயல்பாடுகள் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பதாக இருக்கின்றன என்று குற்றம் சாட்டுகிறது ஹென்றி டிபேன் தலைமையிலான 'தேசிய மனித உரிமை நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனி நபர்களின் அகில இந்தியக் கூட்டமைப்பு’.  

அரசின் தலையீடு இல்லாமல் தன்னிச் சையாக ஆணையம் செயல்பட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறை. ஆனால், ஆணையம் உருவாக்கப்பட்ட 1993-ன் துவக்க காலத்தில் மட்டுமே சற்றே சுதந்திரமாகச் செயல்பட ஆணையம் முயற்சித்தது. அதன் பிறகு, மனித உரிமைகள் தொடர்பான ஆக்கபூர்வமான முயற்சிகள்கூட எடுக்கப்பட வில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.

ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இருக்கிறார். அவர் அண்மைக் காலமாக ஊடகங்களில் தெரிவித்துள்ள கருத்துகளைத் தொகுத்து இந்த அறிக்கையில் அளித்துள்ளனர். 'என்கவுன்ட்டர் கொலைகள் இந்தியா வில் தவிர்க்க முடியாதவை. சட்டம் - ஒழுங்கு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. குற்றவாளிகள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்கின்றனர். காவலர்களைத் தாக்குகின்றனர். காவல் துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டி இருக்கிறது’ என்று அவர் கூறியது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதுபோலவே, மரண தண்டனைக்கு ஆதரவாகவும் அவர் கருத்து தெரிவித்து இருப்பது கண்டு மனித உரிமை ஆர்வலர்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

ஆணையத்தின் ஐந்து பேர்கொண்ட குழுவில் மூன்று பேர் நீதித் துறையில் இருந்தும், மற்ற இருவர் மனித உரிமைகள் குறித்த அறிவும், துறை யில் தனிப்பட்ட அனுபவமும்கொண்டவராக இருத்தல் வேண்டும். இதுதான் விதிமுறை.

ஆனால், அந்த இரு இடங்களுக்கும்கூட, இதுவரை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அல்லது மாநிலங்களவைச் செயலராக இருந்தவர் என்று அரசு அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு மனித உரிமைகளில் எவ்விதமான அக்கறையும் இல்லை. திட்டமிட்டு மிக ஜாக்கிரதையாக இப்படியானவர்களே பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதாகக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகிறது.

குஜராத்தின் 2002-ம் ஆண்டு மதக் கலவரங்கள், நரேந்திர மோடி அரசின் முழு ஆதரவுடன் நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தர தானாகவே முன்வந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது ஆணையம். ஆனால், தொடர்ந்து அரசிடம் இருந்து வந்த அழுத்தங்களால், ஆணையம் முடிவை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர், தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவர், எஸ்.சி/எஸ்.டி. ஆணையத்தின் தலைவர் இவர்கள் எல்லோரும் ஆணையத்தின் சிறப்பு உறுப்பினர்கள். ஆண்டுக்கு இரண்டொரு முறை இவர்களை அழைத்துக் கூட்டம் நடத்துவதோடு சரி. 'ஏன் பெண்களைச் சேர்ப்பது இல்லை?’ என்ற கேள்விக்கு, 'தேசியப் பெண்கள் ஆணையத்தின் தலைவி நமது சிறப்பு உறுப்பினராக இருக்கிறாரே’ என்று சால்ஜாப்பு பதில் மட்டுமே கிடைப்பதாக ஆதங்கப்படுகிறது இந்தக் கூட்டமைப்பு.

சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா போன்ற பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பியது யாரைத் தெரியுமா? 200 காவல் துறை யினர் புடை சூழ ஒரு காவல் துறை அதிகாரியை! மக்கள் எப்படி அவரை நம்பி உண்மையைச் சொல்வார்கள்?

''சாதாரண மக்கள் மீது சட்டத்துக்குப் புறம்பாக காவல் துறையினர் பலத்தைப் பிரயோகிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்'' என்று ஆணையத் தின் தலைவர் பேசி உள்ளார். இவ்வளவு பெரிய பரப்பளவுகொண்ட நாட்டில், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு டெல்லியைத் தவிர, வேறு இடங்களில் அலுவலகங்கள் இல்லை.

ஆணையத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டும் உண்டு. இவற்றைவிடக் கொடுமையான விஷயம்,  மனித உரிமைகள்பற்றித் தெரியாமலேயே, அது குறித்து எந்தப் பயிற்சியும் அளிக்கப்படா மலேயே ஆணையத்தில் பணியாற்றும் ஊழியர்கள்தான். யார் மேல் குற்றம் சாட்டுகிறார்களோ, அவர்களைக்கொண்டே சில சமயம் விசாரணையை நடத்தச் சொல் கிறது ஆணையம்.  

இத்தனை ஆதங்கங்களையும் உள்ளடக்கி, இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்று கோரியும், உறுப் பினர்களை நியமிப்பதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றும் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கேட்கிறது. நீதிபதிகளையும் அரசு அதிகாரிகளையும் உள்ளடக்கிய அருங்காட்சியகமாக ஆணையம் விளங்குவதாக அறிக்கை பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறது.

தேசிய மனித உரிமை நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனி நபர்களின் அகில இந்தியக் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி டிபேன் என்ன சொல்கிறார்?

''மனித உரிமை என்றால் என்ன என்கிற அடிப்படை அறிவு இல்லாதவரை எல்லாம் கொண்டுவந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்தால்   ,இப்படித்தான் ஆகும். ஏதோ இப்போதைய தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில்தான் ஆணையம் இப்படியாகிவிட்டது என்று சொல்லவில்லை. எங்களின் இந்த அறிக்கையைப் பார்த்த பிறகாவது, ஆணையத்தின் போக்கில் மாற்றம் ஏற்படுமா என்ற ஆதங்க எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம். ஆணையத்தில் 2003-க்குப் பிறகு, ஒரு தலித் உறுப்பினர்கூடக் கிடையாது. ஆனால், நாட்டில் தலித்கள் மீதுதான் அநேக வன் கொடுமைகள் அரங்கேறுகின்றன.  

நீதித் துறையிலேயே பெண்கள் அதிகம் கிடையாது. அதனால், இயல்பாகவே ஆணையத்துக்கும் பெண்களின் வரவு இல்லாமல் போகிறது. அப்படியெனில், பெண்களை உறுப்பினர்களாக ஆக்குவதற்கு என்று விசேஷமாக ஏதாவது செய்ய வேண்டாமா?

தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

திருவாரூர் மாவட்டத்தில் விட்டுக்கட்டி என்ற கிராமத்தில் மூன்று பேரைக் கொலை செய்த வழக்கு ஒன்று. அதில் ஒன்பது பேரைக் குற்றம்சாட்டியது காவல் துறை. மனித உரிமை ஆணையம் சார்பாக ஓர் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு, அந்தக் கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தப்பட்டதன்பேரில், அந்த வழக்கில் மனித உரிமைகள் மீறப்பட்டு உள்ளதைக் கண்டறிந்தோம். இந்த வழக்கில் ஆணையத்தின் தேவையற்ற காலதாமதத்தால் இன்று சாட்சிகளை விலைக்கு வாங்கும் வேலை நடந்துகொண்டு இருக்கிறது.

இதுபோலவேதான் வீரவநல்லூருக்குச் சென்ற ஆணையத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் உட்பட சிலரை, 'அரசு அதிகாரிகளாக நடித்தனர்’ என்று பொய் வழக்கு போட்டு, காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது. ஒன்பது நாட்கள் அவர்கள் சிறையில் இருந்தனர். இதிலும் விரைந்து நடவடிக்கை இல்லை. ஆணையத்தின் காலதாமதமே அவர்கள் அத்தனை நாட்கள் சிறையில் இருக்கக் காரணமானது.

மனித உரிமை ஆணையத்தின் சார்பாக உண்மை கண்டறியும் குழுவில் சென்றவர்கள் அவர்கள். அவர்களுக்கே இந்தக் கதியென்றால், சாதாரண மக்களின் நிலைமையை எண்ணிப் பாருங்கள்!'' - கொதிக்கிறார் ஹென்றி டிபேன்!

பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இருந்தது போக, வெளிப்படையாகக் குற்றச்சாட்டுகள் வைத்துவிட்ட பின்பும், ஆணையம் மௌனமாகவே இருப்பது மேலும், சந்தேகங்களுக்கே வழிவகுக்கும்!

சில அதிர்ச்சி விவரங்கள்...

''சட்டீஸ்கர் அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட சல்வா ஜுடும் குழு தண்டேவாடா பகுதியில் நூற்றுக்கும் அதிகமான பழங்குடியின மக்களைக் கொன்றழித்ததையும், அவர்களின் குடிசைகளுக் குத் தீ வைத்து சாம்பலாக்கியதையும் குறித்த வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சட்டீஸ்கர் பகுதியில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மீதான புகார்களை விசாரிக்க ஓர் உண்மை கண்டறியும் குழுவை அனுப்புமாறு மனித உரிமை ஆணையத்தைப் பணித்தது உச்ச நீதிமன்றம். ஆணையமோ காவல் துறையினர் அடங்கிய ஒரு குழுவை அனுப்பி 'தீர’ விசாரித்து ஓர் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை கொஞ்சமும் வெட்கமின்றி சல்வா ஜுடுமின் செயல்களை நியாயம் செய்வதாகவே அமைந்திருந்தது!'' என்று தனது அறிக்கை ஒன்றில் ஆதங்கத்தைப் பதிவு செய்திருக்கிறார், மறைந்த மனித உரிமை ஆர்வலர் கே.பாலகோபால்.

ணையம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் பதிவான புகார்கள் 487 மட்டுமே. ஆனால், இன்றோ நாளன்றுக்கே 400-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிகின்றன. ஒரே நாளில் 60-ல் இருந்து 80 புகார்கள் தொடர்பாக ஆணைகள் பிறப்பிக்கப் படுகின்றன. இந்தக் கணக்கின்படி பார்த்தால், ஒரு வழக்குக்கு வெறும் 30 நிமிடத்துக்கும் குறைவான நேரமே ஒதுக்கப்படுகிறது. அப்படியானால், எவ்வளவு ஆழமாக அந்த வழக்கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். பெரும்பாலான வழக்குகள் போதிய காரணமே இல்லாமல் முடிவுக்குக் கொண்டுவரப்படுகின்றன. என்ன காரணம் என்றே புரியாமல் பல வழக்குகள் ஏற்றுக்கொள்ளப்படாமல், தள்ளுபடி செய்யப்படுகின்றன. அந்த வழக்குகளின் ஆணைகள் ஒரே ஒரு வரியை மட்டும் கொண்டதாக இருப்பது இன்னும் பெரிய

தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

அதிர்ச்சி!

னித உரிமை ஆணையம் தனது ஆண்டறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்புகிறது. இந்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் ஆணையம் உள்ளதையே இது காட்டுகிறது. ஆனால், இதில் முரண் என்னவென்றால், இதே உள்துறை அமைச்சகம்தான் சட்டம்-ஒழுங்கு  போன்ற துறைகளைக் கண்காணிக்கிறது. மனித உரிமை மீறலைக் கண்காணிக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் போன்றதொரு அமைப்பை நிர்வாகம் செய்வதே உரிமை மீறலுக்குத் துணை போகும் ஓர் அமைச்சகம்தான். ஆக, தேசிய மனித உரிமை ஆணையத்தை சுதந்திரமான ஓர் அமைப்பு என்று எப்படிச் சொல்வது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism