வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (03/01/2017)

கடைசி தொடர்பு:18:37 (07/01/2017)

''என் உலகின் ஜன்னலாக கிடைத்திருக்கிறார் என் கணவர்!’’ - பாடகி வைக்கம் விஜயலட்சுமி உருக்கம்

கணவர்

பார்வையற்ற தனக்கு கணவர் வடிவில் தற்போது கடவுள் கண்களை அளித்துள்ளதாக பிரபல பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வைக்கம் என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறவியிலேயே பார்வையற்றவர். முரளீதரன் - விமலா தம்பதியரின் ஒரே மகள் விஜயலட்சுமி. 'கடவுள் ஒன்றை பறித்தால் பிறிதொன்றில் அளவற்றத் திறமையை கொடுப்பான்' என்று சொல்வார்கள். விஜயலட்சுமிக்கு பார்வையை பறித்த கடவுள் 'குயில் ' போன்ற குரலைக் கொடுத்திருக்கிறார். விஜயலட்சுமி வைக்கத்தில் பிறந்தாலும் இளம் வயதிலேயே சென்னைக்கு குடி பெயர்ந்து விட்டார்.பிரபல இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.வி, இளையராஜாவின் பாடல்கள்தான் விஜயலட்சுமியின் குரல் வளத்துக்கு மேலும் தீனி போட்டு வளர்த்தன.

விஜயலட்சுமியின் மானசீக குரு யேசுதாஸ். ஆறாவது வயதிலேயே  விஜயலட்சுமி தனது குருநாதர் ஜேசுதாசைச் சந்தித்தார். சிறு வயதிலேயே தேர்ந்த பாடகர்கள் பாடுவதற்கும் கடினமான தோடி, பைரவி போன்ற அதிசய ராகங்களில் விஜயலட்சுமியிடம் இருந்த ஞானத்தைக் கண்டு ஜேசுதாஸ் வியப்படைந்தார்.குழந்தை விஜயலட்சுமியை ஆசிர்வதித்தார்.  திரைப்படத்துறைக்குள் நுழைவதற்கு முன், சென்னையில் மட்டும் 400 சபாக்களில் விஜயலட்சுமி பாடியுள்ளார். 

கடந்த 2013-ம் ஆண்டு பிரிதிவிராஜ் நடிப்பில் வெளி வந்த 'செல்லுலாயிட்'  மலையாளப் படத்தில் 'காற்றே காற்றே ' என்ற பாடலை முதன்முறையாக விஜயலட்சுமி பாடினார். இந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அடுத்து மலையாளத்தில் சில பாடல்கள். தமிழில் 'குக்கூ ' படத்தில் 'கோடயில' என்ற பாடலைப் பாடினார். தமிழில் 'பட்டதாரி ' படத்தில் 'சிங்கிள் சிம்முதான் நானடா' என்ற பாடலும் சக்கைப் போடு போட்டது. டூயட் பாடலுக்கும் தனது குரல் பொருந்தும் என்று இந்த பாடல் வழியாக விஜயட்லசுமி நிரூபித்தார். தமிழைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் இமான் விஜயலட்சுமிக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தார். என்னமோ ஏதோ, வெள்ளைக்காரத் துரை, ரோமியோ ஜூலியட், வீர சிவாஜி போன்ற பல படங்களில் இமானின் இசையில் விஜயலட்சுமி பாடியுள்ளார். பாகுபலி படத்தில் கீரவாணி இசையில் ‘யாரு இவன் யாரு இவன்’ பாடல் இவர் குரலில் வேறு ஸ்டைலில் ஒலித்தது!

சாதிப்பதற்கு எதுவும் தடையில்லை என நிரூபித்ததுடன், தனது குரலோடு குணத்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர் விஜயலட்சுமி. தனது குரல்வளத்தை முறையாக பயன்படுத்தி தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து பாடிவருகிறார் . தற்போது 35 வயதான விஜயலட்சுமிக்கும் கேரளத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோசுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் 13-ம் தேதி இவர்களது நிச்சயம் நடைபெற்றது. வரும் மார்ச் 29-ம் தேதி விஜயலட்சுமிக்கும் சந்தோசுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில் தனது வருங்கால கணவர் குறித்து விஜயலட்சுமி மனம் திறந்து கூறியிருப்பதாவது, ''எனது மனதில் ஒரு விஷயம் எப்போதுமே இருந்து வந்தது. ‘என்னைப் போன்ற கண் பார்வையற்ற ஒருவரை யாராவது திருமணம் செய்து கொள்வார்களா?’ என்ற எண்ணம்தான் அது. இப்போது ஒரு மனிதர்  வந்திருக்கிறார். எனது அத்தனை பலவீனங்களையும் அறிந்து கொண்ட ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்துள்ளார். எனக்கு திருமணம் நடைபெற வேண்டுமென எனது பெற்றோர் வைக்கத்தான் கோயிலில் வேண்டாத நாளில்லை. இப்போது அது நிறைவேறியிருக்கிறது. கண் பார்வையற்ற எனக்கு இப்போது கணவர் வடிவில் கடவுள் கண்களை அளித்துள்ளான்'' என நெகிழ்வுடன் கூறியிருக்கிறார். 

விஜயலட்சுமியின் வருங்கால கணவர் சந்தோஷ், ''விஜயலட்சுமியை மனைவியாக பெற தவம் செய்திருக்க வேண்டும்'' என்கிறார். '' எனது 6 வயதில் தந்தையை இழந்தேன். எனது தாயையும் இழந்தேன். தனிமையின் வலி எனக்குத் தெரியும். கடவுள் அருள், வலி, இசை இந்த மூன்றும்தான் எங்களை இணைத்திருக்க வேண்டும். விஜயலட்சுமியை மனைவியாக பெற பாக்கியம் செய்திருக்க வேண்டும்'' எனக் கூறுகிறார் பெருமிதத்துடன்..!

- எம். குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்