‘சுகப்பிரசவ பரவசத்தை விவரிக்க வார்த்தை இல்லை!’ - நடிகர் ஆரியின் மனைவி நதியா

Aari

காதல்ல ஆரம்பிச்சு அப்பாவானது வரைக்கும் எல்லாமே மேஜிக் தான்!. நதியாவோட வடிவானத் தமிழைக் கேட்டுக்கிட்டே இருக்கலாம். அவங்க பேசுற தமிழைப் போலவே அவங்களும் அவ்ளோ அழகு’ தன் காதல் மனைவியை கையில் ஏந்துகிறார் நடிகர் ஆரி. எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் ஆரி, தற்போது சுகப்பிரசவம் மூலம் மகள் பிறந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்.

‘மாலை நேரத்து மயக்கம், நெடுஞ்சாலை, மாயா, உன்னோடு கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ஆரி. சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு எழுச்சிப் போராட்டத்தில் ஆரம்பம் முதல் கடைசி நாள் வரை களத்தில் நின்று உரிமைக் குரல் எழுப்பி, கைது செய்யப்பட்டவர் என்பது இவரது சமீபத்திய ஹாட் டாபிக்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து ’நாகேஷ் திரையரங்கம்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஆரி,  லண்டனில் இருக்கும் தன் மனைவியின் பிரசவத் தேதியை ஒட்டி மார்ச் மாதம் லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென பிப்ரவரி 5 ஆம் தேதியன்றே குழந்தை பிறந்துவிட்ட தகவல் கிடைக்க, செம குஷி ஆனார் ஆரி.

aari

‘‘டெலிவரி தேதிக்கு கொஞ்சம் முன்னே போகலாம்னு ப்ளான் பண்ணினேன். ஆனா குட்டிப்பொண்ணு சீக்கிரமே பிறந்துட்டாங்க. குழந்தையை இன்குபேட்டர்ல வச்சிருக்குறதா சொன்னாங்க. போட்டோ எடுக்கக் கூடாதுனு வீட்ல சென்டிமெண்ட். அதனால இன்னும்கூட குழந்தையோட முகத்தைப் பாக்கலை. ஷூட்டிங் முடிச்சிட்டு எப்ப லண்டன் போவோம்னு காத்துட்டு இருக்கேன். பாப்பா பிறந்த அந்த அழகான தருணத்தை நான் சொல்றதை என் மனைவி சொன்னா நல்லா இருக்கும்'' என லண்டனில் இருக்கும் அவர் மனைவி நதியாவை நம்மோடு செல்போன் மூலமாகப் பேச வைத்தார்.

லண்டனில் இருக்கும் நதியா, ஆரி இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் அறிமுகம் கிடைக்க, அந்த நட்பு காதலாக மலர்ந்தது. கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சிறிது காலம் ஆரியுடன் இந்தியாவில் இருந்த நதியா மீண்டும், லண்டன் செல்ல வேண்டி இருந்ததால் தற்போது அங்கிருக்கும் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இனி நதியாவின் குரலில்,

aari

‘‘குழந்தை சுகப்பிரசவம் ஆகணும்னு நான் வேண்டாத கடவுள் இல்லை. மார்ச் மாதம்தான் பிரசவ தேதி கொடுத்திருந்தாங்க. அதனால் வலி வந்தப்ப கூட அதைப் பொய் வலிதானு நினைச்சேன். ஆனா, நேரமாக ஆக வலி அதிகமானதும் உடனடியா மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்க. எனக்கு பிரசவம் நடக்கும் நேரத்தில் ஆரி என் கூட இருக்கணும்னு அவ்ளோ ஆசைப்பட்டேன். ஆனா திடீர்னு வலி வந்ததால ஆரி கூட இருக்க முடியலை. அவரையும் நினைச்சிக்கிட்டே கடவுளை வேண்டினேன். நாங்க எதிர்ப்பார்த்த மாதிரியே குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்துட்டாங்க. இன்னும் ஒரு மாசத்துக்கு மேல அவகாசம் இருந்தும் இவ்ளோ சீக்கிரம் வருவானு நான் எதிர்பாக்கல. ஒரு தாயா பிரசவம் எவ்ளோ புனிதமானதுனு உணர்ந்த தருணம் அது. அப்பா வந்து அவளை வரவேற்கறதுக்கு பதிலா, இப்ப அவ தான் அவங்க அப்பாவை வரவேற்கப் போறாங்க. ஆரியைப் போலவே கண்ணு, கலர் என்னை மாதிரி. போட்டோ எடுத்துக் கூட அவருக்கு அனுப்ப முடியலை. பாப்பவை நேர்ல பாக்கணும்னு அவரும் காத்துட்டு இருக்கார். நாங்களும் காத்துட்டு இருக்கோம்’’ படபடவென பரவசத்தைப் பகிர்கிறார் நதியா.

பட்டுப் பாப்பாவுக்கு என்ன பெயர் வைக்கலாம் எனக் கவிதையாய் யோசிக்கிறார் ஆரி!

- பொன்.விமலா
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!