Published:Updated:

பின்லேடனுக்குப் பின்...

டி.எல்.சஞ்சீவிகுமார்

பின்லேடனுக்குப் பின்...

டி.எல்.சஞ்சீவிகுமார்

Published:Updated:
##~##

சாமா பின்லேடனுக்குப் பின் 'அல்-கொய்தா’வின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்? அமெரிக்காவின் தலையாய கேள்வி இதுதான்! கராச்சியில் கடற்படை ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பெஷாவரில் அமெரிக்கத் தூதரகத்தின் மிக அருகே நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அல்-கொய்தா எந்த நேரத்தில் என்ன செய்யும் என்று பதைபதைத்துக்கொண்டு இருக்கிறது அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ!

 அல்-கொய்தாவின் அடுத்த தலைவர் யார்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின்லேடனுக்குப் பின்...

அல்-கொய்தாவின் ரகசியக் கூட்டம் ஒன்றில் அய்மான் அல் ஜவாஹிரி, நிதித் துறைத் தலைமை மற்றும் ராணுவத் தலைமைப் பொறுப்பை ஏற்று இருக்கிறார். உலகளாவிய ஒருங்கிணைப்புப் பணிகளையும் இவர் மேற்கொள்வார். சைஃபால் அடல் தலைமைத் தளபதியாகவும், ஃபாகாத் அல் கொய்வா செயல் தளபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அட்னன் அல் காஷ்ரியிடம் தகவல் தொடர்புத் துறை ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கான பொறுப்பு முஹம்மது நசீர் அல் வாஷி அபு நசீருக்கும், ஆஃப்கன் மற்றும் வரிசிஸ்தான் பொறுப்பு முஹம்மது ஆடம் கானிடமும் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

ஆனால், அடுத்த தலைவராக எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எதிர்காலச் செயல்பாடுகளின் அடிப்படையில், தங்கள் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க உத்தேசித்து உள்ளனர் அல்-கொய்தா தளபதிகள்!

ஆக, அடுத்த பின்லேடன் இடத்தைப் பிடிப்பதற்கான போட்டி, பயங்கரவாதச் செயல்களின் அடிப்படையிலேயே இருக்கும் என்று யூகிக்கிறது அமெரிக்கா!

இப்போதைக்கு, அந்தப் போட்டியில் நால்வர் முன்னணியில் இருக்கின்றனர். எஃப்.பி.ஐ. சொல்லும் அந்த நால்வர் பட்டியல் இதுதான்.

அய்மான் - அல் - ஜவாஹிரி. போட்டியின் முன்னணியில் இருப்பவர். எகிப்தியக் குடிமகனான இவர், எகிப்திய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை வழிநடத்தியவர். 1998-ல் அந்த அமைப்பை அல்-கொய்தாவுடன் இணைத்து அல்-கொய்தா காங்கிரஸ் என உலகளாவிய அமைப்பாக அறிவித்தார். கூடவே, இயக்கத்தின் பணத் தேவைகளையும் நிறைவேற்றினார். கடந்த ஏழு ஆண்டுகளாக இயக்கத்தின் ஆலோசகராக மட்டுமே ஒசாமா இருந்த நிலையில், ஆக்டிவ் தளபதியாக இருந்தவரும் இவரே. இப்போது, அல்-கொய்தாவின் உயர்நிலைக் குழுவான ஷ§ராவின் சீனியர் உறுப்பினர். இவர்தான் அடுத்த தலைவர் என்றே பெரும்பாலானோர் முணுமுணுத்தாலும், வளைகுடா நாடுகளில் இருக்கும் அமைப்பினர் இவரது தலைமையை ஏற்க மறுப்பதாகத் தகவல்கள்!

அடுத்து, ஒற்றைக் கண் இலியாஷ் காஷ்மீரி. பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கனில் இவரது தலைமையின் கீழ் அல்-கொய்தா இயங்குகிறது. ஆஃப்கனில் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான போரில் முக்கியப் பங்கு வகித்தவர். அப்போதைய தாக்குதல்களில் ஒரு கண்ணை இழந்தார். அல்-கொய்தாவுக்கு மிக நெருக்கமான ஹர்கத் - உல் - ஜிகாத் - அல் - இஸ்லாமியா அமைப்பின் தளபதி. இவரை, இந்திய ராணுவம் பூஞ்ச் மாவட்டத்தில், 1990-ல் கைது செய்தது. இரண்டு ஆண்டுகளில் சிறையில் இருந்து தப்பினார். 2009-ல் இவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வந்தாலும், அதை அல்-கொய்தா அப்போதே மறுத்துவிட்டது!

மூன்றாவது, சிராஜுதின் ஹக்வானி. பாகிஸ்தான், ஆஃப்கன் எல்லையோரத் தளபதிகளில் ஒருவர்.

பின்லேடனுக்குப் பின்...

கடைசியாக ஏமன் மற்றும் சவுதி அரேபியாவில் செயல்படும் அரபு தீபகற்ப அல்-கொய்தா அமைப்பின் தலைவர் நசீர் அல்வாகிஷி. இவரது தலைமையில் செயல்படுபவர்கள், அல்-கொய்தாவின் மூத்த தளபதி ஜவாஹிரியின் அதிருப்தியாளர்கள். பண விவகாரத்தால் வந்த பிரிவினையாம் இது!

அடுத்து என்ன நடக்கும்?

'பின்லேடனைக் கொல்வதற்கு உங்களுக்கு 10 ஆண்டுகள் ஆனது. நாங்கள் அமெரிக்க அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் அதிபர் சர்தாரி ஆகியோரை மூன்றே மாதங்களில் கொல்வோம்’ என்று சவால்விட்டு இருக்கிறது அல்-கொய்தா!

ஒசாமா தங்கி இருந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து, அல்-கொய்தாவின் அடுத்த கவனம் உயிரியல் ஆயுதங்களாக இருக்கும் என்று சொல்கிறது அமெரிக்கா. காரணம், பின்லேடனின் கனவுத் திட்டம் அது!

மலேசிய ராணுவத்தின் முன்னாள் கேப்டன் யாஸித் ஸுஃபாத். கலிஃபோர்னிய மாகாணப் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல்  பட்டம் பெற்ற இவர், பின்லேடனின் வலது கரமாக இருந்த ஹம்பாலி என்பவர் மூலம் பின்லேடனிடம் அறிமுகமானார். பின்லேடன் தனது உயிரியல் ஆயுதக் கனவுபற்றி யாஸித்திடம் கூற, பல ஆண்டுகளுக்கு முன்பே அதை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டதாக அமெரிக்க உளவு அமைப் பான சி.ஐ.ஏ. கூறுகிறது.

இப்போது ஒசாமாவை இழந்துவிட்ட நிலையில், மீண்டும் தங்களுடைய பலத்தை வெளிக்காட்ட ஒரு பெரிய தாக்குதலுக்கு அல்-கொய்தா தயாராகக்கூடும். அப்படி ஒரு தாக்குதல் நடந்தால், அது உயிரியல் ஆயுதத் தாக்குதலாகவே இருக்கும் என்று தன்னுடைய ராணுவத்தை எச்சரித்து இருக்கிறது அமெரிக்கா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism