வெளியிடப்பட்ட நேரம்: 08:38 (03/03/2017)

கடைசி தொடர்பு:08:38 (03/03/2017)

இயற்கையின் இதயத்தைத் தேடும் மோனாவின் சாகசப் பயணம்! #Moana

மோனா

அது கருப்பின பழங்குடிகள் வசிக்கும் ஒரு தீவு. அந்தத் தீவின் குட்டி இளவரசி மோனா. அவளுக்குக் கடல் மீது இனம்புரியாத ஈர்ப்பு. கடல் அவளை ‘உள்ளே வா’ என்று அழைத்துக்கொண்டிருப்பது போலவே ஒரு பிரமை. கடல் ஏன் அவளை மட்டும் தேர்ந்தெடுத்து அழைக்கிறது? அது என்ன ரகசியத்தை வைத்திருக்கிறது? அதன் பின்னணி என்ன? - இவற்றுக்கான பதில்களை அறிய, பல நூறு வருடங்களுக்கு முன்பு அங்கு நிகழ்ந்த பழைய வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம்.

கடல் மட்டுமே இருந்த காலகட்டம் அது. நிலம் ஒரு கருணை மிகுந்த பெண் தெய்வமாக தோன்றுகிறது. அதன் பெயர் 'டி பிட்டி'. மனிதர்கள் மகிழ்ச்சியாக வசிப்பதற்காகப் பல தீவுகளை உருவாக்கி அளிக்கிறது. கடலில் உள்ள இதர தீயசக்திகள், அதன் இதயத்தைத் திருடுவதற்காக திட்டமிடுகின்றன. அதன் மூலம் தங்களுக்கும் படைக்கும் சக்தி கிடைக்கும் என்பது அவற்றின் நோக்கம். இந்தத் திருடர்களின் வரிசையில் ஒரு பயில்வானும் இருக்கிறான். அவன் பெயர் 'மவ்வி'. கடவுள் அளித்த சில சக்திகளைப் பெற்றவன். அவனிடம் உள்ள சக்தி வாய்ந்த மீன்கொக்கியின் மூலம் நினைத்த உருவங்களை அவனால் சட்டென மாற்றிக்கொள்ள முடியும். இந்த பயில்வான், பெண் தெய்வத்தின் இதயத்தைத் திருடிவிடுகிறான். வெற்றி மகிழ்ச்சியுடன் திரும்பும்போது, ஒரு நெருப்பு அரக்கன் வழிமறிக்கிறான். இருவருக்குள் நடக்கும் பயங்கரமான சண்டையில்,  இதயம் கடலுக்குள் விழுந்துவிடுகிறது. கூடவே, மவ்வியின் மீன்கொக்கியும். அதற்குப் பிறகு எந்தத் தகவலும் இல்லை.

கடலில் உள்ள தீயசக்திகள், துர்தேவதைகள் எல்லாம் அந்த இதயத்தைத் தேடி கடலுக்குள் அலைந்துகொண்டே இருக்கின்றன. இதனால், ஒவ்வொரு தீவாக அழிந்துகொண்டே வருகிறது. பறிக்கப்பட்ட இதயம் பெண் தெய்வத்தின் உடலில் பொருத்தப்பட்டால்தான், தீவுகள் அதன் இயல்புக்குத் திரும்பும். இல்லையென்றால் கூண்டோடு கைலாசம்தான். இதையெல்லாம் மோனாவின் பாட்டி, கதையாக குழந்தைகளுக்கு சொல்கிறாள். மற்ற குழந்தைகள் நடுங்கும்போது மோனாவுக்கு மட்டும் சந்தோஷமாக இருக்கிறது. 'எக்காரணத்தைக் கொண்டும் கடலின் பகுதியை தாண்டிச் செல்லக் கூடாது. அது ஆபத்து, தீவில் இருப்பதுதான் பாதுகாப்பானது' என எச்சரிக்கிறார் மோனாவின் தந்தை. அவர்தான் அந்தத் தீவின் தலைவர்.

ஒரு நாள்... மோனா கடல் பகுதியில் நின்றுகொண்டிருக்கும்போது நீர் விலகி, கடல் அவளை உள்ளே அழைக்கிறது. அது அவளுடன் விளையாடிவிட்டு, பெண் தெய்வத்தின் இதயத்தை அளிக்கிறது. அதற்குள் மோனாவின் தந்தை பதற்றத்துடன் அங்கே வந்து அழைத்துச் சென்றுவிடுகிறார். இதயம் தவறி கடலுக்குள் விழுகிறது. மோனா அதை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே செல்கிறாள்.

இப்போது... மோனா கொஞ்சம் வளர்ந்துவிட்டாள். தீவின் அடுத்த தலைவியாக அவள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சூழல். 'இந்தத் தீவுக்கு நீ தொடர்ந்து நல்லது செய்ய வேண்டும்' என்று அவளது தந்தை உபதேசிக்கிறார். அப்போது, தீவில் சில தீய மாற்றங்கள் ஏற்படுகின்றன. தேங்காய்கள் அழுகிவிடுகின்றன. பூக்களும் செடிகளும் கருகுகின்றன. கடல் பகுதியில் மீன்கள் வருவதில்லை. தீவு மக்கள் கவலை அடைகிறார்கள். மோனாவின் பாட்டி சொல்கிறார். 'இதுதான் சரியான சமயம் மோனா, கடல் உன்னைதான் தேர்ந்தெடுத்திருக்கிறது. போ, எப்படியாவது இந்த இதயத்தைத் தெய்வத்தின் உடலில் பொருத்திவிடு. இந்தத் தீவையும் உலகத்தையும் காப்பாற்று'

மோனா

தந்தையின் எச்சரிக்கையையும் மீறி கடலுக்குள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறாள் சிறுமியான மோனா. அவள் முதலில் பயில்வான் மவ்வியை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவனுடைய உதவியுடன்தான் கடல் பயணத்தை மேற்கொள்ள முடியும். வழியில் உள்ள தீயசக்திகளின் ஆபத்துக்களை முறியடித்து, பெண் தெய்வத்தை அடைய வேண்டும். மோனா மவ்வியைக் கண்டுபிடித்தாளா? அவன் உதவி செய்தானா? கடலில் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்பட்டன? மோனா பத்திரமாக தன் தீவுக்குத் திரும்பினாளா? இதயத்தைப் பொருத்தினாளா என்பது போன்ற கேள்விகளுக்கான விடையை ஒரு திரில்லர் படத்துக்கு இணையான சாகசக் காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள்.

இதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் அத்தனையும் அருமை. தற்பெருமை பேசி அடிக்கடி மண்ணைக் கவ்வும் பயில்வான் மவ்வி, மோனாவின் கடற்பயணத்தில் கூடவே வரும் விநோத பழக்கமுள்ள கோழியான ஹெய்ஹெய், வழிமறிக்கும் தேங்காய் மண்டை கடல்கொள்ளையர்கள், மவ்வியின் சக்திவாய்ந்த மீன்கொக்கியை தன் புதையலின் மீது வைத்துப் பாதுகாக்கும் பிரம்மாண்டமான நண்டு, அச்சத்தை ஏற்படுத்தும் நெருப்பு அரக்கன் டீக்கா போன்றவர்களோடு இந்த சாகசப் பயணம் விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் செல்கிறது.

மோனாவும் மவ்வியும் ஒருவரையொருவர் கலாய்த்துக்கொள்ளும் காட்சிகள் நகைச்சுவை ரகளை. மவ்வியின் உடலில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் துள்ளிக் குதிப்பதும், இந்த வரலாறு முழுவதுமே அந்த ஓவியங்களில் இருப்பதும் அருமை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டு மவ்வி விலகிவிட, தனியாக இருக்கும் மோனாவை இறந்துபோன அவளது பாட்டி, அருவமாக வந்து ஆறுதல்படுத்துவதும், அதைக் கேட்டு மோனா பழைய உற்சாகத்தை அடைவதும் அற்புதமான காட்சிகள்.

வண்ணமயமான இந்த அனிமேஷன் திரைப்படத்தில் ஆங்காங்கே வரும் பாடல்கள் அனைத்தும் இனிமை. மோனாவின் முன்னோர்கள் கடற்பயணம் செய்தவர்கள். இந்த ரகசியத்தைப் பாட்டி சொல்கிறார். கடலுக்குள் உற்சாகமாகப் பாயும்போது அவர்கள் பாடும் 'அவ்வே... அவ்வே...' என்கிற பாடல், அபாரம்.

இளம் வயது மோனாவின் உருவம் மிக அழகாக இருக்கிறது. அவள் பெரியவளாகும்போது இன்னமும் அழகானவளாக மாறுகிறாள். அமெரிக்கத் திரைப்படங்களில் பொதுவாக வெள்ளையினத்தைச் சார்ந்தவர்களே பிரதானமான பாத்திரங்களில் சித்தரிக்கப்படுவார்கள். கருப்பினத்தைச் சார்ந்த சிறுமி ஒருத்தி நாயகியாகச் சித்தரிக்கப்படுவது, காலமாற்றத்தில் உருவாகும் நல்ல அடையாளம். அதுபோல, ஆண்களே நாயகர்களாக உருவாக்கப்படும் வழக்கத்தில் இருந்து விலகி, ஒரு சிறுமியின் சாகசத்தை சொல்வதும் சிறப்பே. 'நான் ஆண்' என்கிற பெருமையுடன் மோனாவை அவ்வப்போது கிண்டலடிக்கும் மவ்வியின் பிரம்மாண்டமான உருவம் சாதிக்க முடியாததை, சிறுமியான மோனா சாதிக்கிறாள். பல சமயங்களில் மவ்வியையே அவள்தான் காப்பாற்றுகிறாள்.

வால்ட் டிஸ்னி ஸ்டூடியோவின் தயாரிப்பில் முப்பரிமாணத்தில் உருவான இந்தத் திரைப்படம், வரைகலைநுட்பத்தின் உச்சங்களோடு அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மோனாவுக்காக கடல் வழிவிடும் காட்சி, தீவின் வண்ணமயமான தோற்றங்கள், கடல் பயணத்தில் ஏற்படும் போராட்டங்கள், மவ்வியின் உடலில் குதிக்கும் ஓவியங்கள் போன்றவை அற்புதமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.

பெண் தெய்வத்தின் இதயம் என்பது, இயற்கையின் குறியீடு. இயற்கையைச் சுரண்டிக்கொண்டே இருக்கும் மனித குலம், தனக்கான அழி்வையும் உண்டாக்கிக்கொள்வதை உணரவில்லை. இயற்கையோடு இயைந்த வாழ்வே மகிழ்ச்சிகரமானது, இயற்கைக்கு எதிராகச் செயல்படுவது ஆபத்தானது என்கிற செய்தியை இந்தத் திரைப்படம் சொல்கிறது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்காக ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இருந்த 'மோனா' விருதை வெல்லாவிட்டாலும், பார்வையாளர்களின் இதயங்களை வென்றுவிட்டாள்! பார்க்கத் தவற விட்டுவிடக் கூடாத பட்டியலில் மோனாவுக்கு நிச்சயம் இடம் உண்டு.
 

- சுரேஷ் கண்ணன்


டிரெண்டிங் @ விகடன்