Published:Updated:

5 ஸ்டார்ஸ்!

சார்லஸ், படங்கள் : என்.விவேக்

5 ஸ்டார்ஸ்!

சார்லஸ், படங்கள் : என்.விவேக்

Published:Updated:

இந்திய அளவில் பல்வேறு விளையாட்டுகளில் முத்திரை பதிக்கும் தமிழக வீராங்கனைகளைப் பற்றிய மினி டேட்டா!

சாய் சமிதா - டென்னிஸ்

5 ஸ்டார்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையில் இருந்து கிளம்பி இருக்கும் டென்னிஸ் புயல் சாய் சமிதா. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய டென்னிஸ் போட்டி யில் பட்டம் வென்றிருக்கும் இவர், ஆசியாவின் டாப் வீராங்கனைகளுள் ஒருவர். சில்ரன்ஸ் கார்டன் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி. ''இப்போது சென்னையில் ஏராளமான சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கிடைக்கும் சர்வதேச லெவல் பயிற்சி எனக்குப் பெரிய போனஸ். லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்சா வரிசையில் இப்போ சின்ன இடைவெளி இருக்கு. அதை நிரப்ப நிச்சயம் நான் பாடு படுவேன். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பது உடனடி லட்சியம்!'' என்று சிரிக்கும் சாய், சென்னையில் அனல் வெயிலிலும் ஆறு மணி நேரத்தைப் பயிற்சியில் செலவிடுகிறார்!

ரோஹிணி ராவ், பாய்மரப் படகுப் போட்டி

5 ஸ்டார்ஸ்!

ண்களை, அதுவும் இந்திய ராணுவ வீரர் களையே வீழ்த்திவிட்டு ஏழாவது முறையாக தேசிய சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ரோஹிணி ராவ். ஆண்களின் பேட்டையான பாய்மரப் படகுப் போட்டியில் உலகக் கவனம் ஈர்த்திருக்கும் ஒரே இந்தியப் பெண்! செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மாணவி. ''இந்தப் போட்டியில் அனுபவம் என்பது எல்லாம் செல்லாது. காரணம், கடல். ஒவ்வொரு நாளும் கடல் புதிதாக இருக்கும். 'இன்று அலையோட்டம் இப்படித்தான் இருக்கும், காற்று இந்தத் திசையில்தான் வீசும்’ என்று எதுவுமே சொல்ல முடியாது. இந்தியப் பெருங்கடல் ஒரு விதமாக இருந்தால், பசிபிக் பெருங்கடல் வேறு விதமாக மிரட்டும். அதனால், ஒவ்வொரு போட்டியுமே த்ரில் திகில்தான்!'' எனும் ரோஹிணிக்கு ஒலிம்பிக் பதக்கம்தான் லட்சியம்!

அனகா அலங்காமணி - ஸ்குவாஷ்

5 ஸ்டார்ஸ்!

ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பாலிக்கல் போன்ற சீனியர்களைத் தாண்டி, சர்வதேச அடையாளம் பெற்று இருப்பது அனகா அலங்காமணியின் அசகாய சாதனை. இரண்டு வருடங்களுக்கு முன் தனது 14-வது வயதில் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் வென்றது சர்வதேச முத்திரை. ''டென்னிஸ் விளையாடிவிட்டு, பிறகு ஸ்குவாஷ் பக்கம் திரும்பியவள் நான். டென்னிஸ்போல முகத்துக்கு நேரே எதிராளி இல்லாமல், ஸ்குவாஷில் பக்கவாட்டில் நின்று விளையாடியதால் ரொம்பவே திணறிவிட்டேன். எகிப்து ப்ளேயர்கள்தான் ஸ்குவாஷில் நம்பர் ஒன். அவர்களின் தேசிய விளையாட்டான இதில் தோற்பதை தேசிய அவமானமாகக் கருதுவார்கள். அவர்களுடன் மோதும்போதுதான் வெறி என்றால் என்னவென்று எனக்குப் புரிந்தது. நானும் வெறியோடு விளையாட ஆரம்பித்தேன். பதக்கங்கள் என்னைத் தேடி வர ஆரம்பித்தன!''

ஆர்த்தி - ஸ்கேட்டிங்

5 ஸ்டார்ஸ்!

ந்தியாவின் நம்பர் ஒன் ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஆர்த்தி கஸ்தூரிராஜ். ஏழு வயதில் 'ஸ்கேட்ட’த் துவங்கிய ஆர்த்தியிடம் குவிந்து இருக்கும் 92 பதக்கங்களுக்குள் 77 தங்கப் பதக்கங்கள் ஆகும். சர்வதேச ஐஸ் ஸ்கேட்டிங்கிலும் பதக்கம் தட்டி இருக்கிறார். ''உலகின் டாப் ஸ்கேட்டர்ஸ் பலரும் கலந்துகொண்ட 2009-ம் ஆண்டு சீன மாரத்தான் ரேஸ் போட்டியில் நான் 10-வது இடம்தான் பிடித்தேன். ஆனால், அந்தப் போட்டிதான் உண்மையான ஸ்கேட்டிங்கை எனக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவில் சிமென்ட் டிராக்குகளில்தான் பயிற்சி செய்ய வேண்டி இருக்கிறது. கீழே விழுந்தால் நிச்சயம் அடிபடும். கால்களையும் நன்றாகச் சாய்த்து வேகமாக ஓட்ட க்ரிப் கிடைக்காது. அதனால், வெளிநாடுகளில் இருக்கும் செம ஸ்மூத் பாலியூரித்தின் டிராக்குகளில் பயிற்சி பெறுபவர்கள் நம்மை எளிதாகத் தோற்கடித்துவிடுகிறார்கள். அவர்களுக்கும் நமக்கும் ஒன்று அல்லது இரண்டு விநாடிகள்தான் வேக வித்தியாசம் இருக்கும். ஆனால், இந்தப் போட்டியில் ஒரு மைக்ரோ விநாடிகூட நம் வாழ்க்கையையே புரட்டிப் போடும்!''

எம்.ராகவி - நீச்சல்

5 ஸ்டார்ஸ்!

பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் இந்தியாவின் நம்பர்-1 நீச்சல் வீராங்கனை ராகவி. டெல்லி காமென்வெல்த் போட்டிகளுக்குத் தேர்வான ஒரே தமிழக நீச்சல் வீராங்கனை இவர் மட்டுமே! இதுவரை 200-க்கும் மேற்பட்ட பதக்கங்களை அள்ளிக் குவித்த ராகவியின் சென்னை அயோத்தியா நகர் வீட்டில், அந்த மெடல்களை வைக்கக்கூட இடம் இல்லை. அப்பா, சென்னை மாநகராட்சியின் துப்புரவுப் பிரிவு மேஸ்திரி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ராகவியின் திறமையைக் கண்டு இவரைத் தத்து எடுத்திருக்கிறார் நீச்சல் வீரர் அக்னீஷ்வரின் தந்தை ஜெயப்பிரகாஷ். ''நடக்கப் பழகும்போதே நீச்சலும் பழகிட்டேன். தினமும் ஆறு மணி நேரமாவது நீந்திட்டே இருப்பேன். இதனால் ஆயிரக்கணக்கில் கலோரிகள் எரியும். அதை ஈடுகட்ட நிறைய சத்தான சாப்பாடு சாப்பிடணும். பயிற்சிக்கும், சாப்பாட்டுக்குமே நிறைய செலவாகும். பொதுவாக, வறுமையான குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை இப்படிச் செலவழிச்சு விளையாடவைக்க மாட்டாங்க. ஆனா, என் அப்பா என்னைக் கஷ்டப்பட்டு படிக்கவைத்ததோடு, நீச்சல் போட்டிகளிலும் கலந்துகொள்ள உற்சாகப்படுத்தினார். ஒலிம்பிக்கில் நான் பதக்கம் ஜெயிக்கணும்னு அப்பாவுக்கு ஆசை. அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism