ஏப்ரல் 14-ல் எந்திரன் 2.0 டீஸர்?

 

 

ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2.0. இது முன்னர் வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். கடந்தாண்டு வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்குக் கிடைத்த அதிரடியான வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14, 2017 அன்று இந்த படத்தின் டீஸர்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் எந்திரன் 2.0 படத்தை, இந்த ஆண்டு தீபாவளியன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

 

 

விக்ரம் நடித்த ஐ படத்திற்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படம், சூப்பர் ஸ்டாரை வைத்து ஏற்கெனவே ஹிட் கொடுத்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தின் சீக்வல், 3டி படம் எனப்பல அம்சங்களை உள்ளடக்கிய இப்படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாயை நெருங்கிவிட்டது. எனவே இப்போதைக்கு அதிகப் பொருட்செலவில் உருவான இந்தியப் படம் என்ற பெருமையைத் தட்டிச்சென்றிருக்கிறது எந்திரன் 2.0. லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ரஜினிக்கு இணையான ரோல் அக்‌ஷய் குமாருக்கு உள்ளது. அது வில்லன் கதாப்பாத்திரமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எந்திரன் 2.0 படத்தின் வசனத்துக்காக, முதல்முறையாக ஷங்கருடன் கைகோர்க்கிறார் ஜெயமோகன். 

 

 

ஷங்கர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், ரசூல் பூக்குட்டி என பெரிய டீம் இருப்பது அசூர பலம். இதுதவிர 3டியில் உருவாக்கப்படும் 2.0 படத்தில் ஐயன் மேன், அவென்ஜர்ஸ் போன்ற படங்களில் வேலை பார்த்த லிகசி எஃபெக்ட்ஸ் நிறுவனம் அனிமட்ரானிக்ஸை கவனித்துக்கொள்ள, ட்ரான் படத்துக்கு காஸ்ட்யூம்ஸ் தயார் செய்த மேரி.இ.வோட் 2.0-ல் இணைகிறார். டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ஆக்‌ஷன் இயக்குனர் கென்னி பேட்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸுக்கு லைஃப் ஆஃப் பை புகழ் ஜான் ஹியூஸ் என இவர்கள் ஒன்றாக இணைந்து பட்டையைக் கிளப்பப் போவது உறுதி!

 

 

3டி தொழில்நுட்பக் கேமிராவில் படமாக்கப்பட்டுவருவதால், இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்திவருகின்றனர். அதாவது, ஒரே காட்சியை இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனராம், அதன்பின்  இரண்டு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் தனித்தனியே கிராஃபிக்ஸ் செய்து காட்சியை உருவாக்கிவருகின்றனர். அதுபோல, ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும் காட்சிகளும், உடனுக்குடன் கிராஃபிக்ஸ் வேலையையும் முடித்துவிடுகிறதாம் படக்குழு. 3-டி டெக்னிக்கல் முறை என்பதால், ரஜினியின் உடல் ஏற்கனவே ஸ்கேன் செய்யப்பட்டது அறிந்ததே. 

 

 

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் என இப்படம் சார்ந்து வெளியிடப்படும் அத்தனையும் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகுமளவிற்கு எதிர்பார்ப்பு பெருத்துக் கிடக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மட்டுமில்லாமல், ஆங்கிலம், சைனீஸ் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் இப்படம் வெளியாகவிருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது. சீன மக்கள் 3-டி பட வெறியர்கள். சீனாவிலும் ஜப்பானிலும் இருக்கும் ஏகப்பட்ட 3டி தியேட்டர்களிலும் ‘2.0’ ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக அந்த நாடுகளில் ஆங்கிலத்தில் படத்தை டப் செய்து வெளியிடப் போகிறார்களாம். சூப்பர்ஸ்டார் படம் வெளியானாலே பட்டாசு கொளுத்தும் ரசிகர்கள், 3டி தீபாவளியை எதிர்நோக்கி இப்பவே வீ ஆர் வெயிட்டிங்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!