Published:Updated:

எம்.எஃப்.ஹுசேன்

நா.கதிர்வேலன்ஓவியம் : மருது

##~##

ந்தியாவின் மகத்தான கலை ஆளுமைகளில் ஒருவரான எம்.எஃப்.ஹுசேன் மறைவு குறித்துத் தனது அஞ்சலியை இங்கே பதிவுசெய்கிறார் ஓவியர் மருது.

 ''யதேச்சையாக தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டு இருந்தேன். 'எம்.எஃப்.ஹுசேன் மரணம்!’ என்ற செய்தி பார்த்து மனம் துணுக்குற்றது. என் மனம் அவரைப்பற்றிய நினைவலைகளில் நீந்தத் தொடங்கியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மதுரை கோரிப்பாளையம், ராவுத்தர்களின் குதிரைகள் நிறைந்த பகுதி. அங்கு பிறந்து வளர்ந்தவன் நான். ஹுசேனுக்கும் குதிரைகள் மீது தீராக் காதலும் அன்பும் எப்போதும் இருந்தது. 1967-ல் எனது பள்ளி இறுதி நாட்களில் 'இல்லஸ்ட்ரேடட் வீக்லி’யில் வெளியான அவரது படத்தின் மூலம்தான் ஹுசேன் எனக்கு அறிமுகமானார். 'Through the eye of a painter’ என்று அவர் எடுத்துக்கொண்டு இருந்த சினிமாவுக்காக, வியூ ஃபைண்டர் பார்த்துக்கொண்டு இருந்த படம் அது. அவரது வசீகரத்தில் நான் இழுக்கப்பட்டு இருந்தேன். பின்னாட்களில், அந்தப் படம் பெர்லின் திரைப்பட விழாவில் 'தங்கக் கரடி’ விருது பெற்றது. நான் எனது சீனியர்கள் ஆதிமூலம், ரெட்டப்ப நாயுடு, ராஜேந்திரன், வீரசந்தானம் ஆகியோரோடு 'வீவர்ஸ் சர்வீஸ் சென்ட’ரில் ஹுசேனைப் பார்த்தபோது, அந்த வசீகரம் கூடி இருந்தது. முழுமையற்ற ஆங்கிலமும் இந்தியும் கலந்து பேசினாலும், தன் மீது பெரும் நம்பிக்கையுடன் அவர் வெளிப்படுத்திய உடல்மொழியைப் பெரிதும் ரசித்தேன்.

எம்.எஃப்.ஹுசேன்

பேனர் வரைகிற முதல் முயற்சியில் இருந்து இவ்வளவு உயரத்துக்கு வருவதற்கு அவரது சந்தேகமற்ற, தீர்க்கமான, தெளிவான, பயமற்ற, வீரியமான கோடுகளே காரணம். ஹுசேன் மிகக் குறைந்த கோடுகளின் சலனத்தின் மூலம் தன் படைப்பை முழுமைப்படுத்திய மேதை. அபரிமிதமான அழகும் ஆற்றலும் அதிர்வும்கொண்டவை அவரது கோடுகள். தேர்ந்த ஓவியர்களின் ஓவியங்களைப் பார்த்து கேன்வாஷில் பிரதியெடுக்கும் பல இந்திய நவீன ஓவியர்களுக்கு மத்தியில் அசலான கோடுகளுக்குச் சொந்தக்காரராக கடைசி வரை இருந்தார் ஹுசேன். இந்தியக் கிராமங்களின் அடையாளமான குடையையும் அரிக்கேன் விளக்கையும் ஒரு குறியீடாக அவரது ஆரம்ப கால ஓவியங்களில் வைத்திருந்தார். பல்வேறு சமூக நிகழ்வுகளைப்பற்றிய பிரதிபலிப்பு உரத்ததாகவும் தெளிவாகவும் அவரிடம் இருந்து வரும். அவரது ஓவியங்களில் அந்த எதிர்ப்பைக் காட்டிக்கொண்டே இருந்தார். எதற்காகவும் அவர் அஞ்சிய வராக எப்போதும் இருந்தது இல்லை. அவரது ஓவியங்கள் நேரடி வாழ்வைக் கொண்டாடுகிற வண்ணக் கோவைகளோடு இருந்தன. இந்தியக் கதை மரபுகளிலும் இதிகாசங்களிலும் ஆழ்ந்த பரிச்சயம் அவருக்கு இருந்தது. எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் அவர் மக்களோடு நெருங்கியே நின்றார். அவரது ஓவியங்களின் எதாவது ஒரு சாயலையாவது, வண்ணத்தையாவது, தன்னுடைய ஓவிய அனுபவத்துடன் அடையாளப்படுத்திப் பார்க்காத ஓர் இந்திய ஓவியன் இருக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை. அவரது ஓவியங்களில் வாய்ப்பாடுகளுக்கு இடம் இல்லை. அவரது விரல்களில் இருந்து கோடுகள் தானாகவே வந்தன. அவரது ஓவியங்கள் மிக உயரிய விலைக்கு விற்கப்பட்டன.

ஆனால், அந்த மகத்தான கலைஞனை மதவாத அரசியலின் கோரப் பிடியில் சிக்கவைத்தோம் நாம். இந்திய மண்ணைவிட்டு அவர் வெளியேறினார். இங்கு அவர் ஒரு முஸ்லிமாகப் பிறந்ததுதான் அவர் செய்த ஒரே குற்றம். அவரைத் தொந்தரவு செய்தால், அது செய்தியாகும் என்பது பலருக்கும் தெரிந்திருந்தது. மூத்த கலைஞர்களும் மனிதநேயர்களும் மீண்டும் அவரை இந்திய மண்ணுக்குக் கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஹுசேன் ஏற்கவில்லை. ஒரு பெரிய குற்ற உணர்வை நம் மீது சுமத்திவிட்டு, அவர் கோடுகளோடு கலந்துவிட்டார்!