Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹேய்...ஹேய்...இன்னைக்கு இவருக்கு பர்த்டே...விஷ் பண்ணுங்க! #HBDkarthik

'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் மீசையில்லா கிச்சாவாக அறிமுகமான நடிகர் கார்த்திக்குக்கு இன்று பிறந்தநாள். தமிழ்நாட்டின் ஜாம்பவான் இயக்குநர்கள் அத்தனைப் பேர் கையினாலும் மோதிரக் குட்டு வாங்கிய திறமைசாலி நடிகர் என்று இவரைச் சொல்லலாம். ஆரம்பத்தில் விடலைத்தனமான கேரக்டர்களிலேயே நடித்து வந்தாலும் இவருக்கான திருப்புமுனை தந்தது இயக்குநர் மணிரத்னம்.  

தேசியவிருது பெற்ற 'மெளன ராகம்' படத்தின் ஹீரோ கார்த்திக் அல்ல. படத்தில் வெறும் அரைமணி நேரம் மட்டுமே வரும் மனோ என்ற அந்த கதாபாத்திரம் படம் முழுவதும் ஆக்ரமித்தது மட்டுமன்றி தமிழ்நாட்டு மக்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்றது. துள்ளலும் துடிப்பும் நிறைந்த கேரக்டர் என்றாலே நடிகர் கார்த்திக்தான் என்று அப்போதைய இளசுகளின் மனதில் அசையா இடம் பெற்றிருந்தார். படத்தில் வரும் 'சந்திரமெளலி...மிஸ்டர் சந்திரமெளலி' வசனம் அப்போதைய ட்ரெண்ட்.

திரையில் தோன்றியதுமே பார்வையாளர்கள் மனதில் கரன்ட் பாய்ச்சுவதில் கார்த்திக்கின் உடல் மொழியும் நடிப்பும் இருந்தன. உதாரணத்துக்கு 'அக்னிநட்சத்திரம்' படத்தில் பிரபுவும் ஒரு ஹீரோ என்றாலும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப ரொமான்ஸையும் இறுக்கமாகத்தான் வெளிப்படுத்துவார். ஆனால் கார்த்திக்கோ அவரின் வயதுக்கேற்ப நண்பர்களுடன் ஜாலி அரட்டை, திருட்டுத்தனமாக நிரோஷா வீட்டு நீச்சல் குளத்துக்குள் வந்து ஐ லவ் யூ சொல்வது என்று படத்தின் அக்னி வெப்பத்தைக் குறைக்கும் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருப்பார். அவ்வளவு ஏன்... இன்றும் இளைஞர்கள் ஹார்ட் பீட்டில் ட்ரம்ஸ் வாசிக்கும் ' ராஜா... ராஜாதி ராஜனிந்த ராஜா' பாடலுக்கு கார்த்திக்கின் டான்ஸ் ஸ்டெப்ஸ் அப்போதைய இளைஞர்களின் ரிதமிக் பாடி லாங்குவேஜ்.

'வருசம் 16' படம் இயக்குநர் ஃபாசிலுக்கு விசிட்டிங் கார்டு மட்டுமல்ல. கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வரும் கார்த்திக்கை தங்கள் வீட்டுப் பிள்ளையாக ஒவ்வொரு குடும்பமும் நினைக்க வைத்தது அந்தப் படம்தான். குடும்பத்தின் மீதான பாசம், குஷ்புவின் மீதான காதல் என்று எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருப்பார் கார்த்திக். 

'கிழக்கு வாசல்' படம் இப்போது பார்த்தால் பல லாஜிக் மிஸ்டேக்ஸும் அபத்தங்களும் கண்ணுக்குப் படலாம். ஆனால் அப்போதும் சரி இப்போதும் சரி கார்த்திக்  ஏற்று நடித்த பொன்னுரங்கம் கதாபாத்திரத்தைக் குறை சொல்ல முடியாது. தன் அம்மாவின் மரணத்துக்கு குஷ்புவின் அப்பாதான் காரணம் என்பதை அறிந்ததும் கொள்ளிவைத்த கையோடு அழுகையும் ஆத்திரமுமாய் அவரிடம் சென்று தன் பக்க நியாயத்தைக் கூறும் காட்சியில் நடிப்பில் மிரட்டியிருப்பார்.

காதல் நாயகனாகவே கலக்கி வந்த கார்த்திக்கின் சினிமா வரலாற்றில் அவரின் 'அமரன்' பெரும் திருப்புமுனை. படம் முழுதும் மிக ஸ்டைலிஷான டானாகப் பிரமாதப்படுத்தியிருப்பார் கார்த்திக்.

ஒளிப்பதிவாளர் பி.சி ஶ்ரீராமின் கேமராவில் அதிகம் சிக்கியவர் கார்த்திக்தான். 'மெளன ராகம்'. 'அக்னி நட்சத்திரம்', 'அமரன்', 'கோபுர வாசலிலே', 'இதயத் தாமரை' என அவரின் ஒளிப்பதிவில் ஐந்து படங்களின் ஹீரோ இவர்.

'அமரன்' படத்தில் 'வெத்தல போட்ட ஷோக்குல' பாடல் முலம் பாடகராகவும் அறியப்பட்டவர் கார்த்திக். அந்தப் பாடல் தமிழ் சினிமாவுக்கான முதல் கானா எனச் சொல்லலாம். அப்புறமும் தேவா, இளையராஜா இசையமைப்பில் பாடல்கள் பாடினார்.

சிட்டியில் மட்டுமின்றி கிராமத்து ஹீரோவாய் இவர் நடித்த படங்களின் வெற்றி அனைத்து சென்டர்களிலும் இவரை நெருக்கமான ஸ்டாராக மாற்றியது. 'பாண்டி நாட்டுத் தங்கம்', 'பெரிய வீட்டுப் பண்ணக்காரன்', 'பொன்னுமணி' போன்ற படங்கள் உதாரணம்.

தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு கார்த்திக் படங்களில் ஒரு தேக்கநிலை தென்பட்டது. கிட்டத்தட்ட இரண்டாவது இன்னிங்ஸாக தன் வெற்றிப்பயணத்தைத் தொடர காரணமாக அமைந்தது சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா'. காமெடி கலகலப்பில் வெள்ளிவிழா கொண்டாடியது படம்.  கார்த்திக் கவுண்டமணி காமெடி பலே ஹிட்டாக தொடர்ந்து இந்தக் கூட்டணி 'மேட்டுக்குடி'. 'உனக்காக எல்லாம் உனக்காக' என்று வெற்றிப்படங்களைத் தந்தன.

தன் மகன் கெளதம் ஹீரோவாக வந்தபின்னும்  நடிப்பில் தன்னை அசைக்க ஆள் இல்லை என நிரூபித்தார் 'அநேகன்' படத்தில். தனுஷுக்கு வில்லனாக வந்தாலும் பழைய சார்மிங் குறையாத கார்த்திக் வில்லனாகவும் மக்கள் மனதுக்கு பிடித்தவராய் போனார்.  

மிக சுமாராகப் போன படங்களிலும் கார்த்திக் நடிப்பு எவ்விதக் குறையுமின்றி பேசப்பட்டது. நவரச நாயகன் என்ற பட்டத்திற்கு கொஞ்சமும் குறையாத நடிகர் கார்த்திக்குக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறுவோம்.

-கணேசகுமாரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement