Published:Updated:

தில்ஷன்!

சமஸ், படங்கள் : என்.விவேக்

தில்ஷன்!

சமஸ், படங்கள் : என்.விவேக்

Published:Updated:
##~##

''அதிகாரம் இருப்பதாலேயே, ராணுவத்தால் கொல்லவும் கற்பழிக்கவும் முடியுமா?'' - ஆயுதப் படைகளின் அத்துமீறல்கள் தொடர்பான ஒரு வழக்கில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி இது. சரியாக 18 நாட்களுக்குள் தமிழகத்தில் இருந்து அதற்கான பதிலைச் 'சுடச்சுட’ அளித்திருக்கிறார்கள் ராணுவத்தினர்!

 சென்னையின் எளிய குடும்பங்களில் ஒன்று குமாரின் குடும்பம். குமார், ஒரு கூலித் தொழிலாளி. இரு மகன்கள், ஒரு மகள். கடந்த சில ஆண்டுகளாகவே குமாரின் வாழ்வில் அடுத்தடுத்து அடிகள். நீரிழிவு நோயால் கால்கள் பாதிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சைக்கு குமார் அனுமதிக்கப்பட்டதில், ஒரு லட்ச

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தில்ஷன்!

ரூபாய் கடனில் சிக்கி இருந்தது குமாரின் குடும்பம். அவருடைய மனைவி கலைவாணிதான் மெரினா கடற்கரையில் குப்பை பொறுக்கி, குடும்பத்தின் வயிற்றை நிரப்பி இருக்கிறார். ஒரு கட்டத்தில்கடனும் வட்டியும் சேர்ந்து நெருக்க... படிப்பை நிறுத்தி பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி இருக்கிறார். குமாரின் இரண்டாவது மகனான 13 வயது தில்ஷன் வேலைக்கு அனுப்ப நேர்ந்த சூழலை அவனுடைய பக்கத்து வீட்டுப் பெண்கள் இப்படித்தான் சொல்கிறார்கள்!

''எப்பவும் வேலை வேலைன்னு அலைவான் புள்ளை. அன்னிக்கு ஞாயித்துக் கிழமை. 'வெளையாண்டுட்டு வர்றேன்’னு போனான். கொஞ்ச நேரந்தான் இருக்கும். கூடப் போன புள்ளைங்க, 'தில்ஷன் அண்ணனைச் சுட்டுட்டாங்க’னு கதறிக்கிட்டே ஓடி வந்தாங்க. போறதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சுட்டானுக பாவிங்க!'' என்கிறார் கலைவாணி.

அன்றைய தினம் தில்ஷனின் விளையாட்டு... வாதாங்காய் வேட்டை. சஞ்சய், பிரவீன் என்ற இரு பொடியன்களோடு வாதாங்காய் பொறுக்கச் சென்று இருக்கிறான் தில்ஷன். அந்த ராணுவக் குடியிருப்பு, தீவுத் திடலின் எதிரே பிரதான சாலையை ஒட்டி இருக்கிறது. சுற்றுச் சுவரில் இருந்து தொட்டுவிடக் கூடிய தூரத்தில் வாதாம் மரங்கள். தில்ஷன் குடியிருப்புக்குள் சென்று வாதாங்காய்களைப் பொறுக்கி சஞ்சயிடம் தர, அவன் பிரவீனிடம் தர, ஒன்று, இரண்டு, மூன்று என்று அடுக்கி எண்ணிவைத்து இருக்கிறான் பிரவீன்.

தில்ஷன்!

''அப்ப ஒருத்தரு கார்ல வந்தாரு. 'டேய்... வெளியே போங்கடா’ன்னு துரத்துனாரு. வெளியே ஓடியாந்தோம். டமால்னு சத்தம். ஓடிப் போய்ப் பார்த்தா, தில்ஷன் அண்ணன் மண்டையில இருந்து ரத்தம் வழிஞ்சுது. காதுல புகை வந்தது. 'அம்மாட்ட சொல்லுங்கடா’னு தில்ஷன் அண்ணன் அலறுச்சு!'' என்று அரண்டு மிரண்டு பேசுகிறார்கள் சஞ்சயும் பிரவீனும்.

ஒரு வாதாங்காய்க்கான விலை... ஒரு மனித உயிரா?

ராணுவம் மறுக்கிறது. ''நடந்தது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். ஆனால், சிறுவனைச் சுட்டவர்கள் ராணுவத்தினர் இல்லை. காவல் பணியில் இருந்தவர்களிடம் துப்பாக்கியே கிடையாது!'' என்கிறார் ராணுவ அதிகாரி சசி நாயர்.

ஆனால், சம்பவ இடத்தில் இருந்த சிறுவர்கள் சொல்லும் தகவல்கள், காவல் துறையினரின் விசாரணை, பிரேதப் பரிசோதனை முடிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு தெளிவான படம் கிடைக்கிறது. நடந்தது ஒரு கொலை. அதைத் திட்டமிட்டு மறைக்கவும் செய்து இருக்கிறார்கள். சிறுவனின் தலையில் குண்டு துளைத்த இடம், ஓடவிட்டு சிறுவனைக் கொன்றதற்கான சாத்தியங்களைச் சொல்கிறது. சிறுவன் கீழே விழுந்த இடத்தில் ரத்தக் கறைகளை உடனடியாக அழித்து இருக்கிறார்கள். சிறுவனின் சடலம் மீது இலைகளைப் போட்டு மூடி இருக்கிறார்கள். தடயங்களை அழித்ததன் மூலம் கதையையே மாற்ற முயன்று இருக் கிறார்கள். இவ்வளவும் பட்டப் பகலில் 24 மணி நேரமும் ராணுவத்தினரால் காவல் காக்கப்படும் ஒரு பகுதியில் ராணுவத்தின ருக்குத் தெரியாமல் நடந்து இருக்கிறது என்றால், அதைவிட ஓர் அபத்தம் வேறு எதுவும் இல்லை!

தில்ஷன்!

''குடிமக்களுடனான உறவை எப்படிப் பராமரிப்பது என்பதே நம்முடைய ராணுவத்தினருக்குத் தெரியவில்லை. மனித உயிரின் மதிப்பு, மனித உரிமைகளின் முக்கியத்துவம்... எதுவுமே அவர்களுக்கு ஒரு பொருட்டு இல்லை. இந்தச் சம்பவமும் அதைத்தான் மீண்டும் உணர்த்துகிறது!'' என்கிறார் பி.யு.சி.எல். அமைப்பின் தேசியச் செயலர் வி. சுரேஷ்.

தில்ஷன்!

இந்தப் பகுதி மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் உள்ள உறவு ஒரு வகையில் நெருக்கமானது, ஒரு வகையில் சிக்கலானது! 'பாதுகாக்கப்பட்ட பகுதி’ என்று குறிப்பிடப்பட்டாலும், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி அல்ல இது. இன்னும் சொல்லப்போனால், பெரும்பாலும் குடியிருப்புப் பகுதிதான். ராணுவத்தினரின் குடியிருப்புக்கான சுற்றுச் சுவரை ஒட்டி குடிசைப் பகுதி இருக்கிறது. ராணுவ அதிகாரிகளுக்கு எடுபிடிகளாக வேலை பார்ப்பது இங்குள்ள ஆண்கள். ராணுவத்தினரின் வீட்டு வேலைகளைப் பார்ப்பது இங்குள்ள பெண்கள். ராணுவத்தினர் கோல்ஃப் விளையாடினால், பந்து பொறுக்கிப் போடுபவர்கள் இங்குள்ள சிறுவர்கள். இதனால், ராணுவத்தினரின் குடியிருப்புப் பகுதிக்குள் இந்தப் பகுதியினர் சென்று வருவது சகஜம்தான். ஆனால், ராணுவத்தினர் எந்த நேரத்தில் எப்படி இருப்பார்கள் என்பது மட்டும் யாராலும் கணிக்க முடியாது என்கிறார்கள் குடிசைப் பகுதி மக்கள்.

''ஒருநாள் கோல்ஃப் பந்து பொறுக்கக் கூப்பிட்டுப் போய், காசு கொடுப்பாங்க. மறு நாள், அவங்களே பாதையில் மறிச்சு, பளார் பளார்னு அறைவாங்க!'' என்கிறான் சிறுவன் தமிழ்.

''கிரிக்கெட் பந்து, குடியிருப்புக்குள் போயிட்டுதுன்னு எடுக்கப் போனதுக்காக, கரன்ட் ஷாக் எல்லாம் வாங்கி இருக்கோம்ணா!'' என்கிறான் சிறுவன் பிரேம்குமார்.

''இதாவது பரவாயில்லை. ஒய்.எம்.சி.ஏ. பள்ளிக்கூடத்துலதான் இங்கே உள்ள எல்லாரும் படிக்குறது. பள்ளிக்கூடத்துக்கு ஆர்மிக்காரங்க ஏரியா வழியாத்தான் போவணும். பள்ளிக்கூடம் போற பசங்க ளைத் துரத்திவுடுறது, பொம்பளைப் புள்ளைங்களைப் பிடிச்சு வம்பு வளர்க்குறதுனு எல்லா சேட்டையும் பண்ணுவாங்க. ஆனா, அவங்களை எதிர்த்து என்ன பண்ண முடியும்!'' என்கிறான் சிறுவன் ராஜசேகர்.

ராணுவத்தினரின் அத்துமீறல்கள் இவ்வளவு நாட்கள் வெளியே வராமல் இருக்கக் காரணம் அவர்கள் மீதான மதிப்பும் பயமும். தில்ஷனின் மரணம் இரண்டையுமே முடிவுக்குக் கொண்டுவந்து இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism