வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (23/03/2017)

கடைசி தொடர்பு:14:25 (23/03/2017)

’இதுல இருந்து எப்படின்னே லைட்டு எரியும்?’ - ஹேப்பி மேன் செந்திலுக்கு ஹேப்பி பர்த்டே

காமெடி ஜாம்பவான்கள் லிஸ்டில் இவருக்கும் பெரும் பங்குண்டு. கவுண்டமணி என்று சொன்ன மறுநொடியே நம் மைண்டில் வந்து நிற்பது செந்தில்தான். இருவரும் நகமும் சதையுமாக தமிழ் சினிமாவில் வலம் வந்தனர். இருவரையும் தனித்தனியாக ஸ்க்ரீனில் பார்ப்பது ரொம்ப அபூர்வம். இன்று ஹேப்பி பர்த்டே கொண்டாடும் செந்தில் ஸ்பெஷல் இது!

செந்தில்

இந்தியா சுதந்திரம் பெற்ற நான்கு வருடங்கள் கழித்து ராமமூர்த்தி, திருக்கம்மாள் தம்பதிக்குப் பிறந்தவர்தான் இந்த காமெடி கிங் செந்தில். தனது பன்னிரண்டாவது வயதிலேயே அப்பாவின் திட்டைச் சமாளிக்க முடியாமல் வீட்டைவிட்டு ஓடி வந்துவிட்டார். முதலில் எண்ணெய் கிடங்கிலும் பின் டாஸ்மாக்கில் அட்டெண்டராகவும் வேலை பார்த்திருக்கிறார். பின் சினிமாவின் மீதிருக்கும் ஈர்ப்பு அதிகரிக்க சென்னைக்கு வந்தவர், 1979-ல் 'பசி' என்னும் படம் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு சில படங்களில் சின்னச் சின்ன ரோல் செய்து தமிழ் சினிமாவில் தன் தடத்தை பதித்தார். விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசாக 'மலையூர் மம்பட்டியான்' படத்தின் மூலம் முக்கியமான ரோல் கிடைத்ததையடுத்து அதில் சிறந்த ஆக்டிங் பெர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்தி பலரிடம் பாராட்டுகளையும் பெற்றார். பின் 1984-ல் கலைசெல்வி என்பவரைத் திருமணம் செயந்தார். 

தனக்குக் கிடைத்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி 'பேக் டு பேக்' பல வெற்றிப் படங்களைக் கொடுக்கத் தொடங்கினார். அதில் கவுண்டமணிக்கும் பெரும் பங்குள்ளது. இருவரின் காம்போவையும் பார்த்து தமிழ் சினிமாவின் 'லாரல் அண்ட் ஹார்டி' என்று செல்லமாக அழைத்தனர். ஒரு கட்டத்தில் இவர்கள் பட வாய்ப்பினைத் தேடி போனதையடுத்து இவர்களைத் தேடி வாய்ப்புகள் வரத் தொடங்கின.

செந்தில்

எல்லாப் படங்களிலும் கவுண்டமணி இவரை அடி, உதை என படம் முழுவதும் துவைத்து எடுப்பார். ஆனால் மக்களை மகிழ்விக்க இவரும் அதை வாங்கிக்கொள்வார். 1989-ல் வெளியான 'கரகாட்டக்காரன்' படத்தின் புகழைப்பற்றி இன்னும் பல தலைமுறைகள் பேசும். அந்தப் படத்தின் பெயரைச் சொன்னவுடன் ஹீரோ, ஹீரோயினைத் தாண்டி ஞாபகம் வருவது இவர்கள் இரண்டு பேரும்தான். 'வாழைப்பழம்' காமெடியில் தொடங்கி 'அது ஏண்டா என்னப் பார்த்து அந்த கேள்வி கேட்ட?' என்பதுவரை இன்னமும் பல படங்களில்  ரசிகர்களைச் சிரிக்க வைத்தனர். அதுவும் இவர் கவுண்டமணியை 'அண்ணே' என்று கூப்பிடும் மாடுலேசனை நினைத்துப் பார்த்தால்கூட சிரிப்பு வரும்.  

இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதில் கவுண்டமணி இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இருவரின் காம்போ காமெடிகள் எத்தனைமுறை பார்த்தாலும் சிரிப்பு வரும் பாஸ். 'உள்ளத்தை அள்ளித்தா', 'ஜென்டில் மேன்', 'சின்ன கவுண்டர்', 'ஜெய் ஹிந்த்', 'இந்தியன்', 'லக்கி மேன்' என இவர்களின் புகழைப் பாட ஏராளமான படங்கள் இருக்கின்றன. வாழ்க்கையில் ஒருவனைச் சிரிக்க வைப்பதுதான் கஷ்டம். தன்னை வருத்தி எளிதில் சிரிக்கவைக்க இவர்களால் மட்டுமே முடியும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது சொதப்பலும் சறுக்கலும் ஏற்படும். ஆனால் இவர்கள் நடித்த படங்களில் சொதப்பல்களோ, சறுக்கல்களோ எதுவுமே நிகழவில்லை. படங்களின் பெயர் தெரியாமல் இருக்கும் பட்சத்தில் இப்போதெல்லாம் ஹீரோ, ஹீரோயின் பெயரைச் சொன்னால் ஞாபகம் வரும். ஆனால் இவர்கள் நடித்த படங்களின் பெயரை இந்த காமெடி என்று சொன்னால்தான் படத்தின் பெயர் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு அடையாளம் பதித்த மனிதர்கள் இவர்கள். 

செந்தில்

ஒரு வாழைப்பழத்தை வைத்து எப்படி காமெடி செய்வது? என்று கேட்டால் சிரிப்பு வரும். அந்த வாழைப்பழத்தை வைத்தே சிரிக்க வைத்தவர்கள் இவர்கள்தான். இன்றுவரை அந்த காமெடிக்கு ஈடு இணையே கிடையாது. செந்திலுக்குத்தானே பிறந்தநாள்... கவுண்டமணியைப் பற்றி ஏன் கூற வேண்டும்? என்றால் முடியாத காரியம். 'கவுண்டமணி செந்தில்' என்று சொன்னால் உதடுகள்கூட ஒட்டும் பாஸ். 

மீண்டும் இருவரும் சேர்ந்து ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் செந்தில் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்களும் வாழ்த்துங்கள் ஃப்ரெண்ட்ஸ்!

- தார்மிக் லீ


டிரெண்டிங் @ விகடன்