Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

•  மைக்கேல் ஜாக்சனின் இரண்டாவது நினைவு தினத்தை ஓட்டி, அவரது சகோதரி ஜேனட் ஜாக்சன் நடத்திய  டூயட் மியூஸிக் ஷோ அமெரிக்காவில் மகா மெகா ஹிட் அடித்திருக்கிறது. ஜேனட் ஒரிஜினலாகவும் மைக்கேல் விர்ச்சுவலாகவும் தோன்றும் இந்த நிகழ்ச்சியைக் காண முண்டியடிக்கிறதாம் ஜாக்சன் ரசிகர் கூட்டம். ஜாக்சன் இறந்து இரண்டு வருடமானாலும் ஆயிரம் டாலர்!

•  முதல் அமைச்சராகி இரண்டு மாதங்கள் கழித்து, அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கி இருக்கிறார் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி. ஜோதிடர்களின் அறிவுரையே இவ்வளவு தாமதத்துக்குக் காரணமாம். பாஸ், நீங்க எங்கேயோ போய்ட்டீங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்
##~##

•  இளம் பெண்கள் கடத்தலுக்கு எதிராகப் போராடிவரும் நேபாளப் பெண் சாரிமாயா தமாங்குக்கு 2011-ம் ஆண்டின் 'ஹீரோ விருது’ அளித்துக் கௌரவித்து இருக்கிறது அமெரிக்க அரசு. 16 வயதில் இந்தியாவுக்குக் கடத்தப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு, பின்னர் இந்திய அரசால் மீட்கப்பட்டவர் சாரிமாயா. பாதிக்கப்பட்ட 15 நேபாளப் பெண்களோடு இணைந்து 'ஷக்தி சுமஹா’ என்கிற அமைப்பைத் துவக்கி இதுவரை 1,000-த்துக்கும் மேற்பட்ட இளம்பெண்களைக் கடத்தலில் இருந்து காப்பாற்றி இருக்கிறார் சாரிமாயா. சாரிமாயாவுக்கு வந்தனம்!

•  ''இந்திய உளவு நிறுவனமான 'ரா’வின் சதியால்தான் நானும் ஃபொன்சேகாவும் எதிரிகளானோம்!'' என்று இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளிடம் பேசி இருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே. '' 'விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றதால் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவுக்கு மக்களிடையே ஆதரவு பெருகி இருப்பதாகவும், ஃபொன்சேகா ராணுவப் புரட்சி செய்து ஆட்சியைப் பிடிப்பார்’ என்றும் என்னை எச்சரித்தது. தேர்தலில் என்னைத் தோற்கடிக்கவும் இந்திய உளவு நிறுவனம் வேலை பார்த்தது!'' என்று குற்றம் சாட்டிஇருக்கிறார் ராஜபக்ஷே. உளவுத் துறை அளவுக்கு நீங்க வொர்த் இல்லையே?

இன்பாக்ஸ்

•  கம்மல்கள் சேகரிப்புதான் வித்யாபாலனுக்குப் பொழுதுபோக்கு. எங்கே, எப்போது ஷாப்பிங் போனாலும் விதவிதமான டிசைன்களில் கம்மல்கள் வாங்கிவிடுவார். இப்போது அவரிடம் இருக்கும் காஸ்ட்லி கம்மல்களின் எண்ணிக்கை 575. விக்கலு, தும்மலு, இருமலு, கம்மலு இதை யாரும் தடுக்க முடியாது!

•  மூத்த அமைச்சர்கள் சிலர் பற்றி பிரதமரிடம் புலம்பி இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ''மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அவரது அலுவலகத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டதற்கு நான்தான் காரணம் என்கிறார். ஓட்டு எண்ணிக்கையில் மோசடி செய்து நான் வெற்றி பெற்றதாக ஜெயலலிதா சொன்னதற்கு மூத்த தலைவர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. என்னைச் சுற்றி இருப்பவர்களே எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்!'' என்று சிங்கிடம் முறையிட்டிருக்கிறார் சிவகங்கைச் சிங்கம். அதுசரி... சிங் யார்கிட்டே புலம்புவாரு?

•  'மாண்டலின் ராஜேஷ§டன் காதல் முடிந்துவிட்டது!’ என அறிவித்து இருக்கும் மீரா ஜாஸ்மின், மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார். ''ஹீரோயின் வேடம் என்று இல்லை. எந்த நல்ல கேரக்டராக இருந்தாலும் நடிக்கத் தயார்!'' என்கிறார். ரா... ரா... மீரா!

இன்பாக்ஸ்

•  இதுவரை 12 தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்று இருக்கும் 'I am Kalam’ படக் குழுவை இங்கிலாந்து அரண்மனைக்கு அழைத்து இருக்கிறார் இளவரசர் சார்லஸ். விரைவில் பக்கிங் ஹாம் திரையில் சார்லஸுக்குத் திரையிடப்பட இருக்கிறது இந்தப் படம். அப்துல் கலாமின் பேச்சால் ஈர்க்கப்பட்டு படிக்கப் போராடும் சிறுவனின் வாழ்க்கைதான் கதை. சலாம் கலாம்!

இன்பாக்ஸ்

•  அன்னை தெரசாவுக்குப் பிறகு, இந்தியாவில் இருந்து அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார் கௌஹாத்தி ஆர்ச் பிஷப் தாமஸ் மெனம்பரப்பில். வட கிழக்கு இந்தியாவில் பிரிவினைவாதிகள் மற்றும் மக்களிடையே அமைதி ஏற்பட பல ஆண்டுகளாகப் போராடி வருபவர் இந்த தாமஸ் மெனம்பரப்பில். அன்னைக்குப் பின் அய்யா!

இன்பாக்ஸ்

•  இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் உடனான காதலை மறுத்து வந்த ஜெனிலியா, சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற பாலிவுட் விருது விழாவில் அவருடன் கைகோத்து நடந்து வந்தார். அதோடு, புகைப்படங்களுக்கும் ஜோடியாக நின்று போஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்கள். இருக்குற ஒண்ணை எவ்வளவு நாளைக்கு இல்லைன்னு சொல்ல முடியும்?

இன்பாக்ஸ்

• தனது முதல் தயாரிப்பான 'லகான்’ படம் வெளிவந்து 10 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை பார்ட்டி வைத்துக் கொண்டாடினார் அமீர் கான். அதற்கு அவரது முன்னாள் மனைவி ரீனாவும் வந்திருந்தார். '' 'லகான்’ படம் உருவாகக் காரணமாக இருந்தவர் ரீனாதான். சினிமா பற்றிய எந்த முன் அனுபவமும் இல்லாமல் 'லகான்’ படத்தின் தயாரிப்பை அற்புதமாகக் கையாண்டார்!'' என்று அப்போது கண்கலங்கி இருக்கிறார் அமீர். அதே 'லகான்’ படத்தில் மூன்றாவது துணை இயக்குநராகப் பணிபுரிந்த கிரண் ராவ்தான் இப்போது அமீரின் மனைவி. லகானை விட்டுட்டீங்களே ரீனா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism