ஒரிகாமி ராஜாவும் ஒற்றைக்கண் சிறுவனும்! #KuboAndTheTwoStrings | an interesting perspective about Kubo And The Two Strings film

வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (27/03/2017)

கடைசி தொடர்பு:19:50 (27/03/2017)

ஒரிகாமி ராஜாவும் ஒற்றைக்கண் சிறுவனும்! #KuboAndTheTwoStrings

KUBO

ஏறத்தாழ எல்லாச் சமூகங்களிலும் பல்வேறு விதமான தொன்மக் கதைகள் உள்ளன. சைகைகளில் கதைச் சொல்வதும் குகைச் சுவர்களில் அவற்றைப் படங்களாக வரைவதும் ஆதிமனிதனின் பொழுதுபோக்குகளுள் ஒன்று. இயற்கையின் மீதுள்ள அச்சமும் பிரமிப்பும் அந்தக் கதைகளில் கலந்திருந்தன. சிறுவயதில் நாமும் இதுபோன்று நிறைய ஃபேண்டஸி கதைகளைப் படித்திருப்போம். ஏழு மலை, ஏழு கடல் தாண்டி கிளியின் உடலுக்குள் தன் உயிரை ஒளித்துவைத்திருக்கும் அரக்கன், அதைத் தேடிச்செல்லும் நாயகன், அவனுக்கு உதவும் சித்திரக் குள்ளர்கள், விலங்குகள், சாகசமும் பரபரப்பும் நிறைந்த பயணம் என்பது போன்று நிறைய மந்திரக் கதைகளை வாசித்திருப்போம்.

Kubo and the Two Strings, ஜப்பானின் கலாச்சார பின்னணியுடன் கூடிய அப்படியொரு புராதனக் கதைதான். 'சிறந்த அனிமேஷன் திரைப்படம்' மற்றும் 'சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ்' ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷனில் இருந்த திரைப்படம் இது.

**

க்யூபோ குழந்தையாக இருக்கும்போதே அவனுடைய கண் ஒன்று, அவனது பாட்டனரால் பிடுங்கப்பட்டது. க்யூபோவை காப்பதற்கான சண்டையில்தான் அவனுடைய தந்தை இறந்துபோனார். அவருடைய வீரத்தைப் பற்றிய பல்வேறு கதைகளை தாய் சொல்லி இருக்கிறாள். தன்னுடைய மாயாஜால திறமைகளையும், காகிதத்தால் செய்த பொம்மைகளையும், நரம்பு வாத்தியக் கருவியையும் வைத்துக்கொண்டு அந்தக் கதைகளை மெருகேற்றி, ஊர்மக்களுக்கு சொல்வான் க்யூபோ. அவனுடைய கதைச் சொல்லும் விதத்தில் மயங்கி, ஊர்மக்கள் சுவாரஸ்யமாக ரசிப்பார்கள்.

சூரிய அஸ்மனத்துக்கான நேரம் வந்ததும், க்யூபோ தன் கதைகளை நிறுத்திவிட்டு வீட்டுக்கு பாய்ந்தோடிவிடுவான். 'எக்காரணத்துக்காகவும் சூரியன் மறைந்த பின், இருளில் வெளியே இருப்பது பாதுகாப்பானது அல்ல, மிகவும் ஆபத்தானது' என்று அவனுடைய தாய், பல முறை எச்சரித்து இருக்கிறாள். அவனுடைய இன்னொரு கண்ணைப் பிடுங்குவதற்காக எதிரிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

KUBO

ஒரு நாள்... இறந்துபோனவர்களுக்கான மரியாதை செலுத்தும் திருவிழா ஊருக்குள் நடக்கிறது. அப்படிச் செய்தால், அவர்கள் நம்மோடு பேசுவார்கள் என்பது நம்பிக்கை. 'ரொம்ப நல்லா இருக்கும் க்யூபோ' என்கிறார் அங்குள்ள பாட்டி. ஊரில் உள்ளவர்கள் அனைவரும் இறந்தபோன தங்களின் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை பார்க்கும் க்யூபோவும் தன் தந்தையை அவ்வாறு வணங்குகிறான். அவரிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. கோபித்துக்கொள்கிறான். இந்தச் சூழ்நிலையில் சூரியன் மறைந்து இருள் சூழ்வதை உணரவில்லை. க்யூபோவை யாரோ அழைக்கிறார்கள். பயத்துடன் பார்க்கிறான். இரண்டுப் பெண்கள். அவர்கள் க்யூபோவின் தாயின் சகோதரிகள். தீய சக்திகள். நைச்சியமாகப் பேசி க்யூபோவை தாக்க முனைகிறார்கள். அந்தச் சமயத்தில் அவனுடைய தாய் வந்து காப்பாற்றுகிறாள். சகோதரிகளுக்குள் பயங்கரமான போர் நடக்கிறது. 'நீ இங்கிருந்து தப்பிவிடு. உன்னுடைய தந்தையின் கவசத்தை எப்படியாவது தேடிக் கண்டுபிடி. அதுதான் உன்னைப் பாதுகாக்கும்" எனச் சொல்லி, தன் மந்திரசக்தியால் க்யூபோவைப் பறக்கவைக்கிறாள் அவனுடைய தாய்.

க்யூபோ கண் விழித்துப் பார்க்கும்போது பனிப்பிரதேசத்தில் விழுந்து கிடக்கிறான். பக்கத்தில் ஒரு குரங்கு அமர்ந்திருக்கிறது. அவன் எழுவதற்காகக் காத்திருந்தது போல. 'க்யூபோ, உடனே கிளம்ப வேண்டும். உன் தாய் இறந்துவிட்டாள். உன் கிராமம் அழிந்துவிட்டது. ஆபத்து நம்மையும் நெருங்குகிறது' என்கிறது. 'அதெல்லாம் இருக்கட்டும். நீ யார்?' என்கிறான் சிறுவன். 'என்னைத் தெரியவில்லையா நன்றாகப் பார்" என்கிறது குரங்கு, திருவிளையாடல் சிவாஜி மாதிரி. அது அவன் வைத்திருந்த குரங்குப் பொம்மைதான். பெரியதாக மாறியிருப்பது மட்டுமல்லாமல், உயிருடனும் வந்திருக்கிறது. குரங்குடன் செல்கிறான் க்யூபோ. சாமுராயான அவனுடைய தந்தையைக் காகிதப் பொம்மையாகச் செய்துவைத்திருக்கிறான். அந்தப் பொம்மை வழிகாட்ட அவர்கள் செல்கிறார்கள்.

வழியில் இடைமறிக்கிறது குறும்புத்தனங்களுடன் கூடிய ஒரு பூச்சி. ஆம்... மெகா சைஸ் பூச்சி. அவர்களைப் பற்றி விசாரிக்கிறது. க்யூபோவின் தந்தைப் பெயரைக் கேட்டதும் பூச்சியின் முகம் பிரகாசமடைகிறது. "ஹே... அவர்தான் என்னுடைய தலைவன். நான் அவருடைய தொண்டன். நான் உங்களுக்கு உதவுகிறேன்' என்று கூடவே கிளம்புகிறது. ஆனால், குரங்குக்குப் பூச்சியைப் பிடிக்கவில்லை. கிண்டலடித்துக்கொண்டே வருகிறது. 'நீ ஏன் இப்படி ஆகிவிட்டாய்?' என்று கேட்கிறான் க்யூபோ. "ஒரு சாபத்தினால் இப்படி ஆகிவிட்டேன்' என்கிறது பூச்சி.

KUBO

மூவரும் தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள். 'உடைபடாத போர்வாளை' கண்டுபிடித்தால் உதவும் என்கிறது பூச்சி. அந்த வாளைப் பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு மண்டையோட்டு பூதத்திடம் செல்கிறார்கள். அந்தப் பூதம் இவர்களைத் தாக்க வருகிறது. குரங்கையும் பூச்சியையும் பூதம் விழுங்கப்போகும் சமயத்தில் அந்த வாளைக் கைப்பற்றி க்யூபோ அவர்களைக் காப்பாற்றுகிறான்.

தனது மாயாஜால திறமையால் க்யூபோ உருவாக்கும் படகின் மூலமாக மூவரும் கடலில் பயணிக்கிறார்கள். கவசத்தின் ஒரு பகுதி கடலுக்குள் இருப்பதாகப் பூச்சி சொல்கிறது. அதை எடுத்து வருவதற்காக உள்ளே குதிக்கிறது. அப்போது மழை பெய்யத் துவங்குகிறது. ஆபத்து வரப்போவதின் சமிக்ஞைகளை படகில் இருக்கும் குரங்கால் உணரமுடிகிறது. அது நினைத்தது போலவே வில்லி சகோதரிகள் இவர்களை மோப்பம் பிடித்து பின்னால் வருகிறார்கள். கடலுக்குள் சென்ற பூச்சி இன்னமும் வரவில்லையே என்று நினைத்து, குரங்கின் எச்சரிக்கையையும் மீறி க்யூபோ உள்ளே குதிக்கிறான். சகோதரிகளுக்கும் குரங்குக்கும் கடுமையான சண்டை நடக்கிறது. கடலுக்குள் சென்ற க்யூபோவுக்கு விநோதமான காட்சிகள் தெரிகின்றன. அவனுடைய தாயின் உருவம் தெரிகிறது. அதன் மூலம் ஓர் அதிர்ச்சிகரமான உண்மையைப் புரிந்துகொள்கிறான். குரங்கின் உடலுக்குள் இருப்பது அவனுடைய தாயின் ஆன்மாதான். தவிர, பூச்சியாக தங்களோடு வருவது அவனுடைய தந்தை என்கிற உண்மையும் தெரிய வருகிறது.

இந்தப் பயணத்தின் முடிவு என்ன ஆனது? க்யூபோ தன் கண்ணைக் காப்பாற்றிக்கொண்டானா, கவசத்தைக் கண்டுபிடித்தானா, தீயசக்தியான அவனுடைய பாட்டனார், க்யூபோவை தன்னுடன் இணைத்துக்கொள்ளச் செய்யும் முயற்சிகள் பலித்ததா என்பதையெல்லாம் சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் லைக்கா அனிமேஷன் ஸ்டுடியோவின் தயாரிப்பு. வால்ட் டிஸ்னி, பிக்ஸார் போன்ற நிறுவனங்களின் உருவாக்கத்துக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பாத்திரங்களின் அசைவுகள், அவற்றின் வேகம், அழுத்தமான வண்ணங்கள் என்று இந்தத் திரைப்படம் பிரத்தியேகமான பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. அனிமேஷன் திரைப்படம் என்பதே மறந்துபோய் வழக்கமான பாணியில் உருவாக்கப்பட்ட திரைப்படமோ என்கிற பிரமையை சில காட்சிகள் தருகின்றன. ஜப்பானிய கலாச்சாரத்தின் பாரம்பரியமான அடையாளங்கள், ஒரிகாமி கலை, சிறுவனான க்யூபோ தனது மாயாஜாலத்தால் உருவாக்கும் காகிதப் பொம்மைகள் உயிர்பெற்று வேகமாக அசைந்து பயணிக்கும் காட்சிகள் அற்புதமானவை. குரங்குக்கும் பூச்சிக்குமிடையே நடக்கும் சீண்டல்கள் ரசிக்கவைக்கின்றன.

Matthew McConaughey உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் பாத்திரங்களுக்காக குரல் தந்து உயிர்ப்பித்திருக்கிறார்கள். படத்தின் இறுதிக் காட்சியில் வரும் 'While My Guitar Gently Weeps' பாடல் முதற்கொண்டு பின்னணி இசை வரை அபாரம். (இசை: Dario Marianelli). ஜப்பானிய மாயாஜாலக் கதைக்கு தரமான தொழில்நுட்பத்தின் வழியாக உருவான அனிமேஷன் திரைப்படம். இந்த அற்புதமான அனுபவத்தைத் தவறவிடாதீர்கள்.

Kubo And The Two Strings படத்தின் டிரைலர்:

 

- சுரேஷ் கண்ணன்.


டிரெண்டிங் @ விகடன்