Published:Updated:

''பல நூறு ஆனந்த்கள் வருவாங்க!''

சார்லஸ்

''பல நூறு ஆனந்த்கள் வருவாங்க!''

சார்லஸ்

Published:Updated:
##~##

விஸ்வநாதன் ஆனந்த்... இப்போது உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார். ஆனந்த்-அருணா தம்பதியின் 14 ஆண்டு காலத் திருமண வாழ்வில் புதிதாக ஓர் ஜூனியர் ஆனந்த்... அகில். புது வரவு தந்த உற்சாகம் அருணாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் எதிரொலிக்கிறது. ''ஏப்ரல் 9-ம் தேதி அகில் பிறந்தார். எங்க ரெண்டு பேர் பேருமே 'அ’வில் ஆரம்பிக்கிறதால, குழந்தை பேரையும் 'அ’வில் ஆரம்பிக்கிற மாதிரி அகில்னு வெச்சோம். அகில் நேரத்துக்கு ஏத்த மாதிரி நான் என்னை மாத்திக்கிட்டேன். ஆனந்துக்கு இப்போ அகில்தான் உலகம். ஆனந்த் ஃபாரின் போனாலும், வெப்காம் மூலமா அகில் பண்ற சேட்டைகளைப் பார்த்துட்டே இருப்பார்'' - அருணா பேசிக்கொண்டே இருக்க, ஆனந்த் ரசித்துச் சிரிக்கிறார்.

ஆனந்திடம் பேசினோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தொடர்ந்து நாலு வருஷமா உலக சாம்பியன் பட்டம் உங்ககிட்ட இருக்கு. அடுத்த வருஷம் பட்டத்தைத் தக்கவைக்க கடுமையா போராடணுமே?''

''அடுத்த வருஷம் போரிஸ் கெல்ஃபண்டுடன் மோதணும். அதுக்கு இப்போ இருந்தே ரெடியாகிட்டு இருக்கேன். பொதுவா, ஒரு துறையில் அனுபவம் வந்துட்டா, ஈஸியா ஜெயிக்கலாம்னு சொல்வாங்க. செஸ் விஷயத்தில் அது உண்மை இல்லை. இங்கே ஒவ்வொரு ஆட்டத்திலும் எதாவது ஒண்ணு புதுசா இருக்கும். அது எனக்குப் புதுப் பாடமா இருக்கும். அடுத்த வருஷமும் உலக சாம்பியன் ஆகணும்னு ஆசைப்படுறேன். பார்க்கலாம்!''

''பல நூறு ஆனந்த்கள் வருவாங்க!''

''அடுத்த ஆனந்த் யார்?''

''இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத்தான் அதிக நேரத்தைச் செலவழிச்சுட்டு இருக்கேன். இந்தியா முழுக்க 8,000 பள்ளிகளில் என்.ஐ.ஐ.டி-யுடன் இணைந்து 'மைண்ட் சாம்பியன்ஸ்’ங்கிற பேர்ல செஸ் போட்டிகள் நடத்திட்டு இருக்கோம். சரியான நேரத்தில்... பல நூறு ஆனந்த்கள் வருவாங்க!''

''உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும்போது, 'நீங்கள் இந்தியரே இல்லை’னு சர்ச்சையைக்  கிளப்பினாங்களே... அந்தச் சம்பவம் உங்களைக் காயப்படுத்துச்சா?''

''நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். இந்தியாவுக்காகத்தான் பல வருஷமா விளையாட் டிட்டு இருக்கேன். இந்திய பாஸ்போர்ட்தான் வெச்சிருக்கேன். என் மனைவி சென்னையில்தான் இருக்காங்க. அப்படி இருக்கும்போது, 'நான் இந்தியன் கிடையாது!’ன்னு யாரோ ஒருத்தருக்குச் சந்தேகம் வந்திருக்கு. அந்தப் பிரச்னையை நான் அப்போதே மறந்துட்டேன். அந்த சம்பவம் என்னைக் காயப்படுத்தவே இல்லை!''

''செஸ் போர்டில் ஒரு முடிவு எடுக்க நீங்கள் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள். நிஜ வாழ்க்கையில் எப்படி?''

''ஹா...ஹா... செஸ் ஒரு விளையாட்டு. ஆனால், வாழ்க்கையில் அதுபோல் இருக்க முடியாது. பெர்சனல் வாழ்க்கையில் அனைத்துமே இன்ஸ்டன்ட்தான்!''

''உங்கள் விளையாட்டு மூளை சம்பந்தப்பட்டது. மனம் ஏதேதோ கணக்குப் போட்டுக்கொண்டே இருக்கும். உங்களை எப்படித்தான் ரிலாக்ஸ் செய்துகொள்கிறீர்கள்?''

''மியூஸிக்தான். நிறையப் பாடல்கள் கேட்பேன். குறிப்பாக, பழைய தமிழ்ப் பாடல்கள். அதுவும், இளையராஜாவின் இசை என்றால், ரொம்பப் பிடிக்கும்!''

''சமீபத்தில் உங்களைச் சிரிக்கவெச்ச சம்பவம் எது?''

''கொஞ்ச நாள் முன்னாடி, சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்துட்டு இருந்தேன். ஒரு லேடி என்னைப் பார்த்துக்கிட்டே வந்தாங்க. அவர் என்கிட்ட பேசப் போறார்னு தெரிஞ்சது. செக்யூரிட்டி கேட்டைத் தாண்டி வந்ததும், தடதடன்னு ஓடி வந்தார். என் பக்கத்துல வந்து, 'சார் நீங்க கடைசியா நடிச்ச படம் சூப்பரா இருந்துச்சு!’ன்னு சொல்லிட்டு கை கொடுத்தார். என்னால் சிரிப்பை அடக்க முடியலை. டி.வி-யில் வர்ற எல்லாரையுமே நடிகர்னுதான் நினைப்பாங்கபோல!''