ஸ்பெஷல் -1
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

##~##

•  குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளில் பனிச் சறுக்குப் போட்டியில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை லிண்ட்ஸே வோன்தான் இப்போது உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை. மரியா ஷரபோவாவுக்கு மவுசு போனதால், லிண்ட்ஸேவை பிராண்ட் அம்பாசடர் ஆக்குவதற்காக க்யூவில் நிற்கின்றன பல நிறுவனங்கள். எக்ஸ்ட்ராவாக ஹாலிவுட் படங்களிலும் தலை காட்டிக் கல்லா கட்டுகிறார் லிண்ட்ஸே. அடுத்ததா பணச் சறுக்கு விளையாடுவீங்களோ?

•  கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் ஹீரோயின்... அமலா பால்! மைனாவின் கைவசம், ஆறு படங்கள். விக்ரமுடன் இரண்டு. சித்தார்த், ஆர்யாவோடு தலா ஒன்று என டாப் ஹீரோக்களோடு ஜோடி போடும் அமலா, 'களவாணி’ சற்குணம் மற்றும் பாண்டிராஜின் அடுத்த படங்களிலும் நடிக்க இருக்கிறார். மைனா... மைனா!

• சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'உருமி’ படம்தான் இதுவரை வெளிவந்த மலையாளப் படங்களிலேயே ஹை பட்ஜெட் படம். இந்தியாவில் முதன்முதலில் காலடி எடுத்துவைத்து காலனி ஆட்சிக்கு வழி வகுத்த வாஸ்கோடகாமாவை உள்ளூர் மக்கள் எப்படிக் கொலை செய்தார்கள் என்பதுதான் படத்தின் கதை. இதில் வித்யா பாலன், ஜெனிலியா, தபு மூவருமே போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சி காட்டியிருக்கிறார்கள்! தபு ஆன்ட்டி யும் டஃப் கொடுக்குறாங்களே!

இன்பாக்ஸ்

•  இந்த ஆண்டின் டாப் டென் விளையாட்டுத் தருணங்களைப் பட்டியல் இட்டது டைம் பத்திரிகை. 'ஒருநாள்’ போட்டியில் சச்சின் 200 ரன்கள் எடுத்ததும் டாப் லிஸ்ட்டில் அடக்கம். 'உலகம் முழுவதும் இருக்கும் 150 கோடி கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் இது’ என்று சச்சினின் சாதனையைக் குறிப்பிட்டு இருக்கிறது டைம் பத்திரிகை. இது சச்சின் டைம்!

இன்பாக்ஸ்

• ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டியில் உரையாற்ற முடியாமல் அவமானத்தோடு இலங்கை திரும்பிய மகிந்தா ராஜபக்ஷேவுக்கு இன்னொரு அடியைக் கொடுத்தது இங்கிலாந்து. இங்கிலாந்துக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவை நியமித்தார் ராஜபக்ஷே. 'வேறு யாரையாவது பரிந்துரையுங்கள்’ என ராஜபக்ஷேவின் ஆர்டரைத் திருப்பி அனுப்பியது இங்கிலாந்து. போர்க் குற்றங்களில் வசந்தவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதே காரணம். வெல்டன் லண்டன்!

• போயஸ் கார்டன் இல்லத்தில் சிம்பிளாக நடந்து முடிந்தது ரஜினியின் அறுபதாம் கல்யாணம். கமல்ஹாசன், எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம் என ஆரம்ப காலம் தொட்டு ரஜினியுடன் நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். புல்லாங்குழல் இசைக் கலைஞரான ராகவேந்திரா, தொடர்ந்து தனது புல்லாங்குழலில் கர்னாடக இசையைக் காற்றில் கரைய விட்டுக்கொண்டு இருந்தார். ரஜினி வீட்டில் இருக்கும் கிருஷ்ணர் சிலை, இந்த புல்லாங்குழல் இசையைக் கேட்டு உயிர்பெற்று, வீட்டுக்கு சுபிக்ஷம் அளிக்கும் என்பது ரஜினி குடும்பத்தாரின் நம்பிக்கையாம். கல்யாணத்துக்குக் கொடுக்கப்படும் சீர் வரிசைகள் போலவே பெரிய வேனில் இருந்து மெத்தை, கட்டில், டி.வி போன்ற பொருட்களும் வந்திறங்கியதுதான் ஸ்பெஷல்! நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்...

இன்பாக்ஸ்

• கனடா நாட்டின் உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்று அசத்தினார் ஜூனிதா நாதன் என்னும் ஈழத் தமிழ்ப் பெண். மார்கம் என்கிற பகுதியில் வெற்றி பெற்ற ஜூனிதா, திருக்குறள் புத்தகத்தில் கைவைத்து பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டர். 'வாழ்வின் நெறிகளையும், கல்வியின் பெருமைகளையும், நீதியையும், திருக்குறளைத் தவிர வேறு எந்தப் புத்தகமும் சிறப்பாகச் சொல்லவில்லை. அதனால்தான் திருக்குறள் சாட்சியுடன் பதவி ஏற்றுக்கொண்டேன்’ என்று விளக்கமும் தந்தார். அழகிய தமிழ் மகள்!

இன்பாக்ஸ்

•  இந்தியத் தொழிலதிபர் அருண் நய்யாரின் மனைவியும், ஹாலிவுட் நடிகையும் ஆன எலிசபெத் ஹர்லி, ஷேன் வார்னேவுடன் இங்கிலீஷ் கிஸ் அடிக்கும் படங்களால், இப்போது வலையில் செம அலை. இணையத்தில் படங்கள் லீக் ஆன சில மணி நேரத்திலேயே, 'அருண் நய்யாரிடம் இருந்து நான் மூன்று மாதங்களுக்கு முன்பே பிரிந்துவிட்டேன். இது என் நண்பர்களுக்குத் தெரியும்’ என்று டைவர்ஸ் செய்தியை ட்வீட் செய்தார் எலிசபெத் ஹர்லி. 'ஸ்பின்’னிட்டீங்க!

இன்பாக்ஸ்

• முட்டுக்காடு அருகே 'பேரடைஸ் ஹோம்’ நிறுவனத்தின் 19-வது வருட ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் தமிழ் சினிமா ஹீரோ - ஹீரோயின்களுக்கு நிகராகக் கலக்கல் டான்ஸ் ஆடிய அத்தனை பேரும் மனநலம் குன்றியவர்கள். பாட்டு, நடனம் என்று அசாத்தியத் திறமைகளால் அசத்தும் இந்த பேரடைஸ் ஹோமில் இருப்பவர்களை அன்போடு கவனித்துக்கொள்கிறார் சங்கீதா கோபாலன். இவர் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி. அன்பாலே அழகான இல்லம்!

இன்பாக்ஸ்

• கடலோரக் காவல் துறை, பள்ளிக் குழந்தைகளுக்காக நடத்தும் 'கடற்படைப் புதிர் போட்டி 2010’ சிஜி கப்பலில் இந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்றது. புதிர் போட்டிக்கு இடையே 'கடல் பூதங்கள்’ என்ற சிறு நகைச்சுவை நாடகத்தையும் நடத்தி மாணவர்களை மகிழ்வித்தார்கள் கடற் படை அதிகாரிகள். வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்து உற்சாகப்படுத்தியது விகடன் நிறுவனம். தாத்தா... பரிசு தா தா!

இன்பாக்ஸ்

• பார்வையற்றவர்கள் முன்பெல்லாம் தேர்வுகளை 'ஸ்க்ரைப்’ என்னும் உதவியாளர்களின் துணையுடன் எழுதி வந்தார்கள். அதில், மாணவர்கள் சொல்வதை அப்படியே 'ஸ்க்ரைப்’கள் எழுதுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்தது. அந்தக் குறையைப் போக்க, பார்வையற்றவர்கள் கணிப் பொறியில் தேர்வு எழுதும் 'அசிஸ்டிவ் டெக்னாலஜி’ ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார், சென்னை லயோலா கல்லூரியைச் சேர்ந்த கணினித் துறை விரிவுரையாளர் ஜெரால்ட் இனிகோ. இதற்காக அவருக்கு 'கம்ப்யூட்டர் சொஸைட்டி ஆஃப் இந்தியா’ விருது அளித்துக் கௌரவித்து இருக்கிறது. வெரிகுட்!